வெற்றி மேடை ஏறினேன்

சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

முயற்சிக்கு முன்னால் வரும் தயக்கமும்
வெற்றிக்கு பின்னால் வரும் மயக்கமும்
நிலையான முன்னேற்றத்தைக் கொடுக்காது

தம்பி, உள்ளே வா!” என்றார். எங்களுடைய துறையின் தலைவர் டாக்டர் பெருமாள். அச்சத்தோடு அவருடைய அறைக்குள் நுழைந்தேன்.

”உன்னை நமது கல்லூரி முதல்வர் வரச்சொல்லி இருக்கின்றார். எதற்கென்று தெரியவில்லை. நீ போய் அவரைப் பார்” என்று சொன்னார். அத்துடன் அவர் வேறு எதுவும் சொல்லவில்லை. ஏன் எதற்கு என்றும் கேட்காம லேயே என்னை அனுப்பி விட்டார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் தேவராஜன் அவர் களைச் சந்திக்க அவருடைய அறைக்குச் சென்றேன்.

முக மலர்ச்சியோடு அவர் என்னை வரவேற்று, அவர் எதிரில் இருந்த நாற்காலியில் அமரச் செய்தார். ”தம்பி! நீ ‘அறிமுகம்’ என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்துவதாகக் கேள்விப்பட்டேன். மிக்க மகிழ்ச்சி.

இந்த வயதிலேயே உனக்கு இப்படி ஒரு ஆர்வம் வந்திருக்கிறது. நிச்சயம் எதிர்காலத்திலே நல்ல நிலைக்கு வருவாய்” என்று அவருடைய கண்களில் ஒளிவீசப் பாராட்டினார். நான் உள்ளம் நெகிழ்ந்து போனேன்.

”சார், உங்களுடைய வாழ்த்துக்களுக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி” என்று இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தினேன். ”எதாவது உதவி வேண்டும் என்றால் என்னிடம் கேள்” என்றார். ”அத்துடன் சமுதாயச் சிந்தனைகளோடு கவிதைகளை எழுது. அதுதான் இப்போதைக்கு தேவை” என்று கண்டிப்பான குரலில் சொன்னார். அது இன்றும் என் மனதில் நிலைத்து நிற்கின்றது.

அன்றே, எனக்குள் ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டேன்.

அதாவது, எனது பேனா தலை குனிகிறபோது, இந்தச் சமுதாயம் தலைநிமிர வேண்டும் என்று.

ஆம்! ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் சமுதாயச் சிந்தனை இருக்க வேண்டும். வெள்ளைத் தாள்களை வெற்றித் தாளாக மாற்றும் உத்வேகமும், உயரிய சிந்தனையும் இருக்க வேண்டும்.

சாதாரணமானவர்களைச் சாதனையாளர்களாக்குகின்ற முயற்சி இதிலே இருக்கும் என்ற சிந்தனையோடுதான் இப்போதும் எழுதி வருகின்றேன்.

பிறகு, முதல்வர் என்னிடம் கூறியவை குறித்து, அறிமுகம் மாத இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினர்களுடன் தெரிவித்தேன். அதற்கு, அவர்கள் அனைவரும், ”ஆமாம். வெறும் காதல், கத்திரிக்காய் என்று எழுதாமல் சமுதாயச் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளை மட்டும் எழுதுவோம் என்று ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை வகுத்துக்கொள்வோம்” என்றனர்.

நண்பர்கள் ஜி.டி.ராஜேந்திரன், வ.இளங்கோ ஆகியோர், படைப்புகளுக்கு ஏற்றவாறு அட்டைப் படம் வரைந்து கொடுப்பார்கள். இளங்கோவிற்கு என்மீது அளவு கடந்த அன்பு. எனக்கு ஓராண்டு ஜுனியர்தான் என்றாலும், எப்பொழுதும் என்னுடன்தான் இருப்பார்.

எனது கவிதைகளை ரசிப்பதும், விமர்சிப்பதும் பின்னர் அவை குறித்து அவருடைய நண்பர்களிடம் விவாவதிப்பதும் அவருக்கு பிடித்தமான ஒன்று. அவருடைய பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். வால்பாறை செல்லும் வழியில் உள்ள அட்டகட்டியில் இருந்த அவருடைய பெற்றோர்களைப் பார்க்க அங்கு சென்று, அவர்களோடு பலநாட்கள் தங்கியிருக்கிறேன்.

பாசத்தோடு என்னை அவர்கள் கவனித்துக் கொண்ட விதத்தை இன்று நினைத்தாலும் இமைகளில் ஈரம் பரவு கின்றது. இளங்கோவிற்கு இயல்பாகவே ஓவியம் தீட்டும் திறமை இருந்தது. அவருடைய தூரிகையின் சுகப் பிரசவங்களை நான் எப்போதும் ரசிப்பேன். ஏனென்றால் கவிதை என்பது பேசும் ஓவியம்; ஓவியம் என்பது மவுனக் கவிதை!

இளங்கோ தற்போது கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாய் பணியாற்றுகிறார். நிர்வாகத் திறமையும் நல்ல அணுகுமுறையும் மிக்கவர். அனைவரிடமும் நன்கு பழகும் திறன்மிக்கவர். அதைவிட மிக முக்கியம், உண்மையான அன்பிற்காக எதையும் செய்யும் மனிதநேய மிக்க பண்பாளர்.

ஆம்! எல்லோரிடமும் நன்கு பழகத் தெரிந்தவர்கள்தான் எதிலும் சாதனை படைக்கின் றார்கள். இதைத் தான்,

பழகத் தெரியாதவனுக்கு
வீடே உலகம்
பழகத் தெரிந்தவனுக்கு
உலகமே வீடு!

காற்றுடன் பழகத் தெரிந்தவர்கள்
ஓசையைச் செதுக்கி
இசைமழையில் நம்மை
நனைத்து எடுக்கிறார்கள்
கற்பனையுடன்
பழகத்தெரிந்தவர்கள்
சொற்களைப் பூக்களாக்கி
நமக்கு
கவிமதுரம் தருகிறார்கள்
என்று எழுதி உள்ளேன்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மனித உறவு (ஏன்ம்ஹய் தங்ப்ஹற்ண்ர்ய் நந்ண்ப்ப்ள்) திறமைகள் மிகவும்

அவசியம். ஆம்! எல்லோரிடமும் குறைகள் இருக்கும். அக் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், அவருடைய திறமைகளைப் பாராட்டினால் போதும். அவர் நாம் சொல்லும் சொல்லுக்கு கட்டுப்படுவார். அதன்மூலம் உறவு பலப்படும். ஆம்! குறையே இல்லாத மனிதன் இல்லை. குறையை மட்டுமே பார்ப்பவன் மனிதனே இல்லை.

ஒவ்வொரு நாளும் கல்லூரி முடிந்ததும் நான், எனது நண்பர் பாலகுமாரின் அறைக்குச் செல்வேன். அங்குதான் என் கவிதைகள் கருக் கொள்ளத் தொடங்கும். பாலகுமாருக்கும் நானும் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா சிவானந்த மேனிலைப்பள்ளியில் மேனிலைக்கல்வியை ஒன்றாகக் கற்றோம். அவர் எனக்கு வகுப்புத் தோழர் மட்டுமில்லாமல், பள்ளி விடுதியிலும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தோம். அப்பொழு தெல்லாம் நான் தூக்கத்தைத் துறந்து சுறுசுறுப்பாக இருக்க எனக்கு பல வழிகளில் உதவி உள்ளார்.

அவர் தற்போது அவருடைய தந்தையார் தொடங்கிய நெல்லை ஆரியபவன் என்ற உணவகத்தின் பங்குதாரராக இருக்கிறார். பாலகுமார், என்மீது அளவுகடந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். உதவும் உள்ளம்

படைத்தவர். ஆரம்பத்தில் எனக்கு பல்வேறு வகையில் உதவி செய்தார்.
‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ என்றார் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை. நமது சொந்தக் காலில் நிற்க, நமது சொந்தக் கையை நம்பவேண்டும். அந்த வகையில் படிக்கும்போதே, ஏதாவது தொழிலைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனது மனதில் தோன்றியது.
இது குறித்து நண்பர் பாலகுமாரிடம் தெரிவித்தேன்.

அவரும் ஆர்வமுடன், ”நீ சொல்வது சரிதான். நான் வாகன ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்காக ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிக்கு சென்று கொண்டு இருக்கிறேன். நீயும் சேர்ந்து கொள்” என்றதோடு, என்னை தன்னுடன் அழைத்துச் சென்று பாலாஜி டிரைவிங் ஸ்கூலில் கார் ஓட்டும் பயிற்சியில் சேர்த்து விட்டார்.

அப்பொழுது என்னிடம் மிதிவண்டிகூட இல்லை. என்றாலும், எப்படியும் எதிர்காலத்தில் கார் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை என்னுள் துளிர்விட்டிருந்தது. பயிற்சியை சிறப்பாக முடித்து தொழில்முறை ஓட்டுநர் உரிமம் எடுத்தேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றது. நம்பிக்கைதான் புதிய தேடல் களைத் தொடங்கி வைக்கின்றது. ஆம்! நம்பிக்கை தான் நம்மை நமக்கே அறிமுகம் செய்கின்றது. ஆகவே எப்பொழுதும் எதையும் சாதிக்கமுடியும் என்றே நினைப்பவர்கள் முன்னேற்றப்பாதையை அமைத்துக்கொள்ள முயல்கின்றார்கள். முடியாது என நினைப்பவர்கள் முடங்கித் தேய்ந்து விடுகிறார்கள்.

என்னைப் போன்ற முதல் தலைமுறை படிப்பாளிகளுக்கு, வழிகாட்டிகள் இருக்க மாட்டார்கள். அத்துடன் வழியும் இருக்காது. அதற்காக முன்னேறாமல் முளையிலேயே முற்றிவிடக்கூடாது.

அசுரத்தனமான முயற்சியோடு, பாதை அமைத்துக்கொண்டே பயணப் பட வேண்டும். பயணப்பட்டுக் கொண்டே பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

செல்கின்ற பாதைகளில், முட்கள் முகம் காட்டலாம். வழுக்கல்கள் வழி மறிக்கலாம். பள்ளங்கள் பயமுறுத்த லாம். அதற்காகக் கலங்கிவிடாமல் விழும்போதெல்லாம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டும், அவமானப் படுகின்ற போதெல்லாம் அவதாரம் எடுத்துக்கொண்டும், உள்ளம் புண் படுகிற போதெல்லாம் புன்னகை செய்து கொண்டும் முன்னேற வேண்டும்.

உள்ளத்தில் இலட்சிய நெருப்பு எரிந்து கொண்டு இருக்கும்போது எத்தகைய தடையையும் தகர்த்துக் கொண்டு முன்னேறும்.

அளவற்ற சக்தி உள்ளத்தில் ஊற்றெடுக்கும். அதனால் எதிர்ப்புகளை உரமாக்கிக் கொள்ள முடியும்.

பிரச்சனைகளை பின் வாங்கச் செய்ய முடியும். ஆகவே, எப்பொழுதும் இலட்சிய நெருப்பு நெஞ்சில் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை அப்பொழுதே நான் உணர்ந்து கொண்டேன்.

எழுத்திலும் பேச்சிலும் எனது முயற்சிகள் தொடர்ந்தன. கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற சொற்போர் போட்டிகளில் கலந்து கொள்ள அரசு கல்லூரியின் சார்பில் என்னை அனுப்பினார்கள்.

முதன்முதலாக கற்பனைச்சிறகுகளை அசைத்துக்கொண்டு கோவையிலுள்ள புகழ் பெற்ற அந்த மகளிர் கல்லூரிக்குச் சென்றேன். அங்குதான் எனது கன்னிப் பேச்சு கன்னியர்கள் முன் அரங்கேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *