இந்த மாதம் ரமேஷ் பிரபா
(இன்று புகழின்
உச்சியைத்
தொட்டவர்களும்
தங்களுக்கான நம்பிக்கையை
எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள்.
அந்த அனுபவங்கள் குறித்து
உதவி ஆசிரியர்
கனகலட்சுமியுடன்
உரையாடுகிறார்கள்
பிரபலங்கள்)
நான் எனது வாழ்க்கையில் நம்பிக்கை பெற்ற நொடிகளைப் பற்றி பேசுவதை விட மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டிய நொடிகளை பேசுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம் எனது எழுத்தையும், பேச்சையும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நம்பிக்கையூட்ட மட்டுமே பயன்படுத்துவது என்பதை கொள்கையாக வைத்திருப்பதால் அது உண்மையிலேயே நம்பிக்கை ஊட்டுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னுடைய மேடைப்பேச்சு அனுபவங்கள் என்பது பெரும்பாலும் தொலைக்காட்சி பிரபலத்திற்கு பின்பே நடந்த ஒன்று. ஆனால், தொலைக்காட்சி அறிமுகத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதத் தொடங்கிவிட்டதால் திட்டமிட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய விஷயங்களையே தொடர்ந்து எழுதிவந்தேன். அதிலும் குறிப்பாக ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து அப்போது வெளிவந்த ஜுனியர் போஸ்ட் பத்திரிகையில் நான் தொடராக எழுதி பிறகு நூலாக வெளிவந்த, ”வேலை உங்களுக்கே” பற்றித்தான் இப்போது நான் இங்கு சொல்லப் போகிறேன்.
இன்று வேலைக்கான இண்டர்வியூவுக்கு செல்பவர்களுக்கு வழிகாட்ட ஏராளமான பயிற்சி நிறுவனங்களும், வல்லுநர்களும் உள்ளனர். ஆனால், நான் இந்த தொடரை எழுதிய சுமார் 25 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் இதற்கு நல்ல வரவேற்பு மற்றும் தேவை இரண்டுமே இருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது.
தொடர்ந்து எழுத்தின்மீது கவனம் செலுத்தி வந்த என்னை தொலைக்காட்சி பிரவேசம் வேறு ஒரு திசையில் இட்டுச் சென்றது. பத்திரிகையைவிட தொலைக்காட்சி புகழ் சற்று அதிகம் என்று தோன்றியதாலும் தொலைக் காட்சியில் அதிகநேரம் செலவிட்டதாலும் இடையில் சில ஆண்டுகள் எழுதுவதையே நிறுத்தி விட்டேன். அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் இன்றுவரை நான் எழுத்தை கை விடாமல் இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
சன் டிவியின் முதல்நாள் முதல் நிகழ்ச்சியின் முதல் அறிவிப்பாளராக நான் நடத்திய வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக இருந்த காலகட்டம் அது. சென்னையில் மட்டுமே நடந்து கொண்டிருந்த வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியை வரவேற்பின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக எடுத்துச் சென்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு அரங்கத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் ஒளிப்பதிவு செய்தோம். அப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒளிப் பதிவு முடிந்ததும் போட்டியாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் வந்திருப்பவர்களில் பலர் என்னிடத்தில் ஆட்டோகிராப் வாங்குவதுண்டு.
ஒருமுறை திருச்சியில் இதேமாதிரி ஒளிப்பதிவு முடிந்தவுடன் ஆட்டோகிராப் வைபவம் ஆரம்பமானது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆட்டோகிராப் வாங்க ஆசைப்படுகிறவர்களை க்யூ வரிசையில் நிறுத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு இளைஞர் மட்டும் அந்த வரிசையில் நிற்காமல் தனியே ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
ஒருங்கிணைப்பாளர்கள் அவரை வரிசையில் வரச்சொல்லி கேட்டுக்கொண்ட பிறகும்கூட மறுத்துவிட்டு தனியாகவே நின்று கொண்டிருந்தார். நான் அத்தனை பேருக்கும் ஆட்டோகிராப் போட்டு முடிக்கும்வரை பொறுமையாக காத்திருந்த அந்த இளைஞர் பிறகு என் அருகே வந்து, ”அண்ணா! நான் ஆட்டோகிராப் வாங்க வரலை. உங்களுக்கு நன்றி சொல்லிட்டு போகத்தான் வந்தேன். ஏன்னா இன்னிக்கு உயிரோடு இருக்கிறதுக்கே நீங்கதான் காரணம்” என்று சொல்ல, எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு அந்த இளைஞரே தொடர்ந்தார். ”நான் பட்டப்படிப்பு முடிச்சி மூணு வருஷம் ஆகுது. இதுவரைக்கும் இருபதுக்கும் மேற்பட்ட இண்டர் வியூகளுக்கு போயிட்டு வந்துட்டேன்.
ஆனா, எதிலுமே வேலை கிடைக்கலை. வீட்டுலேயும் என்ன தண்டச்சோறு மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டுதா எனக்கே தோணுச்சி. இந்த நேரத்துலதான் விரக்தியின் உச்சத்துல தற்கொலை செஞ்சுகலாம்ன்னு கூட அடிக்கடி நினைப்பு வரும். இதுக்கு நடுவுல ஒரு நாள் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற பப்ளிக் லைப்ரரிக்கு போயிருந்தேன். அப்ப எதேச்சையா உங்களோட ‘வேலை உங்களுக்கே’ புத்தகம் கண்ணில் பட்டது. எடுத்து ஒரு சில பக்கங்கள் படிக்க ஆரம்பிச்சதுமே எனக்கு சம்பந்தமானதா இருந்ததால ஒரே மூச்சில் மொத்த புத்தகத்தையும் படித்து முடிச்சேன்.
இண்டர்வியூ சம்பந்தமா எதையெல்லாம் நாம சாதாரண விஷயம்னு நினைச்சி அக்கறை காட்டாம இருக்கோமோ, அதெல்லாம் அக்கறை காட்ட வேண்டிய பெரிய விஷயம்னு அந்த புத்தகம் மூலமா புரிஞ்சுகிட்டேன். அதேபோல, நம்மகிட்ட இருக்கிற குறைகளை ஆராய்ந்து திருத்திக்காம எல்லாருமே ரெக்கமன்டேஷன் மூலமாதான் வேலைக்கு எடுக்கிறாங்க. அப்படின்னு பொத்தாம் பொதுவா குற்றம் சாட்டறது எந்தளவுக்கு மடத்தனம் அப்படிங்கிறதையும் புரிஞ்சுகிட்டேன். அதுக்கு பிறகு திரும்ப இண்டர்வியூவுக்கு போக ஆரம்பிச்சேன். நாலாவது இண்டர்வியூவிலேயே எனக்கு வேலை கிடைச்சிடுச்சி. இன்னிக்கு நல்ல நிலையில் இருக்கேன். நன்றி அண்ணா” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
அந்த இளைஞர் சொன்னது எனக்கு ஒருபுறம் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தாலும் இன்னொரு புறம் என் கண்ணை திறந்தது போல் இருந்தது. வரிசையில் நின்று வாங்கிய நூற்றுக்கணக்கான ஆட்டோகிராப் களை விட இந்த ஒரு நன்றியே பெரிது என்பதை அப்போதே உணர்ந்தேன். நடுவில் சில ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் இருந்த எழுத்துப்பணியை உடனேயே மீண்டும் தொடங்கினேன்.
எத்தனையோ கடுமையான வேலைகளுக்கு மத்தியிலும் இன்றுவரை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டும் நம்பிக்கை யூட்டும் எனது எழுத்துப்பணி தொடர்கிறது.
நம்பிக்கையூட்டும் பேச்சுகளுக்கு மட்டுமல்ல எழுத்துக்கும்கூட உயிரை காப்பாற்றும் சக்தி இருக்கிறது எனும்போது அதை தொடர்ந்து செய்வதுதானே சரி.
Leave a Reply