சந்திப்புகளில் சாதிக்கலாமே..!

– பிரதாபன்

எந்தத்துறையிலும் ஏற்றங் களைக் காண்பதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள், சந்திப்புகளை சரியாகப் பயன் படுத்தினால், எதிரில் உள்ள மனிதரே உங்கள் ஏணியாக மாற வாய்ப்பி ருக்கிறது. ஒவ்வொரு மனிதரையும் உங்களுக்கு உதவக்கூடியவராய் மாற்றுவது உங்களிடம்தான் இருக்கிறது. முக்கியமாக, உங்கள் அணுகுமுறையில் இருக்கிறது.

விநாடிகளில் விளங்கி விடும்:

ஒரு மனிதரை எடை போடுவதற்கு நிறைய நேரம் ஆகலாம். ஆனால், சந்தித்து சில நொடி களிலேயே முதல் அபிப்பிராயம் ஏற்பட்டு விடுகிறது. இதமான கை குலுக்கல், மிதமான புன்னகை, பக்குவமான வார்த்தைகள், உங்கள் மேல் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். சிலபேர் மற்றவர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்வதாய் நினைத்து வெங்கலக்கடையில் யானை புகுந்தது போல் நடந்து கொள் வார்கள். இது, கொஞ்சம் அதிகமாகப் பட்டால் அவர்களுக்குள் ஓர் அன்னிய உணர்வையே ஏற்படுத்தும்.

பொது நண்பர் பற்றிய பேச்சு:

உங்களுக்கும், நீங்கள் சந்திக்கும் மனிதருக்கும் அறிமுகமான மூன்றாவது மனிதர் இருப்பார். அந்த மூன்றாவது மனிதர் பற்றி பேச்சு வரும் போது நடு நிலையான அபிப்பிராயங்களையே வெளி யிடுங்கள். அதீத உரிமையை வெளிப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ”அவனா! அவனை அரை டிராயர் போட்ட நாளிலேயே தெரியும்” என்று அலட்சியமாய் ஆரம்பிக்காதீர்கள். சின்ன வயதில் எல்லாமே அரை டிராயர்தான் போடுவார்கள். மற்றவர்கள் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை வைத்துத் தான் உங்களைப் பற்றிய அபிப்பிராயம் உருவாகும்.

ரமண மகரிஷி திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில், எல்லோருக்கும் இடையூறு தருகிற மனிதர் ஒருவர் இருந்தாராம். அவரைப் பற்றி அனைவரும் குறை சொன்னாலும் மகரிஷி எதுவுமே சொல்ல மாட்டாராம். அந்த மனிதர் இறந்த செய்தி யறிந்ததும் ரமண மகரிஷி அவரைப் பற்றி சொன்னது என்ன தெரியுமா? ”அந்த மனிதரைப் போல் உடல் சுத்தம், உடை சுத்தம் பேணுபவர்கள் மிக அரிது. தாடி, மீசை, சட்டை, வேட்டி எல்லாமே எப்போதும் தூய்மையாக இருக்கும்”. எதிலும் நல்லதே காண்கிற குணத்தின் அடையாளம் இது.

முன்னால் இருப்பவரிடம் முழுமையாக இருங்கள்:

ஒரு சந்திப்பை மேற்கொண்டு விட்டு யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர் பேசும்போது வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். எதிரில் உள்ளவர் பேசும்போது இடை மறிக்காதீர்கள். குறுக்கீடு செய்வது, குறுஞ் செய்தி அனுப்புவது எல்லாமே உரையாடலின் தீவிரத்தைக் குறைப்பதுடன் உங்களைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தையே ஏற்படுத்தும்.

எதிரில் இருப்பவர் சொல்ல வருகிற துணுக்குச் செய்தி உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் குறுக்கிட்டு அவர் தொடங்கிய வாக்கியத்தை முடிக்காதீர்கள். உடலசைவின் மூலமும், தலை அசைப்பின் மூலமும் அவர் சொல்ல வந்ததை சொல்லவிடுங்கள்.

பெயர் சொல்லும் பண்பு:

உங்களிடம் உரையாடு பவரை பெயர் சொல்லி அழைப்பது நிச்சயம் நெருக்கத்தை அதிகரிக்கும். ஆனால், வயதில் பெரியவராய் இருந்தால் முன்னே மிஸ்டர் என்றோ பின்னோ சார் என்றோ சேர்த்து அழைப்பதுதான் மரியாதை. நெருக்கத்தை உருவாக்கிக் கொள்வதாக நினைத்து சந்தித்த சில நிமிஷங்களிலேயே, என்ன பாஸ் என்றோ, இல்லியா தலைவரே என்றோ சொல்வது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

மறுபடி எப்போ?

ஒரு சந்திப்பில், பேச வந்த விஷயத்தைப் பேசி முடித்த பிறகு, பேச்சு பொதுவான விஷயங்கள் குறித்து திசை திரும்புவது இயற்கைதான். ஆனால், ”ஆரியக் கூத்தாடி னாலும் காரியத்தில் கண்ணாயிரு” என்பதுபோல், பேசிய முக்கியமான விஷயத்தில் எடுத்த முடிவு களை, விடை பெறும் முன்பாக நினைவு படுத்திக் கொள்ளுங்கள். தேவையென்றால், அடுத்த சந்திப்பு எப்போது, எங்கே, எத்தனை மணிக்கு என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சின்னதாய் ஒரு நன்றி:

சந்திப்பு முடிந்து திரும்பியபிறகு, சின்னதாய் ஒரு நன்றிச் செய்தியை குறுஞ்செய்தியிலோ, மின்னஞ்சலிலோ தட்டிவிடுங்கள். அலுவல் சார்ந்த சந்திப்பாய் இருப்பின் முறையான கடிதத்தை அனுப்புங்கள். அடுத்த சந்திப்பு குறித்த நினைவூட்டலும் இருக்கட்டும்.

உங்கள் எழுத்துப்பூர்வமான தொடர்பு குறுஞ்செய்தியோ, மின்னஞ்சலோ, கடிதமோ எதுவாக இருந்தாலும் எழுத்துப்பிழை, கருத்துப் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

சந்திப்புகளே சரியான தொடக்கம். தொடக்கத்தில் தெளிவிருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *