-மரபின் மைந்தன் ம. முத்தையா
கோவையில் நான் எழுதிய தமிழ் விளம்பரங்கள் பரவலான கவனிப்பைப் பெற்றன. பொதுவாகவே, பெரிய நிறுவனங்களின் விளம்பர உருவாக்க வாய்ப்புக்களைப் பெற, விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுவதுண்டு. தாமாகவே முன்வந்து விளம்பர டிசைன்களை உருவாக்கி வணிக ஒப்பந்தம் பெற முயல்வதும் உண்டு. அதற்கு ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன் என்று பெயர்.
சக்தி குழுமங்களின் அங்கமான சக்தி நிதி நிறுவனம், ஆறு ஆண்டுகளில் நூறுகோடி ரூபாய்களுக்கான வணிகநிலையை எட்டியிருந்தது. இதற்காக சசி விளம்பர நிறுவனம், ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன் ஒன்றை மேற்கொண்டது. அந்தத் தொடர் விளம்பரத் தொகுப்புக்கு நான் உருவாக்கிய தமிழ் விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ”ஆண்டுகள் ஆறு கோடிகள் நூறு!” என்கிற பேஸ்லைன் சக்தி நிறுவனத்தின் அபிமானத்தைப் பெற்றது. சசி நிறுவனத்திற்கு தொடர் விளம்பரங்களும் கிடைத்தன.
விளம்பரங்கள் எழுதும் கலை குறித்து பல இயல் வரையறைகள் படித்திருக்கிறேன். அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்தது இது. ”ஒரு பேனாவைப் பற்றி விளம்பரம் எழுதுவதென்றால், எடுத்ததும் அந்தப் பேனாவை பற்றி சொல்லாதீர்கள். உங்கள் பேனாவைப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள். அதன்பிறகு, உங்கள் பேனா அவர் வாழ்க்கைக்குள் எங்கே பொருந்துகிறது என்று தெரிவியுங்கள்”. இந்த உத்தியை நான் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான விளம்பரங்களில் பின்பற்றி இருக்கிறேன்.
அந்த நாட்களில், அச்சு ஊடகங்களும் வானொலியும் பெரும் வீச்சில் இயங்கிக் கொண்டிருந்தன. தூர்தர்ஷன் மட்டுமே கோலோச்சிய காலமது. 20 விநாடிகள், முப்பது விநாடிகளுக்குள் ஒரு விஷயத்தை மக்கள் மனதில் சேர்ப்பது பெரிய சவாலான விஷயம். வானொலி விளம்பரங்கள் எழுதிப் பழக சசி மிகச்சரியான இடமாக இருந்தது. எல்.ஜி. பிவிசி பைப்புகளுக்கு எழுதிய விளம்பரம் ஒன்று அச்சு ஊடகங்களிலும் வானொலியிலும் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டன.
பணம்போட்டு, நல்ல மோட்டார்களை வாங்கி விடுகிறார்கள். ஆனால், நல்ல பைப்புகளை வாங்காவிட்டால் மோட்டார் வாங்கியதில் எந்தப் பயனும் இல்லை. இதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ”யானை ஒன்று வாங்கும்போது, கயிறு போதுமா? சங்கிலி வேண்டுமா?” என்ற வாசகம் இரு ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்டன.
வானொலி விளம்பரத்தைப் பொறுத்தவரை இப்படி கவனத்தை ஈர்க்கும் ஒரு கருத்துரு கிடைத்துவிட்டால் மிக எளிதாக அடுத்த விஷயத்தை மக்கள் மனங்களில் பதிய வைத்து விடலாம். ”யானை ஒன்று வாங்கும்போது கயிறு போதுமா? சங்கிலி வேண்டுமா? மோட்டார் வாங்கும் போது தரமான பைப்புகள் வாங்கத் தயங்க வேண்டுமா? வாங்கிடுவீர் எல்.ஜி. பி.வி.சி பைப்புகள்” என்று விஷயத்தை முடித்துவிடலாம்.
”எலி கொழுத்தால் வளையில் தங்காது” என்றொரு முதுமொழி உண்டு. உள்ளே வரும்போதே கொழுத்த எலியாக இருந்த நான் வளைக்கு வெளியில் அவ்வப்போது திரியத் தொடங்கினேன். பெங்களூரைத் தலைமை யாகக் கொண்ட மா கம்யூனிகேஷன் நிறுவனம் சென்னையைத் தலைமையாகக் கொண்ட ப்ரோஃப் அட்ஸ் நிறுவனம் ஆகியவை கோவையில் செயல்பட்டு வந்தன.
அவற்றின் விளம்பர உருவாக்கங்களுக்கு அவ்வப்போது என்னைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். அதன்பிறகு அந்த நிறுவனங்களுடன் ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். ரீ டெய்னர் என்பது அதற்குப் பெயர். வேலை வருகிறதோ இல்லையோ, மாதா மாதம் ஒரு தொகையைத் தந்து விடுவார்கள். விளம்பரங்கள் வருகிறபோது எழுதிக் கொடுக்க வேண்டும். இப்படி ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன்.
வளைக்கு வெளியே திரியத் தொடங்கி ருசி கண்ட எலி வெளியூர் போக விரும்பியது. சசி நிறுவனத்திலிருந்து விலக முடிவெடுத்தேன். பொதுவாக மற்ற நிறுவனங்களுக்கு தன் அலுவலர்கள் ஃப்ரீலான்ஸ் செய்வதை சசி சுவாமிநாதன் விரும்புவது இல்லை.
சென்னை போன்ற இடங்களில் அத்தகைய பழக்கம் அனுமதிக்கப்பட்டாலும், நிறுவனத்துக்கு நிறுவனம் விதிமுறைகள் மாறுபடுவது இயற்கை.
என் எழுத்துக்களில் உருவான விளம்பரங்களைக் கொண்ட ஆல்பம் ஒன்றைத் தயாரிக்க சுந்தரேசன் உதவினார். அதனை ஒரு பெட்டியில் எடுத்துக்கொண்டு சென்னை சென்று இறங்கினேன். நெருங்கிய உறவினர்கள் பலரும் சென்னையில் உண்டு. அந்த வகையில் சென்னை எனக்குப் புதிதல்ல.
அவ்வை சண்முகம் சாலையில் இயங்கி வந்த முத்ரா நிறுவனத்துக்குள் நுழைந்தேன். அங்கிருந்த காபி ரைட்டிங் பிரிவின் தலைவர் வேணு நாயர் என்று ஞாபகம். நான் எழுதியிருந்த விளம்பரங் களைப் பார்த்தார். ”நன்றாக இருக்கிறது. ஆனால் முழுநேர தமிழ் விளம்பர எழுத்தாளருக்கு எங்களிடம் தேவையிருக்காதே” என்றார். அங்கு மட்டுமல்ல. லின்டாஸ், ஹெச்.டி.ஏ. ஓ&எம் என்று எங்கும் இதே கதைதான்.
வேலைக்கு ஆள் எடுப்பதில் இரண்டு விதமான அணுகுமுறைகள் உண்டு. திறமையாளர் ஒருவர் தென்பட்டால் அவருக்கு இடம்தந்து நமக்கேற்ற முறையில் பயன்படுத்திக் கொள்வது ஒருமுறை. அவரின் இப்போதைய தகுதிகள் / தகுதி இன்மைகளை கணக்கில் எடுக்காமல் நம் நிறுவனத்தின் தற்போதைய தேவைகளை மட்டுமே மனதில் கொண்டு முடிவெடுப்பது இரண்டாவது வகை. நான் சந்தித்தவர்கள் எல்லோருமே இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். அதற்குக் காரணம், அவர்களும் தேசிய அளவிலான நிறுவனம் ஒன்றின் அலுவலர்கள் மட்டுமே.
சென்னையில் ஃப்ரீலான்ஸ் முறையில் தமிழ் விளம்பர எழுத்தாளர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது புரிந்தது. முழுநேர வேலை கொடுக்க நிறுவனங்கள் தயங்குவது தெரிந்தது. ஆனாலும் ஒரு நம்பிக்கை மீதமிருந்தது. சென்னை மா கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கோவை கிளையின் மேலாளர் திரு.ராமகிருஷ்ணன் வழங்கிய பரிந்துரைக் கடிதம் என் பையில் இருந்தது.
அப்போது, தென்னகத்தின் சில விளம்பர நிறுவனங்கள், அயல்நாட்டு விளம்பர நிறுவனங்களுடன் ஒரு வகையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு, அந்த நிறுவனத்தின் சார்பு நிறுவனம் போல் இயங்கிக் கொண்டிருந்தன. அதன் விளைவாக இந்த நிறுவனத்தின் பெயருடன் அயல்நாட்டு நிறுவனத்தின் பெயரும் இணைந்து, ஒரு சர்வதேச அந்தஸ்தைத் தந்து கொண்டிருந்தது.
மா கம்யூனிகேஷன் நிறுவனம். மா பொஸேல் என்றாகி இருந்தது. ஆர்.கே.சாமி நிறுவனம், ஆர்.கே.சாமி பிபிடிஓ என்றாகியிருந்தது.
மாபொஸேல் நிறுவனத்தின் சென்னை கிளை நிறுவனத்தின் நிர்வாகியாக கணேஷ் பாலிகா இருந்தார். அவருக்குத்தான் ராமகிருஷ்ணன் கடிதம் கொடுத்திருந்தார். கணேஷ் பாலிகாவின் அறைக்கு அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். அவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்பதால் அவர் சார்பாக பிரசாத் என்றோர் இளைஞர் என்னிடம் வந்து பேசினார். தீட்சண்யமான பூனைக் கண்கள்.
நான் ஏற்கெனவே எழுதியிருந்த விளம்பரங்களைப் பார்வையிட்டவர், அப்போது, அவர்கள் நிறுவனத்துக்கு எழுத வேண்டியிருந்த தமிழ் விளம்பரம் ஒன்றுக்கான தகவல்களைத் தந்து எழுதச் சொன்னார்.
பொதுவாகவே விளம்பரங்கள் எழுத ஒரு பொறி தட்டிவிட்டால் உடனே எழுதிவிடலாம். அந்தப் பொறியும் உடனே தட்டிவிடும். ஏனெனில் அதி அவசரத்தில் எழுத வேண்டிய நிர்பந்தம் எல்லா நிறுவனங்களிலும் உண்டு. சசியில் நான் இருந்த போது, படைப்பாக்கப் பிரிவில் ஒரு போஸ்டர் ஒட்டி வைத்திருந்தோம். “அந்தப் பயிற்சி காரணமாக சில நிமிடங்களிலேயே அவர் கேட்ட விளம்பரங்களை எழுதிக் கொடுத்துவிட்டேன்.
அவற்றை வாசித்ததும் பிரசாத்தின் கண்களில் மின்னல். ”ஜஸ்ட் ஹோல்ட் ஆன் யார்” என்று சொல்லி விட்டு, என் விண்ணப்பத்தையும், அந்த விளம்பரத்தையும் வாரிக்கொண்டு உள்ளே ஓடினார். பதினைந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு வந்தவர் முகம் சற்றே வாடியிருந்தது. ”உடனடியாக முழுநேர தமிழ் விளம்பர எழுத்தாளரைப் பயன்படுத்தும் நிலையில் இல்லை. நீங்கள் எழுதிக் கொடுத்த விளம்பரத்தை எங்கள் க்ளையண்ட் அங்கீகரித்தால் அதற்குரிய பணம் அனுப்பப்படும்” என்று கூறி விடைகொடுத்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கோவைக்கு செல்லும் அடுத்த ரயிலுக்கான முன்பதிவு விண்ணப்பத்தை எழுதிக் கொண்டிருந்தேன். அது கிடைத்தது.
Leave a Reply