வாழ நினைத்தால் வாழலாம்

– மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன்

மனம் உள்ளம் மூளை என்கிற மூன்று பாகங்கள் இருக்கின்றன. மனம் என்று நீங்கள் சொன்னது உடலில் எங்கே இருக்கின்றது? அது அறிவாக இருக்கிறதா?

அது மின்சாரம் போல இருக்கிறது. ஃபேன் ஓடுவதும் அதனால்தான். அது உங்கள் கண்களுக்குத் தெரியாது. மூளை என்பது இயந்திரம். அது செயல்பட இரத்தம் தேவை. வேறு சில இரசாயனங்களும் தேவை. சினிமாத்தனமாய் இடப்பக்கம், வலப்பக்கம் தொட்டு பேசுகின்ற இடத்தில் மனம் இல்லை. மனம் நமக்குள் மட்டுமில்லை. நம்மைச் சுற்றியும் இருக்கிறது.

சிந்தனைதான் மனம். சிந்திக்க வைக்கிற கருவியாக மூளை இருக்கலாம். ஆனால் கருவி மட்டுமே சிந்திக்க போதாது. மொழி என்பது அவசியம். வார்த்தைகள் இல்லாமல் சிந்தனை என்பது கிடையாது. மனம் என்பது சிந்தனைகளின் இருப்பிடம். சிந்தனைகளைப் பொறுத்துத்தான் மனம் கோணலாக இருக்கிறது என்று தீர்மானிக்கிறோம். மனம் என்பது ஒரு குறிப்பிட்ட இடமல்ல. அது ஒரு மைய சக்தி. அது இயங்கும் சக்தி. நம்மை இயக்கும் சக்தி. தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ஒரு சக்தி.

கோபத்திற்கும் மனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? சிலர் கோபப்படாமல் இருப்பார்கள். சிலர் சீக்கிரம் கோபப்படுவார்கள். அதனால் ஏற்படும் தாக்கம் என்ன?

மனம்தான் கோபப்படும்; வருத்தப்படும்; மகிழ்ச்சி கொள்ளும். சிலருக்கு தற்காப்பாகக்கூட கோபம் இருக்கிறது. சில நேரம் கோபப்படுவது போல் நடித்தால் அது பிரச்சனையில்லாத விஷயம். இதனால் இரத்தம் அழுத்தம் அதிகரிப்பது, இதயத் துடிப்பு அதிகமாவது போன்ற தொல்லைகள் இல்லை. கோபம் நம்மை மீறி வரும்போது கட்டுக்குள் வரவேண்டும். நம்மைமீறி வருவது தான் உணர்ச்சி. அதை உடனே பகட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் மனம். அதற்கான முயற்சி, அதற்கான பயிற்சி, பழக்கம் மனதிற்கு இருந்தால் எந்த உணர்ச்சியும் கட்டுப் பாட்டுக்குள் வரும். அந்தக் கட்டுப்பாட்டுக்குள் வரத் தவறும்போது மனம் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம். பிறவியிலிருந்தே கோபக்காரன். சின்ன வயதிலிருந்தே இப்படி முட்டாள்தனமாக கோபப்படாதே என்று சொல்வதற்கு பெரியவர்கள் இல்லாதவன்தான் எப்போதுமே கத்திக்கொண்டிருப்பான். வருங்காலத்தில் உறவினர்களோ நண்பர்களோ எவருமே உண்மையாக இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட கோபத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குத்தான் மனதிற்குப் பயிற்சி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயிற்சி. உடற்பயிற்சி சாலைக்கு சென்றால் ஆளுக்கு தகுந்தாற்போல் பயிற்சியளிப்பது போல ஒவ்வொருவருக்கும் தனிப்பயிற்சி. இதற்கு குரு கிடைப்பார் என்று கருதாதீர்கள். உங்கள் மனதை விட சிறந்த குரு யாருமில்லை. சரியாகச் செய்தால் நிம்மதி ஏற்படும். தவறாக செய்தால் ஒரு சலனம், குழப்பம் ஏற்படும். குழப்பம் வந்தால் சற்று விலகி நின்று பார்த்தால் அது சரியாகிவிடும். இப்படி ஒரு பயிற்சியில்தான் கோபத்தை, ஆத்திரத்தை கட்டுப் படுத்த முடியும். வருவதைத் தவிர்க்க முடியாது. வந்தபிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கணினிப் பொறியாளராக பணியாற்றுகிறேன். பதட்டமான சூழலை எப்படி குறைப்பது? கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பதைப் பற்றி விளக்குங்கள்.

பதட்டமான சூழலை, பரபரப்பான சூழலை, நான் மேடையில் நின்று கொண்டு நிதானமாக இருங்கள். எல்லாவற்றையும் விலகி நின்று வேடிக்கை பாருங்கள் என்று விளக்கி விடலாம். ஆனால், இன்று இந்த நிகழ்ச்சி வருவதற்காக காலையில் இருந்தே என் மனதில் ஒரு பதட்டம் இருந்தது. வழக்கமாக ஒரு மாணவன் பரிட்சைக்கு முன்னால் ஏற்படுகிற பதட்டம் போல் இல்லை. என் இரத்த அழுத்தமே அதிகரிக்க அளவிற்கு பதட்டம். ஏனிந்த பதட்டம். போன முறை இப்படியொரு நிகழ்ச்சி ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திவிட்டு போய்விட்டேன். அதையும் மீறி திரு. கிருஷ்ணன் என்மீது அன்பு வைத்து அழைத்திருக்கிறார். இந்த முறை அவருடைய அன்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒழுங்காக செய்யவேண்டும். ஒழுங்காகச் செய்வது என்றால் உன் சப்ஜெக்ட்தான் நீ பேசப் போகிறாய். அதுவல்ல. நான் பேசுவதில் ஒரு சின்ன விஷயமாவது பிறருக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறபோது வருகிற பதட்டம்.

மிகப்பெரிய நாட்டியக் கலைஞர் களுக்குக்கூட மேடையேறி வணங்கும்போது சின்ன பதட்டம் வரும். அதையும் மீறி வெல்வது தான் வாழ்க்கை. இந்த பதட்டத்திற்கு என்ன காரணம். இதை நான் நன்றாகச் செய்யவேண்டுமே என்கிற எதிர்பார்ப்பு. ஏன்? நீங்கள் கை தட்டுவீர்கள் என்பது மட்டுமல்ல. நன்றாகச் செய்ய வில்லையென்றால் அடுத்த முறை உங்களைப் பார்ப்பதற்கு எனக்கு வெட்கமாக இருக்கும். எந்தக் காரியத்திலும் பயம் இருக்கும் போது எச்சரிக்கை உணர்வு வரும். அதையும் மீறி பயம் அதிகரிக்கும்போது ஏற்படும் இந்த பதட்டத்தை போக்க, என்ன நடக்கிறது, என்ன நடக்கும் என்பதை யோசிப்தை விட இறங்கி என்னதான் நடக்கும் என்பதைப் பார்த்து விடுவது. அதனால் தோல்வி வரும். பரவாயில்லை. ஆனால், மிகப்பெரிய சோர்வு வராது. நுழையும்போதே முழு நம்பிக்கையோடு இல்லை.

ஒப்பீடு தேவை என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். ஆனால், நீங்கள் அது தேவையில்லை என்கிறீர்கள். மதிப்பீடும் தேவை என்கிறேன். ஒப்பீடு மதிப்பீடு இவற்றிலிருந்து வெளியேறி எப்படி முன்னேற முடியும்?
மதிப்பீடும் ஒப்பீடும் வேறு வேறு விஷயங்கள் என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். கடைக்காரர் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விலை வைத்திருக்கிறார். அதன் காரணம் நமக்கும் தெரியும். அது தரம். வாழ்வில் சில விஷயங்களும் அப்படித்தான்.

அப்துல்கலாம் போல எல்லோரும் வர வேண்டுமென்று பேசுகிறோம். ஆனால் அது நடக்க முடியாதது. காலம்தான் சிலவற்றைத் தீர்மானிக்கிறது. காலமும் சூழ்நிலையும் ஒரு புத்திசாலி மனிதனை நல்லவரை ஜனாதிபதியாக வர வைத்தது. மாணவர்களைப் பார்த்து கலாம் போல ஆகு என்று சொன்னால் அவர்கள் என்னால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக்கூட வரமுடியாது. நான் எப்படி ஜனாதிபதியாக வர இயலும் என்று பயந்து போவார்கள். இது போன்ற ஒப்பீடுதான் யாரும் யார் மாதிரியும் ஆகக் கூடாது, ஆகமுடியாது என்கிறேன். மனதளவில் எளிமையாக இருப்பது, கள்ளங்கபடமில்லாமல் இயல்பாகப் பழகுவது இவைதான் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணம். அவர் இந்தியாவின் ஜனாதிபதியானது அவருடைய வெற்றி என்று கருதுகிறோம். அது அல்ல வெற்றி. அவர் நல்ல மனிதராக இருந்தாரே அதுதான் வெற்றி. அது எல்லோராலும் முடியும். என்னாலும் முடியும் என்பது எனது நம்பிக்கை.

மனம் என்பது எண்ணங்களின் பிரதிபலிப்பு. எண்ணங்கள் ஆசையின் பிரதிபலிப்பு. ஆசையின் ஆதாரம், மூலாதாரம் என்ன?

ஆசைகள் எல்லாமே எண்ணங்கள் அல்ல. அச்சமும் எண்ணம்தான். ஆசை நிறைவேறாத போது வருத்தம் என்று சொல்லிக்கொள்கிறோமே, அந்த வருத்தம்கூட எண்ணம்தான். சில ராகங்களைக் கேட்டவுடன் இவை சோகமான ராகங்கள் என்கிறோம். ஷெனாய் போன்ற சில வாத்தியங்களையும் சோகமான வாத்தியங்கள் என்கிறோம். எண்ணம் தனியானது அல்ல. அது சமூகம் சார்ந்தது. எண்ணத்தின் மூலம் ஆசை கிடையாது. எண்ணத்தில் ஒன்று ஆசை. ஏன் இந்தப் பொருள் வேண்டும் என்ற கேள்வி கேட்டால் ஆசையிருக்கிறதா அச்சமிருக்கிறதா என்பது தெரிந்து விடும். எதுவும் நிராசையாக இருக்காது. முட்டாள்தனமான ஆசையாக இருக்காது. அப்படிதான் ஆசையெது எண்ணம் எது என்று தீர்மானிக்க வேண்டும். அப்படித் தீர்மானித்தால் பிரச்சனையிருக்காது.

மற்றவர்களோடு ஒப்பிடக்கூடாது என்கிறீர்கள். நேற்றை விட இன்று நான் நன்றாக இருக்கிறேன் என்று நினைக்கலாம் அல்லவா? அதுபோல இருக்கலாம் இல்லையா?

நேற்று செய்த தவறை இன்று செய்யக் கூடாது என்றால் என்ன அர்த்தம். நேற்று நான் நன்றாக இல்லை என்றுதானே அர்த்தம். தினமும் கற்றுக்கொண்டால் இந்தப் பிரச்சனை வராது. நேற்றைக்கும் இன்றைக்குமான ஒப்பீடு இல்லை அது. நேற்றைய வெற்றி என்ன காரணத்தினால் வந்தது. இன்றைய தோல்வி எதனால் வந்தது. இன்றைக்கு இந்த தோல்விகளைக் குறைத்துக் கொள்ளவும், வெற்றிகளை கூட்டிக் கொள்ளவும் பழக்கம் எனக்கு வரும். இது ஒப்பீடு இல்லை; அளவீடு. நாளைக்கு இதைவிட சிறப்பாகச் செய்கிறேன் என்றால் இன்றைக்குச் சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம். நாளைக்கு சரியாக இருப்பேன் என்றும் நினைக்காதீர்கள். நேற்றைக்கு சரியாக இல்லை என்றும் நினைக்காதீர்கள்.
எதை மறக்கவேண்டுமென்று கருதுகிறேனோ, ஆகாத, வேண்டாத நினைவுகள், எதிர்பாராத நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வருகிறது. அதை மறக்க என்ன பயிற்சி செய்ய வேண்டும்?

சில நிகழ்வுகள் மறக்க முடியாதவைதான். ஆனால், அவை ஆறுமாதத்திற்குமேல் உங்கள் நினைவிலிருந்தால் உங்கள் மனம் நோய்வாய்ப் பட்டிருக்கிறது என்று அர்த்தம். நெருங்கிய சொந்தங்களின் மரணத்தினால் வரும் சோகம்கூட ஆறுமாதத்திற்குமேல் இருக்காது என்று ஓர் புள்ளி விபரம் சொல்கிறது. வாழும்போது அவரை நாம் கண்டு கொள்ளாமல்கூட இருந்திருக்கலாம். அவருடைய முகம்கூட புகைப்படத்தில் பார்க்கும் போதுதான் நினைவிற்கு வருகிறது. அந்த விஷயங்களை மறக்கவே நினைக்காதீர்கள். ஆம். அது இழப்பு; இது தோல்வி; இது வருத்தம். இதற்கு அடுத்த கட்டம் எது என்று போய்விட்டால், அது மறதியில்லை. நம் நினைவிற்கு வராமல் போய் விடும்.

தியானத்தில் தன்னிலை மறக்கமுடியும் என்கிறார் களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன? பேய் பற்றி கிராமங்களில் பேச்சுக்கள் உலவுகின்றன. அதைப் பற்றியும் சொல்லுங்கள்.

தியானத்தில் தன்னிலை மறப்பது என்பது, தன்னிலை உணர்தல்தான் பிரமாதமான விஷயம். விழிப்புற்று இருப்பதுதான் முக்கியமான விஷயம். என்னை மறந்து விட்டேன் என்பதற்கு எதற்கு தியானம்? அதற்கு கால்குப்பி மது போதுமே. தியானம் ரொம்ப உயர்வான விஷயம். முழு முனைப்போடு, முழு கவனமும் இருக்கிற விஷயம். அது தப்பித்தல் கிடையாது. ஃபேன்டஸி கிடையாது. கற்பனை கிடையாது. நீங்கள் உண்மையோடு விழிப்புணர்வோடு, கவனத்தோடு இருப்பதற்குப் பெயர்தான் தியானம். நான் ஒரு படம் வரைகிறேன் என்றால் என்னுடைய முழு கவனமும் அதில் இருக்கும். படம் வரையும்போது நாளை கடன்காரனுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம். நாளை கட்ட வேண்டிய தொகைக்கு என்ன செய்யப்போகிறோம் என்றால் கவனம் இருக்காது.

தினமும் காலை ஐந்து நிமிடமும் மாலை ஐந்து நிமிடமும் கவனம் சிதறாமல் இருந்தால் போதாது. நாள் முழுவதும் கவனமாக இருக்க வேண்டுமென்றால் விழிப்போடு இருக்கவேண்டும். இதற்கு நிறைய உத்திகள் சொல்லித் தருகிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஓர் உத்திதான். சரி கூட்டமாக வந்து விட்டீர்கள். ஒரே சமயத்தில் உங்களுக்கெல்லாம் தியானம் சொல்லித்தருகிறேன் என்று கற்றுத்தர முடியாது. அப்படி கற்றுத்தந்தால் அது தியானமில்லை. எனக்கு இது பொருத்த மானதாக இருக்கவேண்டும். பயனுள்ளதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது சரியான முறையாக இருக்கமுடியும். எல்லோருக்கும் ஒரே பிரிஸ்கிரிப்ஷன் தருபவர் டாக்டர் கிடையாது. தியானம் என்பது மிகமிக நுட்பமான உயர்ந்த ஒரு விஷயம். அதை வியாபாரமாக்கி மலினப்படுத்தி விட்டார்கள் என்பதற்காக தியானத்தை விளையாட்டாகக் கொள்ளாதீர்கள். அது மிகப் பெரிய விஷயம்.
பேய்தான் இல்லையே. பிறகு அதைப்பற்றி என்ன பேசவேண்டியிருக்கிறது. உடலில் இருக்கிற வலியை மனதின் வலியாக மாற்றிக்கொள்ளும். நிஜத்தில் இருந்து விலகி ஒரு கற்பனைக்கு போய் விடும். பேயாடுவது சாமியாடுவது இரண்டுக்கும் அடிப்படை விஷயம் ஒன்றுதான். பேய் என்பதால் ஓட்டுகிறார்கள். சாமி என்பதால் ஓட்டுவதில்லை. இறக்குகிறார்கள். இவ்வளவுதான் விஷயம். இவர்கள் இறக்கவில்லை என்றாலும் அது தானாகவே போய்விடும். மனது தப்பிப்பதற்காக செய்கிற தந்திரம் இது. சின்ன குழந்தைகளை கண்டிப்பாக வளர்க்கிறோம் என்று வீரமாக சொல்வார்கள். ஒரு கட்டத்தில் அந்தக்குழந்தை சீண்டிவிட்டு எவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார்கள் என்று சோதித்துப்பார்க்கும். நீங்கள் திட்டுவதும், கண்டிப்பதும்கூட கவனத்தை கவர்வதுதான். கொஞ்சுவது மட்டுமல்ல, திட்டுவதும் கவனஈர்ப்புதான். பயப்படுவதும் கவன ஈர்ப்புதான். ஒரு காலத்தில் இரவில் வெளிச்சம் குறைவு. இப்போது இரவுகளில் வெளிச்சம் அதிகம். இருட்டு என்பது ஒரு புரியாத புதிர். புரியாத விஷயங்களில் எப்போதுமே மனிதனுக்கு ஒரு பயம் இருக்கும். கடவுளுக்கு எப்படி விதம்விதமாய் வடிவம் கொடுத்தோமோ, அதுபோல பயத்திற்கு கொடுத்த விதம்விதமான வடிவங்களில் பேயும் ஒன்று. அதுதான் வடிவம் என்றும் கிடையாது. அதுதான் நிஜம் என்பதும் கிடையாது. கடவுள் என்பது எப்படி காதலோ, அப்படி பேய் என்பது பயம்.

வாழ்க்கையில் பல சூழ்நிலைகளில் பிறர் செய்த செயல்களை மன்னிப்பதற்கு ஏதேனும் பயிற்சி இருக்கிறதா?

மன்னிப்பதற்கு முதலில் மனம் வேண்டும். அவர்கள் செய்த தவறு நம்மை பாதிக்காத போதுதான் மன்னிப்போம். உண்மையில் நாம் மன்னிப்பது இல்லை. தவறு செய்த மனிதனை நாம் புரிந்துகொண்டோம். அவரிடம் நம்முடைய எதிர் பார்ப்பை குறைத்துக் கொண்டோமென்றால், தானாகவே மன்னித்து விட்டதுபோல்தான். சரி தவறு என்பதில் இல்லை. அதைத்தான் தாண்டி வந்துவிட்டேன். அதைப் புரிந்துகொண்டேன் என்பதில் இருக்கிறது மன்னிப்பு. மன்னிப்பு என்கிறபோதே ஆணவமும் திமிரும் மனதில் தொக்கி நிற்கின்றன. உங்களைவிட பெரியவனாக இருந்தால்தான் மன்னிக்க முடியும். சமமாக இருந்தால் மன்னிக்க முடியாது. சமமாக இருந்தால் புரிய வைக்கமுடியும். உங்களுக்குக் கீழ் இருந்தால் கெஞ்ச முடியும். எனவே, மன்னிக்கிறோம் என்று சொல்லும்போதே நான் உசத்தி, நீ மட்டம் என்று சொல்கிற தொனி அதில் வந்து விடும். எனவே எப்போதும் யாரையும் மன்னிக்காதீர்கள். அவ மதிக்கும்போது இருக்கும் வலி அடுத்தநாள் இருக்காது. ஆனால் அவன் இப்படி செய்து விட்டேனே என்று நினைத்து நினைத்து வேதனை அடையும்போது ஆத்திரமும் ஆங்காரமும் வருகிறது. மன்னிப்பதற்கான அடிப்படை விதி, எந்த விஷயத்தையும் புரிந்துகொள்ளுங்கள். இவன் இப்படித்தானா, அப்படியென்றால் இவனைப்பற்றி நான் நினைத்ததெல்லாம் தவறு. எனவே நானும் தவறு செய்துவிட்டேன் என்று எடுத்துக் கொண்டால்தான் மன்னிக்க முடியும். எனவே மன்னிக்காதீர்கள். மன்னிப்பு என்பது பெரிய விஷயம். அந்த உயரத்தில் போய் நிற்காதீர்கள்.

வாழ்க்கைப்பயணம் கொஞ்ச தூரம் சென்ற பிறகு, வாழ்வில் எதையெல்லாம் சாதித்தோம், எதையெல்லாம் சாதிக்க வில்லை எனும்போது இன்னும் சிறப்பாகச் செய்யவில்லையே என்ற ஏக்கம் வருகிறதே?

செயல்களை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்கிற பேச்சே வரக்கூடாது. செய்யும் போதே சிறப்பாக செய்திருந்தால் அன்றைய இரவோ, அல்லது செய்து முடித்த அந்தக்கணமே அதை திரும்ப யோசித்துப் பார்க்க வேண்டாம். அது சரியாக இருக்கும். வாழ்வில் நன்றாக இருந்திருப்பீர்கள். சாதிக்கவேண்டும் என்று நாம் பரவலாக நினைப்பது இவரைப்போல, அவரைப்போல, அதுபோல, இதுமாதிரி என்று சில கணக்குகள் வைத்திருக்கிறோமே, நம்மிட மிருக்கிற நம் மொழியை நம் மூக்கை எவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறோமோ, அந்தளவிற்கு நமக்கு புத்துணர்வான மனநிலை இருக்கும். இதை விடுத்து அவரை போல தாடி வைத்துக் கொள்கிறேன். இவரைப் போல மேக்கப் போட்டுக் கொள்கிறேன் என்று ஆரம்பிப்பதெல்லாம் நமக்கு ஒரு அசௌகரியத்தை உண்டு பண்ணும். எண்ணமும் அதே போல்தான்.

வாழ்க்கையில் வயதான காலத்தில் சில கடமைகளை நிறைவேற்றிய பிறகு இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்று நினைப்பு வருகிறதே?

இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியாது. ஜெயகாந்தன் மிகப்பெரிய எழுத்தாளர் இல்லையா?

அந்தக்காலகட்டத்தில் அவர் மிகப் பெரிய எழுத்தாளர். அன்றைக்கு சாதித்து விட்டோம் என்று இப்போது சும்மா இருக்க வில்லை. செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சும்மா இருக்கிறார். நம் கடமையை ஆற்றி விட்டோம். ஆற்றவில்லை என்று கணக்கு போட்டு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதுவும் தப்பாக கணக்கு போட்டது நம்முடைய தவறு தான். தோல்வியடைவது நியாயம்தான். அப்போது தான் நமக்கு புத்திவரும். ஆனால் வாழ்வில் இன்னொரு முறை நமக்கான பரிட்சை வருவதில்லை என்பதால் நிதானமாக ஒவ்வொரு பரிட்சையையும் தெளிவாக அணுகலாமே என்பதற்காகத்தான் இந்தப்பேச்சு எல்லாம். வெற்றி தோல்வி என்று எதை வைத்து சொல்கிறீர்கள். நிம்மதியாக இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.

ஒரு குழந்தையை படிக்க வைக்க வேண்டு மென்பது உங்கள் கடமை. உங்களால் இந்தப் பள்ளியில் இவ்வளவு கட்டணம் கட்டித்தான் படிக்க வைக்கமுடியுமென்றால் அதுதான் உங்களின் சக்தி. அந்தக் குழந்தையின் படிப்பிற்கு எந்த அளவிற்கு தூண்டுகோலாக இருக்க முடியுமோ, அதைத்தான் உங்களால் செய்ய முடியும். அந்தப் பள்ளியில் சேர்க்கவில்லையே, அந்தக் கல்லூரியில் சேர்க்கவில்லை.

நன்கொடை கொடுத்து படிக்கவைக்க முடியவில்லையே என்று நினைத்தீர்களென்றால் அது நிச்சயம் தோல்விதான். இதற்காக அழுதால் அப்போதைக்கு சுகமாகயிருக்கும். ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. நான் இதையெல்லாம் செய்யாமல் விட்டு விட்டேனே என்ற வருத்தம் இருக்கலாம். இப்போது அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள். எனவே வருத்தப்படாதீர்கள். அதற்காகத்தான் ஒரே விஷயத்தை யோசிக்காதீர்கள் என்று நான் சொல்கிறேன். நாம் தோற்றுப் போய் விட்டோம். சரி, அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள். இன்றைக்கு நாம் ஜெயிக்கிறோமா இல்லையா?

மிகவும் ஆசை ஆசையாய் திருமணம் செய்து வைத்தோம். அந்த கல்யாணம் சரியாக அமையவில்லை என்று நிறைய பெற்றோர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் சொல்வேன், கல்யாணம் செய்து வைப்பது வரைக்கும்தான் உங்கள் கடமை. வாழ்வது அவர்கள் பொறுப்பு. அதில் ஏன் நீங்கள் தலையிடுகிறீர்கள் என்று சொல்வேன். எல்லாமே நான்தான் செய்து வைக்க வேண்டும் என்று தலையில் கொஞ்சம் ஆணவத்தோடு ஏற்றி வைத்துக்கொள்கிறீர்களே, அப்போதுதான் பிரச்சனைகள் வருகின்றன.
அன்பு என்பது பற்றி சில வார்த்தைகள்?

அவ்வையார் ஆத்திச்சூடி எழுதும்போது, அறம் செய விரும்பு என்றார்கள். இயல்பாக வருவதை அறம் போலச் செய் என்றார்கள். பிரிட்டிஷ் காலத்தில் பாரதி ஆத்திச்சூடி எழுதும்போது, அச்சம் தவிர் என்று எழுதினார். ஏனென்றால் அச்சம் என்பது பெரிய விஷயமாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் ஓர் ஆத்திச் சூடி எழுதவேண்டி வந்தால், முதலில் அன்பைப் பயில் என்கிற வாசகம்தான் இருக்கவேண்டும். ஏனென்றால் நாம் அன்பைப் பயில மறந்து விட்டோம். அந்த விஷயத்தை நாம் எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தொகுப்பு: சீனிவாசன்

2 Responses

  1. Muthu.T.S.

    Dear sir,

    Best compliments from muthu and family. we are your namadhunambikkai readers from last one year . really very useful matters to our routine normal life & business. thank you very much for your great job.

    Muthu.T.s.
    shencottai.

  2. James P Camaron

    I am a fan of Dr. Ruthran from last few decades, but till now I did not meet him directly. I have heared “Outlets of his mind blows” at many times. But this is the first one amoung them through this magazine “Nanadhu Nambikkai”. Thanks so lot. If we understand his speach in his point of view, we will confidently get good guide lines,better advise and best clarification of anything. As a Doctor, Read his writes, Here his speach, Meet him atleast once in your life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *