திரு. என்.எல்.பி. நிபுணர் திரு. ஜெயசேகரன்
– தொடர்
புரோகிராம் 1
சூழ்நிலைகளை புறம் தள்ளி, நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ, அங்கெல்லாம் நம்முடைய சொந்த தட்பவெட்பத்தை மட்டும் சுமந்து செல்வோம்.
புரோகிராம் 2
சமீபத்தில் இந்தியா ஐ.சி.சி உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆட்டத்தின் இறுதியில் சிக்ஸர் அடித்து வெற்றி ரன்களை குவித்த அந்த தருணத்தில் நீங்கள், நான், நாம் அனைவரும் குதித்து கொண்டாடினோம். இதில் எது நம் அனைவரும் ஒன்றாக சேர்ந்தது..? விளையாட்டா? நான் அனைவரும் இந்தியர் என்ற மனநிலையா? அல்லது உலகக் கோப்பை என்ற கனவா…? இல்லை, இவை அனைத்தும் ஒன்று சேர்ந்த ஓர் கலவையா? என்னுடைய பார்வையில் அதற்குக் காரணம் நம் அனைவரிடையேவும் ஒருமித்து இருந்த அந்த உணர்வு. இந்தியாவிற்கு… இந்தியாவில் உலகக் கோப்பை கிடைக்க வேண்டும் என்ற உணர்வு. நம் உணர்வுகளுக்கு கற்பனையில் நாம் கொடுத்திருந்த உருவமும், அதற்கு ஆதாரமாய் அமைந்த இறுதிப்போட்டியின் வெற்றிப்புள்ளிகளும் நம் உணர்வுகளை உயிர் கொள்ளவும், உற்சாகமாய் துள்ளிக்குதிக்கவும் வைத்தது. நம்மை புதிய எல்லைகளுக்கு எடுத்து சென்றது. நம் உடம்போடு ஒன்றியிருக்கும் உணர்வுகள், அவைதான் நம் அனைவரையும் அனைவரிடத்திலிருந்தும் வித்தியாசப்படுத்திக் காட்டுபவை.
புரோகிராம் 3
தந்தையை இழந்த பெண் ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. மிகவும் சேர்வாக, உற்சாகமில்லாமல், வாழ்க்கை குறித்த எதிர் மறையான எண்ணத்துடன் தனிமையிலேயே இருந்தார். நான் இதற்கு முன்னர் அவர் தந்தை உயிரோடு இருக்கும்போது அவரை சந்தித்து இருக்கிறேன். அந்த சமயங்களில் அவர் மிக உற்சாக மானவராய், எதிர்காலம் குறித்த நம்பிக்கை உடையவராய், மிகுந்த பேச்சுக்களுடன், வலம் வருவார். இப்போது அவருக்கு என்ன நேர்ந்தது…? தந்தை இறந்துவிட்ட சோகம்தான் அவருடைய இந்தப் புதிய அவதாரத்திற்கு காரணமா? என் பார்வையில், அவர் தந்தை இறந்துவிட்ட பிறகும் அது குறித்து அவர் சுமந்து வரும் உணர்வுதான் அவரை முழுவதுமாக மாற்றியிருக்கிறது. புகழ் பெற்ற வாசகம் ஒன்று உண்டு. ”நீங்கள் ஏதோ ஒன்றை எதிர்க்கிறீர்கள், பிடிவாதமாக இருக்கிறீர்கள். மற்றொன்றை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளும் அந்த ஒன்று நிரந்தரம் அல்ல மறைந்துவிடும்”. இந்த பெண் தந்தை இறந்து விட்டார் என்ற உண்மையை பிடிவாதமாக ஏற்றுக்கொள்ள மறுப்பதே இன்றைய அவர் நிலைமைக்குக் காரணம். எதிர் பாராமல் தந்தையை இழந்துவிட்ட அந்த உணர்வு மட்டும்தான் அந்த பெண்ணின் வாழ்க்கையையும், இனி வரவிருக்கும் அவர் எதிர்காலத்தை தீர்மானிப்பதாய் இருக்கிறது. எதிர்பாராத சோக நிகழ்வுகளை சந்திக்கும்போது உங்களுடைய உணர்வுகள் என்ன என்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா?
புரோகிராம் 4
இமாலயத்திற்கு செல்லும் புதிய வழிகளை வெளிக்கொணரும் குழு ஒன்றில் சமீபத்தில் இணைந்தேன். அந்தச் சாலைகள் மிகவும் அபாய கரமானதாகவும், சவால்கள் நிறைந்தும் காணப் பட்டது. சில சென்டிமீட்டர்கள் தவறாக வண்டியை செலுத்தினாலும், அது நம்மை மயானத்திற்கு கொண்டு சேர்க்கும். மேலும் நீர் ஓட்டம், நிலச்சரிவு, சாலை நெரிசல் என அனைத்தும் நிறைந்த சாலைகள் அவை… இதற்கிடையில் ஒரு நாள், மேல் குறிப்பிட்ட அனைத்துடனும் மழையும் வந்து சேர்ந்தது எங்கள் பயணத்திற்கு மேலும் சவாலாய் போனது. குழுவாகச் சென்றதால் ஒருவருக்கொருவர் உதவிகள் புரிந்து எதிர்பாராமல் வந்த தடைகள் தாண்டிக் கொண்டிருந்தோம்.
எங்கள் குழுவின் தலைவர், இந்த இடர்கள் அனைத்தையும் எதிர்கொள்ளவும், தாண்டிச் செல்லவும் வழிகாட்டியவாறே, நாங்கள் சென்ற வாகனத்தையும் ஓட்டி வந்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள், ”நிகழ்ச்சிகள் நிரம்பி வழிகிற நாள் இது”.
மற்ற ஓட்டுனர்கள் எல்லாம் சாலைகளை, அரசாங்கத்தை, இயற்கையை, மழையை சபித்து கொண்டே வந்த வேளையில்… ஒவ்வொரு முறை சவால்களை சமாளிக்கிறபோதும் எங்கள் குழுத் தலைவர் மிகுந்த ஆற்றலுடன், சுறுசுறுப்பாய் சில சந்தோஷமான கருத்துக்களை மலர்ந்த முகத்தோடு சொல்லிக் கொண்டே வந்தார். அனைத்திற்கும் மேலாக, இயற்கைக்கு நன்றி சொல்லி இது போன்ற சவால்களை மேலும் எதிர்நோக்கிக் காத்திருப்பதாக மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.
இதுதான் நேர்மறை எண்ணமா? என்னைப் பொறுத்தவரை, இது உணர்வு. சவால்களைக் கூட நிகழ்வுகளாய் பார்க்கும் உணர்வுதான் அவரை மற்ற ஓட்டுனர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறது.
சவால்களைச் சந்திக்கிறபோது உங்களுடைய உணர்வுகள் என்னென்ன?
புரோகிராம் 5
உணர்வுகள், உங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்க வல்லது. நீங்கள் உங்களைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்? ”நான் அதிர்ஷ்டம் இல்லாதவன்” உங்களைப் பற்றி உங்களுக்கே இது போன்ற உணர்வுகள் உண்டென்றால், நீங்கள் அதனால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, மேல் கூறிய உணர்வை நீங்கள் சுமக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையில்லா தன்மையும், பொறாமையும், தவறான எண்ணங்களும், தனிமையும்தான் நிரம்பி வழியும்.
நான் ஒரு மனிதரை சந்தித்தேன். அவர் எப்போதும், ”நான் கற்றுக்கொள்பவன்” என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். இந்த உணர்வு, அவர் உலகத்தை, ”திறந்த மனதுடன் அணுகும் விதமாகவும், ஆற்றல் மிகுந்ததாகவும், முன்னேற்றம் காண்கையில் மனதை சமநிலையில் வைத்திருக்கும் பண்புகளுடன்” நிரப்பியிருந்தது.
நாம் அடுத்தவர்களைப் பற்றி கொண்டிருக்கும் உணர்வுகளும் நம்மிடையே பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. ”மனிதர்கள் சூழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்கிறார்கள்” இந்த உணர்வு, நம் வாழ்க்கையை பெரும் அச்சத்திற்கும், பாதுகாப்பின்மைக்கும்தான் இட்டுச் செல்லும். மாறாக, ஒரு பயணி என்னிடம், ”உலகில் உதவி செய்யும் மக்களால் நிரம்பி உள்ளது, நான் 80 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிறேன். எனக்கு தடைகள் நேரும் போதெல்லாம் யாரேனும் ஒருவர் எனக்கு உதவிக்கு வருகிறார்கள். மனிதர்கள் மிகவும் இனிமையானவர்கள்” என்று கூறும்போது மனிதர்கள் மீதான அவரின் உணர்வு வியப்படைய வைக்கிறது. அந்த உணர்வினால்தான், 80 நாடுகளில் வலம் வரவும், எண்ணற்ற கலாச்சாரங்களையும் மக்களையும் அறிந்து கொள்ளவும் அவரால் முடிகிறது.
நீங்கள் உங்களைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்? மற்றவர்களைப் பற்றி என்ன உணர்கிறீர்கள்? இந்த உலகத்தைப் பற்றி என்ன உணர்கிறீர்கள். உணர்வுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு.
இவை அனைத்தையும் படித்தபிறகு இப்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
புரோகிராம் 6
இக்கட்டான சூழ்நிலையில் எப்படி சம நிலையோடு (balance) இருப்பது? சிலர் சம நிலையோடும், சிலர் கோபத்துடனும், எரிச்சலுடனும் அணுகுகிறார்கள். சமநிலையும், சமநிலை இல்லாமையும் பழக்கங்கள் அல்ல. அவை நாம் சுமந்து வரும் உணர்வுகளின் ஒரு பகுதி. கடினமான சூழ்நிலைகள் வரும்பொழுது, சிலர் அதை, ”நம் திறமைக்கான புதிய சவால்” என்ற பார்வையில் பார்க்கிறார்கள். சூழ்நிலைகளை புரிந்து கொண்டு தங்கள் சுயத்தை மேலும் உயர்த்தி அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளைக் கண்டறிகிறார்கள். ”இது எனக்குப் புதிய செய்திகளையும், பிரச்சனைகளைத் தீர்க்கும் யுக்திகளையும் கற்றுக் கொடுக்கும் களம்” என்ற உணர்வினைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
சிலரோ, ”இது எனக்கு நடந்திருக்கக்கூடாது. இது எனக்குப் புதிது. இதை எப்படி கையாளப் போகிறேன்” என்ற எதிர்மறையான உணர்வினை தேர்ந்தெடுக்கிறார்கள். சமநிலைக்கும், சமநிலை இல்லாமைக்கும் ஆன வேறுபாடுகள் இவைதான்.
இக்கட்டான சூழ்நிலைகளில் நீங்கள் தேர்வு செய்யும் உணர்வுகள் என்ன… சமநிலையோடு இருத்தலா, இல்லாமையா…?
புரோகிராம் 7
கிராமம் ஒன்றில் திருமணமாகாத பெண் ஒருத்தி கருவுற்றிருந்தாள். கோபமடைந்த பெற்றோர் அக்குழந்தையின் தந்தை யாரென மிகக் கடுமையாய் அவளை விசாரித்தனர். உண்மையான நபரை காட்டிக்கொடுக்க விரும்பாமலும், தன் சங்கடமான நிலையிலிருந்து தப்பிக்கவும், அந்த ஊரில் அனைவரும் போற்றிப் புகழும் யோகி ஒருவரை கை காட்டினாள். ஆத்திரமடைந்த பெற்றோர் அந்த யோகியை எதிர்த்து தன் மகள் சொன்ன குற்றத்தை அவர் மீது சுமத்தியபோது, அந்த யோகி சொன்ன பதில்…
”ஓ! அப்படியா?”
சில மாதங்கள் கழித்து குழந்தை பிறந்தவுடன், அக்குழந்தையை யோகியிடம் கொண்டு சென்று, இது உங்கள் குழந்தை. இதை கவனிப்பது உங்கள் கடமை என்று அந்தப் பெண்ணின் பெற்றோர் கூறினர். அதற்கும் அந்த யோகி, ”ஓ! அப்படியா” என்று கூறி குழந்தையை ஏற்றுக் கொண்டார்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பெண், தான் செய்த தவறை உணர்ந்து குற்ற உணர்வால் உண்மையை ஒப்புக் கொண்டாள். அக்கிராமத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவன்தான் அக் குழந்தையின் உண்மையான தந்தை என்று கூறவும், நிலைமையைப் புரிந்து கொண்டு பெற்றோர் யோகியிடம் நடந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்டு குழந்தையை திரும்பப் பெற்றுக் கொள்ளச் சென்ற போது, சூழ்நிலைகள் மட்டும்தான் மாறிக் கொண்டேயிருந்தன. யோகியின் உணர்வுகள் அல்ல. அப்பெண்ணின் பெற்றோர் கூறியதை பொறுமையாக கேட்டுக் கொண்டு, பின்பு குழந்தையை அப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு, அவர்கள் கூறிய அனைத்திற்கும் யோகி மீண்டும் சொன்ன பதில்…
”ஓ! அப்படியா”
(திரை விரியும்)
Leave a Reply