வெற்றியாளர்கள் எங்கே வித்யாசப்படுகிறார்கள்?

– கிருஷ்ண வரதராஜன்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளுமே முடியும் என்ற எண்ணமும், என்னால் முடியாது என்ற எண்ணமும் கலந்துதான் இருக்கிறது. சில விஷயங்களில் என்னால் முடியும் என்று நினைக்கிறார்கள். சில விஷயங்களில் என்னால் முடியாது என்று நினைக்கிறார்கள்.

என்னால் லட்ச ரூபாய் நானோ கார் வாங்க முடியும் என்று நினைப்பவர் 15 லட்ச ரூபாய் வரும் இன்னோவா என்றால், ‘முடியாது’ என்கிறார். இன்னோவா வாங்குபவர் 1 கோடி வரும் ஆடி கார் என்றால், ‘அதெல்லாம் சான்ஸே இல்லை’ என்கிறார் பெருமூச்சோடு.

என்னால் இதெல்லாம் முடியும், இதெல்லாம் முடியாது என்ற பட்டியல் எல்லோருக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது. இதில் முடியும் என்ற எண்ணம் 51 சதவீதத்திற்கு மேல் இருப்பவர்கள் வெற்றிப்பாதையில் அடி எடுத்துவைக்கிறார்கள். 60 சதவீதமாகும்போது சில வெற்றிகளை சுவைக்க ஆரம்பிக்கிறார்கள். 70 சதவீதமாகும் போது பலராலும் பாராட்டப்படுகிறார்கள். 80 சதவீதமாகும்போது எல்லோராலும் அங்கீகரிக்கப்படுகிறார்கள். 90 சதவீதமாகும்போது கொண்டாடப்படுகிறார்கள். 100 சதவீதமாகும்போது வெற்றியாளர்களாக வரலாற்றில் பதிவாகிறார்கள்.

அதுவே, முடியாது என்று 51 சதவீதத்திற்கு மேல் நினைப்பவர்கள் தோல்விப் பாதையில் அடி எடுத்துவைக்கிறார்கள். இதுவே 100 சதவீதம் நினைப்பவர்கள் அடுத்த வீட்டுக்காரனுக்குக்கூட தெரியாமல் செத்துப்போகிறார்கள்.

இவ்வளவும் பேசுகிற எனக்கே சமீபத்தில் அடி சறுக்கியது. இண்டிகா வைத்திருந்த நான் அடுத்து ஸையர்என்ட் மாடல் வாங்கலாம் என்று விசாரித்தபோது இன்னோவா, ஸ்கார்பியோ என்ற இரண்டு மாடல்களை நண்பர்கள் முன் மொழிந்தார்கள்.

நான் சட்டென்று ஸ்கார்பியோவை டிக் செய்தேன். காரணம் இன்னோவா நீளம் அதிகம். யானைக்குட்டி மாதிரி இருக்கும். அதை பார்க்கிங் செய்வது கடினம். வளைவுகளில் திருப்புவது பெரும்பாடாக இருக்கும். சில நேரங்களில் டிராபிக்கில் இண்டிகா ஓட்டுவதே அவஸ்தையாக இருக்கிறது. இதில் இன்னோவாவெல்லாம் நம்மால் முடியாது என்றேன்.

நண்பர்கள், நீளம் ஒரு பிரச்சனை இல்லை. சுலபமாக ஓட்டலாம். என்றார்கள் நான் நம்பவில்லை. என்னை வற்புறுத்தி டெஸ்ட் டிரைவிற்கு அழைத்துச்சென்றார்கள். ஓட்டிப்பார்த்தால் உண்மையில் இண்டிகாவைவிட ஓட்டுவதற்கு சுலபமாக இருக்கிறது. நாம் ஓட்டுவதாகவே தோன்றவில்லை. தானாக ஓடுவது போல ஒரு பிரமை. அவ்வளவு சுலபமாக இருந்தது.

அப்போதுதான் புரிந்தது. எதையும் முயற்சித்துப் பார்க்காமலே நாம்கூட இதுபோல பல முடியாதுகளை மனதில் வைத்திருக்கிறோம்.

அன்று முதல் நான் முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்த ஒவ்வொன்றையும் முயற்சி செய்ய ஆரம்பித்து என் மனதில் முடியும் என்கிற சதவீதத்தை உயர்த்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

நீங்கள்?

5 Responses

  1. joseph

    different thinking + different activities = Sucuess

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *