வேலைக்கு ஆட்கள் தேவையில்லை

வேலைக்கு ஆட்கள் தேவை. அதுவும் உடனடியாக தேவை. நிறுவனத்தில் உள்ள எல்லாத் துறைகளுக்குமே தேவை. இப்படிப்பட்ட சூழல்தான் ஏறத்தாழ எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறது.

பணியாளர்கள் பற்றாக்குறை என்ற விஷயத்தில் சிறிய நிறுவனம் பெரிய நிறுவனம் என்ற வித்தியாசங்களெல்லாம் இல்லாமல் எல்லா நிறுவனங்களிலும் இதே சூழல்தான்.

பணியாளர்களை எப்படி நம் நிறுவனத்தை நோக்கி ஈர்ப்பது? இதற்கான விடையை தேடவெல்லாம் வேண்டியதில்லை. மீன் பிடிக்கச் செல்லும் போது நமக்கு பிடித்த ஜிலேபியையா கொண்டு செல்கிறோம்? அதற்கு பிடித்த புழுவைத் தானே கொண்டு செல்கிறோம். அது போல பணி யாளர்கள் விஷயத்தில் சம்பளம் என்று எல்லா நிறுவனங்களும் முடிவுக்கு வந்துவிட்டது.

‘திறமைக்கேற்ற சம்பளம்.’

‘திறமையை விட அதிக சம்பளம்.’

‘இத்துறையில் தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளத்தைவிட அதிக சம்பளம்’, என்றெல்லாம் விளம்பரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ‘கேட்கும் சம்பளம் வழங்கப்படும்’ என்று கூட சமீபத்தில் ஒரு கெஞ்சல் விளம்பரத்தை பார்த்தேன்.
ஏலத்தொகை போல போட்டி போட்டுக் கொண்டு உயர்கிறது சம்பளத்தொகை.
இவ்வளவு செய்யத்தயாராக இருந்தாலும், நேர்காணலுக்கு 100 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தால், 40 பேர் வருகிறார்கள். அதில் 10 பேர்தான் நமக்கு தேவையான தகுதிகளோடு இருக்கிறார்கள்.

அதில் 5 பேர்தான் சம்பள விஷயத்தில் ஒத்து வருகிறார்கள். (மீதி ஐந்து பேர் சொத்தையே எழுதிக் கேட்கிறார்கள்) அந்த ஐந்து பேருக்கும் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்தாலும் அதில் இரண்டு பேர்தான் வேலையில் வந்து சேர்கிறார்கள். அதிலும் ஒருவர் முதல் வாரத்தில் நின்று விடுகிறார். இன்னொருவர் ஒரு மாத சம்பளம் வாங்கிக்கொண்டு நின்று விடுகிறார்.

திரும்ப ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அலுத்து விட்டது என்கிறார்கள் நிர்வாகிகள்.

வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்து தரும் மனித வள மேம்பாட்டு நிறுவனங்களில்கூட பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்பது தான் வலிக்கும் நிஜம்.

புதிதாக பணியாளர்கள் கிடைப்பதில்லை. ஏற்கனவே இருப்பவர்களும் ஒன்றிரண்டாய் வேலையை விட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் நாளை என்ன செய்வது? இந்தக் குழப்பத்தில் இன்னும் சம்பளம் கூடுதலாக கொடுத்தால் வருவார்களோ? என்று சந்தேகம் வருகிறது. மறுபடியும் சம்பளத்தை ஏற்ற தயாராகிறார்கள்.

கூடுதல் சம்பளம் கொடுத்து நம் நிறுவனத்தேற்கேற்ற வகையில் அவர்களை மாற்ற ஆறு மாதம் பயிற்சி கொடுத்து ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் வேலை மாறிவிட்டால் என்ன செய்வது?

பல நிறுவனங்கள் இப்போது பணியாளர்களோடு அக்ரிமெண்ட் போட ஆரம்பித்துவிட்டது. ஒப்பந்த காலத்திற்கு முன்னால் வேலையிலிருந்து நின்றால் அபராதமாக மூன்று மாத சம்பளத்தை திரும்பச் செலுத்த வேண்டும். சர்டிபிகேட்டை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா? என்பது போல நிறுவனம் இப்படி யோசித்தால் பணியாளர்கள் இதை விட தீர்க்கமாக யோசிக்கிறார்கள். அக்ரிமெண்ட்தானே போடவேண்டும். தாராளமாக போட்டுக் கொள்ளலாம். ஆனால் அக்ரிமெண்ட் போட வேண்டுமென்றால் கூடுதலாக 5000 சம்பளம் வேண்டும் என்கிறார்கள். சரி எப்படியோ நிலையாக இருந்தால் சரி என்று அதற்கு சம்மதித்தால் பிறகு தான் தெரிகிறது.

கூடுதலாக கேட்டுப்பெற்ற 5000 வேலையை விட்டு இடையில் நிற்க நேர்ந்தால் கட்ட வேண்டிய அபராத தொகைக்காகத்தான் என்று.

சமீபத்தில் 1000 பணியாளர்களை வைத்து மிகப்பெரிய தொழிற்சாலை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் சொன்னார், “வேலையை விட்டு நிக்கறத பத்திக்கூட எனக்கு கவலையில்லை. மிகப்பெரிய பொறுப்பிற்கு வருபவர்கள்கூட முறையாகச் சொல்லாமல் திடீரென்று நின்றுவிடுகிறார்கள் பாருங்கள். அதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. வேலை கலாசாரம் முற்றிலுமாக சீரழிந்து விட்டது.

வேறொரு நிறுவனத்தின் தலைவர் சற்று ஆக்ரோஷமாகவே கேட்டார், “ஒண்ணுமே தெரியாம வர்றான். நாம எல்லாம் கத்துக் கொடுக்கிறோம். கத்துக்கிட்ட பிறகு சாலரி ஸ்லிப்பை கொண்டு போய் காண்பித்து வேறொரு இடத்துல போய் ஜாயின்ட் பண்ணிடறான். என் கம்பெனி என்ன டிரைனிங் சென்டரா?”

இதனால் பல நிறுவனத் தலைவர்கள் என்ன செஞ்சாலும் பத்துரூபாய் கூட கிடைத்தால் சென்று விடுவார்கள் என்ற விரக்தி மனநிலை யிலேயே பணியாளர்களை கையாள்கிறார்கள். பிரச்சனை இங்கேதான் ஆரம்பமாகிறது.

நிர்வாகத்திற்கு, இன்றைய சூழலை பார்த்து பணியாளர்களின் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது. சம்பள கொடுத்த தேதியிலிருந்து ஒரு வாரம் கழித்துதான் இந்த மாதம் நம்மிடம் எவ்வளவு பேர் வேலையில் மிச்சம் இருக்கிறார்கள் என்பதே நிர்வாகத்திற்கு தெரிய வருகிறது. நியாயமான காரணத்திற்காக நான்கு நாட்கள் லீவு போட்டிருந்தால் கூட அவர் வரும் வரை, அவரை ‘வேலையிலிருந்து நின்று விட்டாரோ?’ என்ற சந்தேகத்தோடே சிந்திக்கும் சூழல் இருக்கிறது.

இந்த இடத்தில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், பணத்திற்காக நம் நிறுவனத்திற்கு வேலைக்கு வருபவர்கள் நாளை அதே பணத்திற்காக நம்மை விட்டு சுலபமாக சென்று விடுவார்கள்.

எனவே பணத்தால் அதாவது சம்பளத்தால் மட்டுமே பணியாளர்களை ஈர்க்க நினைப்பது நிச்சயம் பயனுள்ளதாக இருக்காது. இத்தகைய சூழலை திறம்பட சமாளிக்க, இன்றைய பணி யாளர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு புதிய அணுகுமுறைகள் தேவைப்படுகிறது.
அது என்ன என்கிறீர்களா?

சற்றே காத்திருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *