வெற்றி வாசல்

வானம் வசப்படும்

வின்ஸ்டன் சர்ச்சில் பேசிக்கொண்டிருந்த போது, ஒரு நிருபர், அவரைப் பார்த்து, ‘நீங்கள் ஒரு முட்டாள்’ என்றார். சர்ச்சிலுக்கு கோபம் வந்து, 5000 பவுண்ட் அபராதம், கூட ஆறுமாத சிறைத்தண்டனை என்று அந்த நிருபருக்கு தண்டனை தந்தார். கூட்டத்திலிருந்தவர்கள் சர்ச்சிலை சமாதானப்படுத்தி, எதற்கு இரண்டு தண்டனை தந்தீர்கள் என்றார்கள். என்னை முட்டாள் என்று அவன் சொன்னது கூட பரவாயில்லை. அரசாங்க ரகசியத்தை வெளியில் சொல்லிவிட்டான் என்றார் சர்ச்சில். அரசாங்க ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாதாம். அதனால் இரண்டு தண்டனையாம்.

எந்த சபையையும் ஒரு சொல், வெல்லும்: வீழ்த்தும். இது இரண்டும் நம்மிடத்தில்தான் இருக்கிறது. சொல்லை ஆளத்தெரிய வேண்டும்.

‘அபி’ என்கிற கவிஞர், ‘வார்த்தைகளோடு ஒரு பேட்டி” என்ற கவிதையில், “நீங்கள் இப்படி முண்டியடித்துக்கொண்டு வரக்கூடாது. எனக்குத் தெரியும். யாரை முதலில் அனுப்ப வேண்டும். யாரை பின்னால் அனுப்ப வேண்டும் என்று. போய் வரிசையில் நில்லுங்கள்” என்கிறார்.

வார்த்தையை ஆளத்தெரிந்தவர்கள் வெல்வார்கள். திருவள்ளுவர் இதைக் கவனமாய்,

‘சொல்லுக சொல்லை பயனுடைய – சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்”

பயனுடைய சொற்களை மட்டுமே பேசுங்கள். பயனில்லாத சொற்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் பேசாதீர்கள். நல்ல சொற்கள் பழங்கள் போல. போகிறபோது நீங்கள் கடையில் பழம் வாங்கப்போனால் பழம் வாங்குங்கள். காய் வாங்கினால் கசக்கும், புளிக்கும், துவர்க்கும்.

“இனிய உள்ளாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று” இது வள்ளுவர் குறள்.

மோசமான சொல் எதிர்விளைவை ஏற்படுத்தும். நல்ல சொல் பழம்போல. அப்போது சுவைக்கும். பிற்பாடு பயனளிக்கும். விதை போல பாரம்பரியத்தைக் காக்கும்.

செல்போன் வந்ததால் சொல் போச்சு என்று நான் சொல்லுவேன். தேவையில்லாமல் பேசிக்கொண்டேயிருக்கிறோம். அளவுக்கு அதிகமாக பேசுகிறோம். அதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறோம்.

புரியாதது மந்திரமில்லை. ‘அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன் தந்தே நிற்பது மந்திரம்’ என்றார்கள். அன்பாகச் சொன்னாலும். கோபமாகச் சொன்னாலும் பலிக்கும் ஆற்றலையுடைய வார்த்தைகளை எவன் பயன்படுத்துகிறானோ அதற்குப் பெயர் மந்திரம்.

வேதாத்திரி மகரிஷி இயக்கத்தில், ‘வாழ்க வளமுடன்’ என்று சொல்வார்கள். கேட்கும்போதே நன்றாகயிருக்கும். திருமண வீடுகளில் வாழ்த்திச் சொல்லுதல் என்று சொல்வார்கள். ‘எல்லா வளங்களையும் பெற்று வாழுங்கள்’ என்று வாழ்த்த வேண்டும். தீயவார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

மனிதன் எல்லா விலங்கினங்களையும் தனக்குப் பழக்கப்படுத்திக் கொள்வான். ஆனால் நரியை மட்டும் பழக்கப் படுத்தவே முடியாது. எனவேதான் நரியை தந்திரம் மிக்கது என்கிறோம்.

நல்ல சொற்களையும் உற்சாகமாக இருத்தல் என்பதையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதிகாலைக் கனவுகள் சில நம்முடைய அன்றைய நாளைத் தீர்மானிக்கும் என்கிறார்கள். கண்ணில் வருவதில்லை கனவு. ஏனென்றால் பார்வையில்லாதவர்களுக்கும் கனவு வருகிறது. ஆயிரம் கனவுகள் மூளையில் உற்பத்தியாகி உறக்கத்தில் தெரிகிறது. அதில் ஒன்றிரண்டு மட்டும்தான் நம் நினைவில் நிற்கிறது. அதுவும் அதிகாலையில் காண்பதுதான் காரணம்.

நம்முடைய மூளையின் அளவையும், நம்முடைய திறமையின் அளவையும் தெரிந்து கொண்டாலே போதும். ஒன்றுமே தெரியாது என்று சொல்லக் கூடாது.

உற்சாகத்தை கொண்டு வருவதென்றால் யாரேனும் முகத்தில் விழித்தால்தான் என்றில்லை.

குழந்தைகளிடம் பேசுங்கள். உற்சாகம் தானே வரும். குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைக் கேளுங்கள்.

இனிமையான பாடலோ, இசையோ கேட்டால் உற்சாகம் வந்துவிடும். நல்ல எண்ணமுடையவர்கள். நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ அது கிடைக்கும்.

மனிதன் செயல்களால் அளக்கப் படுகிறான். நாம் என்ன செயல்களைச் செய்கிறோமோ அதை வைத்து தீர்மானிக்கிறார்கள்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்”.

‘ஆடும் திருகை அரைச் சுற்று வரும் முன்னே ஓடும் எண்ணம் ஒரு கோடி’ என்றார்கள். மனம் அவ்வளவு வேகமானது. மாறும் எண்ணம் கொண்டது. அதில் உறுதியும் பயன்பாடும் வைத்துக்கொண்டு நல்ல சொற்களைப் பயன்படுத்தி உற்சாகத்தைக் கடைப்பிடித்து, நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் உயர்த்திக் கொண்டு போக வேண்டுமென்கிற எண்ணத்திலே நின்று இடையறாது ஓடி, பயனுடைய செயல்களை வாழ்நாளில் செய்து, இருக்கும்வரை மகிழ்வோடு இருத்தல். உலகத்தில் கிடைக்க முடியாத ஒன்று இவற்றையெல்லாம் நாம் செய்தால் எவையெல்லாம் கிடைக்கும் என்று நினைப்போம். செல்வம், உயர் பதவி, கல்வி எல்லாவற்றிற்கும் மேலே வானம் என்ற ஒன்றிருந்தால் அதை நம்மால் வசப்படுத்த முடியும். மனிதன் முயன்றால் முடியாதது இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *