நமது பார்வை

சூழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிராய் உள்ளடங்கி ஒலித்துக் கொண்டிருந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

பொன்னான கனவுகளுடன் அன்னா ஹசாரே மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டத் தொடங்கி விட்டார். அவருக்கு அதிக வேலை வைக்காமல் பொதுமக்களும் பொதுநல இயக்கங்களும் தாமாக முன்வந்து அன்னா ஹசாரே அருகே நிற்கிறார்கள்.

மக்கள் பார்வையில் நம்பிக்கை பெறாத எந்த இயக்கமும் எழுச்சி பெற்றதில்லை. பல கோடி உள்ளங்களுக்குள் உறங்குகிற கனவையும் கனலையும் உசுப்புகிற உரத்துடன் ஒரு மனிதர் வருகிற போதெல்லாம் மக்கள் புத்தெழுச்சி பெற்றுப் புறப்படுகிறார்கள்.

தோன்றுகிற இயக்கங்களின் தூய கொள்கைகளும் தலைமையின் நம்பகமும் மட்டுமே வரலாறுகளை வளர்த்தெடுக்கும் வல்லமை கொண்டவை.

தனிமனிதர்களை விடவும் தத்துவங்களை முன்னிலைப்படுத்தும் இயக்கங்களுக்கே நிலையான பெருமைகள் உண்டு.

ஊழலுக்கெதிரான இயக்கத்தின் உள்ளீடாக மக்கள் சக்தி இருப்பதை அரசியல்வாதிகளும் அரசு இயந்திரங்களும் உணர வேண்டும்.

இது புரட்சி இயக்கம் மட்டுமல்ல. வளர்ச்சி இயக்கமும்கூட. இந்தியாவை வல்லரசாக வளர்க்கும் கனவுக்கு முளைத்திருக்கிற இரண்டாவது சிறகு.

அறிகுறிகளையும் அலைவீசும் ஆர்வத்தையும் காணும்போது மறுபடியும் ஒரு மக்கள் இயக்கம் உருவாகும் அடையாளங்கள் தோன்றுகின்றன.

ஆக்கபூர்வமாய் ஆரோக்கியமாய் இந்த இயக்கம் வளரும் என்ற நம்பிக்கை வருகிறது. இது நிகழ்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *