நிலை உயரும்போது..

-வழக்கறிஞர் த. இராமலிங்கம்

கிராமத்துக் கதைகளை எழுதுவதில் வல்லவரான பெரியவர் திரு.கி.ராஜ நாராயணன் அவர்களின் எழுத்தில், கரிசல் மண்ணின் மணம் ததும்பும். அத்துடன், அவற்றில் மிக ஆழமான செய்திகளும் கிடைக்கும். கொஞ்சம் அதிகாரம் கிடைத்தாலும் மனிதன் அதை வைத்து எப்படி ஆடுகின்றான் என்பதனைச் சொல்லும் கதை இது.

ஏதோ ஒரு சின்ன பிரச்சனையில், தேநீர்க் கடை வைத்திருந்த ஒருவனை ஒரு போலீஸ்காரன் தனது போலீஸ் லத்தியில் செம்மையாக அடித்து விட்டான். இத்தனைக்கும், இருவருக்கும் பழக்கம் தான்! அடுத்தநாள் தேநீர்க் கடைக்கு வந்தான் போலீஸ்காரன். தனது தொப்பியைக் கழற்றி வைத்து விட்டு, லத்தியையும் வைத்து விட்டு, ‘டீ கொடுப்பா’ என்று சொல்லி உட்கார்ந்தான்.

தேநீர் கொடுத்த கடைக் காரன், போலீஸ்காரனிடம் ‘என்னப்பா… நேத்து என்னை அப்படி அடிச்சுட்டீயே…’ என்றான். ‘அட போப்பா…. நானா அடிச்சேன்? இதோ இந்தத் தொப்பிதாம்பா அடிச்சது…’ என்றான் போலீஸ்காரன்.

தேநீர்க் கடைக்காரன், அந்தத் தொப்பியை எடுத்து தன் தலையில் வைத்தான். லத்தியைக் கையில் எடுத்து போலீஸ்காரனை விளாசித் தள்ளினான். பின்னர், சட்டென நிறுத்தி, தொப்பியைக் கழற்றிக் கீழே வைத்துவிட்டு, ‘அட… ஆமாம்.. நீ சொன்னது சரிதாம்பா… தொப்பி இந்த அடி அடிக்குது…’ என்றான்.

அதிகாரம், அது எவ்வளவு கொஞ்சமாக இருந்தாலும் அதற்குத் தக்க ஆணவம் மனிதனுக்கு மண்டையில் ஏறிவிடுகின்றது என்பதை இக்கதை நையாண்டியுடன் சொல்கிறது.

மிகச்சமீபத்தில், வலைதளத்தில் படிக்க நேர்ந்த ஒரு செய்தி, இந்தக் கதை பொய்யல்ல என்று காட்டியது.

மிகப் புகழ்பெற்ற இந்தியாவின் வங்கி ஒன்றின் தலைவர், அலுவல் தொடர்பாக மும்பை விமான நிலையத்தில் ஒரு நாள் இரவு வந்து இறங்கினார். அந்நகரைச் சேர்ந்த வங்கியின் உயர் அதிகாரி, தன்னுடைய உதவியாளருடன் அவரை வரவேற்கக் காத்திருந்தார். வங்கித் தலைவரை அழைத்துப்போக, வண்டி தயாராக நின்றிருந்தது.

குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த வண்டி ஆதலினால், ஓட்டுநர் வண்டியின் சாவியை எடுக்காமலே இறங்கி, வங்கியின் தலைவர் கொண்டு வந்திருந்த பெட்டியினை வாங்கி, வண்டியின் பின்னால் வைத்து மூடினார். எதிர்பாராவிதமாக, வண்டியின் ஓட்டுநர் பக்கக்கதவும் தானே மூடிக் கொண்டது; சாவி, உள்ளேயே சிக்கிவிட்டது. வண்டியில் ஏறவும் முடியவில்லை. பெட்டியை வெளியே எடுக்கவும் முடியவில்லை.

மிகவும் பதற்றமடைந்த வங்கியின் உள்ளூர் அதிகாரி, மாற்று வண்டியை ஏற்பாடு செய்து தங்க வேண்டிய இடத்திற்கு வங்கியின் தலைவரை அனுப்பி வைத்தார். அவரது உடனடி தேவைக்காக, இரண்டு புது வேட்டிகளும் துண்டுகளும் வாங்கிக் கொடுத்தனுப்பினார்.

இந்த எதிர்பாரா நிகழ்வுகளால் வங்கித் தலைவர் விமான நிலையத்தில் 25 மணித்துளிகள் காத்திருக்கும்படி ஆயிற்று.

உள்ளூர் வங்கி அதிகாரி, அங்கிங்கு அலைந்து மாற்றுச்சாவி கொண்டு வந்து, வண்டியைத் திறந்து, வங்கித் தலைவரின் பெட்டியைக் கொண்டு போய் அவர் தங்கியிருந்த இடத்தில், நள்ளிரவு ஒரு மணிக்குச் சேர்த்துவிட்டார். தனது உடனடி நடவடிக்கைகளுக்கு வங்கித் தலைவரின் பாராட்டு கிடைக்கும் என்ற எண்ணிக்கொண்டு வீட்டிற்குப் போனாரோ என்னவோ…

‘வங்கித் தலைவரை விமான நிலையத்தில் வரவேற்றுத் தங்குமிடத்திற்கு அனுப்பி வைக்க முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை. விமான நிலையத்தில் காக்க வைத்து விட்டார்’ என்று காரணம் சொல்லி, வங்கித் தலைவரால் அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த அதிகார துஷ்பிரயோகம், அடுத்த நாள் மும்பையின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாயிற்று. சற்றே சங்கடமான வங்கித் தலைவர், அந்த அதிகாரியின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்தார்.

ஆனால், மும்பையில் இருந்து அவரை சென்னைக்கு இடமாற்றம் செய்தார். அத்துடன், இந்த நிகழ்வு தொடர்பாக அவர்மீது விசாரணைக்கும் உத்தரவிட்டார். வங்கி ஊழியர் களிடையே பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியது.

பதவி, சிலரை மனிதர்கள் என்னும் நிலையிலிருந்து எப்படியெல்லாம் இறக்கி விடுகின்றது……

‘அரம்போலும் கூர்மையரேனும், மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர்’ என்கிறது குறள்.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து, அதே வலைதளத்தில் வேறு ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது.

நமது முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள், இந்திய தலைமை அமைச்சருக்கு, அறிவியல் ஆலோசகராய் இருந்த நேரம். அந்தப் பதவி, மத்திய அமைச்சருக்கு ஈடான பதவி. அதுமட்டுமின்றி, அப்போதே அவருக்கு மிக முக்கியமானவர்களுக்கான பாதுகாப்பு அளிக்கப் பட்டிருந்தது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தின் பழைய மாணவரான அவர், அக்கல்வி நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையின் மறு புறத்தில் அந்தக் கல்லூரி இருந்தது. இடையில் தொடர் வண்டிகள் செல்லும் இருப்புப்பாதை இருந்தது. அவரது வண்டி சென்ற நேரத்தில், அந்த இருப்புப்பாதையின் கதவுகள் அடைக்கப் பட்டிருந்தன. இன்னும் குறைந்தது 30 நிமிடங்கள் கதவு திறக்கப்படாது என்று அங்கிருந்த ஊழியர்கள் சொன்னார்கள்.

மிக முக்கிய பாதுகாப்புடன் இருப்பவரை, அந்த இடத்தில் 30 நிமிடங்கள் நிறுத்தி வைப்பது நல்லதல்ல என்று எண்ணிய அவரது பாது காவலர்கள், இருப்புப்பாதையில் வந்து கொண்டிருக்கும் வண்டிகளை அங்கங்கே நிறுத்தி, சில நிமிடங்கள் கதவைத் திறந்து விட வாய்ப்பு இருக்கின்றதா என்று ரயில்வே அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்கள்.

ஆனால் திரு.அப்துல்கலாம், அது முறை யற்றது என்று சொல்லிவிட்டார். இருப்புப் பாதையை கடக்க ஒரு நடை மேம்பாலம் அருகில் இருந்தது. திரு.கலாம், வண்டியில் இருந்து இறங்கினார். கைபேசியில், அந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வரை அழைத்து, நடை மேம் பாலத்தின் மறுபுறம் ஒரு வண்டியைக் கொண்டுவரச் சொன்னார். நடந்து சென்று மேம்பாலத்தில் ஏறத் தொடங்கினார். பாதுகாவலர்களும் பொது மக்களுக்கும் கூடவர, மேம்பாலத்தைச் சில நிமிடங்களில் கடந்து, அங்கு வந்திருந்த வேறு வண்டியில் நிகழ்ச்சிக்குச் சென்றார்.

முதல் செய்தியைப் படித்தபோது, ‘நிலை மாறினால் குணம் மாறுவான்’ என்னும் கண்ணதாசன் வரிகளும், திரு. கலாம் தொடர்பான செய்தியைப் படித்தபோது, ‘நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்’ என்னும் வரிகளும் நினைவிற்கு வந்தன.

‘எவன் ஒருவன் அடங்கி நடக்கின்றானோ, அவனே ஆளத்தகுந்தவன்’ என்கின்றார் விவேகானந்தர்.

வெறும் அறிவு ஆபத்தானது; ஆணவத்தை வளர்ப்பது. கொண்டவனையும் சார்ந்தவர்களையும் அது துயரத்திற்கே ஆட்படுத்துகின்றது. அறிவின் ஒரு பக்கம் அன்பும், மறுபக்கம் பண்பும் கை கோர்த்து நடக்கும்போதுதான், அதன் உண்மையான பயன் வெளிப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *