அறிய வேண்டிய ஆளுமைகள்

– மரபின் மைந்தன் ம. முத்தையா

ஸ்டீன் கோவே

” எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அது எந்த தேவதையின் குரலோ” என்றொரு பாடல் உண்டு. ஒரு குரல், ஒரு வரி, ஒரு புத்தகம், ஒரு வார்த்தை கூட சிலரின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடும்.

குடும்பத்துடன் விடுமுறையை உல்லாச மாகக் கழித்துக் கொண்டிருந்த விடுமுறைநாளில், வாசித்துக் கொண்டிருந்த புத்தகம் ஒன்றில் இருந்து ஒரு பத்தி ஸ்டீஃபன் கோவேயின் புத்தியில் புத்தம் புதிய சுடரேற்றியது.

”திடீரென்று தோன்றுகிற ஓர் எண்ணத் துக்கும், அந்த எண்ணத்தை செயல்படுத்துவதற்கும் நடுவே ஓர் இடைவெளி இருக்கிறது. அந்த இடை வெளியைப் பயன்படுத்துகிற முறையில்தான் நம் வாழ்வின் வளர்ச்சியும் மகிழ்ச்சியும் இருக்கிறது” என்ற பத்திதான் அது.

அடுத்த விநாடியே உள்ளுக்குள் புதிதாய் உணர்ந்தார் ஸ்டீஃபன் கோவே. 1932ல் பிறந்த ஸ்டீஃபன் கோவே ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். ப்ரிஹரம் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே முனைவர் பட்டம் பெற்ற ஸ்டீஃபன் கோவே, பிற்காலத்தில் நான்கு முறை கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். இத்தனைக்கும், அவர் அரசியல்வாதி இல்லை!!

தலைமைப்பண்பு மற்றும் நிர்வாகவியலுக்காக அவர் தொடங்கியுள்ள நிறுவனத்தின் வெற்றிச் சூத்திரங்களை ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட உலகின் பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள் பின் பற்றி வருகின்றன. தலைமைப்பண்பு கூட்டு முயற்சி, வாடிக்கையாளர் களை முன்னிலைப்படுத்தும் சேவை போன்ற எத்தனையோ அம்சங்கள் குறித்து உலகளாவிய நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் ஸ்டீஃபன் கோவே.
பொதுவாகவே சுயமுன்னேற்றச் சிந்தனைகள், வாழ்க்கை மேம்பாட்டுச் சூத்திரங்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க இயலாது. கண்டறியவே இயலும். இதற்கு சான்றாக விளங்குபவை, 1989ல் வெளியான “பட்ங் 7 ட்ஹக்ஷண்ற்ள் ர்ச் ஏண்ஞ்ட்ப்ஹ் ங்ச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ல்ங்ர்ல்ப்ங்” என்கிற ஸ்டீஃபன் கோவேயின் புத்தகம். காலத்தால் அழியாத ஏழு கோட்பாடுகளை ஒன்றிணைத்ததும் ஒருங்கிணைத்ததும் மட்டுமே தன் பணி என்று பகிரங்கமாகச் சொன்னார் அவர்.

”7 பழக்கங்கள் என்று தலைப்பு கொடுத்திருக்கிறீர்களே! பழக்கங்கள் ஒவ்வொரு தனிமனிதருக்கும் மாறு படக்கூடியதல்லவா” என்று கேட்ட போது, இந்த 7 அம்சங்களும் பெரும்பாலான வெற்றியாளர்களின் வாழ்வில் காணப்பட்ட பொது அம்சங்கள் என்பது அவருடைய வாதமாக இருந்தது. ஸ்டீஃபன் கோவே, தன் மனைவி சன்ட்ராவுடன் 50 ஆண்டுகளுக்கும் மேல் மகிழ்ச்சியான இல்லறம் நடத்தி 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 2003ல், ”தேசத்தின் தலை சிறந்த தந்தை” என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. தான் பெற்ற விருதுகளிலேயே மிகவும் அர்த்தமுள்ள விருது அதுதான் என்று அக மகிழ்ந்தார் அந்த அதிசய அப்பா!
நாம் கேட்டுக்கேட்டு சலித்த வாசகங்களில் ஒன்று, ”மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது. ஆனால் ஸ்டீஃபன் கோவே வாழ்வின் நிலையான விஷயங்கள் மூன்று என்கிறார்.

மாற்றங்கள்…………….. வாய்ப்புகள்…………….. கோட்பாடுகள்
கடந்த காலத்தில் நமக்கு நிகழ்ந்ததே தொடர்ந்து நடந்து கொண்டிருக்க நாம் விலங்குகளல்ல. நமக்குத் தேர்வு செய்யும் உரிமை உண்டு என்கிறார் ஸ்டீஃபன் கோவே.

”நாம் ஆன்மீகப் பயணத்தில் இருக்கும் மனித உயிர்கள் அல்ல. மனிதப்பயணத்தில் இருக்கும் ஆன்மீக உயிர்கள்” என்றும் ஒரு முறை சொன்னார் அவர்.

ஒரு நிறுவனம் என்று எடுத்துக்கொண்டால், உற்பத்தித்திறன், தரக்கட்டுப்பாடு என்று எத்தனையோ விஷயங்கள் பற்றி விடிய விடியப் பேசுவார்கள். இவை எப்போது சாத்தியம் என்றால், இந்தத் துறைகளுக்கு நடுவே ஆரோக்கியமான உறவு அமைகிறபோதுதான் என்பது ஸ்டீஃபன் கோவே சொல்வது.
தலைமைப்பண்பு, நிர்வாகவியல் ஆகிய இரட்டைக் குதிரைகளிலும் சவாரி செய்தால்கூட இரண்டும் தனித்தனிக் குதிரைகள் என்பதை தர்க்க பூர்வமாக நிறுவினார் அவர்.

”நிர்வாகவியல் என்பது வெற்றியின் ஏணிப் படிகளில் ஏறிச்செல்வது. தலைமைப்பண்பு என்பது, ஏணி சுவரில் சரியாக சாய்த்து வைக்கப் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்வது” என்றார் அவர்.

இந்தத் தெளிவும் அறிவும் கலந்த ஒரு தனி மனிதனால் ஒரு நிர்வாகத்தையே தலைகீழாக மாற்றி விடமுடியும் என்பதும் அவருடைய அழுத்தமான நம்பிக்கை. ஆற்றல்மிக்க மனிதராய், தாக்கம்மிக்க மனிதராய் ஒருவர் வளர வேண்டு மானால், அதற்கு வேண்டிய அம்சங்களையும் ஸ்டீஃபன் கோவே சொல்லி வைத்திருக்கிறார்.
தான் யார் என்கிற அறிவு, விழிப்புணர்வு, சுதந்திரமான பார்வை, படைப்பாற்றல் மிக்க கற்பனை ஆகியவையே அந்த நான்கு அம்சங்கள். சரியானதைத் தேர்வு செய்யவும், சரியான முறையில் எதிர்வினை ஆற்றவும், தேவையான மாற்றங்களை நிகழ்த்தவும் இதுவே உதவும் என்றார் அவர்.

ஆனைக்கும் அடிசறுக்கும் என்பதுபோல ஸ்டீஃபன் கோவேயின் ஒரேயொரு கணிப்பு, பாதி வெந்த முட்டைபோல் பாதி சரியாகவும் மீதி தவறாகவும் போய் விட்டது. புத்தகங்களைப் போலவே, தொலைக்காட்சியும் மக்களின் தகவல் அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவும் என்று அவர் நினைத்தார். ஆனால் மக்கள் அதில் நாயாட நரியாட என்று வாய் பிளந்து பார்த்திருப்பார்கள் என்பது அவருக்குத் தெரியாமல் போய்விட்டது.

வீணான திசை நோக்கி வெள்ளம் பாய்கிற வேளையில் அதனை சரியான திசை நோக்கி மடை மாற்றம் செய்வதுபோல, பெருக்கெடுக்கும் மனித சக்தியை நெறிப்படுத்தும் யுக்தியை சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் செய்து வருகிறார்கள். தனி வாழ்வில் பெருமளவு போராட்டங்களை சந்தித்ததாக ஸ்டீஃபன் கோவே சொல்லவில்லை. அவருடைய வாழ்வின் அத்தியாயங்களில் இருந்து, மயிர் கூச்செறியும் மர்ம நாவல் போன்ற சம்பவங்கள் எதுவும் வெளி வரவில்லை.

குமுறுகின்ற அருவியாய், காட்டாறாய் இல்லாமல், கல்லெறியப்படாத நீரோடையாய் தெளிந்த நடையிட்டு வாழ்வில் இருந்தே வாழும் முறைகளை வகுத்துச் சொன்னவர் ஸ்டீஃபன் கோவே.

”நாம் என்ன சொன்னாலும், நாம் என்ன செய்தாலும் நம் வாழ்க்கையிலிருந்தே மனிதர்கள் நம்மைப்பற்றி தெரிந்து கொள்கிறார்கள்” என்பது அவரின் அழுத்தமான நம்பிக்கை! அதுதானே நமது நம்பிக்கையும் கூட!!

Leave a Reply

Your email address will not be published.