– வினயா
இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை. ஒரு மனிதன் தன்னுடைய வட்டத்தைப் பெருக்கிக் கொண்டே போகிற போது, அவனுடைய சக்திவட்டமும் பெருகி விரிகிறது என்பதை இந்தக் கவிதை வரிகள் சொல்லாமல் சொல்கிறது. தன்னை பிரபஞ்சத்தில் ஒரு துளியாகப் பார்ப்பவர்கள் சாதாரண மனிதர்கள். தங்களை பிரபஞ்சத்தின் ஒளியாகப் பார்ப்பவர்களே சாதனை மனிதர்கள்.
பின்னடைவு களையோ, வசதியின்மையையோ குறையாகப் பார்க்காமல், தங்களிடம் உறுதியிருந்தால், உரிய கருவிகளை உலகமே தரும் என்ற உணர்வுடன் செயல்பட்டு ஜெயித்தவர்கள் ஏராளம்.
நிர்வாகவியலில் நிகரிலா உயரங்கள் தொட்டு, அதே நேரம் எம்.பி.ஏ. பட்டம் இல்லாமல் எல்லாத் தடைகளையும் தாண்டி வந்த 20 அசகாய சூரர்களின் அற்புதமான வாழ்வை ஆசை ஆசையாய் எழுதியிருக்கிறார் ராஷ்மி பன்ஸல். தங்களால் முடியும் என்பது தங்களுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் துணிந்து போராடி, ஜெயித்துக் கொண்டே இருப்பவர்களின் சங்கநாதம், இர்ய்ய்ங்ஸ்ரீற் ற்ட்ங் ஈர்ற்ள் என்ற புத்தகம்.
இந்தப்புத்தகத்தில் உள்ள பட்டியலை பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைப்பவர் தூத்துக்குடி தமிழர் என்பது பெருமையான விஷயமல்லவா? அவர் பெயர் பிரேம் கணபதி. தூத்துக்குடி அருகிலுள்ள நாகலாபுரம் என்ற கிராமத்தில் பிறந்து, பத்தாவது வரை மட்டுமே படித்து, சென்னையில் ஒரு காப்பிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.
அடுத்தது என்ன என்கிற ஆர்வம் தூண்ட, மும்பையில் ஒரு பேக்கரியில் வேலை செய்தார். பேக்கரி உரிமையாளர் ஒரு ஹோட்டல் தொடங்க, அங்கே பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது. அடுக்களை தாண்டிவர, உரிமையாளர் அனுமதிக்காததால், வேறொரு ஹோட்டலில் டீ பையனாக வேலை. வயிற்றில் தீ உள்ள பையன் என்பதால் டீ பையன் வேலை இவரை வளர்த்தது.
அங்கெல்லாம், அதிகம் டீ விற்கிற பையன்களுக்கு விற்பனைக்கேற்ற கமிஷன் உண்டு. மற்ற பையன்கள் நாளொன்றுக்கு முந்நூறு ரூபாய்க்கு டீ விற்றால் பிரேம் கணபதி ஆயிரம் ரூபாய்க்கு விற்பார். சேவைச் சிறப்பே ரகசியம். பக்கத்திலிருந்த வங்கி அலுவலகம் பிடிவாதமாக பிரேம் கணபதியிடம் மட்டுமே டீ வாங்கும்.
இதில் ஒரு நாளுக்கு நூறுரூபாய் வரை சம்பாதித்த பிரேமுக்கு வந்ததொரு வாய்ப்பு.
வாடிக்கையாளர் ஒருவர் பணம் போட்டு டீக்கடை தொடங்க விரும்பினார். பார்த்துக் கொள்வது பிரேமின் பொறுப்பு. 50% பங்குதாரர்!! தொழில் வளர்ந்தது. பெருகும் பணம் பார்த்து முதல் போட்டவர் மனதில் ஆசை வளர்ந்தது. பங்கு தர மறுத்தார்.
பிரேம் கணபதிக்கு பின்னடைவு. விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் கடன் வாங்கி வந்து, தென்னிந்திய உணவகம் ஒன்றை மும்பையில் சிறிய அளவில் தொடங்கினார்.
அவர் சுட்ட தோசைகள் பல்லாயிரக் கணக்கானவர்களை ஈர்த்தன. 1993-97 வரை, சீராக வளர்ந்தார். இங்கும் சேவைதான் அவரது தனித் தன்மை.
1997க்குள் இரண்டு லட்சம்வரை சேமித்திருந் தார். சகோதரர்கள் துணையுடன் சென்னையில் ஒரு கிளை. அப்படித் தொடங்கப்பட்டதுதான் தோசா ப்ளாசா!!
இன்று 25க்கும் அதிகமான கிளைகள். விழுந்த பொழுதெல்லாம் எழத்துணிந்த காரணத்தால் எழுதப்பட்டிருக்கும் வெற்றி வரலாறு.
இவர் இப்படி என்றால், சாஃப்ட்வேர் துறையில் எல்லோரும் புரோகிராமிங் எழுத பொறியாளர்களையே நியமித்த நேரத்தில் பி.எஸ்.சி, பி.காம் படித்தவர்களை நியமித்து பயிற்சி கொடுத்து, தன் சின்னஞ்சிறிய நிறுவனத்தை விசுவரூபம் எடுக்க வைத்த சுரேஷின் வெற்றிக்கதை சுவாஸ்ரயமானது.
சில மாதங்கள் சிரமப்பட்டாலும் வெற்றி வாசல்கள் விரைவில் திறந்தன. மைசூரில் ஸ்டேட் பாங்க் கிளையில் வணிகத் தொடர்புக்காக அணுகினார். நிறுவனங்களுக்கு பெருமளவில் வருகிற கேட்புக் காசோலைகளைக் கையாள அவர்களுக்கு புரோகிராமிங் தேவைப்பட்டது. சுரேஷ் துணிச்சலாகக் கேட்டார், ”என்னிடம் கம்ப்யூட்டர் இல்லை. இரவு வேளைகளில் உங்கள் அலுவலகக் கம்ப்யூட்டரை பயன்படுத்த அனுமதிப்பீர்களா?” அந்த மேலாளர் சம்மதித்தார்.
இரண்டே வாரங்களில் அந்த புரோகிராமிங் எழுதி முடிக்கப்பட்டது. அப்படி உருவானதுதான் லேசர் சாஃப்ட் இன்ஃபோ சிஸ்டம்ஸ். வங்கிகளுக்கான புரோகிராமிங், மருத்துவமனை களுக்கான புரோகிராமிங் ஆகியவற்றில் ஜொலிக்கிறது இந்நிறுவனம்.
எங்கள் ஓட்டுநர் புரோகிராமராக விரும்பினாலும் ஊக்குவித்து உதவுகிறோம் என்கிறார் சுரேஷ். சாதாரணமாக மனிதர்களே அசாதாரணமாக சாதனைகளை செய்ய முடியும் என்பது சுரேஷின் நம்பிக்கை.
எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதையே துணிச்சலாக நேர்மையாக செய்யுங்கள் என்கிறார் சுரேஷ்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது ஒரு ரூபாய்க்கு விளக்குகள் வாங்கி ஒண்ணரை ரூபாய்க்கு விற்ற சிறுவன் ரகு கன்னா இன்று முதலீடே இல்லாத தொழிலதிபர்.
அதுவும் 24 வயதில்!! ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதிரி விதம் விதமான சேவைகளை காய்கறி முதல் கம்ப்யூட்டர் வரை, வீட்டுப் பொருட்கள் முதல் விமான டிக்கெட் வரை ஒரு தகவல் வலை தளம் திறந்து விளம்பரப்படுத்துகிறார்.
திறமைதான் தொழில் வெற்றியின் அளவு கோல் என்கிறார் அவர்.
இப்படி வித்தியாசமான வெற்றியாளர்களின் கதைகளைச் சொல்கிறது இந்தப்புத்தகம். கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் புதுமை, நிறைய நம்பிக்கை, நிகரிலா முயற்சி இவையெல்லாம் இருந்தால், எப்படியெல்லாம் ஜெயிக்கலாம் என்று தெரிய இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.
nethaji
fantastic example sir. Really very nice sir… Thank you… sir.. புள்ளிகளை இணையுங்கள் பெரும்புள்ளிகளாய் ஆவீர்கள்.. very nice sir