பொதுவாச் சொல்றேன்

புருஷோத்தமன்

சிலபேரைக் கேட்டுப்பாருங்க! குளிர் காலத்துலே வேலையே ஓடாதுங்க; சோம்பலா இருக்கும். வெய்யில் காலம் வந்தாத் தேவலை அப்படீம்பாங்க. அதே ஆளுங்க, வெய்யில் காலத்திலே,இந்த வெய்யிலிலேயும் வேர்வையிலேயும் வேலை செய்யவா முடியுது? அக்கடான்னு கிடக்கத்தான் தோணுது அப்படீம்பாங்க.

நான் பொதுவாச் சொல்றேன், வேலையிலே அக்கறை உள்ளவங்களால எந்தக் காலத்திலேயும் நல்லாச் செயல்பட முடியும். அதே நேரம், கால மாற்றத்துக்கு ஏற்ற மாதிரி நாம வேலை பார்க்கிற விதங்களிலேயும் சில மாற்றங்களை செய்துக்கறது நல்லது.

பகல்பூரா “வேகுவேகு”ன்னு வெய்யில்லே அலையற வேலை உள்ளவங்க, வேலைகளை முற்பகலிலேயும், மதியம் மூணு மணிக்கு மேலேயும் பிரிச்சு செய்யலாம்.சிலர் கோடைக்காலங்களிலே அலுவலகத்துக்கு அதிகாலையிலே வெய்யில் வர்றதுக்கு முன்னாலேயே போயிடுவாங்க. மதியம் ஒரு சின்ன ஓய்வு. மறுபடியும் நாலு மணிக்கு வேலையைத் தொடங்கி இரவு ஏழு – எட்டு வரை வேலையைத் தொடருவாங்க.

நான் பொதுவாச்சொல்றேன், வெளிச் சூழ்நிலை சூடும் கொதிப்புமா ஆகியிருந்தாலும், அந்த சூழ்நிலை நம்மை நேரடியா பாதிக்காத வரை பிரச்சினையில்லை.வெய்யிலுக்கேற்ற மாதிரி வளைஞ்சு குடுத்து நம்ம வாழ்க்கை முறையை மாத்திக்கறது நல்லது. எந்த சீதோஷ்ணத்திலேயும் செயல்திறன் குறைஞ்சுடாம பார்த்துக்கறதுதான் செயல் வீரர்களுக்கு அழகு.அதே மாதிரி, உணவுப் பழக்கங்களிலும் நல்ல மாற்றங்களை நாமே கொண்டு வந்துடணும். பச்சைக் காய்கறிகள், பழங்கள், திரவ உணவுன்னு அதிகமாக உட்கொள்வதோடு சுகாதாரமான தண்ணீரும் நிறைய குடிக்கணும்.

நான் பொதுவாச் சொல்றேன், தாவரங்களும் மற்ற உயிரினங்களும் கூட வெளிச்சூழலுக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றி அமைச்சுக்குது.ஜனவரி மாசம், ‘நமது நம்பிக்கை’ இதழிலே, ‘பூனை ஞானம்’ அப்படீன்னு நிறைய பொன்மொழிகள் வந்தது. அதிலே, “ஒரு நாளில் பூனை தூங்கிய நேரத்தின் அளவை வைத்தே அந்த நாளின் உஷ்ணத்தை அளக்கலாம்” அப்படீன்னு ஒரு பொன்மொழியைப் பார்த்திருப்பீங்க. உஷ்ணமான நாட்களிலே ஓய்வு அதிகம் தேவைங்கிறது பூனைகளின் வாழ்க்கை புலப்படுத்தற உண்மை.நான் பொதுவாச் சொல்றேன், மனிதர்கள் தான் குறிப்பிட்ட வாழ்க்கை முறைக்குள்ளே சிக்கிக்கிட்டு, அதை மாத்தாம சிரமப்படறாங்க.

விழிப்புணர்வோட ஒரு விஷயத்தைப் பார்க்கத் தொடங்கினா, என்னென்ன மாற்றங்கள் வரணும்னு தானாவே தெரியும். காபி-டீ பழக்கங்களைக் குறைச்சுக்கிட்டு மோர்-இளநீர்னு நிறைய குடிக்கறது முதற்கொண்டு, கடுமையான உழைப்புக்கு நடுவில கூடுதலான நேரத்தை ஓய்வுக்கு ஒதுக்கறது வரைக்கும் கோடைக் காலத்திலே எத்தனையோ மாற்றங்களை செய்துக்கறது அவசியமா இருக்கு. இல்லீங்களா?ஆக்கபூர்வமாய்த் திகழ ஆரோக்கியம் அவசியம்உழைப்பும் ஓய்வுமே வெற்றி ரகசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *