நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தலைவராக தயாராகுங்கள்

– கிருஷ்ண வரதராஜன்

அந்த மரத்தடி பிள்ளையார் மீது மக்களுக்கு ஏகத்திற்கு வருத்தம் இருந்தது. எந்த வேண்டுதலையும் நிறைவேற்றுவதில்லை. தன் வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை என்ற கோபத்தில் இருந்தனர்.

ஒரு நாள் கோபம் எல்லை மீற பிள்ளையா ரோடு சண்டை போட கிளம்பி விட்டார்கள். நீ பிள்ளையார் இல்லை. வெறும் கல்தான் என்று கோபத்தோடு கல் வீச முனைந்தனர். இது என்னடா சோதனை என்று பிள்ளையார் சிலைக்குள் இருந்து எழுந்து மரத்தின் பின்னால் போய் ஒளிந்துகொண்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு மட்டும் பயம் வந்துவிட்டது. பிள்ளையார் முன் நின்று கொண்டு எல்லோரும் கல் வீசுகிறார்கள். அவர் அதைப் பார்த்து கோபப்பட்டுவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்துக்கொண்டு மரத்திற்கு பின்னால் போய் நின்று கல் வீசினார். கடைசியில் அந்தக் கல் மட்டும்தான் பிள்ளையார் மீது பட்டது.

நாம் எதையாவது சொல்லப்போய் அது எதாவது பிரச்சனையில் முடிந்துவிடக்கூடாது என்று சில பேர் எதையும் நிர்வாகத்திடம் நேரிடையாக சொல்லாமல் உடன் வேலை பார்ப்பவர்களிடம் மட்டும் புலம்புவார்கள்.

அது பல காதுகள் மாறி கடைசியில் நிர்வாகத்தின் காதுக்கு போகும்போது அர்த்தமே மாறியிருக்கும். நம் நிலைமையும் மாறியிருக்கும். உயர்பொறுப்புகளில் உள்ள பல பேர் நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டு அதிகாரமற்ற டம்மி மனிதர்களாக மாறுவதற்கும், உயர் பொறுப்புகளுக்கு வரவேண்டிய பல பேர் அந் நிலைகளுக்கு வராமல் இருப்பதற்கும் இப்படி பின்னால் நின்று கல் எறிவதுதான் காரணமாக அமைகிறது.

எனவே தலைவராக தங்களை தயார் செய்து கொள்கிறவர்கள் எடுத்துக் கொள்ள உறுதி மொழிகள் இரண்டு.

1) புறம் பேச மாட்டேன்.
2) புறம் கேட்க மாட்டேன்.

நிறுவனத்தில் உயர் பதவிகளை பிடிப்பதற்கு அதாவது தலைவராவதற்கு வழியே உடன் வேலை பார்ப்பவர்களை பற்றி போட்டுக்கொடுப்பதுதான் என்று பலர் தப்பான பாடம் படித்திருக்கிறார்கள். இதன் மூலம், ‘நான் உங்களிடம் எதையும் மறைப்பதில்லை. அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் எவ்வளவு பெரிய விசுவாசி’ என்று சொல்ல நினைக்கிறார்கள்.

போட்டுக்கொடுப்பவர் என்று உங்களுக்கு பெயர் வந்துவிட்டால் நீங்கள் தலைவர் ஆவதை யாரும் விரும்பமாட்டார்கள். அப்படியே ஆனாலும் யாரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள்.

நிர்வாகத்தில் இருப்பவர்களிடம் எல்லா வற்றையும் சொல்வதில் ஒன்றும் தவறில்லை ஆனால் சொல்லும் விதத்தில் இருக்கிறது, அது சரியா? தவறா? என்பது.
பொதுவாக உங்களோடு இல்லாத நபரைப் பற்றி எதையாவது சொல்ல வேண்டியிருந்தால், அவர் உங்களோடு நிற்பதாக கற்பனை செய்து கொண்டு பேசுங்கள்.

ஒருவர் இருக்கும்போது அவரைப்பற்றி மற்றவர்களிடம் எப்படி சொல்வீர்களோ அதேபோலவே அவர் இல்லாத போதும் சொல்லுங்கள்.

நாளை அது அவர் காதுக்கு போகும் போது உங்களைப்பற்றி தவறாக நினைக்க மாட்டார்கள். எப்போதும் நேரடியாக தாக்குவதைவிட மறைந்து நின்று தாக்குவதுதான் அதிகம் வலிக்கும். எனவே யாரைப்பற்றியும் புறம் பேசாதீர்கள்.

அதே போல மற்றவர்களை பற்றி யாராவது உங்களிடம் சொல்ல வந்தால் அதை காது கொடுத்துக் கேட்காதீர்கள். உங்களைப்பற்றி சங்கர் என்ன சொன்னார் தெரியுமா? என்று வருவார்கள்.

நாமும் பதட்டத்தோடு என்ன சொன்னார்? என்று கேட்டால் போதும். ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று நங்கூரத்தை நச்சென்று பாய்ச்சிவிடுவார்கள்.

சொறிந்துகொள்ளும் சுகம் போல பிறகு அவருக்காக நாம் காத்திருக்க ஆரம்பித்து விடுவோம்.

ஒன்றை மறந்துவிடாதீர்கள். இன்று மற்றவர்களை பற்றி தைரியமாக பேசுபவர், நாளை உங்களைப் பற்றியும் பேசத்தயங்க மாட்டார். இதைத் தவிர்க்க நம்மை ஒருவர் விமர்சித்ததாக வந்து சொன்னால், அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று ஒரே வரியில் முடித்துவிடுங்கள். இல்லையா? அவர் உன்னை நம்பிச்சொன்னதை நீ இப்படி வந்து சொல்லலாமா? கூடாது என்று திருப்பி அனுப்பி விடுங்கள்.

மெல்ல மெல்ல எல்லோருடைய பார்வையிலும் உயர ஆரம்பிப்பீர்கள். நான் யாரைப் பற்றியும் தவறாக பேசுவதில்லை. மற்றவர்களைப் பற்றி தவறாகச் சொன்னால் கேட்பதுமில்லை.

ஆனால் என்னைப்பற்றியே தவறாக பேசுகிறவர்கள் இருக்கிறார்களே, அதைப்பற்றி கேள்விப்படும்போது இந்த தலைமைப் பதவியே வேண்டாம் என்று தோன்றுகிறது என்பார்கள் சிலர் என்னிடம். அதனால்தான் தலைமை பொறுப்பை முள்கிரீடம் என்று வர்ணிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவராக கடவுள்கூட இருக்க முடிவதில்லை. அதனால்தான் இந்துகள், முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் என பல மார்க்கங்கள். இந்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவர்களாவது ஒரே கடவுளை ஏற்றுக் கொண்டார்களா என்றால் அதுவும் இல்லை. சிலர் கிருஷ்ணன்தான் கடவுள் என்கிறார்கள். சிலர் திருப்பதி வெங்கடா ஜலாபதிதான் கண்கண்ட கடவுள் என்கிறார். இன்னும் பலர் சபரிமலை வாசனுக்கே எல்லா சக்தியும் இருக்கிறது என்கிறார்கள்.

ஆக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவராக கடவுளால் கூட இருக்கமுடியாது என்கிறபோது நாமெல்லாம் எம்மாத்திரம். மற்றவர்களைவிட உங்கள் செயல்பாடுகளை உங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிகிறதா என்று பாருங்கள். அதில் உறுதியாக இருங்கள். நீங்கள் மிகப்பெரிய தலைவராக தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *