உங்களை விளம்பரம் செய்யுங்கள்..!

– கிருஷ்ண வரதராஜன்

உங்களை விளம்பரம் செய்வதில் முதலில் ஆர்வம் கொண்டிருந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள்தான். உங்களை இந்த உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடங்காத ஆர்வத்தை கொண்டிருந்தார்கள்.

நீங்கள் குழந்தையாக இருந்த தருணத்தில் இருந்து பார்ப்பவர்களிடம் எல்லாம் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ‘என்ன அழகா பாடுவான் தெரியுமா’ என்று பெருமை பொங்கப் பேசுவார்கள். உங்களைப் பாடச் சொல்லி மற்றவர்கள் ரசிப்பதை ரசிப்பார்கள்.

என்னைப் பொறுத்தவரை உலகத்திலேயே சிறந்த விளம்பரதாரர்கள் பெற்றோர்கள்தான். என்ன பெற்றோர்களிடத்தில் ஒரே சிக்கல் என்றால், நிறைகளை போலவே குறைகளையும் விளம்பரம் செய்துவிடுகிறார்கள். ‘படித்துவிட்டு வேலைக்கு எதுவும் போகல. வீட்டுல சும்மாத்தான் இருக்கான்’ என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லி, எப்படியோ உங்களுக்கு ஒரு வேலையும் வாங்கி விடுவார்கள்.

நீங்கள் சுயஆளுமை பெற்ற பிறகுதான் தங்கள் விளம்பரப்பணியை நிறுத்திக் கொள்கிறார்கள். இனி, நீங்கள் அதைத் தொடர வேண்டும்.

விற்க வேண்டியதைத்தான் விளம்பரம் செய்வார்கள்.

எந்த ஒரு பொருள் அல்லது சேவை விற்பனை ஆகவேண்டுமோ, அதைத்தான் விளம்பரம் செய்வார்கள். எனவே, உங்கள் திறமைகளை நீங்கள்தான் விளம்பரம் செய்தாக வேண்டும்.

பூக்கள் எப்படி வாசத்தாலும் வண்ணத் தாலும் விளம்பரம் செய்து கொள்கிறதோ, அது போல, நீங்கள் உங்கள் உற்சாகத்தாலும் திறமையாலும் விளம்பரமாக வேண்டும்.
விளம்பரம் என்ற வார்த்தையை உங்களைப் பற்றிய தம்பட்டம் என்று புரிந்து கொள்ளாதீர்கள். அதாவது, உங்களைப்பற்றி மிகைப்படுத்தி சொல்வதல்ல விளம்பரம். உங்களின் திறன்களை ரகசியமாக வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் தெரிவிப்பதையே விளம்பரம் என்கிறேன்.

உலகத்தின் உயர்ந்த சிகரம் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பும்கூட எவரெஸ்ட் தான் உயர்ந்த சிகரமாக இருந்தது. அதுபோல நீங்கள் திறமைசாலி என்றால் இந்த உலகம் உணர்வதற்கு முன்பும் அதாவது, இந்த உலகம் உங்களை அடையாளம் காணும் முன்பும் நீங்கள் தான் திறமைசாலி என்றே அர்த்தம் இல்லையா? எனில், இதை நீங்களே உரக்கச் சொல்லுங்கள்.

அறிமுகமே விளம்பரம்.

உங்களைப்பற்றி, உங்களைவிட யாராலும் சிறப்பாக அறிமுகம் செய்ய முடியாது. மாம்பழம் விற்பவர் தரும் ஒரு துண்டு மாம்பழம் எப்படி அதன் ருசியை பற்றி பேசுகிறதோ, அது போல உங்களைப்பற்றிய அறிமுகமே, உங்களைப் பற்றி முழுமையாக சொல்லிவிட வேண்டும்.

நான் மனிதவள மேம்பாட்டு ஆலோசகராக இருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரைச்சந்திக்க மற்றொரு பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் வந்திருந்தார். என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கும்போது நமது நம்பிக்கையின் துணையாசிரியர் என்றும் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்கள்.

அவர் அதை கேட்டுக்கொண்ட விதத்திலேயே புத்தகம் படிக்கும் பழக்கமும் அதற்கான நேரமும் இல்லாதவர் என்பதை புரிந்து கொண்டேன். நமது நம்பிக்கை இதழை எடுத்து அவரிடம் கொடுத்தேன். கேட்கும்போது சரியாக புரிந்து கொள்ளாதவர், இதழைப் பார்த்தவுடன் அதன் தரத்தை புரிந்துகொண்டார் என்பதை அவர் கண்கள் விரிவடைவதில் கண்டு கொண்டேன்.

சிலர் என்னை, மற்றவர்களுக்கு, ‘எழுத்தாளர்’ என்று அறிமுகம் செய்து வைப்பார்கள். எத்தனை புத்தகங்கள், என்னென்ன தலைப்புகளில் எழுதியிருக்கிறேன் என்பதை அடக்கத்தோடு, நானே சொல்லிவிடுவேன். கேட்பவர் முகத்தில் வியப்பும் மரியாதையும் உடனடியாக தோன்றும்.

குரல் கூட விளம்பரம்தான்.

உங்கள் குரல்கூட உங்கள் நம்பிக்கையைப் பற்றிய விளம்பரம்தான்.

என் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பாளர் களை அறிமுகம் செய்துகொள்ளச் சொல்லும் போது, சிலபேர் தங்கள் காதில் கூட விழுந்து விடக் கூடாது என்பதுபோல ரகசியம் பேசுவார்கள். சிலர் கணீர் என்ற குரலில் தங்களைப்பற்றி சொல்வார்கள்.

குரலின் உயர்விலிருந்தே அவர் தன்னைப் பற்றி உயர்வாக உணர்கிறார் என்பதும், குரலின் தாழ்விலிருந்தே அவர் தன்னைப்பற்றி தாழ்வாக உணர்கிறார் என்பதும் அவர்கள் சொல்லாமலே விளம்பரம் ஆகிவிடும்.

உங்களைப்பற்றி, உங்கள் திறமைகளைப் பற்றி, மற்றவர்களிடம் அறிமுகம் செய்து கொள்ள சங்கடப்படாதீர்கள். தயங்காதீர்கள்.

டிவியில் நிகழ்ச்சியை விடவும் விளம்பரம் அதிகம் ரசிக்கப்படுகிறது. விளம்பரங்கள், அது அறிமுகப்படுத்தும் பொருளுக்காக இல்லை. அதன் புதுமைக்காக மட்டுமே ரசிக்கப்படுகிறது.

அதுபோல, உங்களைப் பற்றி சொல்கிற விஷயம் மட்டுமல்ல. சொல்கிற விதமும் ரசிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.
எப்படி?

5 Responses

  1. sekar kovai

    //பூக்கள் எப்படி வாசத்தாலும் வண்ணத் தாலும் விளம்பரம் செய்து கொள்கிறதோ, அது போல, நீங்கள் உங்கள் உற்சாகத்தாலும் திறமையாலும் விளம்பரமாக வேண்டும்.//

    supper nan ungal rasegan

    thanyou..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *