விஜயா பதிப்பகம் திரு. வேலாயுதம் நேர்காணல்
நேர்காணல்: கனகலஷ்மி
இன்று கோவையின் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலை ஒவ்வொரு குடும்பமும் தயாரிக்கிறபோது அரிசி, பருப்பு என்ற வரிசையில் புத்தகத்தையும் சேர்த்த பெருமை, ”அறிவுலகவாதிகளின் அட்சயபாத்திரம்” எனும் கோவை விஜயா பதிப்பகத்திற்கு உண்டு.
புத்தகங்கள் ஒவ்வொரு முறை படிக்கிறபோதும் பல புதிய அனுபவங்களை தந்து கொண்டேயிருக்கும். அதுபோலத்தான் திரு. வேலாயுதம் அவர்களும். தமிழகத்தின் முக்கியமான ஊடகங்கள் அனைத்தும் இவரை ஏராளமான முறை பேட்டி கண்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் கூறும் செய்திகள், புத்தகங்களை போலவே பல புதிய அனுபவங்களை நமக்குத் தருகிறது.
உங்களைப் பற்றி…
மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த குக்கிராமம் உலகநாதபுரம். விவசாய குடும்பம். வசதியானவர்கள், பலருக்கும் வேலை கொடுக்கக் கூடியவர்கள் என்று அறியப்பட்ட குலம் எங்களுடையது.
ஆனால் எங்கள் நிலையோ தலைகீழ். கொடுமையான வறுமை… அப்பா பர்மாவில் ரங்கூனில் இருந்தார். அம்மாதான் எங்களை வளர்த்தார். இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள், இருந்த சொற்ப நிலத்தில் போதிய வருவாய் இல்லை. எங்களை வளர்க்க அம்மா பட்ட துன்பம் சொல்லிமாளாது.
காமராஜர் இலவச கல்வியும் அப்போது இல்லை. அப்போதைய எட்டாம் வகுப்பு உநகஇ வரை படித்தேன். அரசு தேர்வு. நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தொடர்ந்து படிக்க ஆறுரூபாய் கட்ட வேண்டும். படிக்க முடியவில்லை. தலைமையாசிரியர் ராமையா வீட்டிற்கே வந்து என் தாயிடம், ”உங்க பையனை மேலும் படிக்க வைங்க” என்று சொன்னார். என் அம்மா கண்ணீரை மட்டும் பதிலாக தந்து அனுப்பினார்.
புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் எப்படி வந்தது?
அம்மாவும், பாட்டியும் தினசரி கதைகள் சொல்லி தூங்க வைப்பார்கள். குடும்பத்தில் கதை கேட்கும் ஆர்வம் எனக்கு மட்டும் அதிகம் எனச் சொல்வார்கள்.
இந்த ஆர்வத்தில் தினமும் அப்பத்தா ஏதேனும் தின்பண்டம் வாங்க தரும் அரையணா, காலணாவில் நான் சுவைத்ததெல்லாம் மிட்டாய், கரும்பு, கல்கண்டு போன்ற குழந்தை பத்திரிகைகள் தான்.
பள்ளி சென்று வர மொத்தம் 6 மைல் தூரம் நடக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் நடந்து தான் செல்வோம். அலுப்பு தெரியாமல் இருக்க இன்னும் ஏராளமான குழந்தை பத்திரிகைகள் படிப்போம். டமாரம், டிங்டாங், ஜில் ஜில், அம்புலி மாமா என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
ஒருவர் படிக்க மற்றொருவர் கேட்டு கொண்டே செல்வோம். இப்படித்தான் படிக்கும் ஆர்வம் துவங்கியது.
பள்ளிப்படிப்புக்கு பின் உங்கள் இளமை காலம் குறித்து…
உறவினர் ஒருவர் மூலமாக மணப்பாறையில் ஒரு ஜவுளிக்கடையில் வேலையில் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது 14. ஜவுளித்துறையில் வேலை பார்த்தாலும் புத்தகங்கள் மீதான காதல் எனக்கு குறைந்ததே இல்லை. வேலை செய்து மிஞ்சும் நேரத்தில் அந்த கடையின் முதலாளி குழந்தைகளுக்கு கணக்கு சொல்லிக் கொடுப்பேன். அதில் சில அணாக்கள் கிடைக்கும்.
மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரும் ”லிப்கோ” புத்தக வண்டி எங்கள் ஊருக்கு வரும். அந்த புத்தக வண்டி வரும் பொழுது நான்தான் முதல் ஆளாக வண்டிக்குள் பாய்ந்தோடுவேன். அப்போதெல்லாம் புத்தக விலை 1 ரூ முதல் 1.25 வரைதான் இருந்தது.
மர்ம மனிதன், சங்கர் லால், கருகிய கடிதம், இரவு மணி 2, சிரஞ்சீவி, மேதாவின் துப்பறியும் நாவல்கள் என சேமித்த பணத்திலெல்லாம் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன்.
உறவினர் ஒருவர் மூலமாக மு.வ.வின் படைப்புகள் எனக்கு அறிமுகமானது. இதுதான் நான் பத்திரிகைகளிலிருந்து இலக்கிய தளத்திற்குள் வந்த முதல் அனுபவம்.
கோவைக்கு எப்படி வந்தீர்கள். வறுமையும் வறட்சியும் கொண்ட விவசாய பின்புலத்திலிருந்து வந்து உங்களால் புத்தகத் துறையின் அறிமுகங்கள் எப்படி சாத்தியப்பட்டது?
என் மூத்த சகோதரர் தேனப்பன் கோவையில் இருந்தார். அவர் இங்கே ஒரு வேலையை ஏற்பாடு செய்தார். இருவரும் ஒரே ஊரில் இருக்கலாம் எனக் கருதி கோவை வந்தேன். இங்கே ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்தேன். 15 ஆண்டுகளாக அந்த அங்காடியில் இருந்தேன். சில நேரம் முதலாளியாக, சில நேரம் கணக்குப்பிள்ளையாக, இன்னும் சில நேரங்களில் கூட்டிப்பெருக்குவதும் நான்தான். அங்கேதான் சிற்பி, புவியரசு, மு.மேத்தா, அக்னிபுத்திரன் இன்னும் பல ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது.
முதலில் தீபம் மற்றும் கணையாழி பத்திரிகைகளை ஏஜென்சி எடுத்து விற்பனை செய்தேன்.
பல்பொருள் அங்காடியில் இருக்கும்போதே மு.மேத்தாவின் ”கண்ணீர் பூக்கள்”, நா.பா.வின் ”மணிவண்ணன் கதைகள்”, புதிய பார்வை, தேவைகளும் சில சொற்களும் என்று தொடர்ந்து நூல்களை பதிப்பித்தேன். வேலை நிமித்தமாக வெளியூர் செல்கிறபோதெல்லாம் புத்தகங்களுக் கான தேடல் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும்.
என்னை போன்றே பலர் இருக்கிறார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தபோது புத்தகத்திற்கென்றே ஒரு தனி அங்காடி திறக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
உங்களுக்கே உரிய தனித்துவத்தோடு ஒரு புத்தக விற்பனையாளராக உங்கள் வாழ்க்கையை துவங்கிய அனுபவத்தை சொல்லுங்கள்?
நான் அங்காடியில் பணிபுரிந்தபோது பதிப்பித்த நூல்கள் எனக்கு பொருளாதார லாபத்தை தரவில்லை. ஆனால் எதையோ சாதிக்க முடியும் என்று மட்டும் உறுதியாக நம்பினேன். என் அம்மாவும் அண்ணனும் அடிக்கடி சொல்வார்கள். ”இவன் பெரியாளா வருவான்” என்று.
ஒருமுறை கோவையில் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற நாவல் வெளியீட்டு விழா நடந்தது. நூலின் விற்பனையை நானும் என் நண்பர்களும் செய்தோம். அதில் அதிகபட்சமாக 140 புத்தகங்கள் விற்று சாதனை செய்தன.
இதை பாராட்டி அந்நூலை பதிப்பித்த கன.முத்தையா எங்களுக்கு உணவு விடுதி ஒன்றில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இத்தனை புத்தகங்கள் விற்றதற்கான கமிஷன் பணத்தை என் கையில் கொடுத்து இதையே ஒரு தொழிலாக செய்யுங்களேன் என்றார்.
முதலில் ஒரு பல்பொருள் அங்காடி துவங்கி ஒரு ஓரமாகத்தான் புத்தக விற்பனையை துவங்கினேன். ஆனால் அந்த தேநீர் விருந்தில் எனக்குள் எழுந்த உத்வேகம்தான் இன்றைய விஜயா பதிப்பகம்.
உங்கள் வெற்றிக்கு உங்களை செதுக்கிய சில சம்பவங்கள்?
இளமைக்காலம் முழுவதும் ஏக்கத்தின் மொத்த உருவமாகவே வளர்ந்தேன். எங்கள் வீட்டில் மட்டுமல்ல. ஊரிலேயே மின்சாரம் இருக்காது.
பெரும்பாலும் கூழ்தான். இட்லியும் அரிசியும் கிடைக்கப் பெற்றால் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வோம். டூத் பிரஸ், டூத் பேஸ்ட், செருப்பு இவை யெல்லாம் எனக்கு எட்டாத உயரத்திலேயே இருந்தது.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை ரயிலை பார்த்ததே இல்லை. அதை பார்க்க வேண்டும் என்பது என் கனவு. ஒருநாள் 18 மைல் கடந்து மதுரை வந்து ரயிலை ஆசை தீர பார்த்து ரசித்தேன்.
மணப்பாறைக்கு வேலையில் சேர்ந்தபின் என்னை முதன்முறையாக ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை என் ஊரில் கொண்டு காட்டியபோது அனைவரும் பார்த்த அதிசயப்பார்வை இன்னும் எனக்கு நினைவு உண்டு.
எங்கள் குலமக்கள் கடினவேலைக்கு செல்ல மாட்டார்கள். ஆனால் எங்கள் நிலை அப்படி இருக்கவில்லை. நாங்கள் ஊரில் செய்யாத வேலையில்லை. மொத்த குடும்பமும் சேர்ந்து உழைத்தோம்.
எங்கள் ஊரில் புன்செய் நிலங்களில் வேர்க்கடலை பயிரிட்டு செடிகளை பிடுங்கும் போது முற்றிய கடலைகளை ஆய்ந்து குவிப்பார்கள். கூலி, சம்பளம் எல்லாம் இல்லை. எத்தனை குவிக்கிறோமோ அதில் ஆறில் ஒரு பங்கு கூலியாக கொடுப்பார்கள்.
ஆண் பிள்ளைகள் மண் வெட்டியால் செடிகளை பறித்து போட்டுக்கொண்டே போவோம். பெண்கள் பறித்து போட்ட செடிகளை ஒரு இடத்தில் கொண்டு குவிப்பார்கள்.
மற்றவர்கள் கடலையை பிடுங்கி பிடுங்கி சேர்ப்பார்கள். இதுபோல பல குடும்பங்கள் வேலை செய்யும்.
அன்று மாலை கணக்கு பார்த்தபோது எங்கள் குடும்பம்தான் அதிகம் குவித்திருந்தோம். அப்போது அனைவரும் எங்கள் குலப்பெயரை சொல்லி ”இந்த பிள்ளைக இப்படி பாடு படுதுகளே” என்று வியந்து பார்த்தார்கள். அன்று ஏற்பட்ட மகிழ்ச்சி எனக்கு ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் கொடுத்தாலும் ஈடாகாது. அன்று மாலை அந்த வேர்க்கடலையை அவித்து உண்டோம். அந்த சம்பவம், இன்னும் பல வெற்றிகளை குவிக்க என்னை உந்திக்கொண்டே இருக்கிறது.
ஊடகம் மற்றும் தொழில் நுட்பம் விரிவாகி கொண்டேயிருக்கிற காலத்தில் புத்தகங்கள் ஏன் படிக்க வேண்டும்?
ஜெயகாந்தன் சொல்வார், புத்தகங்கள் வழியாக படைப்பாளியின் இதயத்தை பார்க்கி றீர்கள் என்று. தறிகெட்டு எல்லா திசைகளிலும் மனம் ஓடும்போது அவற்றிக்கு ஒரு முட்டுக்கட்டை புத்தகங்கள். புத்தகம் படிக்கிற பழக்கம் வந்தால் நாட்டில் காவல்துறைக்கு வேலையே இருக்காது. ஒழுக்கம், நற்பண்புகள் அனைத்தையும் கற்றுத்தரும் ஆசான் புத்தகம்தான்.
வாசகராக உங்கள் அனுபவம்…
நான் சிறிய வயதில் படித்த புத்தகங்கள் எதுவுமே புதியதல்ல. யாரோ பயன்படுத்தியதும், பழையதும்தான் அப்போது எனக்கு கிடைக்கும். என் வகுப்பு ஆசிரியர் சில புதிய புத்தகங்களை படிப்பார். அப்போது அங்கேயே நின்று கொண்டு அவரையே பார்ப்பேன். ஏன் என்றால் எனக்கு புதிய புத்தகத்தின் வாசனை அவ்வளவு பிடிக்கும்.
அந்த புதிய புத்தக மணம் எனக்கு அவ்வளவு லயிப்பை ஏற்படுத்தும். என்னை ஆசிரியர் போடா என்று விரட்டுவார். அந்த வயதில் புத்தக வாசத்திற்காக நிற்கிறேன் என்று எனக்கு சொல்லத்தெரியாது. இன்று என் படுக்கையறை, குளியலறை, தொழில், வாழ்க்கை என அனைத்துமே புத்தகமாக இருக்கிறது.
புத்தகத்திற்கும் எனக்கும் ஏதோ ஒரு நெருக்கம் இருப்பதாகவே உணர்கிறேன். இது சாத்தியப்பட ஒரே காரணம், ஈடுபாடு, ஈடுபாடு மட்டும்தான். நமக்கு என்ன தேவையோ, நமக்கு எதில் விருப்பமோ, அதன்மீதான உண்மையான ஈடுபாடும், கடின உழைப்பும் எப்பேர்ப்பட்ட கனவுகளையும் நம் அருகில் கொண்டுவரும்.
இன்றைய வாசகர்கள் குறித்த உங்கள் பார்வை?
வாசகர்களிடமிருக்கும் தேடல் தீவிரமடைந்து கொண்டேதான் இருக்கிறது. புதிய புதிய வாசகர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். முன்பை விடவும் அவர்களின் இலக்கியத்தின் மீதான தேடல் அதிகரித்திருப்பதை ஒரு விற்பனையாளனாக உணர்கிறேன்.
கதை புத்தகம் என்றளவில் மட்டுமில்லாமல் இளைஞர்கள் சுயமுன்னேற்றத்திற்கான புத்தகங்களை வாங்குகிறார்கள். வயதுக்கும் ரசனைக்கும் தகுந்தாற்போல் ஆன்மீகம், ஜோதிடம், தியானம், சமையல், மருத்துவம், கம்ப்யூட்டர் என ஏராளமான பிரிவுகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.
உங்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்?
ஜெயகாந்தன், மு.வ., பாரதி என சொல்லிக் கொண்டே போகலாம். குறிப்பாக என் அம்மா சௌந்தரம்.
1959இல் கல்கி இதழில் குறிஞ்சி என்ற நாவல் தொடராய் வந்து கொண்டிருந்த நேரம். ஒருமுறை கடையிலிருந்து பகல் உணவுக்காக வீட்டிற்கு சென்றேன். அன்று சமையல் இல்லை. அம்மா மிகவும் வருத்தமாக இருந்தார். காரணம் கேட்ட போது சொன்னார். அந்த நாவலில் வரும் நாயகன் ”அரவிந்தன்” இறந்து போய்விட்டான். நாவலில் வரும் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அன்பு காட்டி வருந்திக்கொண்டிருந்த அவர் அன்புதான், என் வாழ்க்கை முழுவதும் என்னை வழி நடத்துகிறது.
உங்கள் வளர்ச்சியின் அடித்தளம்…
என் வளர்ச்சிக்கு முழுமையான காரணம் வாசகர்கள். வாசகர்கள் மட்டும்தான். என் அனுபவத்தில் எத்தனையோ வகையான வாசகர்களை பார்த்திருக்கிறேன். எண்ணற்ற புத்தகங்கள் வாங்கும்போது கழிவு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்கிற வாசகர்கள்.
புத்தகம் வாங்கியது போக மீதம் இருக்கிற சில்லறையை கூட வேண்டாம் என்று சொல்கிற வாசகர்கள், நாங்கள் கொடுக்கும் புத்தகத்தில் ஏதாவது டேமேஜ் (ஈஹம்ஹஞ்ங்) இருந்தால்கூட அதை மாற்றிக்கொள்ள தயங்கி புதிதாக புத்தகம் வாங்குகிறவர்கள். இன்னும் சிலர் புத்தகம் வாங்க வரும்போது ஊழியர்களுக்கு, எங்களுக்கு இனிப்புகளெல்லாம் வாங்கி வருவார்கள்.
மொத்தத்தில் புத்தகங்களுக்கு மனிதனை மாற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அதுவே என் வளர்ச்சிக்கு அடித்தளம்.
உங்கள் வருங்கால கனவு…
சிறந்த படைப்புகளை கொடுக்கும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். இன்று நல்ல புத்தகங்களை பதிப்பிக்க ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல வாசகர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் விற்பனையாளர்கள்தான் இல்லை. என் கனவு வருங்காலத்தில் இந்த துறைக்கென ஒருநாள் அல்லது இரண்டு நாள் பயிலரங்கு நடத்த வேண்டும். இந்த தொழிலின் மேன்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். சமுதாயத்தில் இந்த துறையின் பங்களிப்பு என்ன என்பது பற்றி உலகின் தலைசிறந்த நிபுணர்களை கூட்டி வந்து இதை நடத்த வேண்டும். கோவை மட்டுமல்லாமல் இதுபோல் தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் அதை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு உங்கள் கருத்து…
வாய்ப்புகள் கொட்டி கிடக்கிறது. சுற்றி இருப்பவர்கள் அனைவரும் மேன்மையான மனிதர்கள். நான் சிதம்பரம் – கோ நடத்தி வந்த போது எனக்கு கடனுக்கு புத்தகங்களை வானதி பதிப்பகம் வழங்கி வந்தது. 6 மாதங்களுக்கு பின் நான் கணக்கு பார்த்தபோது, நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாய் சொச்சம் கணக்கிலிருந்து விடுபட்டு போயிருந்தது.
அதை காசோலை எடுத்து வானதி பதிப்பகம் திருநாவுக் கரசர் அவர்களுக்கு அனுப்பினேன். அவர் மகிழ்ந்து போய்விட்டார். இவ்வளவு நேர்மையாக இவ்வளவு நாட்களுக்குப் பின் பணத்தை சரியாக அனுப்பி இருக்கிறேன் என்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
அவர் மகிழ்ந்ததோடு மட்டும் இல்லாமல் அவருக்கு தெரிந்த பதிப்பகங்கள் அனைத்தையும் அழைத்து எனக்கு புத்தகங்களை கடனில் வழங்க பரிந்துரைத்தார். எங்கள் வெற்றிக்கு வித்திட்டார். சந்தர்ப்பங்கள் காற்றில் மிதந்துகொண்டே இருக்கின்றன. அதை தவறாமல் சுவாசிப்பவன் சாதனையாளனாகிறான்.
திரு. வேலாயுதம் அவர்கள், நூற்றுக் கணக்கான விழாக்கள் நடத்தியுள்ளார். 20 ஆண்டுகளாக சாகித்ய அகாதெமி விருது பெறும் அறிஞர்களுக்கு விழாயெடுப்பதை மரபாக கொண்டுள்ளார். இவர் பதிப்பித்த பல நூல்கள் எண்ணற்ற விருதுகளையும், பரிசுகளையும் குவித்து உள்ளன. பல முன்னணி தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இவர் வெற்றியை பதிவு செய்துள்ள வேளையில் இவரை வியந்து பார்த்த நம் பார்வைக்கு அவர் அளித்த பதில்…
நா.அரங்கநாதன் ஒரு சிறுகதை எழுதினார். அதில் ஒரு சிறுவன் சிறிய ஊரிலிருந்து வந்து ஓட்டப்பந்தயத்தில் பல பரிசுகள் வென்று இறுதியாய் ஒலிம்பிக்ஸில் பதக்கமும் வென்று விடுவான். அப்போது உலக பத்திரிகைகளும், ஊடகங்களும் அவனை சூழ்ந்து கேள்விகளை கேட்டு குவித்தார்கள். அனைத்திற்கும் அவன் அளித்த மூன்று பதில், எனக்கு ஓடுவது பிடிக்கும். ஓடுவது பிடிக்கும். ஓடுவது பிடிக்கும்.
அதைத்தான் எனக்கும் சொல்லத் தோன்றுகிறது. புத்தகம் பிடிக்கும். புத்தகம் பிடிக்கும். புத்தகம் பிடிக்கும்.
Leave a Reply