எது என் பாதை

– பதினென் கவனகர் கனக சுப்புரத்தினம்

ஆரம்பகாலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் வகுப்புகளில் நான் உற்சாகமாக பாடம் நடத்துவதையறிந்த எங்கள் பள்ளி நிர்வாகி, பள்ளி விழாவில், “நேருவைப் பற்றி பேச வேண்டும்” என்றார். மேடைப் பேச்சில் எனக்கு அனுபவம் இல்லையென்பதால் தயங்கியபடி, சரி என்றேன். விழா நாளும் வந்தது. என் பேச்சிற்கு மாணவர்கள் மத்தியில் பயங்கர கை தட்டல். எனக்கு அது உற்சாகமூட்டியதால் தொடர்ந்து பேசினேன். விழா முடிந்தது.

என்னை அழைத்த நிர்வாகி, “நன்றாக பேசினீர்கள் சுப்புரத்தினம். ஆனால் சின்ன தப்பு பண்ணீட்டிங்க” என்றார். அருகில் இருந்த ஆசிரியர் தவறை விளக்கி மாணவர்கள் அதற்காகத்தான் கை தட்டினார்கள் என்று சொன்னார். நான் உடனே கூனிக் குறுகிப் போய்விட்டேன்.

ஆனால்., அதன்பின் இரு முதல்வர்கள் முன்னிலையில் மணிக்கணக்கில் பேசியிருக்கின்றேன். எப்படி வந்தது இந்த பேச்சு. நான் டிகிரி படித்து விட்டு தெருவில் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தேன். ஒருநாள் முழுவதும் விற்றால் ரூ.6. கிடைக்க வேண்டும். ஆனால் கரைந்த ஐஸ் போக ரூ. 1.50 காசுதான் கிடைக்கும். தெருவில் நான் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தாலும் நமக்காகத்தான் இந்த உலகம் பிறந்துள்ளது என எண்ணிக் கொண்டு சைக்கிளில் போகும்போது, “உலகம் பிறந்தது எனக்காக. ஓடும் நதிகளும் எனக்காக” என பாடிக் கொண்டிருப்பேன். அப்போது எனக்கு 21 வயது.

42 வயதில் உலகை 4 முறை சுற்றி வந்து விட்டேன். அதன் பெயர்தான் மனம். உங்களின் கஷ்டங்களை பெரிய கஷ்டம் என்று நினைத்தால் அது உங்களின் தவறு.
நான் பிறந்தபோது என் தந்தை விடுதலைப் போராட்டத்தில் கண் பார்வையை இழந்தவர். என் தந்தை 18 வயதில் விடுதலைப் போராட்டத்திற்காக சிறை சென்றபோது சிறைக்குள் பாவேந்தர் பாரதிதாசன் புத்தகம் கிடைத்ததாம் அனைவரும் படிக்க வேண்டும் என நினைத்தார்களாம். அப்போது என் தந்தை, “அந்த புத்தகத்தை என்னிடம் தாருங்கள். நான் படித்து மனப் பாடம் செய்து விடுகின்றேன். நீங்கள் கேட்கும் போதெல்லாம் சொல்கிறேன்” என்று அதை முழுவதும் படித்து மனப்பாடம் செய்துள்ளார்.

அப்போது அவரின் மனதில் தனக்கு திருமணம் நடைபெற்று குழந்தை பிறந்தால் பாரதிதாசனின் இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்று வைக்க வேண்டும் முடிவெடுத்துள்ளார்.

எனக்கு மூத்தவர்கள் 3 பெண்கள் ஒவ்வொரு பிரசவத்தின்போதும் கனகசுப்புரத்தினம் வந்து விட்டானா என்றுதான் கேட்பாராம். நான் பிறந்த போது, மருத்துவச்சி என் தந்தையிடம், “”அய்யா! நீ கேட்ட கனக சுப்புரத்தினம் வந்துவிட்டான்” என்று சொல்ல, “அவன் வந்துவிட்டான் எனது பார்வை போய் விட்டது’ என்றாராம். ஒரு சமயத்தில் எனது தந்தை தற்கொலைக்கு முடிவெடுத்த நேரத்தில் அவரை சந்தித்த நண்பர் அவரின் முடிவுக்கான காரணம் கேட்டு, உங்களின் பிரச்சனைக்கு அன்றே திருவள்ளுவர் குறள் எழுதியுள்ளார் என்றும்…
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி
என்ற குறளுக்கு, பொறிபுலன்கள் ஊனம் அமைந்திருப்பது குற்றமல்ல. அந்தநிலையிலும் நாம் எதற்கும் பயனில்லை என்று முயற்சி செய்யாமல் இருப்பதே குற்றம் என்று அறிந்து நம் பிரச்சினை களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீர்வு எழுதியிருக்கிறார் என்றால் அவர் என்னதான் எழுதியுள்ளார் என்று முழுமையாக பார்ப்போமே என்று முடிவெடுத்தார்.

அண்மையில் ஒரு மாணவன் என்னிடம் சொன்னான். திருவள்ளுவர்தான் என் முதல் எதிரி என்றான். ஏன் என்று கேட்டேன். திருகடிகம், புறநானூறு நாலு வரி படித்தால் நாலு மார்க்கு கிடைக்கும். ஆனால் திருக்குறள் அப்படியில்லை. 20 குறள் படித்தால் 2 குறள்தான் கேட்கிறார்கள். 4 வரிக்காக நான் 20 வரி மனப்பாடம் செய்ய வேண்டியிருக்கு. இவர் இதை எழுதாமல் இருந்திருக்க வேண்டியதுதானே என்று ரொம்பவும் வருத்தப்பட்டான்.

உண்மைதான். நம் கல்விமுறை மாறிவிட்டது. உணர்வுபூர்வமான கல்வி கிடையாது. எனது தந்தைக்கு திருக்குறளை படிக்க ஆர்வம். ஆனால் கண்பார்வை இல்லை. வறுமை நிலையில் குடும்பம், மின் வசதி கிடையாது. அம்மா வேலைக்கு போய் வந்தால்தான் சாப்பாடு.

என் அம்மா வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த பின் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அம்மாவை படிக்கச்சொல்லி கேட்பாராம். ஒவ்வொரு குறளையும் கேட்கும் போது அவரின் மனஇருள் அகன்று இப்படிப்பட்ட உலகத்தில் நாம் ஏன் பயப்பட வேண்டும் என்று முடிவெடுத்தார்.

என் அம்மா குறள் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்த பலரும் கேலி செய்தார்களாம். கண் தெரிந்தபோது பெரியார் பின்னாடி போனான். பார்வை போனவன் பொண்டாட்டி கிட்ட எம்.ஏ. படிக்கிறான் என்று கேலி செய்வார்களாம்.

பிற்காலத்தில் என் தந்தை 16 அரசவைக் கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்து விளங்கினார். கவியரசு கண்ணதாசன், குன்னக்குடி வைத்திய நாதன், தர்மபுரம் சுவாமிநாதன் என ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொருவராக இருந்தபோது கவனக கலைக்கு என் தந்தைதான் சிறப்பானவர்.

ஓர் எளிய கிராமத்தில் பார்வை இழந்து தற்கொலைக்கு முயன்றவர் ஓர் அரசனுக்கு நிகராக அமர்ந்து அரசவைக் கலைஞராக விளங்கினார். இதைவிட உங்களுக்கு ஒரு கஷ்டமும் வந்திருக்காது. உங்களுடைய கஷ்டத்தை பெரிய கஷ்டமாக நினைத்தால் அது உங்களின் தவறு. நம் வாழ்க்கை 6 அம்சங்களைக் கொண்டது. முதலில் நமக்கு தெளிவு வேண்டும். உடல், உயிர், மனம் என்கிற ஸ்பெஷல் மெக்கானிசம் வேலை செய்ய வில்லையென்றால் உடல், உயிர் இருந்தும் பிரயோஜனம் இல்லை. அது கோமா ஸ்டேஜ்க்கு சமம். பிறர் பேசுவது கேட்கும் பதில் சொல்ல இயலாது.

மனது என்று ஒன்று இருப்பதனால்தான் இங்கு வந்துள்ளோம். இல்லையெனில் தொலைக் காட்சியின் முன்னால் அமர்ந்திருப்போம். மனது மனிதனுக்காக படைக்கப்பட்ட ஸ்பெஷல் மெக்கானிசம். மனது இருந்தும் பிரயோஜனம் இல்லை. அறிவு இருக்க வேண்டும். வெறுமனே டேங்க் மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை. அதில் தண்ணீர் இருக்க வேண்டும். மனதிற்கு அறிவுதான் உணவு. அதை கொள்முதல் செய்ய வேண்டும். அறிவில்லையெனில் பலனில்லை. பண்டிட் கண்ணையா யோகி என்ற மகான் மனதைப்பற்றி கூறுகையில், மனதிற்கு தெரியாத எதுவும் உடலுக்கு தெரியாது. மனம் உள்ளே செல்வதை உடல் உள்ளே செய்யும். உதாரணமாக மனதிற்கு ஒரு மொழி தெரியாதென்றால் உடலுக்கும் தெரியாது.

யானைக்கு யார் நீச்சல் கற்றுக் கொடுத்தது? யாரும் கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் மனிதனுக்கு கற்றுக் கொடுக்காமல் எதுவும் வராது. அதனால்தான் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என எல்லாம் வந்தன. ஏன் வெற்றிவாசல் நிகழ்ச்சி கூட கற்றுக்கொடுப்பதற்கும், தம்மை மேம்படுத்து வதற்கும் அமைக்கப்பட்டது.
பிறப்பு முதல் கற்றுக் கொண்டுதான் மனிதன் வாழும் சூழல் அமைந்தது. பேச பயிற்சி, எழுதப்பயிற்சி, நிர்வாகம் செய்ய பயிற்சி, பணம் சம்பாதிக்க, உடல் நலம் காக்க என அனைத்திற்குமே பயிற்சி தேவைப்படுகிறது. பயிற்சி இல்லாமல் மனித இனம் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.

பயிற்சி மூலம் எதையும் கற்றுக் கொள்ளலாம். ஆற்றல் அழியவே அழியாது.
சென்னையில் என் தந்தைக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கவிஞர் தாராபாரதி, “”இராமையா! உன்முடிவு மனித முடிவல்ல. கலையின் மரணம்” என்றார். என்ன மரணம் என்கின்றார். அப்படியெனில் அந்த கலைக்கு அழிவுதானா? என்று என்னை நானே கேட்டுக் கொண்டு அந்த மேடையில் பேசினேன்.

இந்த உலகத்தில் ஒரு மனிதனால் ஒன்று முடியுமென்றால் இன்னொரு மனிதனால் அது கட்டாயம் முடியும் என நான் நம்புகிறேன்.

எனவே ஓராண்டு அவகாசம் கொடுங்கள். இதே மேடையில் நான் கவனகர் ஆக வருகிறேன் என்று பேசினேன். அதன் பின்பு திருக்குறளை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தேன்.

எனது காலில் கொப்பளங்கள் இருந்தன. நிறைய செலவுகள் செய்தேன். மீண்டும் வந்தது. மீண்டும் டாக்டரிடம் போனேன். சொரியாசிஸிற்கு நிரந்தர தீர்வு கிடையாது. வரும் போது ஊசி, மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அப்போதுதான் திருக்குறளில், மருந்தென வேண்டாமாம் யாக்கைக்கு என்ற வரியைப் படித்தேன்.

அப்போதுதான் மருத்துவம் பற்றி படித்தேன். வள்ளுவர் கண்ணைத் திறந்தார். வள்ளலார் ஒளி கொடுத்தார்.

“”உங்கள் பாதை நோயற்ற பாதையாக இருக்கவேண்டும். வள்ளலார் அடிவயிற்றில் மலக்குற்றம் இல்லாமல் பார்த்துக்கொள். நெற்றியில் சளிக்குற்றம் இல்லாமல் பார்த்துக் கொள். எமன் உன்னை நெருங்கமுடியாது” என்றார்.
தினமும் நல்லெண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்புளியுங்கள். இதை இன்று இதயம் நல்லெண்ணெய் முதலாளி முத்து அவர்கள் செயல்படுத்தி வருகிறார். இதனால் கேன்சர்கூட குணமாக வாய்ப்புள்ளது.

தத்துவமும் வாழ்க்கையும் உடன்பட்டு விட்டால் வெற்றி எல்லாவற்றிற்கும் தத்துவம் உள்ளது.

ஒரு மனிதனை பார்த்தால் முதலில் மனம் அவரைப்பற்றிய “வெல்கம் நோட்’ கொடுக்கும். ஆளுக்கு தகுந்தாற்போல, மனம் “வெல்கம் நோட்’ கொடுக்கும். அதனால்தான் வேதாத்திரி மகரிஷி, “”வாழ்க வளமுடன்” என்று சொல்லுங்கள் என்றார். இதில் ஜாதி, மதம், இன வேறுபாடு இருக்காது. அனைவரையும் மனம் சமமாகப்பார்க்கும்.

சில பயிற்சிகள் இருந்தால் மனதை வசப்படுத்தலாம். எல்லோரிடமும் அன்பாய் இருங்கள். யாரையும் வெறுப்புணர்ச்சியோடு பார்க்காதீர்கள். எப்போதும் திறந்து மனதுடன் இருங்கள். நடுநிலை உணர்வோடு இருங்கள். இவையனைத்தையும் திருக்குறளில் வள்ளுவர் தெளிவாக விளக்கி உள்ளார். திருமூலரும் நடுநிலையோடு இருந்தாலும் தேவநிலை அடையலாம் என்கிறார்.

எங்கள் அப்பாவை அரசவைக்கலைஞராக அரசு அறிவித்தபின்தான் உள்ளூர் தாசில்தாருக்கு தெரியவந்தது. அதுவரை யாருக்கும் தெரியவில்லை. நம்மில் பலர் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகத் தான் உள்ளது. நம்மில் எத்தனைபேர் தமிழில் கையொப்பம் இடுகின்றோம். “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று முழக்கத்தோடு ஆங்கிலத்தில் கையொப்பம் இடுகின்றோம். இன்றுவரை மேதகு அப்துல்கலாம் தமிழில்தான் கையொப்பம் இடுகின்றார்.

மனதிற்கு மரணபயம் என்பது இயல்பு. நமக்கு அஞ்சாமை என்ற உணர்வை மாற்ற வேண்டும். முற்போக்கு எண்ணத்தை மாற்றுங்கள். நேர்மறை எண்ணத்தில் செயல்படுங்கள்.

பிரபலம் ஒருவருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு அழைப்பு வந்தது. சுமார் மூன்று மணிநேரம் மற்றவர்களைப்பற்றி என்னிடம் சொல்லி போரடித்தார்.

நான் எப்படி தப்பிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நான் நெற்றியைத் தேய்த்தால் எஸ்கேப் ஆகப்போகிறேன் என்று அர்த்தம். நெற்றியைத் தேய்த்துக்கொண்டிருந்த போது என் உள்மனது, அவர் நல்ல மனிதர். அவர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்றால் அவரிடம் பிடித்த பாடலை பாடச்சொல் என்று தகவல் வந்தது. நானும் அவரிடம் கேட்டேன்.

அவர் தனக்குப்பிடித்த பாடலைப்பாடினார். அந்தப் பாடலின் மூலம் அவருடைய பிரச்சனைக்கு தீர்வு கண்டேன். அவர் பாடிய பிற கேசட்டுகளை கொடுத்தேன். இவ்வளவு அற்புதமான பாடல்களை பாடிய நீங்கள் ஏன் இப்படிப்பட்டதை விரும்புகின்றீர்கள்?

21 நாட்கள் தொடர்ந்து ஒரு மனம் எதை நினைத்துவேண்டுகிறதோ, அது தேவனால் அருளப்படும் என்றேன். ஐந்தாவது நாளில் அவருக்கு உயர்ந்த பதவி கிடைத்துள்ளது என்றார்.

கடந்த நாட்களில் எனக்கு விருது கிடைக்க வில்லை என்றிருந்தேன். இப்போது பிறருக்கு விருதை தேர்வு செய்யும் பதவிக்கு என்னை தேர்வு செய்துள்ளனர் என்றார்.
எதிர்மறை உணர்வுள்ள ஆட்களைச் சந்திக்காதீர்கள். அவர்களிடம் தேவையற்ற பேச்சை தவிருங்கள். நாம் பிறர் பார்க்கும்படி பல திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

பொறுத்துக்கொள்ளுதல், சகித்துக் கொள்ளுதல், விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போதல் இவை நான்கும் இல்லாவிடில் சமுதாயத்திலும் குடும்பத்திலும் வாழமுடியாது.

ஒருவர் மீது அன்பாக இருக்கிறீர்களா? உண்மையிலேயே அன்பாய் இருங்கள். தொழிலில் முதலில் லாபத்தைப் பார்க்காதீர்கள். வாடிக்கையாளரின் நலனைப்பாருங்கள்.

3 Responses

  1. அ. பரக்கத்துல்லா

    அருமையான தகவல்கள். அற்புதமான கருத்துக்கள். குறிப்பாக, வெளிநாட்டில் பிழைப்பு நிமித்தம் வந்து மனப்புழுக்கத்தில் வாடும் என் போன்றவர்களுக்கு, உங்கள் வலைப்பக்கம், மிக ஆறுதல் அளிக்கிறது. உற்சாகம் கொப்பளிக்கிறது. உங்கள் தொண்டு தொடரட்டும்! வாழ்க வளமுடன்!! வளர்க உங்கள் எழுத்துப் பணி!!!

    அ. பரக்கத்துல்லா
    அபுதாபி

  2. சரவணண்

    உங்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *