இந்த வாரம் திலகவதி ஐ.பி.எஸ்.
இன்று புகழின் உச்சியைத் தொட்டவர்களும் தங்களுக்கான நம்பிக்கையை எங்கிருந்தோ பெற்றிருப்பார்கள். அந்த அனுபவங்கள் குறித்து உதவி ஆசிரியர் கனகலட்சுமியுடன்
உரையாடுகிறார்கள்
பிரபலங்கள்)
நான் முதன்முதலில் சென்னைக்கு என் இளநிலை பட்டமளிப்பு விழாவிற்காக தந்தையோடு வந்தேன். நகரின் பிரம்மாண்ட கட்டிடங்கள், புதிய நாகரீகம், அசுர வளர்ச்சி அடைந்திருந்த போக்குவரத்து என அனைத்தும் மிரட்சிக்குள்ளாக்கின. சென்னை எனும் மாபெரும் நகரம் கொடுத்த மிரட்சியில் என முதுநிலையை சென்னையில் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக்கூட மாற்றிக்கொள்ள முடிவு செய்தேன்.
அதற்கிடையே நடந்த திருமணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. என் திருமண வாழ்வில் பிணக்கு ஏற்பட்டு, கையில் நான்கு மாதக் குழந்தையுடன் தனிமைப்படுத்தப் பட்டபோது எனக்கு வயது பதினேழு.
ஒரு குழந்தை மன நிலையில் இருந்த எனக்கு கையில் குழந்தை. எனக்கு பிறந்திருக்கும் இப்பெண் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கிருப்பது அப்பொழுதுதான் மனதில் திடமாக உறைத்தது.
அக்குழந்தை வளர்வதற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கு வருமானம் வேண்டும். எங்கு செல்வது, என்ன செய்வது எனவும் தெரியாமல் நின்ற வேளையது.
வாழ்க்கையும் சூழலும், நான் பயந்து விலகியிருந்த சென்னைக்கே என்னை கொண்டு சேர்த்தது. எந்த உதவியும் இன்றி, யார் துணையும் இன்றி கையில் நான்கு மாதக் குழந்தையுடன் சென்னையில் ஒரு அசாத்திய துணிச்சலுடன் வந்திறங்கிய அந்த நொடிதான், இன்றைய என் வெற்றிகள் அனைத்திற்கும் அடித்தளம்.
சென்னையில் ஓர் உறவினர் இல்லத்தில் தங்கியிருந்தேன். கையில் காசு கிடையாது. அழும் குழந்தைக்கு திருப்திகரமாக பால் கொடுக்க முடியாத நிலை. கையில் இருக்கும் பணத்தை பைசா பைசாவாக எண்ணி செலவு செய்த நொடிகள் அவை.
என் தாயார் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் போதுமான வசதிகளும் வாய்ப்புகளும் இருந்த போதும், எனக்கிருந்த வைராக்கியத்திலும், தன்மானத்திலும் வறுமையை விரும்பி ஏற்றேன்.
இன்று எப்பேர்ப்பட்ட தடைகள் தோல்விகள், போராட்டங்கள் வந்தாலும் அன்று யார் துணையும் இன்றி சென்னை வந்திறங்கிய அந்த நொடியை ஒருமுறை நினைத்துக் கொள்வேன். அந்த தருணத்திற்கு முன்பு இன்று இருக்கும் தடைகள் எல்லாம் வெறும் துகள்கள் என்ற உத்வேகம் பிறக்கும். நான் சென்னை வந்த அந்த நாட்களில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை தொட்டுக்கொண்டிருந்தது. அப்போது எனக்கொரு தற்காலிகப் பணி கிடைத்திருந்தது.
அந்தப் பணியிலிருந்தவாறே எண்ணற்ற போராட்டங்களை சந்தித்துக்கொண்டிருந்தேன். நான் சிறு வயதிலிருந்தே படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவி. இனி பிழைக்கவேண்டும் என்றால் படிக்க வேண்டும். இனி படிப்புதான் நமக்கு எல்லாமும் என்ற வெறியில் எம்.ஏ.படிப்பில் சேர்ந்தேன்.
தனிமை, வறுமை, நோயுற்ற குழந்தை, வயது முதிர்ந்து எனக்கு உற்ற துணையாக என்னோடு இருந்த என் பெரியம்மா என அனைத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இதற்கிடையே என் படிப்பும் தொடர்ந்தது.
அந்த நாட்கள் எல்லாம் என் வாழ்வில் காரிருள் கப்பிக்கிடந்த இருண்ட பகுதி என்ற போதும், அசுரத்தனமாக உழைத்தேன். என் பட்டப் படிப்பும் முடிந்ததும் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். ஆகிய தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் முழுமூச்சாக இறங்கினேன்.
ஜெராக்ஸ் போன்ற வசதிகள் இல்லாத கால கட்டம் அது. ராஜஸ்தான் புக் கிளப்பிலும், பேராசிரியர்களிடமும் இரவல் வாங்கிப் படிப்பேன். விடிவதற்குள் புத்தகத்தை திருப்பித் தரவேண்டும். ஒரு நாளில் எல்லாம் 4 மணி நேரத்திற்கு மேல் உறங்க முடியாது. அந்த தேர்விலும் வெற்றி கண்டு ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றேன்.
ஆனால் என் பணிக்காலமும் ஓர் முள் படுக்கையாகவே மாறிப்போனது. எனக்கான அங்கீகாரம் எண்ணற்ற முறை மறுக்கப்பட்டும் நான் யாரிடமும் உதவிக்குச் செல்லவில்லை. நடு நிலைமையோடு நடந்து கொள்வதே அரசு அதிகாரியின் பண்பு என்பதிலும் மொழி, இனம், மதம், ஜாதி, கட்சி, வட்டாரம் ஆகிய பாகுபாடு களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன்.
எனக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கல்களாலும், தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளாலும் என்னைப் பற்றி பலரும் பலவிதமாய் முனைந்து குற்றம் சுமத்தினர். என் திருமண வாழ்வின் சறுக்கல்கள் என்னை வெகுவாக பாதித்தது.
என்னைப்பற்றி தவறாக எழுந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டு போராட வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் என் மீது பழி சுமத்துகிறவர்கள் தற்காலிக வெற்றியை அனுபவிப்பார்கள். எனக்கோ பள்ளத்தாக்கில் விழுந்ததுபோல் தோன்றும். இருந்தும் அதுபோன்ற சரிவுகளில் இருந்து என்னை நானே மீட்டெடுக்க துணை செய்தது இலக்கியம்.
தமிழன்பனின், ”பத்தாவது முறை விழுந்து விட்டோம் என்று வருந்தாதே. ஒன்பது முறை விழுந்தபோதும் எழுந்து நின்றவன் அல்லவா நீ” என்ற வரிகளும், மேத்தாவின், ”ஓடி வந்து கை குலுக்க யாரும் இல்லையா? நீயே குலுக்கிக் கொள்” என்று நான் படித்த படிப்பும், பாரதியின் வரிகளும் தான் எனக்கு துணை நின்றன
கண்ணதாசனின் வரிகளில் இடம்பெற்ற பாடலான,
”காலமகள் கண்திறப்பாள் சின்னையா – நாம்
கண் கலங்கி, கவலைப்பட்டு என்னையா?
நாலுபக்கம் வாசலுண்டு செல்லையா- அதில்
நமக்கும் ஒரு வழியில்லையா சொல்லையா?’
என்ற வரிகளைக் கேட்கும்போதெல்லாம் நிச்சயம் எனக்கொரு வழியிருக்கும் என்று நம்பினேன்.
என் பணிகள் முடக்கப்பட்டபோது, எனக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்ட போது, ஒரு வேதம் போல எனக்குள் எப்போதும் சொல்லி கொண்டே இருப்பேன்.
”பாதகம் செய்பவரைக் கண்டால்
பயம் கொள்ளலாகாது பாப்பா…
மோதி மிதித்து விடு பாப்பா -அவர்
முகத்திலே உமிழ்ந்து விடு பாப்பா”
ஐ.பி.எஸ்.ஸாக இருப்பவர்க்கு பதவி உயர்வு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மிக இயற்கையாக நிகழக்கூடிய ஒன்று. பணி உயர்வு என்பது நான்காண்டு களுக்கு ஒருமுறை தன்னை போல் மிக இயல்பாக வரும். ஆனால் எனக்கு அதுவும் பல போராட்டங்களுக்குப் பிறகே கிடைத்தது.
ஒவ்வொரு முறையும் போராட்டங்கள் நடத்தி நான் பதவி உயர்வுக்கு தகுதி யானவள் என்று என்னை நானே நிரூபித்த பின்தான் எனது இடத்தை அடைவேன்.
அப்போதெல்லாம் இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏதாவது சுயமாக தொழில் செய்தால் என்ன என்றெல்லாம் தோன்றும்.
காரணம், நான் வாழ்க்கையை அடிமட்டத்தில் துவங்கினேன். எளிதாக வாழ்வது எனக்கொன்றும் கடினமில்லை. ஒவ்வொரு முறையும் அவமானப் படுத்தப்பட்டு, நிராகரிக்கப்பட்டு, அங்கீகாரம் மறுக்கப்பட்டு ஒரு குற்றம் சுமத்தப்பட்டவளாகவே நான் சித்தரிக்கப்பட்டிருந்தேன்.
இந்த சமயத்தில் நான் ராஜினாமா செய்தால் என் மீது சுமத்தப்பட்ட குற்றங்களெல்லாம் உண்மை என்றாகிவிடும். கண்ணகி, ”சிலம்புல கொண்மின்” என்று கூறி அவள் சிலம்பை உடைத்து உண்மையை நிரூபித்த பின்தான், தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் என்பதையும் ஞானிகளும், அறிவு முதிர்ந்தோரும் நிரம்பியிருந்த அவையில் பாஞ்சாலியின் துகில் உரிக்கப்பட்ட போது, ஆடைகள் குலைந்ததே தவிர அவள் ஆளுமையும் வாதங்களும் குறையவில்லை. எல்லோரும் போராடித்தான் வென்றிருக்கிறார்கள் என்பதையும் படித்தவள் நான்.
என் மீது இருந்த குற்றங்கள் அனைத்தையும் தக்க ஆதாரத்துடன் தகர்த்தெறிந்து எனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தைப் பெற்றேன். ஒவ்வொரு பதவி உயர்வு கிடைக்கும்போதும் இப்போதுதான் புதிதாக ஒரு பதவிக்கு வந்துள்ளோம். இதை செவ்வனே செய்ய வேண்டும் என்று மனம் உந்தும்.
அந்த வேலையின் இறுதியில் அதற்கான அங்கீகாரம் மறுக்கப்படும். மீண்டும் போராட்டம். மீண்டும் வெற்றி. இது எனக்கு பழக்கப்பட்டு விட்டது.
என் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்கள், துயரங்கள், துன்பங்கள்தான் என்னை நெறிப் படுத்தியிருக்கின்றன. எனக்குள் இருக்கும் தைரியத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கின்றன. எனக்கு கிடைத்த பெற்றோர்களும் மிக வித்யாசமான சிந்தனை உடையவர்கள். எந்த சிக்கலையும் ஆராய்ந்து இதில் கலக்கமடைய எதுவும் இல்லையே என்று அவர்கள் சொல்லக் கேட்டிருக்கி றேன். அந்தச் சிந்தனைகள்தான் எனக்கு கை விளக்கு.
விவேகானந்தரை ஆழமாகப் படித்தவள் நான். அவர் சொல்வது போல், ”இவ்வுலகில் ஏற்கெனவே போது மான துன்பங்கள் உள்ளன. நீ உன்னுடை யதை கலக்க வேண்டாம்.
நீ செல்லும் இடங்களில் உன்னால் முடிந்தளவு ஓர் துளி நம்பிக்கையை, இன்பத்தை விதைக்க முடிந்தால் நீ உன் அறையை விட்டு வெளியே வரலாம்” என்பார்.
மனச்சோர்வும், நம்பிக்கையின்மையும் இருந்தால் நான் வெளியே வந்திருக்கவே கூடாது. எனக்கு இத்தனை துயரங்கள் இருக்கின்றன என்று என் அலுவலக நாற்காலியில் நான் அமர்ந்து கண்ணீர் வடித்தால் என்னால் சிலவற்றைச் செய்ய முடியும் என்று என்னை நம்பி வருவோர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
“spread your sunshine”என்ற வரிகள் என்னை மிகவும் ஈர்த்தது. நம் துன்பத்தை தன்னளவில் வைத்துக்கொண்டு என்னிடம் வருவோர்களிடம் நம்பிக்கையோடு நடந்துகொள்வதே என் கடமையெனக் கருதுகிறேன்.
எப்பேர்ப்பட்ட சிக்கல்களும், தடைகளும் நிச்சயம் கடந்து போகும். வரலாறு என்பது நாடாண்ட மன்னர்களுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.
ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த வாழ்வை அசைபோட்டு பார்க்க வேண்டும். அதில் எது சரி, எது தவறு என்று பார்க்கிறபோது அதிலிருந்து எப்படி விடுபடுவது என்ற விடையும் இருக்கும். என் உச்சபட்ச பதவியான டி.ஜி.பி. பொறுப்பும் கோர்ட்டில் வழக்கு நடத்தி என்னை தகுதியானவள் என்று நிரூபித்த பின்பே எனக்கு கிடைத்தது.
இத்தனை போராட்டங்களுக்கு பின்னும் அடிநாதமாக என் மனதில் இருப்பது அன்று எந்த உதவியும் அற்று நான் சென்னையில் வந்திறங்கிய அந்த நாட்கள்தான். எந்தத் தவறும் செய்யவில்லை. எத்தனை போராட்டங்கள் வந்தாலும் ஜெயித்து விடுவேன் என்று நம்பிக்கையை விதைத்த நொடிகள் அவை.
Leave a Reply