வீழாமல் வாழ்வது..

– வழக்கறிஞர் த. இராமலிங்கம்

கம்பன் விழா ஒன்றில் ‘வீழ்ச்சியிலும் மாட்சி கண்டவர் எவர்…’ என்று தலைப்பு தரப் பட்டிருந்தது. தயரதன், வாலி மற்றும் இராவணன் என்று மூன்று பாத்திரங்களை மையப்படுத்தி பேச்சாளர்கள் பேசினர்.

கம்ப இராமாயணத்தின் பல கருத்துக் களையும் பேசிய பின்னர், ‘எது வீழ்ச்சி…? எதைச் சரி என்று கருதி ஒருவன் செய்ய விரும்புகிறானோ, அதை அவன் செய்ய முடியாமல் போவதுதான் அவனது வீழ்ச்சி…” என்று சொல்லித் தனது தீர்ப்பினைத் தொடங்கினார் நடுவராக இருந்த சுகிசிவம் அவர்கள்.

இந்தச் சொற்கள் அப்படியே மனத்துக்குள் இறங்கின. அதன் பின்னர் அவரது பேச்சு எதுவும் காதில் விழவில்லை. வெவ்வேறு கோணங்களில் மனம் இந்தக் கருத்தினைச் சிந்திக்கத் தொடங்கியது.

எவ்வளவு உண்மையான சொற்கள்! ஒருவன் செய்யும் குற்றங்கள் மட்டுமே ஒருவனை வீழ்ச்சி அடைய வைப்பதில்லை. ஏனெனில், குற்றங்கள் ஏதும் செய்யாதவர்கள்கூட, வாழ்வில் வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். அதற்கான காரணங்கள் என்ன?

விளையாட்டு வீரனாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் இளைஞன், தினமும் விடியற்காலையில் எழுந்து அதற்கான பயிற்சிகளில் ஈடுபடவேண்டும். தேர்வில் மிக நல்ல மதிப் பெண்கள் பெறவேண்டும் என்று எண்ணும் மாணவன், தினமும் விடியற்காலையில் எழுந்து கருத்தூன்றி படிக்க வேண்டும்.

மனத்தை ஒருமுகப்படுத்தி அமைதி காண விரும்பும் எவரும் தினமும் அதிகாலையில் எழுந்து தியானத்திலோ, மூச்சுப் பயிற்சியிலோ ஈடுபட வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைவருக் குமே, பொழுது புலர்வதற்குள் எழ வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. எழுந்து உரிய பயிற்சியைச் செய்வதில் விருப்பமும் இருக்கிறது.

ஆனால், விடியற்காலையில் எழுந்திருக் கிறார்களா என்பதுதான் கேள்வி. சரி என்று உணர்ந்து தாங்கள் செய்ய விரும்பும் ஒன்றை, அவர்களால் செய்ய முடியவில்லை என்றால், அது தான் அவர்களின் வீழ்ச்சி. அறிவும் மனமும் விரும்பினாலும், அவற்றின் மேல், சோம்பலும் முயற்சியின்மையும் உட்கார்ந்து கொண்டதால் நேரும் விளைவு இது. “நான்கூட முன்பெல்லாம் ஆசைப்பட்டிருக்கிறேன்…’ என்று வயதுபோன பின்பு புலம்பி என்ன பயன்?

இளமைப் பருவத்தில், நண்பர்களுடன் இருக்கையில், விளையாட்டாக சிலர் தேவையற்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடுவார்கள். கரடி பிடித்த கதையாக, இந்தப் பழக்கங்கள் அவர்களைத் தொற்றிக் கொள்ளும் தீய பழக்கங் களின் விளைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கும். உடல் கெடும்; பணம் கரையும்; மனம் அமைதியை இழக்கும்; குடும்பத்தில் அமைதி கெடும்; நண்பர்கள் நெருங்கிப் பழகத் தயக்கம் காட்டுவர்; வாழ்வு வெறுமையாகும்.

இந்த நிலை நேர்ந்த பின்னரே, இதற்கெல்லாம் காரணம், தம்மிடம் குடிகொண்டு விட்ட தீய பழக்கமே என்பது புரியும். நினைத்த உயரத்தைத் தன்னால் தொடமுடியாமல் போன தற்குத் தன்னிடம் குடி கொண்டுவிட்ட பலவீனங்களே என்பது உரைக்கும். அதை விட்டொழிக்க மனமும் அறிவும் கெஞ்சும். ஆனால், அதற்கான நேர்மாறான சூழல்களை உருவாக்க, ஆசையின் வலையில் சிக்கியிருக்கும் மனத்தின் இன்னொரு பகுதி முயற்சித்துக் கொண்டே இருக்கும். எதைச் சரியானது என்று அறிவும் மனமும் சொல்கிறதோ, அதைச் செய்ய முடியாமல் நாமே தத்தளிக்கிறோமென்றால் நாம் வீழ்ச்சி அடைந்ததாகத்தான் பொருள்.

பணத்தின் மாயையில் மனம் சிக்கி இருந்தாலும் அப்படித்தான். சேர சேர, ‘இன்னும் வேண்டும்; இன்னும் வேண்டும்…’ என்னும் வேட்கையைத் தூண்டும் சக்தி, பணத்துக்கு உண்டு. கொஞ்சமாகப் பணம் இருந்தபோது பிறருக்கு உதவத் தூண்டிய மனம், தேவைக்கு அதிகமாகப் பணம் சேரத் தொடங்கிய பின்னர், சேர்த்து வைத்துக் கொள்ளத்தான் தூண்டும்.

இந்த மனநிலையை வெற்றி கொள்பவர்களே வாழ்வில் வீழ்ச்சி அடையா வெற்றியாளர்கள்.

வெவ்வேறு வழிகளில் பணம் வருவதற்கான வாய்ப்பு அமைந்துவிட்டால், மனம் அலைபாயத் தொடங்கும். ‘இப்படியெல்லாம் சேர்ப்பது தவறு…’ என்று தர்ம நியாயங்கள் தெரிந்த மனமும் அறிவும் சொன்னாலும், அதைக் கேட்கமுடியாமல், ஆசையின் கைப்பற்றி நடந்து விடுபவர்கள், வீழ்ச்சி அடைவது தவிர்க்க முடியாதது. சில மாதங்களுக்கு முன்னர், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பற்றி செய்தித்தாள்களில் வந்திருந்த செய்தி, மிக்க வியப்பினைத் தந்தது. விளையாட்டில் மட்டுமல்ல; வாழ்வின் எந்த நிலையிலும் அவர் வீழ்ச்சி யடையாதவர் என்பதை உறுதிப்படுத்திய செய்தி அது. மராட்டிய மாநில அரசும், அவரை மிகவும் பாராட்டிய அந்தச் செய்தி இதுதான்.

சினிமா நடிகர் நடிகையர் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள், விளம்பரங் களில் நடிப்பதனை நாம் அறிவோம். துணி விளம்பரத்தில் இருந்து நகை விளம்பரம் வரை, எதிலும் தோன்றுவார்கள். இந்த விளம்பரங்களில் நடிக்க, அவர்களுக்கு நிறைய பணம் தரப்படும். கோடிக்கணக்கில் இப்படி சம்பாதிப்பவர்களும் உண்டு.

சச்சின் டெண்டுல்கருக்கு இப்படி ஒரு வாய்ப்பு வந்தது. ஒயின் போன்ற மது பானங்களை விளம்பரப்படுத்தி நடிக்கும் வாய்ப்பு அது. இந்த விளம்பரத்தில் நடிக்க அவருக்கு சம்பளமாக எவ்வளவு பணம் தர முன் வந்தார்கள் தெரியுமா? இருபது கோடி ரூபாய்கள்! ஆனால் சச்சின் டெண்டுல்கர் அந்த விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்; அவர்கள் கொடுக்க முன் வந்த இருபது கோடி ரூபாய்களையும் வாங்க மறுத்து விட்டார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? ‘மதுபான விளம்பரத்தில் நான் நடித்தால், நம் நாட்டு இளைஞர்களுக்கு நான் தவறான வழிகாட்டியவனாகி விடுவேன்.
பணம் பெரிதில்லை. பணத்திற்காக நமது இளைஞர்களுக்கு போதைப் பொருளை விளம்பரப்படுத்தி அவர்களைக் கெடுக்க மாட்டேன்… சிகரெட் முதலிய புகைக்கும் பொருள்களுக்கும் விளம்பரப் படங்களில் தோன்ற மாட்டேன்…” “அவரிடம் பணம் இருக்கிறது… அதனால் அப்படி சொல்லியிருப்பார்…” என்று நினைத்தால் நாம் சராசரியைவிடக் கீழே போய்விடுவோம்.

பணத்திற்காக எதையும் செய்யக்கூடிய பெரிய இடத்து மனிதர்களைப் பார்க்கிற நமக்கு, சச்சினின் இந்தச் செயல், வணக்கத்துக்குரிய ஒன்றாகப்படுகிறது. சச்சினிடம் இருந்து நாமெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியது, கிரிக்கெட் விளையாட்டில் எப்படி வெற்றி பெறுவது என்பது மட்டுமல்ல… வீழ்ச்சியில்லா வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பது பற்றியும் தான்!

‘எண்ணிய முடிதல் வேண்டும்…’ என்று கவிதையின் முதல் வரியைத் தொடங்கிய பாரதி, ‘நல்லவே எண்ணல் வேண்டும்…’ என்று அடுத்த வரியை எழுதுகிறான். மனத்தில் தோன்றும் எண்ணம் நல்லதாக இருந்தால், அதனை முடிக்க வேண்டும் என்ற உறுதியும் தானே தோன்றும். இந்த இரண்டும் இணைந்திருப்பவர்கள், வீழ்ச்சியுறுவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *