ஒரு மனிதனின் புத்திசாலித்தனம் என்பது ஜீன்களின் மூலம் வருவதா? பயிற்சிகளின் மூலம் வருவதா?
அடிப்படையில் அறிவு ஒன்றுதான். அதை நாம் எப்படி திறம்பட பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் அது மெருகேறுகிறது. நம் கணக்குப்படி இருநூறுக்கு இருநூறு வாங்கும் குழந்தை புத்திசாலி என்று நினைக்கிறோம். அந்தக் குழந்தைக்கு இருநூறுக்கு நூறு வாங்கிவிட்டு டெஸ்ட் மேட்சில் செஞ்சுரி அடிப்பது புத்திசாலித் தனம் என்று தெரிந்தால் அந்த புத்திசாலித்தனத்தை நீங்கள் ஊக்குவியுங்கள்.
அறிவு என்பது அச்சத்தை நீக்கும் என்கிறீர்கள். சிலர் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கிறார்கள். ஆனால் அவர்கள் செயலில் இறங்கத் தயங்குகிறார்கள். ஆனால் ஒரு சிலர், படபடவென்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தில் இறங்குகிறார்கள். வெற்றியும் பெற்று விடுகிறார்கள். இது எப்படி சாத்தியம்?
பேசுபவர்கள் அனைவரும் அறிவாளிகள் அல்ல. நூலகத்தில் இருக்கிற எல்லா புத்தகங் களையும் மனப்பாடம் செய்துவிட்டால் ஒருவர் புத்திசாலி ஆக முடியாது. நான் காரல் மார்க்ஸ் பற்றிப் பேசுவதால் நான் கம்யூனிஸ்ட் கிடையாது. கம்யூனிசம் என் மனதிற்குள் இருந்தால் நான் மார்க்ஸைப் பற்றி பேசவேண்டிய அவசியமே இருக்காது. எனவே வெட்டியாகப் பேசுவது எவ்வளவு தூரம், நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு தூரம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களை முடிவு செய்யமுடியும்.
பேசுபவர்களை சிறிதுநேரம் கவனித்தால் போதும். அவர்கள் வெட்டியாகப் பேசுகிறார்கள் என்று தெரிந்துவிடும். இவர்களைப் போல நாட்டில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
எனவே அவர்களை புத்திசாலிகள் என்று நினைத்துவிடாதீர்கள். எவரொருவர் காரியத்திலும் செய்து காட்டுகிறாரோ அவரே புத்திசாலி. வாழ்க்கை என்பது வெறும் புத்தக அறிவில்லை; அனுபவம்.
சிந்திக்காமல் இருப்பதற்கு சோம்பல்தான் காரணம் என்றீர்கள். அதுபற்றி கொஞ்சம் விளக்குங்கள்.
ஆம். ஒன்றைப் பற்றி சிந்தித்தால் இதுவரை நீங்கள் கொண்டிருந்த கருத்துக்கள், நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்துபோய்விடும். இதைப்பற்றி கேள்வி கேட்போம். இந்தக் குடும்பம் எனக்குத் தேவையா என்ற சிந்திக்கமாட்டோம்.
ஏனென்றால் பயம். இவற்றை யோசித்தால் குழப்பம் வரும். குடும்பத்தில் சண்டை வரும். நிம்மதி போய்விடும். தூக்கம் போய் விடும். எனவே அதைப் பற்றி யோசிக்க வேண்டாம்.
எந்தக் காரியத்தைச் செய்தால் மட்டுமே பயம் என்று நினைக்காதீர்கள். இப்படியே இருந்து விடலாம் என்று நினைப்பதும் ஒரு பயம். அந்த நினைப்பின் உச்சம்தான் சோம்பல். சோம்பல் என்பது செயலற்று இருப்பதில்லை. செயல்களை மறுப்பது என்கிற கோணத்திலும் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இயற்கையை உண்மை என்றும் இறைவனை பொய் என்றும் கூறுகிறார்கள். இதைப்பற்றி விளக்குங்கள்.
இயற்கை உண்மைதான். இறைவன் என்று வரும்போது, யாருடைய இறைவன் என்று ஆரம்பித்து, எத்தனை காலமாய் அந்த இறைவன் இருக்கிறான்? ரிக்வேத காலத்தில் உருவாக்கப்பட்ட இறைவனா? இடையில் உருவாக்கப்பட்டானா, ஒரு பொம்மையிலிருந்து வந்த இன்னொரு பொம்மையா என்ற கேள்விகள் வந்தபிறகுதான் இறைமை என்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார்கள்.
தெளிவும், உண்மையும் இருக்குமிடத்தில் இறைமை இருக்கும். ஆகவே, இயற்கை உண்மை. இறைமை பேருண்மை.
Leave a Reply