– உயர்நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்
இருட்டை விரட்டும் வெளிச்சமாக
நாமக்கல் மாவட்டம், குருசாமி பாளையம் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக இருந்தது.
திரு. வெங்கட்ராமன் என்ற தமிழாசிரியர், அங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஏறத்தாழ 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிவிட்டு 1984-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். வந்த சுமாரான வருமானத்தில் சேமிப்புடன் கடன் வாங்கி இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
வயது 83 ஆண்டுகளைத் தாண்டி விட்டது. வறுமை வாட்டியது. மழைக்கு ஒழுகும் பழைய வீட்டில், வயதான மனைவி, விதவையான ஒரு மகள் ஆகியோருடன் சொற்ப ஓய்வூதியப் பணத்தில் வாழ்ந்து வந்தார்.
அவரிடம் படித்த பழைய மாணவர்கள் இதைக் கேள்விப்படுகிறார்கள். நாடெங்கும் பரவியுள்ள அவரது பழைய மாணவர்களுக்கு இந்த செய்தி தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில், பல மாநிலங்களில் இருக்கும் பழைய மாணவர்கள் பள்ளியில் தங்களுக்குத் தமிழ் சொல்லித் தந்த ஆசிரியருக்காக மனமுவந்து தங்கள் பணத்தைத் தருகிறார்கள். கோவையில் தொழில் செய்யும் பழைய மாணவர் ஒருவர் மட்டுமே ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் ரூபாய் தருகிறார். 1200 சதுர அடியில் ஆசிரியர் பெயரில் நிலம் வாங்கி, அதில் சிறந்த முறையில் வீடுகட்டி ‘குருநிவாஸ்’ என்று பெயரிடுகிறார்கள். ஆசிரியர் தினத்தையொட்டி, செப்டம்பர் முதல் வாரத்தில், பள்ளியில் தங்களுக்குத் தமிழ் சொல்லித்தந்த வயதான அந்த ஆசிரியருக்கு ‘குருநிவாஸ்’ என்னும் புதுவீட்டினைப் பரிசாகத் தந்து மகிழ்கிறார்கள். ஆசிரியரின் ஆழ்மனத்தில் நெகிழ்ச்சிக் கண்ணீர்.
அவரிடம் படித்துத் தேறி, அலுவல் சேர்ந்த பலர் இன்று ஓய்வு பெற்றுவிட்டார்கள். அந்த ஆசிரியரிடம் படித்து இத்தனை ஆண்டுகள் உருண்டோடிய நிலையிலும், இப்படி ஒரு செயலைச் செய்ய அவர்களைத் தூண்டியது எது? “ஆண்டுகள் பல ஆனாலும் அவர் எங்களுக்குத் தமிழ் சொல்லித் தந்ததை மறக்க முடியவில்லை. அவ்வளவு அன்பாகவும், உருக்கமாகவும் அழகான தமிழில் பாடம் நடத்தினார்” என்றனர் அவரது பழைய மாணவர்கள்!
மாணவர்களை உண்மையாக நேசித்து, கருணையுடன் பழகி, எளிமையாகப் பாடம் நடத்தி அவர்கள் மனத்தில் நிலையான இடம் பிடித்த அந்த ஆசிரியர் நமது வணக்கத்துக்குரியவர். இத்தனை ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் தங்களது ஆசிரியரை மறக்காமல், அவருக்கு நேர்த்திக் கடன் செலுத்திய அந்த மாணவர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள்.
மனப்பாடம் செய்யச் சொல்லித் தருபவர்களாக இல்லாமல் வாழ்வியல் நெறிகளையும் சேர்த்து சொல்லித் தருகிற ஆசிரியர்களால்தான் அடுத்த தலைமுறை நன்கு உருவாகிறது.
“ஆசிரியர்கள் சொல்லித் தருவதால் மாணவர்கள் கற்றுக் கொள்வதில்லை; ஆசிரியர்களைப் பார்த்து அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்” என்றார், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். படித்தவர்களிடம் உயர்ந்த பண்புகளை சமுதாயம் எதிர்பார்க்கிறது; அவர்கள் தவறு செய்தால், அதனை அதிர்ச்சியுடன் பார்க்கிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி, சில மாதங்களாகவே வெளியிடப்படுகிறது. தொலைக்காட்சிகள், இதற்கு ஆதாரமான காட்சிகளை ஒளிபரப்புகின்றன. இதற்குப் பழி தீர்க்கும் வகையில் இந்திய மாணவர்கள் சிலர், நம் நாட்டில் நடந்து கொண்டனர்! இங்கு படிக்க வந்த வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அவர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். “விருந்தினர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள்; வெளிநாட்டு மாணவர்களை நேசிக்கிறோம்; இன வெறுப்பு தவறானது” போன்ற வாசகங்கள் அடங்கிய தாள்களை அனைவரும் கையில் வைத்திருந்தனர். இந்த ‘அன்புப் பழிவாங்கல்’ இன்ப அதிர்ச்சிக்கு ஆளான வெளிநாட்டு மாணவர்களுக்கு அறுசுவை விருந்தும் படைத்தார்கள். இது நடந்தது சன்டிகரில். ‘பஞ்சாப் பல்கலை மாணவர்கள் இந்த அருமையை நிகழ்த்தினார்கள்’ என்று படத்துடன் செய்தி வெளியாயின.
படித்ததால் ஒருவர் பெற்ற திறமை, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அவரைச் சேர்ந்தவர்க்கும், பணமாக, பல்வேறு வசதிகளாகப் பயன்படுகிறது. ஆனால் அவரது பண்பு நலன்கள் சமுதாயத்திற்குப் பயன்படுகிறது.
‘எவரும் தவறு செய்யக்கூடாது,’ என்பதில் உறுதியாக இருந்தவன் பாரதி. ‘படித்தவர்கள் தவறு செய்வார்கள்’ என்ற சிந்தனையே அவனைக் கோபத்துக்குள்ளாக்குகிறது.
‘புதிய கோணங்கி’ என்ற கவிதையில், ‘படிப்பு வளருது; பாவம் தொலையுது,’ என்று ஒரு வரி எழுதுகிறான். படிப்பு வளர வளர பாவங்கள் தொலைய வேண்டும் என்பது அவன் சிந்தனை. இப்படி சிந்திக்கும்போதே ‘படிப்பவனே தவறு செய்தால்….?’ என்ற கவலையும் அவனுக்குள் ஓடியிருக்க வேண்டும். அடுத்த வரிகள் இப்படி விழுகின்றன:
‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்.
போவான், போவான்; ‘ஐயோ’ என்று போவான்.’
நிறைய படித்து, அந்தப் படிப்பு தந்த உயர் பதவியில், அமர்ந்த பின்னர் நேர்மைக்கும் பண்புக்கும் உண்மைக்கும் முரண்பட்டு நடப்பவர்களுக்கு இப்படி சாபமே விடுகிறான் பாரதி.
கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதும், அதைக்காட்டி பணம் சேர்ப்பதும் அல்ல. ஞானத்தைப் பெற்று அடுத்த தலைமுறைக்கு அதை விட்டுச் செல்வது. வாயால் சொல்லி மட்டும் அல்ல; வாழ்ந்து வழி காட்டுவது. எப்படி வாழவேண்டும் என்று பிரசங்கம் செய்பவன் பேச்சாளி எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டுபவன் ஞானி. பேச்சாளன் பேசுவான்; அவனே அதைப் பின்பற்ற மாட்டான். ஆனால், ஞானியின் வாழ்க்கையே செய்தியாகிறது. கல்வி, ஞானத்தைத் தரவேண்டும்.
‘முட்டாள்களுக்கெல்லாம் முட்டாள்’ என்று வள்ளுவன் ஒருவனுக்குப் பட்டம் தருகிறான் – யாருக்குத் தெரியுமா? படிக்காதவனுக்கு அல்ல! நிறைய படித்தவனுக்குத்தான்!
‘ஓதி உணர்ந்தும், பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.’
‘நான் படித்ததெல்லாம் அடுத்தவர்க்குச் சொல்லவும், என் பையை நிரப்பிக் கொள்ளவுமே தவிர, வேறெதற்குமல்ல…..’ என்று நினைப்பவனுக்குத்தான் இந்தப் பட்டம் தருகிறான் வள்ளுவன்.
நினைவு தவறியும், இந்தப் பட்டத்துக்குரியவராக நாம் மாறிவிடலாகாது. ஒழுக்கமான, உழைப்பை நம்புகிற, நம்பிக்கையை இழக்காத, நாட்டின்மேல் அக்கறைகொண்ட இளைஞர்கள் இன்றைய அதிகத் தேவை. வெளிச்சத்தைவிட, இருட்டில்தான் விளக்கின் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே கவிழ்ந்து வரும் இருட்டை விரட்ட விளக்குகள் தயாராக வேண்டும்.
தீப ஒளியாக, அல்லது தீபத்தின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இளைஞர்கள் உருவாக வேண்டும்.
இளைஞர்களின் நம்பிக்கைதான், நாட்டைச் சூழும் இருட்டை விரட்டும் வெளிச்சமாக இருக்கும்!
venkatesh
Thanks for your contents, I need your help regarding a case in high court, please let me know your id or phone no.
thanking you
with regards
venkatesh