– இயகோகோ சுப்பிரமணியம்
கடலின் ஆழமும், மனதின் உயரமும்
அதனதன் நிலையில் சரிசமமே!
பணத்தைக் கொண்டு வெற்றியை அளப்பது
எந்த நிலையிலும் பெரும் தவறே!
துரையைச் சேர்ந்த ஒருவர் அலுவலகத்தில் உங்களுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார். உங்களைப் பார்க்கவேண்டுமாம்’ என்ற செய்தியை நண்பர் ரங்கநாதன் தெரிவித்தார். அப்போதுதான் வியாபாரம்/ தொழில் இரண்டிலும் ஓராண்டைக் கடந்து எங்கள் சந்தையை விரிவுபடுத்திக் கொண்டிருந்தோம். பத்தடிக்குப் பதினைந்து அடி அளவுள்ள அறைதான் எங்கள் அலுவலகம்.
உள்ளே நுழைந்தபோது அந்த இளைஞர், ”வணக்கம் ஸார்! என் பெயர் அருணாசலம்.
மதுரையிலிருந்து உங்கள் டேப்புகளுக்காக ஏஜென்ஸி கேட்டு வந்துள்ளேன்” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். இரண்டு நண்பர்கள் பங்கு தாரர்களாக உள்ள நிறுவனம் என்றும், ஜவுளித் துறை இயந்திரங்களுக்குத் தேவையான பல்வேறு உதிரிபாகங்களை மதுரை மற்றும் தென் பகுதியிலுள்ள பஞ்சாலைகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும், ஓரளவு நாணயமானவர்கள் என்று பெயர் பெற்றிருக்கின்றோம் என்றும் கூறினார். உங்களுடைய கல்வித்தகுதி என்ன என்று கேட்டபோது, நாங்கள் இருவருமே சட்டம் படித்துப் பட்டம் பெற்றவர்கள். ஆரம்பப் பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்து இன்றுவரை ஒன்றாகவே இணைந்து தொழில் செய்து வருகின்றோம் என்றார். ‘வழக்கறிஞருக்குப் படித்தவர்கள், ஜவுளித்துறை முகவர்களாக’ என்ற எண்ணமே வித்தியாசமாக இருந்தது.
ஏற்கனவே அந்தத் தொழிலில் பல்லாண்டு காலமாக இருந்தவர்கள், டெக்ஸ்டைல்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்று பல பெரிய நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள்தான் எங்கள் முகவர்களாக இருக்கிறார்கள். இருந்தாலும் இவர்களுக்கும் குறிப்பிட்ட பகுதியில் ஏஜென்ஸி கொடுத்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்து மதுரை சென்றேன். சுந்தர் என்கிற மற்ற நண்பரையும் உடன் அழைத்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட பஞ்சாலைக்குச் சென்றோம். ஏதாவது ஒரு பெரிய பஞ்சாலையில் எங்கள் பொருட்களை விற்பனை செய்தால் மட்டுமே ஏஜென்ஸி. மற்ற ஆலைகளை அவர்களுக்கு ஒப்படைப்போம் என்று ஒரு நிபந்தனை விதித்திருந்தேன்.
அந்தப் பெரிய பஞ்சாலையில் அன்றே எங்களுக்கு ஆர்டர் கிடைத்தது. அன்று அது மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்த விஷயம். நண்பர் களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. அந்தப் மிகப் பெரிய பஞ்சாலையின் முதலாளியும், நிர்வாகியும் இவர்கள் துடிப்பானவர்கள், வாடிக்கையாளர் சேவையில் நம்பிக்கை உள்ளவர்கள், நாணயஸ்தர்கள், நன்றாகச் செய்வார்கள் என்று வாழ்த்துக்கூறி அனுப்பினார்கள். இருபது ஆண்டுகள் கழித்து இன்று அவர்கள் அடைந்திருக்கும் இடம் மிகப்பெரிய சாதனை யாளர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய இடம்.
படித்தது வழக்காடுமன்றம் செல்வதற்கு என்றாலும் இன்று தென்மாவட்டப் பஞ்சாலைத் தொழிலில் இவர்களைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வெளிநாடுகளிலிருந்து உபயோகப் படுத்தப்பட்ட இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்காக, பெரிய பஞ்சாலை அதிபர்கள், இவர்களைப் பல வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதுமுண்டு. இந்த நம்பிக்கைதான் வெற்றியின் ஆணிவேர்.
இவர்களிடம் பேசும்போது, சில சமயம், ”சார்! இவ்வளவு கடினமாக உழைத்தும், நாணய மாக இருந்தும், மிகப்பெரிய செல்வம் சேர்க்க முடியவில்லை! ஒரு எல்லைக்குள் மட்டுமே அடங்கிக் கிடக்கின்றோமே! இந்த உழைப்பையே வைத்து ஒரு பஞ்சாலை அதிபராகவோ, ஒரு அம்பானி மாதிரியோ ஏன் உயர முடியவில்லை” என்பது மாதிரி யான ஒரு கருத்தைத் தெரிவிப்பார்கள்.
இவர்கள் மட்டுமல்ல. நிறையப் பேரிடம் இன்று நீங்கள் காணும் கனவு என்ன என்று கேட்டால், ”ஃபோர்ப்ஸ்” பத்திரிகையின் பத்து தலைசிறந்த பணக் காரர்களைப் போல ஆகவேண்டும் என்பது தான் என் கனவு என்பார்கள். இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள், பத்திரிகைகள், பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் எல்லாமே பணம் ஈட்டுவதை மட்டுமே பெரிய சாதனை போலச் சித்தரிப்பதால் பாமர மக்களும் சரி. அதிகம் படித்தவர்களும் அதையே வாழ்வின் குறிக்கோளாகக் கருதி விடுகிறார்கள்.
இருக்கின்ற இடம், சூழ்நிலை, வாய்ப்புகள், சந்தை, சமுதாய அமைப்பு, அரசியல், பொருளா தாரம், குடும்பம் இவைகளைப் பொறுத்துத்தான் ஒருவருடைய வாழ்வின் அடிப்படைகளும், பணியும், தொழிலும், வெற்றியும் அமைகின்றன. ஒரே குடும்பத்தில் பிறந்து, ஒரே மாதிரியான பட்டம் பெற்று, ஒரே துறையில் அனுபவம் பெற்ற இரண்டு சகோதரர்கள் தனித்தனியாக அதே தொழிலைச் செய்யும்போது ஒருவர் அதிகப்பணம் சேர்ப்பதும், மற்றவர் குறைவாகச் சேர்ப்பதும் நாம் அடிக்கடி காண்கின்ற, கேள்விப்படுகின்ற செய்தி தான். இருவரின் உழைப்பும் ஒரே மாதிரியாக இருந்தால்கூட மற்ற சூழல்கள் வேறுபடலாம்.
வாய்த்த மேலதிகாரிகள், சூப்பர்வைசர்கள், தொழிலாளர்கள், மூலப்பொருட்கள் விற்பவர்கள், வாடிக்கையாளர்கள், வங்கிகள், குடும்ப உறுப்பினர்களது உதவி அல்லது உபத்திரவம் நண்பர்கள் நல்ல அல்லது நல்லது அல்லாத அறிவுரைகள் போன்றவையால் பல மாறுதல்கள் ஏற்படலாம். அதனால் இருவரில் ஒருவர் தோற்று விட்டார் என்று பொருளல்ல.
ஒன்றை நன்றாகத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து எல்லா நாட்களும் வெற்றி பெற்றவர்களோ, பணம் சேர்த்தவர்களோ கிடையவே கிடையாது. அவர்களது வெளியே தெரியாத மற்ற முயற்சிகளில் அவர்கள் தோல்வியைச் சந்தித்திருக்கலாம். பொருளை இழந்திருக்கலாம். எனவே, பணம் ஒன்றை மட்டுமே வாழ்வின் வெற்றிக்கு அடையாளமாகவோ, அளவீடாகவோ கருத வேண்டிய அவசியமில்லை.
ஒப்பீட்டுக்காக இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். வங்காள தேசத்தில் ‘டாக்கா’ நகரிலிருந்து என்னைக் காண வேண்டும் என்று ‘அமினூல் இஸ்லாம்’ என்பவர் வந்திருந்தார். வங்காள தேசத்துக்கான ஏஜென்ஸி கல்கத்தாவில் உள்ள எங்களது முகவர் ராஜேஷ் பாரிக் அவர்களிடம் உள்ளது. அவரோடு சேர்ந்து துணை முகவராக நான் தொழில் செய்கிறேன் என்று அவர்களது சம்மதத்தையும் பெற்று எங்களைக் காண வந்தார். கோவையில் தங்கி எங்களது ஆலையில் பயிற்சி பெற்றுக்கொண்டு சென்றார். இது நடந்தது, சுமார் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் முன்னம்.
இன்று அவர் வங்காளதேசத்தில் பஞ்சாலைத் தொழிலில் ஒரு குறிப்பிடத்தக்க முகவர். எத்தனையோ பேர் இந்த நிலைக்கு வர வேண்டுமென்று தவித்தாலும், இவர் வெற்றி பெற்றதற்குக் காரணம் அங்குள்ள சந்தை, தேர்ந்தெடுத்த விற்பனைக்கான களம், பொருட்கள், வாடிக்கையாளர்களுடனான உறவு, நேர்மையான அணுகுமுறை இவையே.
மதுரையிலிருக்கும் அருணாசலம், சுந்தர்; டாக்காவில் இருக்கும் அமினூல் இஸ்லாம்- இவர்களைப் பற்றி, இவர்களது வெற்றியைப்பற்றி குறிப்பிட்ட பகுதியைத் தவிர குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாது. ஆனால் இவர்கள் மிகப்பெரிய சாதனை யாளர்கள். வருவாய் அளவு வேண்டுமானால் இருவருக்கும் வேறு பட்டிருக்கலாம். ஆனால், வெற்றியில் ஒரே இடத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்.
இன்னொரு கோணத்தில் பார்ப்போம். எங்களது நிறுவனத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் விற்பனை மேலாளராகப் பணி புரிகின்றார். பஞ்சாலை சம்பந்தப்பட்ட, ‘ஸ்பிண்டில் டேப்’ விற்பனை அவரது சாம்ராஜ்யம்.
இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், நாங்கள் எங்கள் நிறுவனத்தைத் துவக்கியபோது பஞ்சாலை களுக்குச் சென்று எங்கள் நிறுவன ‘டேப்’புகளை அதற்குண்டான கருவியில் வைத்து ஒட்டி, மெஷினில் சரியாக அந்த ‘டேப்’புகளை ஏற்றி- ஓட்டிக்கொடுத்து விட்டு வரவேண்டிய பணி.
இவர் பள்ளியிறுதி வகுப்புவரை மட்டுமே படித்துள்ளார். பணிபுரியும்போதே விற்பனைக்குத் தேவையான செய்திகள், முகவர் தொடர்பு, உதவி யாளருக்குப் பயிற்சியளிப்பது, ஆலையில் தொடர்பு கொண்டு உற்பத்தியைப் பற்றி, தரத்தைப் பற்றிய விவாதங்களில் ஈடுபடுவது, ஆங்கில மொழியில் பேசக்கற்றுக் கொள்வது, பின்னர் ஆங்கில மொழியில் தொடர்புக்கான கடிதங்களை எழுதக் கற்றுக் கொள்வது – என்று படிப்படியாகத் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு இன்று விற்பனை மேலாளராகப் பணி புரிகின்றார்.
இந்த ‘சிந்தடிக் ஸ்பிண்டில் டேப்’ தயாரிப்பை முதன்முதலில் கண்டுபிடித்தது, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த, ‘ஹெபாஸிட்’ நிறுவனம்தான்.
எங்களுடன் இன்று கூட்டாகத் தொழில் செய்து வரும் அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் கூட ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் கிருஷ்ண மூர்த்தி அவர்களிடம்தான் விசாரிப்பார்கள். அந்த அளவிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு, இன்று உயர்ந்து இருக்கிறார்.
கல்லூரிப்படிப்பு முடித்து, ஐஐஎம் போன்ற இடங்களில் உயர்கல்வி பெற்று, புகழ்மிக்க நிறுவனத்தில் விற்பனை மேலாளராக விளங்குபவரின் வெற்றிக்கும், இவரது வெற்றிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
இவரும் பன்னாட்டு நிறுவனத்தின் உயர் பதவியில்தான் இருக்கின்றார்.
கிடைக்கக்கூடிய சம்பளம், வாழும் இடம், பணிபுரியும் சூழ்நிலை, மற்ற வசதிகள் வேண்டு மானால் மாறுபடலாம். ஆனால், வெற்றியின் வெளிச்சம் இருவரையும் ஒரே வட்டத்துக்குள் தான் வைக்கின்றது. இந்திரா நூயி அவர்களது வெற்றியும் இதே வட்டத்துக்குள்தான். இந்த உணர்வும், புரிதலும்தான் முக்கியமே தவிர அதில் கிடைக்கும் பணம் சார்ந்த வசதிகள் வெற்றிக்கு அளவுகோலாகாது. சிலபேர் இதையே குதர்க்கமாகக் கேட்கலாம்.
அமெரிக்க அதிபர் ‘ஒபாமா’வின் வெற்றியும், எங்கள் ஊர்ப்பஞ்சாயத்து போர்டு ‘பிரசிடெண்’டின் வெற்றியும் ஒன்றுதானா என்று. என்னைப் பொறுத்தவரை இருவரது வெற்றியும் ஒன்றேதான். சந்தேகமே கிடையாது. ஆளுமைக் குட்பட்ட பரப்பும், பொருளாதாரப் பிரம்மாண்டமும், உலகத்திலேயே கடவுளுக்கு அடுத்தபடியான இடமும்- அமெரிக்க அதிபருக்கு வெற்றியினால் கிடைத்த அபரிமிதமான போனஸ் என்றால், எங்கள் ஊர்ப் பிரசிடெண்டுக்கு அந்த போனஸ் சுத்தமாகக் கிடையாதுதான்.
ஆனால், தலைமையும், வெற்றியும் அதுசார்ந்த பணியும், மகிழ்வும் நிச்சயம் வேறுபாடற்றவைதான்.
சிலபேர் வெற்றியைப்பற்றிப் பேசும்போது, அரசியல், சினிமா, விளையாட்டு போன்றவற்றில் வெற்றி பெற்றவர்களது வாழ்வையும், சந்தித்த சோதனைகளையும் செய்த சாதனைகளையும் பேசி, அதை உதாரணமாகக் காட்ட முயற்சிப்பார்கள். வெற்றி என்ற வெளிச்சத்தில் அவையும் சேர்த்துக் கொள்ளப்படலாமே தவிர அந்த வெற்றியைப் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதுவது சரியாக இருக்காது.
கவிதை, இலக்கியம், சினிமாவில் ஆட்டம், பாட்டு, நடிப்பு, இசை, விளையாட்டில் திறமை, கிரிக்கெட், செஸ் போன்றவற்றின் மேதைமை என்பவை சாதாரண மனிதர்களிடம் இல்லாத, கற்பிக்க முடியாத, ‘இறையருள்’ என்ற வரையறை க்குள் அடங்கக்கூடிய தனித்துவம் வாய்ந்தவை.
இவர்களது வெற்றியும் மற்ற துறைகளில் உள்ளவர் களது வெற்றியும் ஒன்றேதான் என்று எடுத்துக் கொண்டாலும், தனித்துவம் காரணமாக மாறுபடும் அந்தச் சாதனைகளை இங்கே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதுமில்லை; அது தவறும்கூட.
ஒரு பஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டாரென்று எல்லா பஸ் கண்டக்டர்களும் முயற்சி செய்தாலும் ஆக முடியாது.
ஆனால், அந்த பஸ் கண்டக்டர்கள் தங்கள் திறமையால் வெற்றி கரமான கண்டக்டர்களாகப் பிரகாசிக்க முடியும்.
கவிதை எழுதுவதைப் பயிற்சி எடுத்துக் கொண்டு எழுதினாலும் கண்ணதாசன் போல, வைரமுத்து போல வரமுடியாது. கிரிக்கெட் ஆடும் லட்சக்கணக்கான பேரில் சச்சின் டெண்டுல்கர் மாதிரி அனைவரும் வெற்றி பெற இயலாது.
பாடினால் லதா மங்கேஷ்கர் போல, சுசீலா போல எனப் பயிற்சி எடுத்துப் பாட முடியாது.
இறைவனின் வரம் அவர்களுக்குத் தனித்துவமான வெற்றியையும், சாதனைக்கான கௌரவங்களையும் அளித்துள்ளது. அந்தத் தனித்துவ வெற்றியை ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற வெற்றி களைப் பார்த்தால் வெற்றிகளில் வேறுபாடு கிடையாது.
ஒரு நல்ல ஆசிரியராக, அரசாங்கப் பணியாளராக தொழில் முனைவோராக, தொழில் அதிபராக, விவசாயியாக என எத்துறையிலும், எந்நாட்டிலும் எவரும் பெறும் வெற்றிகள்தான் இந்த சமுதாயத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.
பாலைவனத்தில் ஒட்டகத் தோடு போட்டி போட்டு ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் சுறாமீனுக்கு கிடையாது. நீச்சல் போட்டியில் வங்காள விரிகுடாவில் குதிக்க வேண்டிய கட்டாயம் சிங்கத்துக்கும், புலிக்கும் கிடையாது.
கடலின் ஆழத்தை அளக்கச் சின்ன மீன் குஞ்சு போதும். மலையின் உயரத்தை ஏதாவது ஒரு சிறு பறவைதான் பறந்து சென்று அமர்ந்து ரசிக்கும். மீனும், பறவையும் தங்களுக்குள் ஒப்பீடு செய்து கொள்வது சாத்தியமும் இல்லை. சாதனையும் இல்லை.
வாருங்கள்!
அவரவர் களங்களில், அவரவர் தளங்களில் ஏற்றத் தாழ்வற்ற வெற்றி வெளிச்சத்தில் நின்று சாதனை படைப்போம். மிதமான வெற்றி, மிகப் பெரிய வெற்றி, அரைகுறை வெற்றி என்றெல்லாம் கிடையாது. வெற்றி வெற்றிதான். பார்வையை மாற்றிக் கொள்வோம்.
(தொடரும்)
rajarajacholan
very impressive thanks