அறிய வேண்டிய ஆளுமைகள்

posted in: Namadhu Nambikkai | 0

– மரபின் மைந்தன் ம. முத்தையா

தாதா வாஸ்வானி

ஒவ்வோர் ஆண்டும் முறையாகப் படித்து முன்னேற வேண்டுமென்ற கனவுடன் தான் அந்த சிறுவனைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் பல வகுப்புகளில் தொடர்ந்து டபுள் புரமோஷன். 17 வயதிலேயே கல்லூரித் தேர்ச்சி.

எம்.எஸ்.சி. படிக்கும்போது அந்த மாணவன் மேற்கொண்ட ஆய்வைத் திருத்தியவர், நோபெல் பரிசுபெற்ற மாமேதை சர்.சி.வி.இராமன். அந்த மாணவரின் தனித் தன்மையை வெகுவாகப் பாராட்டினார்.


ஆய்வுத் துறையில் வாய்ப்புகள் இருந்தும் ஆன்மீகத்தின் அழைப்பு தாதா வாஸ்வானிக்கு வந்து சேர்ந்தது, அவருடைய குருவும் நெருங்கிய உறவினருமான சாது வாஸ்வானி மூலம்!!

ஆன்மீகத்தில் உயர்ந்த உள்நிலை உணர்வில் இருந்த சாது டி.எல்.வாஸ் வானியின் பாதையில் நடையிட முடிவெடுத்த தாதா வாஸ்வானி, தன் குருவின் கருத்தோ வியங்களைப் பரப்பவென்றே மூன்று பத்திரிகைகளை நடத்தினார்.

1966ல், சாது டி.எல்.வாஸ்வானி மறைந்தபிறகு பொறுப்புகள் பெருகின. அழுத்தமான அதிர்வுகளை ஏற்படுத்தும் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் பெருமை பெற்றுத் துலங்கினார் தாதா வாஸ்வானி. 50க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார் வாஸ்வானி. இந்த நூல்கள் உலகமொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

சர்வதேச மாநாடுகள் பலவற்றில் பேசியிருக்கும் வாஸ்வானி அன்பு என்னும் பேருணர்வின் வாழும் வடிவமாய் விளங்குபவர்.

தன் சீடர்களிடம், அவர்களுடைய சீடர்கள் போல் பணிந்து குனியும் சாது வாஸ்வானி, சீடர்கள் ஆசியைக் கோரும் அதிசய குரு. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை அவருடைய ஆன்மீக மையம் நடத்தி வருகிறது.

ஏங்ஹக் – ஏஹய்க்- ஏங்ஹழ்ற் மூளை, இதயம், கைகள், மூன்றுக்கும் தரப்படும் பயிற்சியே கல்வி என்பார் தாதா வாஸ்வானி. திறமைகள் ஆயிரம் வளர்த்தாலும் இதயத்துக்குத் தரப்படும் பயிற்சிக்கே எப்போதும் முக்கியத்துவம் வேண்டும் என்பார் அவர்.

இந்த கல்வி நிறுவனங்களில் தினமும் காலையில் மாணவர்கள் உணவு படைப்பதுதான் வகுப்புகளின் தொடக்கம். சேவையின் அம்சத்தை சேர்க்காமல் எந்த விழாவும் இங்கு நிகழ்வதில்லை. குழந்தைகள் இங்கே தண்டிக்கப்படுவதில்லை.

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வாஸ்வானி தருகிற வழிகாட்டுதல்கள் அபாரமானவை.

“கடவுளும் மனிதனும் நண்பர்கள். நாம் கடவுளைக் கைவிடக்கூடும். ஆனால் கடவுள் நம் நட்பை ஒரு போதும் கைவிடுவதில்லை. நாம் அவரை விட்டு விலகி ஓடினாலும், நம் நிழல்போலத் தொடர்கிறார்”.

“ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மகத்தான சக்தியாக விளங்குபவை, எண்ணங்கள். எண்ணங்களே மனிதனின் அணுகுமுறையை வடிவமைக்கின்றன. அணுகுமுறைகளே மனிதனின் தன்மையைத் தீர்மானிக்கின்றன. மனிதனின் தன்மையே வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. எண்ணங்களை மாற்றும்போது எல்லாமே மாறுகிறது”

சிக்கல்களும் சவால்களும் முட்டுச்சந்துகள் அல்ல. அவையே வளைவுகள். சில நேரம், பிரச்சினைகளின் கதவுகளைத் திறந்து கொண்டுதான் கடவுளே நம் வாழ்வுக்குள் வருகிறார். நாம் நம்மைச் சுற்றி எழுப்பியிருக்கும் இறுக்கமான சுவர்களை உடைத்து, கடவுளை நம் அருகே வரச் செய்பவை பிரச்சினைகள்தான்.

இவையெல்லாம் வாஸ்வானியின் வழி காட்டுதல்களில் சில.

உலகில் எல்லா வற்றையும் நம்பால் ஈர்க்கும் மகத்தான சக்தி அன்புக்கு இருக்கிறது என்கிற வாஸ்வானி, எந்த அளவு தவறான பாதை யில் சென்றாலும் திரும்பி வர முடியும் என்று நம்பிக்கை தருகிறார்.

ஒரு மனிதனை அவனுடைய கடந்த காலம் கட்டுப்படுத்தாது என்பது வாஸ்வானி தரும் அழுத்தமான செய்திகளில் ஒன்று.

ஆணவமே மிக மோசமான போதை. கோபமே மிக மோசமான பைத்தியக்காரத் தனம் என்கிறார் இவர்.

பிரபஞ்சம் என்கிற குடும்பத்தின் இளைய தலைமுறையே பறவைகளும் விலங்கு களும் என்கிற வாஸ்வானியின் பிறந்த நாளாகிய ஆகஸ்ட் 2, உலக சைவ தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கை முறையால் பல்லாயிரக்கணக் கானவர்களுக்கு வழிகாட்டும் வாஸ்வானியின் வார்த்தைகளும் வாழ்க்கையின் திறவு கோல் களாய் வாய்த்திருக்கின்றன.

“கடந்த காலம் என்பது கிழிக்கப்பட்ட காசோலை. எதிர்காலம் என்பது எழுதி வாங்கிய பத்திரம். நிகழ்காலம் ஒன்று மட்டுமே நம் வசம் உள்ள செல்வம்”.

“கடவுளிடம் நாம் கேட்க வேண்டியவை, வாழ்க்கை என்கிற விளையாட்டின் விதிமுறைகளைப் பின்பற்றும் எண்ணம். நகைச்சுவை உணர்வு. நாகாக்க முடியாத போதும் நாகாத்தல்.”

“தெரிந்தது சிறிதளவானாலும் அதனைப் பயன்படுத்துங்கள்”

இத்தகைய வழிகாட்டுதல்களை வழங்கும் வாஸ்வானி அடிக்கடி சொல்வது இதுதான்.

“அன்பு காட்டப்பட வேண்டும் என்கிற ஏக்கம் எல்லோருக்கும் இருக்கிறது. உங்களிடமிருந்து வெளிப்படும் அன்பு யார் மூலமாகவாவது உங்களை வந்தடைகிறது. அன்பு ஒரு வட்டமாகவே சுழல்கிறது. அந்த வட்டத்திலேயே சுழலுங்கள்”.

உணர்வு ரீதியான மென்மையும் மேன்மையும் உருவாக, போரில்லாத சமூகம் நிஜமாக வழிகாட்டுபவை வாஸ்வானியின் வாக்கும் வாழ்க்கையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *