மனமே உலகின் முதல் கணினி

என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன் எழுதும் புதுமைத் தொடர்

தமிழில்: கனகதூரிகா

கணினி, இன்று இயந்திரம் என்பதை தாண்டி மனிதர்களின் இயக்கமாகவே மாறிவிட்ட வேளையில், கணினியை கண்டறிந்தவர்கள் யார்? அது எப்படி இருந்தது? என்று ரிஷிமூலம் தேடி பலரும் பயணப்படுகின்றனர். நம்முடைய மனம்தான் உலகின் முதல் கணினி என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணரும் இடமிது.

அகம், புறம் என்பது மனிதனுக்கு மட்டும் கிடையாது. கணினிக்கும் உண்டு. கணினியின் அகத்தை இயக்குவது மென்பொருள். நம் மனமெனும் கணினிக்கு தேவையான, மிக முக்கியமான மென்பொருளை புரோகிராம் செய்வதே நம் முதல் தொடரின் நோக்கம்.
அந்த முக்கியமான மென்பொருள் நம் மனதில் மெல்ல மெல்ல நிறுவிக் கொண்டிருப்பதற் கான சான்று, இங்குள்ள படிநிலைகளை நம் மனம் ஒவ்வொன்றாய் உணர்வதுதான்.

புரோகிராம் 1

”நீங்கள் அனுபவத்தின் தொகுப்பு அல்ல” அனுபவங்களை தொடர்ந்து உருவாக்குகின்ற மூலம் நீங்கள். அனுபவங்களால் உங்களை உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. மாறாக உங்களுக்கு வேண்டிய அல்லது வேண்டாத அனுபவங்களை எப்போது வேண்டுமானாலும், நீங்கள் உங்கள் மனதில் இருந்து சேர்க்கவும், அழிக்கவும் முடியும். இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்றாற்போல உங்களால் அனுபவங்களை நினைவு கூரவும், அதிலிருந்து விடுதலையடையவும் உள்வாங்கவும் முடியும்.

புரோகிராம் 2

விபத்தில் காயம்பட்ட என் நண்பரை பார்க்க சமீபத்தில் நான் ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த இரண்டு பெண்கள் காதோடு காதாக கிசுகிசுத்து கொண்டதை என்னால் கேட்கமுடிந்தது. ”இவரை பார். கண்கள் திறந்திருக்கின்றன. ஆனால் இவரால் பார்க்கமுடியவில்லை. நம்மிடம் எதுவும் பேச முடிவதில்லை. நாம் பேசுவது எதையும் கேட்க முடிவதில்லை.

நான் தொட்டபொழுதுகூட எந்த வித உணர்வும் இல்லை. இவரால் சுவை, வாசனை என எதையும் உணர முடிவதில்லை. இவர் இப்போது கோமாவில் இருக்கிறார். இவர் எப்போது குணம் ஆவார் என்று நம்மால் சொல்ல முடியாது. பிழைப்பாரோ… மாட்டாரோ? இவர் இப்படி இருப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் இருப்பதற்கு இவர் இறப்பதேமேல்” என்று அவர்கள் பேசிக் கொண்டதை கேட்கையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த அதிர்ச்சியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் இன்னும் என்னால் மீளவே முடியவில்லை. காரணம், இதே அதிர்ச்சியும், வருத்தமும் கீழே குறிப்பிட்ட நபர்களை பார்க்கும்பொழுதும் ஏற்படுவதால்தான்.

சிலருக்கு அவர்கள் என்ன பார்க்க நினைக்கிறார்களோ, அதைத்தான் பார்க்க முடிகிறது. உண்மையான நிதர்சனத்தை பார்க்க முடிவதில்லை. அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதை மட்டும் தான் கேட்க முடிகிறது. அதைத் தவிர மற்ற எதையும் கேட்க முடிவதே இல்லை. அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் உணர்கிறார்கள். படைக்கப்பட்ட உணவைவிட அவர்கள் கற்பனையில் இருக்கும் உணவையே சுவைக்க விரும்புகிறார்கள். பரிசளிக்கப்பட்ட நறுமணத்தை விட அவர்களுக்கு உகந்த மணத்தையே நுகர்கிறார்கள். இவர்கள் அனைவருமே ”நடமாடும் கோமா நோயாளிகள்”தான். ஆனால் இதை உணர்ந்து விட்டாலோ இதைப் படிப்பவர் அனைவரும் ”நடமாடும் மனிதர்கள்”.

புரோகிராம் 3

நம் ஐம்புலன்கள்தான் நம்மை இயக்குகிற சக்தி. இதை நம்மிடம் இருந்து எடுத்துவிட்டால் நாம் அனைவரும் ”நடமாடும் கோமா நோயாளிகள்” இதை சரியாக உணர்ந்து கொள்வதன் மூலம் மட்டுமே நம்மால் ”நடமாடும் மனிதர்களாக” முடியும்.
உதாரணமாக, நீங்கள் ஒரு ரோஜா மலரை கருப்பு வண்ணத்தில் காண்கிறீர்கள். முதலில் நம் மனம் சிறிது அதிர்ச்சியடையும். காரணம், இது நமக்கு முன் சேகரித்து வைத்திருக்கும் செய்தியை நினைவுபடுத்தும். ”அட! ரோஜா சிவப்பு வண்ணத்தில்தானே இருக்கும்?” என்று. அங்கேதான் நம் இரண்டு சிந்தனைக்கும் மோதல் ஏற்படுகிறது.

ஒன்று முன்னதாக நம் மனதில் பதிந்திருக்கும் சிவப்பு நிறம். மற்றொன்று, இப்போது நாம் நிஜத்தில் பார்க்கும் கருப்புநிறம். சிவப்பு நிறம் என்பது ‘நம்பிக்கை’. கருப்பு நிறம் என்பது ‘நிஜம்’. இதைப் பார்த்ததும் பலரும் பலவிதமாய் அவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். சிலர் இது ரோஜாவே அல்ல என்பார்கள். மற்றும் சிலரோ தாவரவியல் ஆய்வாளர்கள் போல் பேசு வார்கள். ”எவ்வளவு சீக்கிரம் சிவப்பு நிறத்திலிருந்து கருப்பு நிறத்திற்கு மாறியிருக்கிறது பாருங்களேன். காற்றின் மாசு இவ்வளவு தூரம் பாதித்திருக் கிறது. வெகுசிலர் ரோஜா கருப்பு நிறத்தில் இருக்கும் யதார்த்தத்தை ஒப்புக்கொள்வார்கள்.

இரண்டு நிறங்களுக்கும் அதற்கே உரிய தனித்தன்மையும் அழகும் உண்டு. சில சமயங்களில் மனம் ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உடன் பட்டு புதிய யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடும். இதுவே விவாதமாக, சண்டையாக, உறவுகள் இடையே புரிதல் இன்மையாக உருவெடுக்கிறது. மனம் நிஜத்தை ஒப்புக் கொள்கிற போது இவை அனைத்தும் மறைந்துபோகும்.
இப்போது சொல்லுங்கள். நீங்கள், சிவப்பென்னும் நம்பிக்கையா? இல்லை கருப்பென்னும் யதார்த்தமா??

புரோகிராம் 4

நான் ஒருமுறை மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கே ஒருவர் ”தான் ஏற்கனவே இறந்துவிட்டதாக” எண்ணிக் கொண்டிருந்தார். அவரை குணமாக்கும் விதமாய் யார் அவரிடம் எதைப் பேசினாலும், நான்தான் ஏற்கனவே இறந்துவிட்டேனே. என்னிடம் ஏன் எதைஎதையோ பேசுகிறீர்கள் என்பார். அனைத்து மருத்துவங்களும் பயிற்சிகளும், யுக்திகளும் செய்தாகிவிட்டது. எந்தப் பயனுமில்லை. ஒரு மருத்துவர் வித்தியாசமான யோசனை ஒன்றைச் சொன்னார். அவர் கையில் ஒரு சிறிய கீறலை ஏற்படுத்துவோம். அவர் கையில் இருந்து இரத்தம் வழிவதைப் பார்த்தால் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை உணர வாய்ப்புள்ளது என்றார்.

அவர் கூறியது போலவே அந்த நபரின் கையில் கூரிய கத்தியால் ஒரு சிறிய கீறல் ஏற்படுத்தினார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே வழிந்தோடிய கதகதப்பான இரத்தத்தைப் பார்த்து அந்த மனிதர் அலறி பதறினார். அய்யோ என்ன ஆச்சர்யம். என் இறந்த உடம்பிலிருந்து இரத்தம் வழிகிறதே என்று. இப்படித்தான் பலரும் உபயோகமே இல்லாத நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது எனக்கு சீன பழமொழியொன்று நினைவுக்கு வருகிறது. ”இதுநாள் வரை எதை மட்டுமே நம்பியிருந்தோமோ அதன் மொத்த வடிவம்தான் மனிதன்”. இன்னும் உபயோகமில்லாத நம்பிக்கைகளை வைத்துக்கொள்ளப் போகிறீர்களா? அல்லது தேவையில்லாத கற்பனைகளை அழித்து விட்டு புதிய புத்துணர்ச்சியூட்டும் நம்பிக்கையால் உங்களை நிரப்பிக் கொள்ளப் போகிறீர்களா?

புரோகிராம் 5

என் வகுப்பில் பங்குபெற்ற ஒரு தொழிலதிபர் என்னிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். இந்த உலகம் வெறும் கொடூரத்தாலும் சுயநலத்தாலும் போட்டியிலும் பொறாமையிலும் மட்டுமே மூழ்கி இருக்கிறது. ஆனால் நான் அந்த மாதிரி மனிதர் அல்ல. எனக்கு இதுபோன்ற உலகில் வாழ்வது கடினமாக இருக்கிறது. சொல்லுங்கள். நான் எப்படி வெல்வது? என்றார். நான் பதிலளிப்பதற்கு முன் மீண்டும் ஒருமுறை அவர் கேள்வியை தெளிவு படுத்திக் கொண்டேன்.

இந்த உலகம் முழுவதுமே அப்படித்தான் இருக்கிறதா என்றேன். சற்றும் யோசிக்காமல் ஆம் என்றவர். மீண்டும் சில நொடி அமைதிக்குப்பின், ”இல்லை. என் அனுபவத்தில் இருக்கும் உலகம் மட்டும்தான் அப்படி” என்றார். இங்குதான் பிரச்சனையே.

நாம் பார்க்கும் அனைத்தையும் மட்டுமே உலகம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாணவன், அவன் ஆசிரியரை கொலை செய்தால், உடனே இப்போதைய இளைய தலை முறையே இப்படித்தான் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். எந்த ஒரு பொருளையும் கண்ணருகே வைத்துப் பார்த்தால் உலகத்தையே மறைக்கத்தான் செய்யும். அதற்காகவே அதுவே உலகம் என்று எண்ணிவிட முடியுமா என்ன? இதைச் சொன்னால் பலர் கேட்கக்கூடும். ”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” இல்லையா என்று. உண்மைதான் ஒப்புக்கொள்கிறேன். ”அடுப்பு நம் வசம் இருந்தால்” இந்த பழமொழி சரிதான் என்ற நிபந்தனையுடன்.

இங்கு அடுப்பு என்பது நம் அனுபவம். எந்த அளவு சமைக்க வேண்டும், எப்படி சமைக்கவேண்டும், எந்த மாதிரியான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அந்த பழமொழி ஒப்புக் கொள்ளக்கூடியது தான். ஆனால் குறிப்பிட்ட மனிதர் என்ன சொன்னார், ”உலகம் முழுவதுமே போட்டியாலும், பொறாமையாலும் நிறைந்தது” என்றார். உலகம் முழுவதையும் அவர் அனுபவித்துப் பார்த்தாரா? உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததைப் பற்றி பேசி என்ன பயன்?

நீங்கள் எதற்குத் தயாராக இருக்கிறீர்கள்?

அனுபவத்தில் இருப்பதை மட்டும் உங்கள் பார்வையின் கீழ் எடுத்துக் கொள்ளவா? இல்லை, பொதுவாக பார்த்தே காலம் கழிக்கவா?

புரோகிராம் 6

பார்ப்பதில் மாற்றம் வந்தாலே சிந்திப்பதில் மாற்றம் வரும். என்னிடம் ஒரு மாணவன் சொன்னான், ”எனக்கு என் பள்ளியில் முதல் மாணவனாக வர வேண்டும் என்பதும், என் பள்ளியின் தலைமை ஆசிரியர் முதல் வாயில் காப்பாளர்வரை அனைவரும் எனக்கு கை குலுக்கவேண்டும் என்பதுதான் என் கனவு” என்றான். அவன் மட்டும் மாநிலத்திலேயே முதலாவ தாக வரவேண்டும் என்று கனவு கண்டிருந்தால் அவன் வெற்றியின் உயரம் இன்னும் கூடியிருக்கும். நமக்கு இயற்கையாக ஒரு கேள்வி உண்டு. பார்வையில் மாற்றம் வந்தால் சாதனைகள் சாத்தியமா? என்று.

நிச்சயம் சாத்தியம்தான். நம் கட்டுப் பாட்டின் கீழ் இருக்கும் விஷயங்களில் நமக்கு பார்வை மாற்றம் வர வேண்டும். உதாரணமாக மேலே குறிப்பிட்ட மாணவனின் கட்டுப்பாட்டில் தான் புத்தகம் இருக்கிறது. அவன் படிக்கும் முறை, புரிதல், அவன் புரிந்து கொண்டவைகளை வெளிப்படுத்தும்விதம் என அனைத்தும் இருக்கிறது. ஆனால் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. இதை சாமர்த்தியமாக எதிர்கொள்பவனே வெற்றியாளன்.

நாம் எங்கெங்கெல்லாம் நம் கட்டுப் பாட்டின்கீழ் இல்லாதவற்றை சந்திக்கிறோமோ அங்கெல்லாம் ஐம்புலன்களைத்தான் பயன்படுத்து கிறோம். அதை சற்றே வித்தியாசமான கோணத்தில் அணுகவேண்டும். கண்பார்வை இல்லாதவர்களும், காது கேளாதவர்களும் அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற நான்கு புலன்களைக் கொண்டு எண்ணற்ற சாதனைகள் புரிவதை கருத்தில் கொள்ள வேண்டும். லண்டனில் ஹெலன் கெல்லர் என்ற பெண்மணி இருந்தார். அவருக்கு காதும் கேட்காது.

பார்வையும் கிடையாது. ஆனால் அவர் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று புலன்களை வைத்து இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். நிச்சயம் இது சாதனைதான். ஆனால் நாம் ஐந்து புலன்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்கிறோம் என்பது கேள்விக்குறி.
இது மிகவும் சுலபம். பார்வையில் மாற்றம் வந்தால் எண்ணத்தில் மாற்றம் வரும். எண்ணத்தில் வந்தால் செயலில் வரும். செயலில் மாற்றம் வந்தால் அது மகத்தான வெற்றியாகத்தானே இருக்கும்.

புரோகிராம் 7

நமக்கு எதையும் யாரையும் பார்க்கும் சுதந்திரம் உண்டு. அதற்காக நாம் பார்க்கிற வகையிலேயே பயணம் போனால் வெற்றியாளராக வேண்டுமா? நம்மை நாமே ஒரு கூச்ச சுபாவம் உள்ளவராக பார்த்துப் பழகிவிட்டு, ஒரு சுய முன்னேற்றப் பேச்சாளராக வலம் வர எண்ணினால் எப்படி சாத்தியம்? நம்மை ஒரு அதிர்ஷ்டமற்றவர் என்று நமக்கு நாமே முத்திரை குத்திக் கொண்டால் எப்படி வாழ்வின் போராட்டங்களை சந்திப்பது? நாவை அடக்காமல் எப்படி உடலை கட்டமைப்பது? நாம் எதைப் பழக்கப்படுத்துகிறோமோ அதுவாகவே வாழ்கிறோம் என்பதுதான் உண்மை.

முடிவு உங்களுடையது! புதிய மாற்றங்களை உங்களுக்குள் அனுமதிக்கப் போகிறீர்களா? இல்லை இன்னும் பழைய கழிவுகளுடனே வெற்றியை அணுகப் போகிறீர்களா? நம் மனத்தடைகளை உடைத்து எழுவோம். புதிய பரிணாமத்தை அனுபவிப்போம்.

புரோகிராம் 8

கீழே தொகுக்கப்பட்ட கேள்விகளை நேர்மையாக எதிர்கொள்ளுங்கள். உங்களுக்குள் புதிய மாற்றம் வந்ததற்கான மற்றும் வந்து கொண்டும் இருப்பதற்கான வித்தியாசத்தை உணர்வீர்கள். இந்த புதிய மென்பொருள் உங்களுக்குள் புதிய உத்வேகத்தை ஊட்டுமேயானால் உங்கள் சாதனை கனவுகள் சாத்தியப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.

இந்த நிமிடம் முதல் உங்களை, உங்கள் குடும்பத்தை, உறவினர்களை, தொழிலை, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை, வருங் காலத்தை, இந்த மொத்த உலகத்தை, குறிப்பாக உங்கள் வாழ்க்கையை எப்படி பார்க்கப் போகிறீர்கள்?

இந்த கேள்விகளை புதியகோணத்தில் அணுகினால் உங்கள் வருங்காலம் வெற்றியின் உச்சத்தை அடையுமா? என்ற கேள்விகளுக்கு நீங்கள் உங்களுக்கே சொல்லிக் கொள்ளும் பதிலைத்தான் புரோகிராம் 8 என்கிறோம்.

இந்த புதிய மென்பொருள் உங்களுக்குள் புது மாற்றத்தை, உற்சாகத்தை தூண்டினால், உங்கள் சிந்தையில், எண்ணத்தில், செயலில் மாற்றம் வரும்! பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது போகிப் பண்டிகையின் வரையறை. இது பொருட்களுக்கு மட்டுமல்ல; நம் மனதிற்கும்தான். பழைய பார்வைகளை கடந்த புதிய மாற்றத்தை காணுங்கள். தினம் தினம் கொண்டாட்டம்தான்!

புரோகிராம் 9

வீசிப் பறக்கும் கொடியைக் கண்டு இரண்டு மனிதர்கள் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒருவன் சொன்னான், காற்று கொடியை எப்படி அசைக்கிறது பார்த்தாயா?
அதற்கு மற்றொருவன் சொன்னான், கொடி தான் காற்றை இப்படி அசைத்துக் கொண்டிருக்கிறது என்று.

இதை பார்த்துக் கொண்டிருந்த யோகி சொன்னார், காற்றும் கொடியை அசைக்கவில்லை. கொடியும் காற்றை அசைக்கவில்லை. உங்கள் மனம்தான் எல்லாவற்றையும் அசைத்துக் கொண்டிருக்கிறது.

  1. Maharamki

    என்.எல்.பி:
    என் அருமை நண்பரின், ஒரு வித்தியாசமான, அழகான, வியக்கும்வண்ணம் அமைந்த அற்புத தொடரின் ஆரம்பம். நல் வாழ்த்துக்கள்.

    தன் வாழ்கையின் சிறு சிறு அனுபவங்கள் மூலம், ஆசிரியர் என்.எல்.பி பற்றிய எனது அறிவை சிந்திக்க வைக்கிறார்.

    புரோகிராம் 9 ஒரு punch.
    சட்டியில் இருபதுதான் அகப்பையில் வரும். உண்மை

    இத்தொடர் பலரது (கண்டிப்பாக என்னுடய) எண்ணகளையும், செயல்களையும், வாழ்கையயும் வளமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை என்னால் எதிர் பார்க்க முடிகிறது.

    வளர்க அவரது தொடர். பெருக அவரது நல்ல எண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *