– சினேக லதா
வெற்றிகரமான மார்க்கெட்டிங் மந்திரங்கள்
இளம் மார்க்கெட்டிங் அலுவலர்கள் மத்தியில் எஸ்.எம்.எஸ். ஒன்று மின்னல் வேகத்தில் பரிமாறிக் கொள்ளப்படுகிறதாம். நமது நம்பிக்கை வாசகர் ஒருவர், என் எண்ணை எப்படியோ கண்டுபிடித்து எனக்கும் அதனை அனுப்பியிருந்தார்.
ஒரு பார்ட்டியில் அழகான இளம்பெண்ணை சந்திக்கும் ஒருவர், அந்தப் பெண்ணிடம் போய், ”நான் பெரிய பணக்காரன். என்னைத் திருமணம் செய்துகொள்” என்று கேட்டால் அது டைரக்ட் மார்க்கெட்டிங். வேறொரு நண்பரை அனுப்பி, அந்த நண்பர் இவரை சுட்டிக்காட்டி, ”இவர் பெரிய பணக்காரர். இவரைத் திருமணம் செய்துகொள்” என்று சொல்ல வைத்தால் அது அட்வர்டைசிங்!
ஒரு பெண் தானாக வந்து, ”நீங்கள் பெரிய பணக்காரர் என்னை மணந்து கொள்ளுங்கள் என்பது பிராண்டுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் .
தன்னைவிட பலமடங்கு அழகான பெண்ணிடம் அவர் சென்று, ”என்னைத் திருமணம் செய்து கொள்” என்று கேட்க, அந்தப் பெண் ஓங்கி அறைந்தால், அதற்குப் பெயர் என்ன தெரியுமா??
இது விளையாட்டுக்காக சொல்லப்பட்ட விஷயமல்ல. உண்மையிலேயே மார்க்கெட்டிங்கில் பல வகைகள் உண்டு. ஒரு தயாரிப்புக்கு ஒரே விதமான மார்க்கெட்டிங் மட்டும் உதவாது. ஒரு பெரிய மேசையை நகர்த்த நான்குபேர் நான்கு பக்கம் பிடிப்பது மாதிரி விதம்விதமான மார்க்கெட்டிங் உத்திகளால் ஒரு தயாரிப்பை மக்கள் மத்தியில் கொண்டுபோய் வெற்றிகரமாக சேர்த்துவிட முடியும்.
உங்கள் நிறுவனம் பற்றிய விஷயங்களை சதாசர்வ காலமும் யாருக்கும் சொல்வதற்கு கதவு திறந்து காத்திருக்கும் உங்கள் வலைதளத்தின் தரம் உங்கள் தயாரிப்பின் தரத்தைப் போலவே தலை சிறந்ததாக இருப்பது அவசியம்.
சமூக அளவில் சிநேகபாவத்துடன் உங்கள் தயாரிப்பு நடந்து கொள்ளத் துணை செய்கிறீர்களா என்பது முக்கியம். சமூக நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற விஷயங்களில் உங்கள் நிறுவனத்திற்கு இருக்கும் அக்கறையே, நுகர்வோர்களை உங்கள் நிறுவனத்தின் மீது அக்கறை கொள்ளும்படி செய்யும்.
பெரும்பாலானவர்கள் வணிகத்தை மேம்படுத்திக்கொள்ள இத்தகைய சமூக நலப்பணிகளை மேற்கொள்வதும் உண்டு. வணிகத்துக்காக இல்லாவிட்டாலும் சமூகத்துக்காக செய்வதும் உண்டு.
இன்னொரு பக்கம், பிரபலங்களுக்குப் பக்கத்தில் நின்று புகைப்படங்கள் எடுப்பது விளம்பரங்கள் போல் வெளியிடுபவர்கள் பொது விழாக்களுக்குத் தலைமை தாங்கி, நன்கொடை தருபவர்கள் எல்லோருமே ஒருவகையில் தங்கள் வணிக வளர்ச்சிக்கான முயற்சிகளில் இருக்கி றார்கள். இதற்கு விஸிப்லிட்டி மார்க்கெட்டிங் என்று பெயர்.
எந்தச் சூழலிலும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது மார்க்கெட்டிங் வகைகளில் ஒரு முக்கிய முயற்சி. நிறுவனம் சார்ந்த செய்தி மடல்கள் அனுப்புவது, புதிய தயாரிப்புகள் பற்றிய அறிக்கைகள் அனுப்புவது, வாடிக்கையாளர் களுக்கு பிறந்தநாள்- திருமண நாள் வாழ்த்துக்களும் சிறப்பு சலுகைகளும் அனுப்புவது இதெல்லாமே தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கான உத்திகள் தான்.
உள்ளூர் தொலைக்காட்சிகளிலோ, புகழ் பெற்ற டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களின் வாசலிலோ தயாரிப்புகள் பற்றிய செயல்முறை விளக்கம், சாம்பிள் விநியோகம் எல்லாம் நடந்தால் அதுவும் மக்கள் மனங்களில் இடம்பெற ஒரு முக்கியமான வழியாக இருக்கும்.
ஒரு தயாரிப்பு சிறந்தது தானா, அதன் பயன்பாடு எளிதானதுதானா என்பது குறித்தெல்லாம் கருத்துக்கள் நிறுவனத்துக்குள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் அந்த கருத்துக் களுக்கு, உண்மை மதிப்பு வாடிக்கையாளர்கள் சொல்லும் அபிப்பிராயங்களில் இருந்துதான் வருகிறது.
தேர்தல் முடிவுகளும் தேர்வு முடிவுகளும் கணிக்க முடியாதவை என்பது போலவே வாடிக்கையாளர்கள் ஒரு தயாரிப்பின் மீது சொல்லும் தீர்ப்பும் அதிமுக்கியமானது. அசைக்க முடியாதது.
புகழ்பெற்ற வித்வான் ஒருவருடைய இசை மீது ஜமீன்தார் ஒருவருக்கு மிகுந்த பிரியமுண்டு. தன் ஊருக்கு அழைத்து பாடச் சொல்லி, பட்டாடையும் பொன்னாடையும் போர்த்தி, பத்துபவுன் சங்கிலி போட்டு பிரமாதப்படுத்தினார்.
புறப்படும்போது அந்த வித்வான், ”கச்சேரிக்கு பத்தாயிரம் ரூபாய் எங்கே” என்று கேட்டாரே பார்க்கலாம்!! பட்டும் பீதாம்பரமும் பத்துபவுன் சங்கிலியும் நீங்களாக விருப்பப்பட்டுக் கொடுப்பது. ஆனால் வித்வானின் எதிர்பார்ப்பு பத்தாயிரம் ரூபாய் என்றார் அவரின் உதவியாளர்.
வாடிக்கையாளர்களும், இந்த வித்வானைப் போலத்தான். கூடுதல் சிறப்பம்சம் என்று நீங்கள் என்னதான் தந்தாலும், அவர்கள் எதிர்பார்க்கும் சேவையும் பயன்பாடும் முழு நிறைவு தருவதாக இருக்கிறதா என்பதில்தான் அவர்கள் கவனம் இருக்கும்.
ஒரு தயாரிப்பில் என்ன கிடைக்குமென்று வாடிக்கையாளர்கள் யூகிக்கிறார்களோ, அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்பது மார்க்கெட்டிங் உலகின் மகாவாக்கியங்களில் ஒன்று.
எஃப்.எம், எம்.பி.ஓ, வீடியோ ப்ளேயர் மூன்றும் ஒருங்கிணைந்த த்ரீ இன் ஒன் சமாச்சாரத்தை ஒரு வாடிக்கையாளர் வாங்குகிறார். இந்த மூன்றில் எந்த வசதியை அதிகம் பயன் படுத்துவார் என்பது அவருக்குத்தான் தெரியும். இது வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளர் மாறுபடும். மூன்றில் அவர் தேடுகிற வசதி நன்கு செயல்பட்டால் சிக்கலில்லை. அதைத்தவிர மற்ற இரண்டும் நன்றாக செயல்பட்டாலும் எந்தப் பயனும் இல்லை.
செய்து முடிக்கப்பட்ட ஒரு தயாரிப்பின் தலைவிதியை சந்தை தீர்மானிக்கிறது. ஆனால், எல்லாவகையிலும் சிறந்து விளங்கும் தயாரிப்போ சந்தையையே தீர்மானிக்கிறது.
rasa.ganesan
ஒரு தயாரிப்பில் என்ன கிடைக்குமென்று வாடிக்கையாளர்கள் யூகிக்கிறார்களோ, அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்பது மார்க்கெட்டிங் உலகின் மகாவாக்கியங்களில் ஒன்று.
செய்து முடிக்கப்பட்ட ஒரு தயாரிப்பின் தலைவிதியை சந்தை தீர்மானிக்கிறது. ஆனால், எல்லாவகையிலும் சிறந்து விளங்கும் தயாரிப்போ சந்தையையே தீர்மானிக்கிறது.