வாழ வேண்டும் என்கிற வெறி வேண்டும்

LIC திரு.ட.சீனிவாசன்
தலைவர் – Life underwriters guild of India

திரு.ட.சீனிவாசன் எல்.ஐ.சி முகவராக தனது பணியைத் தொடங்கி இன்று பல்லாயிரக்கணக்கான எல்.ஐ.சி முகவர்களுக்கும், வளர்ச்சி அதிகாரிகளுக்கும் வழி காட்டியாக விளங்குபவர். எல்.ஐ.சி முகவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தொழிலில் மிகப் பெரிய வெற்றிகளைக் குவிக்கவும் LUGI என்கிற அமைப்பைத் தொடங்கி வழிநடத்தி வருபவர்.

மிகச்சிறந்த பேச்சாளர், ஆளுமைமிக்க தலைவர், பல்லாயிரக் கணக்கான முகவர்களின் முன்னோடி. அவருடன் ஓர் நேர்காணல்.

உங்கள் இளமைக்காலம் பற்றி?

வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் பிறந்தேன். ஆம்பூர் இந்து உயர்நிலைப் பள்ளியிலும் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியிலும் படித்தேன். என் தந்தை திரு. ஆர். பார்த்தசாரதி அவர்கள் ஓர் ஆசிரியர், இலக்கியவாதி. சிறந்த மொழிபெயர்ப்பாலரும் கூட. வேலூர் கோட்டை மைதானத்தில் நடக்கிற பெருங்கூட்டங்களில் மகாத்மா காந்தியடிகள் பேச்சையும், சர்தார் வல்லபாய் பட்டேல் பேச்சையும், ஆளுநர் ஸ்ரீ பிரகாசா பேச்சையும் அவர் மொழி பெயர்க்கக் கேட்டிருக்கிறேன்.

அவர் விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தார். ஆம்பூரிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளி உருவாக முக்கியக் காரணகர்த்தா அவர். எழுபது வயது வரையில் ஆசிரியராகவே வாழ்ந்தார். நானும் எனது பணி வாழ்வை ஆசிரியராகத்தான் துவங்கினேன். பி.ஏ. பியூர் மேத்தமெடிக்ஸ் படித்ததால் ஆசிரியராக ஓராண்டு காலம் பணிபுரிந்தேன்.

அதன்பிறகு பகுதி வளர்ச்சி அலுவலகத்தில் விரிவாக்க அலுவலராக வேலை பார்த்தேன். அப்போதுதான் கிராம மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்கள் வாழ்க்கை முறைகளையும் தேவைகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.

நேர்மையான அரசியல் தலைவர்களாக விளங்கிய கக்கன், காமராஜ், வெங்கடசாமி நாயுடு போன்றவர்களுடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்பும் அதே காலகட்டத்தில்தான் கிடைத்தது. மக்களை சந்தித்துப் பழகப்பழக என் எண்ணங்களும் பார்வைகளும் விரிவடைந்தன.

ஆயுள் காப்பீட்டுக் கழக முகவரானது எப்போது?

1961 பிப்ரவரியில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கோவைக் கிளையில் வேலைக்குச் சேர்ந்தேன். தந்தையார் ஓய்வு பெற்றிருந்த நேரம். குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலை. எனவே, சம்பளம் மட்டும் போதவில்லை. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரிந்து கொண்டே முகவராகவும் விளங்க அப்போது அனுமதி இருந்தது. 1976-ல் நெருக்கடி நிலை பிரகடனமான போதுதான் அரசுப் பணியில் இருப்பவர்கள் சொந்தத் தொழில் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. முதல் ஆளாக வெளியேறி முகவராக பணியைத் தொடர்ந்தேன். அதன் பிறகு அடுக்கடுக்காக முன்னேற்றங்கள்தான்.

முகவர்கள் உலகத்தில் தன்னிகரற்ற தலைமைப் பண்போடு திகழ்கிறீர்கள். இதன் ஆரம்ப காலம் பற்றி?

அன்றைய அரிமா இயக்கம் என்னைப் பெருமளவில் வடிவமைத்தது. அரிமாவில் சேர்ந்த ஐந்தாவது ஆண்டில் செயலாளரானேன். செயலகப் பணிகளில் முழுமையான பயிற்சி மேற்கொண்டது என் வாழ்வில் மகத்தான அனுபவமாய்த் திகழ்ந்தது. தகவல் தொடர்பு, நம்பிக்கை, சுய கட்டுப்பாடு, சுயமரியாதை, சுயமேம்பாடு போன்ற வெவ்வேறு அம்சங்களில் எனக்கிருந்த ஈடுபாடு அங்கே முழுமையாக வளர்ந்தது.

அப்போதுதான், நான் சார்ந்திருக்கும் முகவர் சமுதாயத்தின் நிலை குறித்துச் சிந்தித்தேன். பல முகவர்களுக்கு, தங்கள் தொழில் குறித்துத் தாழ்வு மனப்பான்மை இருந்தது. வேறு வேலை கிடைக்காதவர்கள்தான் முகவர் வேலைக்கு வருவார்கள் என்கிற எண்ணம் இருந்தது.

இந்த நிலையை மாற்றுவதற்காக கோயமுத்தூர் டிவிசினல் கவுன்சில் என்ற அமைப்பைத் தோற்றுவித்து சின்னச் சின்னக் கூட்டங்களை ஏற்பாடு செய்து பல பேச்சாளர்களை அழைத்து வந்தேன். பிறகு அதன் பார்வை விரிந்து அகில இந்திய அளவில் செயல்படும் “லூகி” (LIFE UNDERWRITERS GUILD OF INDIA) என்கிற அமைப்பைத் தொடங்கினேன். ஆண்டுக்கொருமுறை இதன் மாநாடு நடைபெறுகிறது. பலதரப்பட்டவர்கள், பலமொழி பேசுபவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இன்று இந்தியா முழுவதும் 2400 பேர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அடுத்த கட்டமாக உலக அளவில் முகவர்களுடனான தொடர்பை விரிவுபடுத்த நினைத்தேன். இந்தியாவையே எடுத்துக் கொண்டால், 11லட்சம் முகவர்கள் உள்ளனர். ஆனால் நம் நாடு, உலக அளவிலான முகவர்கள் அமைப்பில் உறுப்பினராக இல்லை. சீனாவில் நடந்த ஒரு கூட்டத்தில், இந்தியாவை சர்வதேச அமைப்பில் இணைப்பதற்கான விண்ணப்பம் தந்தோம். அது ஏற்கப்பட்டது. இப்போது உலக அளவிலான அமைப்பில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இந்தியா இடம்பெற்ற நான்காவது ஆண்டில் என்னை செயலாளராகத் தேர்ந்தெடுத்தார்கள். 2006-ல் பெங்களூரில் சர்வதேச செயற்குழுக் கூட்டத்தை நடத்தினேன்.

மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள் அமைப்பு என்று ஒன்று உண்டு. காப்பீட்டு உலகத்தின் உச்சகட்ட வாய்ப்பு என்று அதைச் சொல்லலாம். அதன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தனக்கு சொந்தமான ஜெட் விமானத்தில் வருகிறவர்களை நீங்கள் அங்கே சந்திக்க முடியும். அது போன்ற பல கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். கோலாலம்பூர், சிங்கப்பூர் போன்ற பல இடங்களில் உள்ள அமைப்புகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு வருகிறேன்.

நாடு தழுவிய அளவில் முகவர்களுக்கு வழிகாட்டும் முன்னோடி நிபுணராய் நீங்கள் உருவானது எப்படி?

கோவைக்கு நான் வந்து தொழில் தொடங்கிய பிறகு, இந்தத் துறைசார்ந்த அணுகுமுறையிலேயே ஓர் அடிப்படை மாற்றத்தை செய்தேன். இந்தத் தொழிலை கௌரவமாக செய்து நிறைய வசதிகளையும் பெறமுடியும் என்று நிரூபிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆயுள் காப்பீட்டு முகவர்கள் தனியாக ஓர் அலுவலகத்தை அமைப்பது என்பதையே நான்தான் முதலில் தொடங்கினேன். அதற்குமுன், ஒரு முகவர் தனக்கென்று ஓர் எழுத்தாளரை நியமிப்பது என்பதே சாத்தியமில்லாததாகக் கருதப்பட்டது.

இன்று என்னிடம் 23 பேர் பணிபுரிகிறார்கள். 7000 பாலிசிதாரர்களுக்கு சேவை செய்கிறோம். பலரும் இதைப் பார்த்து பின்பற்றி நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.

நான் படித்த புத்தகங்கள், உலகில் பார்த்த புதுமைகள் ஆகியவற்றால் எனக்குள் எழுந்த சிந்தனைகளை நடைமுறைப் படுத்தினேன். அது நல்ல பலன் கொடுத்தது.

இந்தியாவிலிருந்து பலரும் என் அலுவலகத்திற்கு வருவார்கள். என் அலுவலகத்தை அவர்கள் “காப்பீட்டு முகவர்களின் மெக்கா” என்று சொல்வதுண்டு. அலகாபாத், டெல்லி, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களிலிருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் முகவர்கள் இங்கே தினந்தோறும் வருவதை நீங்கள் காண முடியும்.

காப்பீட்டு முகவர்கள், தங்கள் அன்றாடப் பணிகளை ஆவணப்படுத்தி, தகவல் தொடர்பு முறைகளைக் கையாண்டு வரையறுக்கப்பட்ட செயல்முறைகளைக் கொண்டுவர முடியுமா என்கிற கேள்விக்குறி இருந்தது. அந்தக் கேள்விக்குறியை ஆச்சரியக்குறியாய் மாற்றியிருக்கிறோம் என்கிற மனநிறைவு எனக்கு உள்ளது.

வெற்றிகரமான முகவராக விளங்க, நீங்கள் பரிந்துரை செய்கிற வழிகள் என்னென்ன?

ஒரு முகவரின் முதலீடே, மரணம் பற்றிய சிந்தனையும் பேச்சும்தான். யாரும் விரும்பாத இயற்கைச் சம்பவம் மரணம். யாரும் தவிர்க்க முடியாத இயற்கைச் சம்பவமும் மரணம்தான். DEATH IS CERTAIN. DATE OF DEATH IS UNCERTAIN. மரணம் உறுதியானது. மரணத் தேதி உறுதி செய்யப்படாதது. எங்கள் பகடைக்காயே அந்த நிச்சயமின்மைதான்.

மரணத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாக, மனிதன், தன் குடும்பத்திற்கு சிலவற்றைச் செய்யவில்லையே என்று ஏங்குவான். அந்த நேரத்தில் காப்பீடு கை கொடுக்கும்.

ஒருவர் மரணம் அடைந்ததுமே மக்கள் கேட்கிற முதல் கேள்வி, காப்பீடு செய்திருக்கிறாரா என்பதுதான். வாழ்வில் எல்லாம் முடிந்த நிலையில் ஆயுள் காப்பீடு உயிர்பெறுகிறது. இதை மக்கள் மனதில் ஆழப்பதியும் விதமாக, அவர்கள் புண்படாத வண்ணம் எடுத்துச் சொல்வதில்தான் ஒரு முகவரின் வெற்றி இருக்கிறது.

உண்மையில், முகவர் வேலை என்பது கடும் சவால்களைக் கொண்டது. ஒரு பொருளையோ தயாரிப்பையோ, உங்கள் கண்முன் காட்டி விற்பனை செய்வது சுலபம். நீங்கள் பார்த்திராத ஒன்றை நீங்கள் அனுபவிக்க வாய்ப்பேயில்லாத ஒன்றை உங்களுக்கு விற்பனை செய்வது கடினம். இதில் நிராகரிப்பு நிறைய இருக்கும். மனம் தளரக் கூடாது.

நான் சிலரிடம் கேட்பேன், “உங்கள் காரை எவ்வளவு ரூபாய்க்கு காப்பீடு செய்திருக்கிறீர்கள்” என்று. “ஏழு லட்சம் ரூபாய்க்கு” என்பார்கள். “உங்களுக்கு எவ்வளவு காப்பீடு செய்திருக்கிறீர்கள்?” என்பேன். “நான்கு லட்சம் ரூபாய்க்கு” என்று பதில் வரும். “அப்படியானால் உங்கள் காரை விட உங்களுக்குக் குறைந்த மதிப்புதானா” என்று கேட்பேன். இப்படி பலவிதங்களில் முயன்று புரியவைப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

பொதுவாகவே விற்பனைத்துறை, சேவைத்துறை போன்றவற்றில் வெற்றியாளராக உருவாக அடிப்படைத் தகுதிகள் என்னென்ன?

உண்மையில் சொல்லப்போனால் இதற்குக் கல்வித் தகுதி என்னைப் பொருத்தவரை பொருட்டல்ல. வெற்றி பெற்ற கோடீசுவர முகவர்கள் பலரும் மிகவும் கீழேயிருந்தவர்கள், தான் வாழ வேண்டும் என்கிற வெறி வேண்டும். வாழ்க்கை முறையில் ஒரு நெறி வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் நம்பிக்கை தானாக வந்துவிடும்.

ஏமாற்றங்களை சகித்துக் கொள்கிற பக்குவம் வேண்டும். எல்லோரும் பொறுமை வேண்டும் என்பார்கள். பொறுமை போதாது. பக்குவம் வேண்டும். தோற்றுவிடுவோமோ என்கிற அச்சம் கூடாது.

சிலரைப் பொறுத்தவரை ஒரு முயற்சியில் தோல்வி வந்து விட்டதென்றால் அந்த நாளிலோ, அந்த வாரத்திலோ பார்க்கக் கூடிய மற்ற வேலைகள் எல்லாவற்றையுமே அந்த ஏமாற்றமும், ஏமாற்றத்தால் வரும் மனச்சோர்வும் பாழடித்து விடுகிறது. இது கூடாது. இந்த மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் உத்திகளைச் சொல்லித் தருவார்கள். ஆனால் அதற்கான மனோபாவம் வர வேண்டுமானால் தோல்விகளை அனுபவித்து, அவமானங்களை சகித்துக் கொள்ள வேண்டும். இது எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும்.

உங்கள் அனுபவ அடிப்படையில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

சம்பவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்கிற விஷயங்கள் தான் அனுபவங்கள். நான் பணிபுரிந்த காலத்தில் கிராமப் புறத்தில் ஓர் எளிய மனிதரிடம் 1000 ரூபாய் பெறுவதற்காக ஆறு முறை காலை ஆறுமணிக்கெல்லாம் சென்ற ஓர் அலுவலரைக் கண்டு வியந்திருக்கிறேன்.

2000 ரூபாய் பாலிசிக்காக இடிகரைக்குப் பதினான்குமுறை சென்று பதினைந்தாவது முறை மறுக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. இவையெல்லாம் நம்மை மேலும் பக்குவப்படுத்தும். உழைப்பில் ஒரு வெறி இருந்தால் ஜெயிப்பது தானாகவே நிகழும்.

அதுபோல பலரும் தங்கள் பணிநேரத்தில் பெரும் பகுதியைப் பயணில்லாத வேலைகளிலேயே செலவிடுகிறார்கள். பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்துவிட வேண்டும். அவர்கள் அந்த வேலையை செய்கிறார்களா என்று கண்காணிக்க ஒரு செயல்முறையைக் கொண்டுவர வேண்டும்.

என் அலுவலகத்தில் பணிபுரிகிறவர்களின் பொறுப்புகளை நான் ஈமெயில் வழியாக அனுப்பிவிடுகிறேன். கண்காணிக்கும் பொறுப்பு யாருக்குண்டோ அவருக்கும் ஒரு நகல் கொடுத்து விடுகிறேன். இதன் மூலம் மனம் தேவையில்லாத குப்பைகளை சுமப்பதில்லை. ஊழியர்களுக்குப் பணிகளைப் பிரித்துக் கொடுப்பது வேலைகளை மிகவும் சுலபமாக்கி விடுகிறது.

ஊழியர்கள் வந்து சேர்கிற பாறைகள் போலத்தான். அவர்களை செதுக்கி சிலைகளாக்குவது நம் கடமை.

அதேபோல, சில சமயங்களில் சில வாடிக்கையாளர்கள் மிகக் கடுமையாகப் பேசிவிடுவார்கள். அவர்கள் உறவை நாம் துண்டித்துக் கொள்ளக் கூடாது. வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம். அவர்கள் மனம் வருந்தி நம் நட்பை விரும்புகிற போது அந்த உறவைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.

தனிப்பட்ட முறையில், தொழில் வெற்றி பெற நீங்கள் பின்பற்றும் உத்திகள் என்னென்ன?

இன்றைய சேவை உலகில் கூடுதல் மதிப்பு சேவைகள் மிகவும் முக்கியம். நம் சேவையிலேயே இன்னும் கூடுதலாக என்னென்ன அம்சங்களைச் சேர்க்கிறோம் என்று மிகவும் முக்கியம் சில நினைவூட்டல்களை நானாகவே செய்வேன். வாடிக்கையாளரின் ரசனையையும் விருப்பத்தையும் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த புத்தகங்களை அனுப்புவேன். சில சின்னச் சின்ன அன்பளிப்புகளை அனுப்பி வைப்பேன்.

எனக்கு அவர்கள் தொழில் வாய்ப்பு தருகிறார்கள். அதற்கான நன்றியுணர்வை இதுபோன்ற சின்னச் சின்ன செயல் கல் வழியாக வெறிப்படுத்துவேன்.

உங்களைச் செதுக்கிய புத்தகங்கள்?

காப்மேயரின் நான்கு புத்தகங்களை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். எண்ணங்களை மேம்படுத்துங்கள், இதே உதவி, நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?, செல்வந்தராவது எப்படி? ஆகியவை அந்தப் புத்தகங்கள். டேல் கார்னகி, ஃபரேன் பெட்கர் பால் வின்சென்ட் ஆகியோரின் புத்தகங்களும் நான் விரும்பிப் படிப்பவை.

தமிழில், திரு. சுகிசிவம் உட்பட, நம்பிக்கைச் சிந்தனையாளர்கள் பலரின் நூல்களையும் நான் படித்துப் பயனடைகிறேன்.

இன்றைய இளைஞர்ளின் சிந்தனைப் போக்கு ஆக்கப் பூர்வமான திசையில் செலுத்த நமது நம்பிக்கை போன்ற இதழ்கள் நல்ல பங்கை ஆற்றுகின்றன. இது மேலும் தொடர வேண்டும். இளைஞர்கள் பொழுதுபோக்குக்குக்காகத் தேர்ந்தெடுக்கும் துறைகளில் இருந்தும் ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெறவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *