பிஸினஸ்ல பின்னுங்க

– கிருஷ்ண வரதராஜன்

பில்கேட்ஸின் பிஸினஸ் அட் தி ஸ்பீடு ஆஃப் தாட்ஸ் புத்தகத்தை கடந்த வாரம் மறு படியும் படித்தேன். அந்தப் புத்தகம் எனக்குப் பிடித்துப் போனதற்கு அதன் தலைப்பும் ஒரு காரணம், ‘எண்ணங்களின் வேகத்திற்கு வணிகம் செய்யுங்கள் ‘.

வணிகத்தைப் பொறுத்தவரை, ‘இதை நாம் செய்யலாமா’ என்று புதிய ஐடியா ஒன்றை நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கையில் நான்கு பேர் அதை செய்தே முடித்திருப்பார்கள். உலகம் அவ்வளவு வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

>மேலும்…” />

ஒலியின் வேகத்தை விட ஒளியின் வேகம் அதிகம். ஆனால் எண்ணங்களின் வேகம் ஒளியின் வேகத்தைவிடவும் அதிகம். அமெரிக்கா என்று நினைத்த அடுத்த நொடி நம் மனம் சுதந்திர தேவி சிலை இருக்கும் இடத்திற்கு சென்று விடுகிறது. எண்ணங்களின் வேகம் அப்படி. அதனால்தான் எண்ணங்களின் வேகத்திற்கு வணிகம் செய்யச் சொல்கிறார் கேட்ஸ்.

சில மாதங்களுக்கு முன்பு சாவித்ரி போட்டோ ஹவுஸ் சென்றிருந்தேன். நண்பர் கிரி என்னிடம் டாப்லெட் பிஸி எனும் கைக்கணிணியை கொடுத்து உபயோகப்படுத்திப் பார்க்கச்சொன்னார். இயக்கிக் பார்க்கும்போது உலகமே உள்ளங்கையில் அடங்கிவிட்டது. உடனே வாங்கி விடலாம் என நான் நினைத்ததற்கு காரணம் இரண்டு.
ஒன்று. அதிலிருந்த பல புதுமையான வசதிகள். முக்கியமாக ஸ்வைப். பொதுவாக ஒரு கட்டுரையை டைப் செய்ய வேண்டுமென்றால் கீ போர்டில் டைப் செய்ய வேண்டும் அல்லது டச் ஸ்கிரீன் என்றால் டிஜிட்டல் ஸ்கிரீனில் தெரியும் எழுத்துக்களை விரல் பதித்து டைப் செய்ய வேண்டும்.

ஆனால் ஸ்வைப்பில் ஒரு வார்த்தையில் வரும் எழுத்துக்களின் மீது விரல்களை நகர்த்திக் கொண்டே போனால் போதுமானது. அதாவது ஒரே விரலில் ஒரு கட்டுரையை சுலபமாக எழுதிவிட முடிகிறது. டைப் செய்வதை விட இரண்டு மடங்கு வேகத்தில் வேலை முடிந்து விடுகிறது.

நண்பர் கிரி டாப்லெட் பிஸியில் சிம் கார்டை நுழைத்து நெட்டை இயக்கிக் காண்பித்தார். நெட்டில் உலாவிக்கொண்டிருந்தபோது இன்னுமொரு ஆச்சரியத் தகவல் கிடைத்தது. அடுத்து கண்களாலேயே டைப் செய்வதற்கான வசதி வர இருக்கிறது. டைப்செய்ய வேண்டிய எழுத்துக்களை பார்த்தால் போதுமானது. ஐ ரைட்டர் எனப்படும் முறை இன்னும் வேகமாகவும் சுலபமாகவும் டைப் செய்ய உதவியாய் இருக்குமாம்.
இரண்டு: எல்லோரும் ஆச்சரியப்பட்டு கேட்டு வாங்கி பார்க்கும்படியான ஒன்று என் வசம் வரப்போகிறது. இப்போதுதான் அறிமுக மாகியிருக்கிறது என்று நண்பர் சொன்னதால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டேன்.

ஆனால் நான் நினைத்தது போல நடக்கவில்லை. யாரும் ஆச்சரியமாக வாங்கிப் பார்க்கவில்லை.

நான் செல்லும் நிறுவனங்களில் எல்லாம் அதன் நிறுவனத்தலைவர்கள் தங்கள் டேபிளில் டாப்லெட் பிஸியை அழகாக ஸ்டாண்டில் வைத்திருந்தார்கள்.
எனக்கு அப்போது தோன்றியது. லேட்டஸ்ட் மாடல் என்று எந்த பொருளையும் நீங்கள் வைத்திருக்க முடியாது. காரணம், அதை நீங்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைவதற்குள் அடுத்த மாடல் அறிமுகமாகி விடுகிறது.

எண்ணங்களில் வேகத்தைவிடவும் விரைவானது மாற்றங்களின் வேகம். கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒவ்வொன்றும் அதி நவீனமாக மாறிக் கொண்டே இருக்கிறது.
மாற்றங்களின் வேகமும் மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளும் வேகமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

எனவே மாற்றத்தின் வேகத்திற்கு வணிகம் செய்யுங்கள்.

வணிகத்தில் உண்மையில் ஜெயிக்க வேண்டு மென்று நினைத்தால் விரைவாகச் செயல்படுங்கள், மாற்றத்தின் வேகத்தைப் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *