இரட்டைச் சம்பளம் வாங்குங்கள்

-கிருஷ்ண வரதராஜன்

ஹோட்டல் ஒன்றில் சாப்பிட உட்கார்ந்தார் முல்லா நஸ்ரூதீன். சில்வர் டம்ளரை லொட் என்று வைத்து, அதில் தண்ணீர் ஊற்றியபடி, ‘என்ன சாப்பிடறீங்க?’ என்று அலட்சியமாக கேட்டார் சர்வர்.

முல்லா ஆர்டர் கொடுத்த ஐட்டங்கள் ஒவ்வொன்றும் அலட்சியமாகவே பரிமாறப் பட்டன. முல்லாவை பார்த்தால் டிப்ஸ் கொடுப்பவர் போல தெரியாததால் சர்வர் பில்லைக்கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு அலட்சியமாக நின்றார்.

முல்லா பில் தட்டில் பில்லுக்கான தொகையை வைத்துவிட்டு சர்வரை அழைத்து 20 ரூபாய் டிப்ஸ் கொடுத்தார். சர்வருக்கு சர்வமும் அடங்கிவிட்டது.

20 ரூபாய் டிப்ஸா? அதுவும் இவ்வளவு அலட்சியமாக சேவை செய்ததற்கு?

வாழ்நாளில் 5 ரூபாய்க்குமேல் டிப்ஸ் வாங்கியிராத அவர் ரொம்பவும் ஆடிப்போய்விட்டார். ‘தப்பு செய்து விட்டோமே. அலட்சியமாக நடந்து கொண்டதற்கே இவ்வளவு என்றால், ஒழுங்காக சிறப்பாக செய்திருந்தால், டிப்ஸ் எப்படி இருந்திருக்கும்?’ என்று நினைத்து உள்ளூர வருந்தினார்.

அடுத்த வாரத்தில் ஒருநாள், வேலை செய்து கொண்டிருந்த சர்வர் தங்கள் ஹோட்டலுக்குள் முல்லா நுழைவதை பார்த்தார். சர்வருக்கு ரத்தம் மண்டைக்கு ஏறிவிட்டது. கடவுளே இவர் என் டேபிளுக்கு வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அந்த பிரார்த்தனை நிறைவேறியது.

முல்லா உட்காருவதற்கு முன் சேரை தன் தோளில் இருந்த துண்டால் தூசி தட்டினார். டம்ளரை பணிவோடு எடுத்து வைத்து சிரித்த முகத்தோடு நீரால் நிரப்பினார். குனிந்து பவ்யமாக, ‘என்ன சாப்பிடுகிறீர்கள்?’ என்று மெனுவை பட்டியலிட்டார்.

கேட்ட ஐட்டங்கள் எல்லாம் அடுத்த நொடி டேபிளில் இருந்தன. பில்லை கொண்டு வந்து வைக்கும்போது சர்வர் உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். ‘அன்று அவ்வளவு மோசமாக நடந்து கொண்டபோதே இருபது ரூபாய் கொடுத்தவர் இவர். எனவே இன்று நிச்சயம் நமக்கு 50 ரூபாயாவது கிடைக்கும்’ என்று நினைத்தார்.

பில்லுக்கு பணத்தை எடுத்து வைத்த முல்லா சர்வரை அழைத்து 25 பைசா டிப்ஸ் கொடுத்தார்.

இதைச்சற்றும் எதிர்பாராத சர்வர் கொந்தளிப்போடு கேட்டார், ‘என்ன இது? இவ்வளவு சிறப்பாக சர்வீஸ் செய்ததற்கு 25 பைசா தானா?’

முல்லா சொன்னார், “கடந்த முறை கொடுத்த டிப்ஸ் இன்று நீங்கள் செய்த சர்வீஸுக்கு. இந்த டிப்ஸ் கடந்தமுறை நீங்கள் செய்த சர்வீஸுக்கு.”
முல்லாவின் பதிலில் சர்வருக்கு மூச்சு நின்று விட்டது.

நகைச்சுவையில் வேண்டுமானாலும் உழைப்பிற்கான பலன் மாறி மாறிக் கிடைக்கும். ஆனால் நிஜ வாழ்வில் நம் உழைப்பிற்கு ஏற்ற பலன்தான் கிடைக்கும்.

எனவே இரட்டைச் சம்பளம் வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஏற்ற வகையில் உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள்.

ஸ்டார் ஹோட்டல்களில் எல்லாம் கதவை திறந்து விடுவதற்கு, லிப்டை இயக்குவதற்கு, நம் லக்கேஜ்களை ரூமில் கொண்டுவந்து வைப்பதற்கு என எல்லாவற்றிற்கும் பணியாளர்கள் இருப்பார்கள். சில இடங்களில் அந்த பணியாளர்கள் புன்னகையில் பணம் பல்லிளிக்கும்.

நாம் ரூமில் தங்கியிருக்கும் போது என்ன? ஏது? என்று கேட்க நாதியிருக்காது. ஆனால் ரூமை காலி செய்கிறோம் என்று தெரிந்து விட்டால் அத்தனை பேரும் வரிசை கட்டி வந்து நிற்பார்கள் டிப்ஸிற்காக.

எந்த சேவையும் செய்யாமல் பணத்திற்காக வந்து நிற்கும் அவர்களை பார்க்கும்போது யாருக்கும் எரிச்சல் வரும். நானும் என் நண்பரும் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டலிலும் இப்படி நடக்க, என் நண்பர், வாடிக்கையாளர் திருப்தியை அறிவதற்காக வைத்திருந்த பதிவேட்டில் கோபமாக எழுதிவிட்டு வந்தார், ‘ஸ்டார் ஹோட்டல் என்கிறீர்கள். பிறகு திரும்பிய பக்கமெல்லாம் பிச்சைக்காரர்களை நிப்பாட்டி வைத்திருக்கிறீர்களே. ஏன்?’

உழைக்காமல் பெறுகிற பணம்கூட ஒரு வகையில் பிச்சைதானே?

இரட்டைச் சம்பளம் எதிர்பார்த்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் இரண்டு பேரின் வேலையை செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.

வாழ்வில் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் எப்போதும் சம்பளத்தை விட கூடுதலாக வேலை செய்பவராக இருங்கள்.

அது ஒரு மிகப்பெரிய ஹோட்டல் குழுமம். அதில் புதிதாக சேர்ந்த மேலாளர் ஒருவருக்கு மூத்த மேலாளர் பணிச்செயல்பாடுகளை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அந்த ஹோட்டல் குழுமத்தின் சி.இ.ஓ, ”ரமேஷ் நீங்க ப்ரீயா இருக்கும்போது என் ரூமுக்கு வாங்க” என்ற படியே நகர்ந்தார். புதிய பணியாளருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கேட்டே விட்டார். ”சார், நம் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், என் ரூமுக்கு வா என்று கட்டளையே பிறப்பிக்கலாம். ஆனால் உங்களைப்பார்த்து இவ்வளவு நட்பாக பேசுகிறாரே.”

”அதுவா, நாங்கள் இருவரும் இந்த ஹோட்டலில் ஒரேநேரத்தில் ஒரேவிதமான பணியில் சேர்ந்தோம். அந்த நட்புதான் காரணம்” என்றார் பெருமையோடு.
இப்போது புதிதாக வந்தவர், தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் கேட்டார், ”அப்படியென்றால் நீங்கள் மட்டும் ஏன் மேலாளராகவே இருக்கிறீர்கள். அவர் மட்டும் எப்படி முன்னேறி இந்த பொறுப்பிற்கு வந்தார்?”

ரமேஷ் சொன்னார். ”நான் சம்பளத்திற்காக வேலை பார்த்தேன். அவர் நிறுவனத்திற்காக வேலை பார்த்தார்.” வேலைக்கு சேர்ந்தவுடன், எந்த நிறுவனத்திலும் சம்பளத்தை முதலில் கொடுத்து வேலை செய்யச்சொல்வதில்லை. எனவே வேலை தான் முதலில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

வேலைதான் முக்கியம் என்று நினைப்பவருக்குத்தான் சம்பளம் அதிகம் கிடைக்கும். எப்படி என்பதை அடுத்த இதழில் விரிவாக பார்ப்போம்.

  1. Sudha

    really i like that Ramesh character becoz now a days no one is ready to accept the fact that they didn’t work for the company…

Leave a Reply

Your email address will not be published.