வாழ நினைத்தால் வாழலாம்

– ருத்ரன் பதில்கள்

தாழ்வுமனப்பான்மை மற்றும் திக்குவாய் நோயில் இருந்து விடுபடுவது எப்படி?

திக்குவாய் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம் உடல்சார்ந்த அடிப்படை பிரச்சனைகள். சிலருக்கு பிறப்பி லிருந்தே குரல் நாண் நரம்புகளில் பிரச்சனைகள் இருக்கும். சிலபேருக்கு பயத்தினால் திக்குவாய் வரும். பயத்தினால் வரும் திக்குவாயை மன சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். மற்ற படி குரல்நாண் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதற்கான தகுந்த அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டும். பிறகு பேசுவதற்கான பயிற்சிகள் உள்ளன. பேசுவதற்கு பழக வேண்டியிருக்கும்.

திக்குவாய் வேறு. தாழ்வு மனப்பான்மை வேறு. நம்மிடம் இது இல்லை என்று குறையை நினைத்துக் கொள்வது, அந்தக்குறையை பெரிதாக்கிக் கொள்வதுதான் தாழ்வு மனப் பான்மை. இதற்கு அடிப்படைக் காரணம், தொடர்ந்து நாம் அடுத்தவர்களைப்பார்த்து ஒப்பிடுவது. அவனைப்போல் நான் இல்லையே என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருப்பதால் வருவதுதான் தாழ்வுமனப்பான்மை. இது வராமல் இருப்பதற்கு குழந்தைப் பருவத்திலிருந்தே தயாராக இருக்க வேண்டும். வந்துவிட்டால் சுலபத்தில் போகாது. அதற்கு அமர்ந்து யோசிக்க வேண்டும். நிறைய பேச வேண்டும்.

சின்ன இலக்குகளை வைத்துக் கொண்டு சின்ன வெற்றிகள் பெறவேண்டும். சின்னச் சின்ன வெற்றிகள் வர வர மனதில் சந்தோஷமும் தைரியமும்கூட ஆரம்பிக்கும். தானாகவே நம்பிக்கையின் அளவு அதிகமாகும். அப்போது தாழ்வு மனப்பான்மை குறையும். சின்னச்சின்ன வெற்றிகளை நோக்கி நகரும்போது அதில் முழு முனைப்போடு ஈடுபடும்போது தாழ்வு மனப் பான்மையை உணரக்கூட மனதுக்கு நேரமும் இருக்காது. இடமும் இருக்காது. இது என் வாழ்வில் நான் அனுபவித்துக் கற்றுக்கொண்ட விஷயம்.

அடிக்கடி ஏற்படும் மனச்சோர்விலிருந்து விடுபடுவது எப்படி? எப்பொழுதும் உற்சாகமாக இருப்பது எப்படி?

அடிக்கடி மனம் சோர்வாக இருந்தால் அது நோயின் ஆரம்பமாக இருக்கலாம். எச்சரிக்கையாக பாருங்கள். அது நோயில்லை. எல்லா விஷயத்திற்கும் உடைந்து போவதுபோல் ஆகி விடுகிறது. மனதில் தெம்பில்லை, வலுவில்லை போன்ற நிலை இருந்தால் உங்களுக்கு நம்பிக்கை குறைவு என்று அர்த்தம்.

நாம் இனிமேல் வேலை செய்ய வேண்டியதில்லை என்கிற சலிப்பு வரும்போது கூட நம்பிக்கை குறையும். எனவே வாழ்வை சுவாரசியமானதாக ஆக்கிக் கொள்ளவேண்டும். எப்படி? நீங்கள் நடனம் கற்றுக் கொள்வது அரங்கேற்றம் செய்வதற்காக அல்ல. அந்த நேரத்தை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்பதற்காகத்தான்.
உடற்பயிற்சி சாலைக்குப்போவது அல்லது நடனப்பள்ளிக்கு போவது. அது உங்கள் விருப்பம். எது உங்களுக்குப் பிடிக்கிறதோ அதற்குப் போகலாம்.

இதுபோல ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு போகும்போது வாழ்க்கை சுவாரசியமாகும். ஆனால் இது தற்காலிகம்தான். இன்றைக்கு நான் நடன வகுப்பிற்கு போகிறேன். அரங்கேற்றம் செய்ய வேண்டும். பிரபு தேவாவை விட பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் போதுதான் பிரச்சனை வரும்.

தற்போதைக்கு இந்தப் பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கான வழி என்கிறபோது சோர்வுகள் விலகும். சோர்வுகளை தற்காலிகமாக நீக்கிக் கொள்ளும் அதே நேரத்தில் சோர்வின் காரணம் என்ன? நம் மனதின் செயல்பாடென்ன? மனதின் எண்ணம் என்ன? அதன் தாக்கம் என்ன? என்று கவனிக்கும்போது இந்தப்பிரச்சனைகளுக்கான தீர்வைக் காண முடியும்.

குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கும், கணவன் மனைவி குடும்ப உறவுகளில் ஏற்படும் விரிசலுக்கும் காரணம் என்ன? நிவாரணம் என்ன?

ஒன்றுமில்லை. எதிர்பார்ப்புதான். நான் அன்பு கொடுக்கிறேன். நீ அன்பு கொடுக்கவில்லை. நான் மிகவும் அன்பாய் இருக்கிறேன் என்பது என் மனைவிக்கு தெரியவில்லை. அவளுடைய அன்பு ஒரு சாக்லேட் வாங்கிக் கொடுப்பது. அவனுடைய அன்பு அவளுக்காக ஏசி பொருத்துவது என்று இருக்கும். ஏசி வாங்கிக் கொடுப்பதில் செலவு அதிகம்தான். ஆனால் சாக்லேட் வாங்கித்தருவதில் இருக்கிற நெருக்கம் அவளுக்குத் தேவைப்படும். அவனுக்கு இது புரியாது. இங்கேதான் பிரச்சனை ஆரம்பிக் கிறது.

அன்பு என்பது கணக்கில்லை என்பது தெரிந்தாலே இது சரியாகிவிடும். கொடுக்கல் வாங்கல் இல்லை. அன்பு என்பது கொடுப்பதற்கு மட்டும்தான். திருப்பிவாங்குவதற்கு இல்லை என்று தெரிந்து கொண்டாலே பிரச்சனை வராது. இது குடும்பத்தில் மட்டுமல்ல. எல்லா இடத்திலும் இருக்கிறது.

தோல்வி ஏற்படும் சமயங்களில் தற்கொலை எண்ணம் வருகிறது. தவிர்ப்பது எப்படி?
தற்கொலை செய்வதற்கான எண்ணம் வருவதற்கு அடிப்படையான காரணம், வாழ்க்கையில் இனி எதுவுமே முடியாது என்று நினைப்பதால்தான். இனி எதுவும் முடியாது என்று எல்லாவற்றையும் செய்து முடித்தபிறகு நினைக்கலாம்.

எல்லாவற்றையும் எப்போது செய்து முடிப்பது? இறக்கும்வரைக்கும் மனிதனுக்கு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. தற்கொலை எண்ணம் என்பது ஒரு தப்பித்தல். வாழ்க்கையை விட்டு ஓடிவிடுகிறேன் என்கிற தப்பித்தல். அது சரியல்ல. உங்களுக்கு அது தோன்றிவிட்ட தென்றால் அதை மாற்றிக்கொள்வது சாத்தியம்.

ஏனென்றால் அதைப்பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் நெருக்கமானவர்கள் தற்கொலை எண்ணம் பற்றிச் சொல்லும்போது உடனடியாக அதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இப்படிச் சொல்பவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இது மன அழுத்தத்தின் அறிகுறி. எனவே அடுத்தவர்கள் தற்கொலை எண்ணத்தைப்பற்றி எங்கே பேசினாலும் அதை உடனடியாக கவனத்தில் கொள்ளுங்கள். அதற்காக சிரத்தை எடுத்து அவர்களுடைய பிரச்சனை தீர்க்க முயலுங்கள்.

நமது உள்சக்தியை உணர முயற்சிக்கும் போது மனஅழுத்தம் வருவதுபோல் இருக்கிறது. இதிலிருந்து வெளியில் வருவது எப்படி?

உள்சக்தி என்றால் என்ன? மன அழுத்தம் என்றால் என்ன? இந்த இரண்டு விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான அர்த்தங்கள் முக்கியம். உள்சக்தியைத் தெரிந்து கொள்கிறபோது வருத்தங்கள் வரவே வராது. ஏனென்றால் உண்மையை நோக்கி தேடலின் போது இடறலாம்; விழலாம்; ஆனால் வலிக்காது. எவரெஸ்ட் ஏறுகிறவர்கள் எத்தனை முறை விழுந்திருப்பார்கள். அந்த வலி ஒரு பொருட்டாக இருந்திருக்காது. ஏனென்றால் எவரெஸ்ட் சிகரத்தை அடைய வேண்டும் என்பது முக்கியம்.

உள்சக்தி நிஜமாகவே உள்சக்தியாகவே இருந்தால் அதை நோக்கிப் போகிறபோது மன அழுத்தம் வராது. அடுத்தவர் சொல்வதுபோல கற்பனை செய்துகொண்டு லிஃப்டில் போவது போல் குண்டலினி சக்தி மேலே ஏறும் என்று நினைத்தால் அப்போதுதான் மனஅழுத்தம் வரும். ஏனென்றால் அது நடப்பதில்லை.

எதிர்பார்த்தது நடக்காத போது, ஏன் அது கிடைக்கவில்லை. என் கணக்கு தவறா? அல்லது நான் ஆசைப்படுவது தவறா, எனக்கு அந்தத் தகுதி இல்லையா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டீர்கள் என்றால், மன அழுத்தம் வராது.

அடுத்தவர்களுக்கெல்லாம் உள்சக்தி தெரிகிறது. எனக்கு தெரியவில்லையே என்று நினைத்தால் மனஅழுத்தம்தான் வரும். எனக்குத் தெரிந்தது என்று சொல்லி ஏமாற்றுபவர்கள்தான் அதிகம். தெரிந்தவர்கள் சொல்வதில்லை.

பிறப்பு, இறப்பு, கர்மா, காமம், வாழ்க்கை இவைகளை தெளிவுபடுத்தவும்……

இவை பெரிய விஷயங்கள். அவ்வளவு எளிதல்ல. காமம் பற்றி மட்டுமே வேண்டுமானால் யோசிக்கலாம். ஏனெனில் அது நமக்கு தெரிந்த விஷயம். காமம் என்பது அதீதம். ஆசை என்பது அளவானது. அதீதமாக எது இருந்தாலும் அது சிக்கல்.
கர்மா என்பது சமயத்தில் அதை சாக்காக பயன்படுத்துகிறோம். போன பிறவியில் நான் செய்த பாவம் என்று நீங்கள் சொன்னால் இந்தப் பிறவியில் செய்த முட்டாள்தனம் கணக்கில் வராது. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இறப்பு பிறப்பு என்பதெல்லாம் பெரிய விஷயம். அதைப்பற்றிப் பேச எனக்கு தகுதி கிடையாது.
குழந்தைகளை ஒப்பிடுவது நியாயமா?

இல்லை. குழந்தைகளை மட்டுமல்ல. யாரையும் யாரோடும் ஒப்பிடுவது நியாயமில்லை.
கோபம் என்பது நடிப்பு அல்லது பயத்தினால் ஏற்படுவது தானா?

கோபம் அடிப்படையில் ஒரு பயம்தான்.

அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்த ஒரு மந்திரம் அல்லது தந்திரம் வேண்டுகிறேன்.
நான் குரு இல்லையே. மனது அலைபாயும். அதைக் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கரைகள் எவையென்று தீர்மானியுங்கள். அப்போது அலை அதைத் தாண்டாது.

எல்லாவற்றிற்கும் நமக்குள்ளேயே பதில் இருக்கிறது. வெளியில் தேடாதீர்கள். இதற்கு வியாபாரிகளிடம் போவீர்கள். வியாபாரிகளிடம் போனால் உங்களுக்கு வேண்டிய பண்டம் கிடைக்கலாம். ஆனால் அதனால் தொடர்ந்த பயன் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

குற்ற உணர்வு, மன அழுத்தம் இரண்டுக்குமுள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன? இரண்டிலிருந்தும் விடுபடுவது எப்படி?

தப்பு செய்து விட்டேனே என்று நினைப்பது குற்ற உணர்வு. குற்றம் செய்தால் வருத்தம் வரத்தான் செய்யும். மன அழுத்தம் என்பதே வருத்தம்தான். வலியின் வெளிப்பாடு தானே. குற்ற உணர்வும் மன அழுத்தமும் ஒன்றில்லை. ஆனால் குற்றவுணர்வினால் மன அழுத்தம் வரலாம்.

அடிப்படையில் சிறிதேனும் நேர்மையுள்ள வர்களுக்குத்தான் குற்ற உணர்வு வரும். கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாத வர்களை பார்த்திருக்கி றேன். குற்றவுணர்வு வந்தால் சந்தோஷப்படுங்கள். உங்களிடம் நேர்மை இருக்கிறது என்று அர்த்தம். அந்த உணர்வு வந்தால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும். இனிமேல் மீண்டும் அதைச் செய்யாமல் இருக்க உதவவேண்டும்.

நடந்ததைப்பற்றி புலம்புவதை விட்டு விட்டு இதை சரிசெய்ய முடியுமா? என்று பார்க்க வேண்டும்.

சில விஷயங்களை சரிசெய்ய முடியாது. நாடு முழுக்க பெரிய சுவரொட்டிகள் ஒட்டி பெரிய எழுத்துக்களில் மன்னிப்பு கேட்டாலும் அது தீர்வாகாது. ஆனால் இன்னொரு முறை நடக்காமல் இருப்பதற்கு உங்கள் மனம் தெளிவாக இருந்தால் அதுவே போதும்.
கருத்துத்திணிப்பு எப்படி நடக்கிறது? அது எப்படி நடக்கிறதென்று தெரிந்தால்தானே அதை அகற்ற முடியும்?

கருத்துத்திணிப்பு இரண்டு விதங்களில் நடக்கிறது. ஒன்று ஹிட்லர், யூதர்கள் இருப்பது வீண். அவர்களை அழித்தே ஆகவேண்டும் என்று திரும்பத்திரும்ப வலியுறுத்தி நல்ல ஜெர்மானி யர்கள் மனங்களில்கூட அந்த எண்ணத்தை ஏற்படுத்தினான். இது ஓர் அறிவியல்பூர்வமான கருத்துத்திணிப்பு.

இரண்டாவது சில மார்க்கெட்டிங் உத்திகளினால் மனது அந்தப்பக்கம் சாய ஆரம்பிக்கும். இது கருத்துத்திணிப்பில்லை. இது ஒரு ஆலோசனை.

கருத்துத்திணிப்பு ஏற்படுகிறது என்று எப்போது சந்தேகப்படவேண்டுமென்றால், நம் செயல்முறை, வாழ்முறை இவையெல்லாம் ஒரு பக்கமாக மாறும்போது கருத்து திணிக்கப்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.

எந்தக் கருத்து திணிக்கப்படுகிறது என்றும் அது என்ன சொல்கிறது, யார் அதைச் சொல்கிறார்கள், அதனால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கிறது என்று சிந்தியுங்கள்.

இலவசமாகக் கொடுக்கிறார்கள். காசு கொடுக்கிறார்கள் என்று ஓட்டுப்போட நினைத்த மக்கள் ஏன் கொடுக்கிறார்கள் என்று யோசித்ததால்தானே ஆட்சி மாற்றமே நிகழ்ந்தது. யோசிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *