– கிருஷ்ணன் நம்பி
இந்தக்கதை உங்கள் கதையாக இருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையோடு படிக்கத் துவங்குங்கள்.
தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் அந்த ரயிலில்தான் திருவாளர் டென்ஷன் அமர்ந்திருந்தார். அவரைப்பற்றி தெரியாததால் அவரோடு பயணம் செய்த எல்லோரும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.
விக்கல் எடுத்த ஒருவர், திருவாளர் டென்ஷன் மினரல் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “சார் கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன்” என்றார். “பைப்ல வரும் போய் குடிச்சிக்க” என்று பதில் வந்தது, வழக்கமான டென்ஷனோடு. கேட்டவருக்கு விக்கல் நின்று விட்டது.
>மேலும்…” />
அடுத்தொருவர் திருவாளர் டென்ஷன் படித்துவிட்டு ஓரமாக சுருட்டி வைத்திருந்த தினசரியைப் பார்த்துவிட்டு, “சார் கொஞ்சம் பேப்பர் கொடுங்களேன். படிச்சிட்டு தர்றேன்” என்றார். “ஓசி பேப்பர் படிக்கிறதுக்கின்னே ரயில்ல வருவீங்களாய்யா. காசு கொடுத்து பேப்பர் வாங்கிற பழக்கமெல்லாம் கிடையாதோ..” என்றவாறே ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டார்.
இரண்டு நாள் பயணத்தில் இது போல நிறைய நடந்தது.
திருவாளர் டென்ஷன் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது. தனது பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கி இரண்டடிதான் நகர்ந்திருப்பார், அப்போது ரயிலில் அமர்ந்திருந்த ஒருவர் அவசரமாய் அழைத்தார், ‘சார் சார், விட்டுட்டுப் போறீங்களே’
திருவாளர் டென்ஷன் சட்டென்று தனது லக்கேஜ்களை பார்த்தார். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார், அங்கேயும் எதையும் காணோம். எதையும் விட்டுவிடவில்லை. பிறகு எதற்காக அழைத்தீர்கள் என்பதுபோல கேள்விக்குறியோடு பார்த்தார், திருவாளர் டென்ஷன்.
கூப்பிட்டவர் சொன்னார், “உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை எல்லோர் மனதிலும் விட்டுவிட்டுப் போகிறீர்களே”.
திருவாளர் டென்ஷனுக்கு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. இரண்டு நாட்கள் எல்லோருடனும் பயணித்தேன். இந்த நாட்களில், ‘என்னைப்பற்றி எப்படிப்பட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்?’ என்று யோசிக்கத் தொடங்கினார்.
தலைவராக விரும்புகிறவர்கள் முதலில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று, என்னைப்பற்றி எப்படிப் பட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறேன்?
ஏனென்றால் நீங்கள் ஏற்படுத்தப் போகும் அபிப்ராயத்தை பொறுத்துத்தான் இந்த உலகம் உங்களை நோக்கி வருவதும் அல்லது உங்களை விட்டு விலகி ஓடுவதும் இருக்கிறது.
எனவே இப்பொழுதிலிருந்து யோசியுங்கள், ‘என்னைப்பற்றி எப்படிப்பட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறேன்?’
உங்கள் நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களிடம் என்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்? இவரிடம் எந்த வேலை கொடுத்தாலும் ரிசல்ட்டோடு வருவார் என்றா? இவரிடம் எந்த வேலை சொன்னாலும் நடக்காது என்றா? உங்களோடு இணைந்து பணியாற்றுகிற வர்களிடம் என்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்?
இவரிடம் சந்தேகம் கேட்டால் சிறப்பாக வழி காட்டுவார் என்றா? போய் நின்றால் எரிந்து விழுவார். இவர் பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்றா? உங்கள் கீழ் பணிபுரிபவர் களிடம் என்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்? ‘நல்ல ஒரு தலைவரின் கீழ் பணியாற்றுகிறேன் என்ற பெருமிதத்தையா?’, ‘எப்ப இந்த ஆள மாத்துவாங்கன்னு தெரியலையே?’, என்ற ஆதங்கத்தையா?
நீங்கள் திட்டமிட்டுவிட்டால் எப்படிப் பட்ட அபிப்ராயத்தையும் ஏற்படுத்திவிட முடியும். தேவை, சிறு ஒத்திகை மட்டுமே.
SANKARAN
good message