அட்டைப்படக் கட்டுரை
2003 ஜுலை மாதம் காலை 8.40 மணி. தன் அலுவலக மேசையருகே அலறிய தொலைபேசியை எடுத்தார் திரு.பி.எம்.நாயர். அழைத்தவர் அவருடைய மேலதிகாரி. ”மிஸ்டர் நாயர்! நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. என் படுக்கையறை மழையில் ஒழுகியது.” இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் உறைந்தார் நாயர். அவர் மனநிலையைப் புரிந்து கொண்டவர் போல், ”கவலைப் படாதீர்கள்! நீங்கள் உடனே சரிசெய்து விடுவீர்கள் என்று தெரியும்” என்றார் மேலதிகாரி! வேறொருவராய் இருந்தால் இரவே அழைத்து அல்லோலகல்லோலம் செய்திருப்பார்கள். அழைத்தவர் அந்நாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம்.
பி.எம்.நாயர், அவருடைய செயலாளர். மழையில் ஒழுகியது குடியரசுத் தலைவர் மாளிகை!! தன்னுடைய தூக்கம் கெட்டு விட்டதற்காக எல்லார் தூக்கத்தையும் கெடுக்கக் கூடாதென்று காலை வரை காத்திருந்து மிகச் சரியாய் அலுவலக நேரத்தில் புகார் செய்த அப்துல் கலாமுக்கு அக்டோபர் 15இல் வயது 80.
அவருடனான தன் அனுபவங்களை பி.எம்.நாயர் எழுதியிருக்கும், ”தி கலாம் எஃபெக்ட்” என்னும் ஆங்கிலப் புத்தகம் அந்த மாமனிதர் குறித்த மிக சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. கலாமின் நினைவாற்றல் குறித்து சில உதாரணங்களைத் தருகிறார் திரு.பி.எம்.நாயர். தனக்கு வரும் எண்ணற்ற புத்தகங்களை வாசித்து, அதிலிருக்கும் சாரத்தை தனக்குச் சொல்லுமாறு மங்கோத்ரா என்னும் அதிகாரியைப் பணித்திருந்தாராம் கலாம். அவர் இரவு பகலாக நூல்களைப் படித்து, குறிப்பெடுத்து அவற்றின் சாரத்தையும், அந்த நூலின் தகுதிகளையும் தகுதியின்மையையும் விவரிப்பாராம். உன்னிப்பாகக் கேட்டுவிட்டு கலாம் சொல்வாராம், ”அது இருக்கட்டும் மங்கோத்ரா! அந்தப் புத்தகத்தின் 24 ஆவது பக்கத்தில் இரண்டாவது பத்தியைப் படித்தீர்களா? எவ்வளவு அருமையான சிந்தனையைச் சொல்லியிருக்கிறார். அதற்காக என் வாழ்த்துக்களை நூலாசிரியருக்குத் தெரிவித்து விடுங்கள்”.
அந்தப் பக்கத்தைப் பிரித்துப் பார்த்தால் உண்மையிலேயே அருமையான சிந்தனை காணப்படுமாம். அதேநேரம் நாயருக்கொரு சந்தேகம். இவர் உண்மையிலேயே புத்தகத்தைப் படித்துதான் சொல்கிறாரா? அல்லது குத்து மதிப்பாகக் குறிப்பிடுகிறாரா? உறுதி செய்து கொள்ள ஒரு வாய்ப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார் நாயர். ஒரு நூலின் 96ஆம் பக்கத்தில் இருக்கும் செய்தியைப்பற்றி பேச்சு வந்ததும் கலாம் சொன்னாராம், ”ஆனால் அதே நூலின் 154ஆம் பக்கத்தைப் பாருங்கள். தான் 96ஆம் பக்கத்தில் சொன்ன செய்தியுடன் அவரே முரண் படுகிறார்”.
புத்தகங்களின் பெருங்காதலர் அப்துல் கலாமுக்கு அக்டோபர் 15ல் வயது 80!!
2006 மே மாதம் கலாமின் நெருங்கிய உறவினர்கள் கலாமுடன் தங்குவதற்காக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தார்கள். 90 வயது நிரம்பிய கலாமின் அண்ணனில் தொடங்கி ஒன்றரை வயதான அவருடைய கொள்ளுப்பேரன் வரை 52 பேர்கள். அவர்கள் வருகைக்கு சில நாட்கள் முன்னதாகவே அதை தன் தனிப்பட்ட விஷயமாக மட்டுமே கையாளுமாறு சொல்லியிருந்தார் கலாம். அவர்கள் தங்கிய செலவு, சாப்பாட்டு செலவு, ஊர் சுற்றிப் பார்த்த செலவிலிருந்து அவர்கள் பருகிய ஒரு கோப்பை தேநீர் வரை எல்லாவற்றுக்குமான கணக்குகள் வாங்கி, தன் சொந்தப் பணத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தந்தார் கலாம். மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை தன் கணக்கிலிருந்து கட்டினார் கலாம்.
பொதுவாழ்வின் நேர்மைக்கு, பொன்னான இலக்கணமாகத் திகழும் அப்துல்கலாமுக்கு அக்டோபர் 15இல் வயது 80!!
தன்னுடைய 80ஆவது பிறந்த நாளை கலாம் கோவையில் கொண்டாடப் போகிறார். கோவையின் சிறுதுளி அமைப்பும் கோவை மாநகரை மேம்படுத்தும் அமைப்பான ”ராக்”கும் இணைந்து பொதுநல அமைப்புகளுடனும் பள்ளிகளுடனும் மகளிர் சுய உதவிக் குழுக்களுடனும் கை கோர்த்து கலாமின் பிறந்த தினத்தை ”பசுமைக் கோவை” தினமாகக் கொண்டாடுகிறது.
அக்டோபர் 15இல் கலாம் கோவையில் கால் பதிக்கும்போது, பள்ளிக் குழந்தைகள் 10,000 பேர்களும் சுய உதவிக் குழுவினர் 10,000 பேர்களும் கோவையின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டிருப்பார்கள். இதுதவிர ராக், சிறுதுளி ஆகிய அமைப்புகள் பிற தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து தொடங்கி இருக்கும் ”பசும்புலரி” அமைப்பு, கலாமுக்காக ஒரு பொன்னாடை தயார் செய்து கொண்டிருக்கிறது.
அது மேனியில் போர்த்தும் பொன்னாடை அல்ல. பூமிமேல் போர்த்தும் பசுமைப் பொன்னாடை. கோவையெங்கும் 1 இலட்சம் மரக்களை நட்டு வளர்ப்பதற்கான ஆதாரங்கள், வளர்ப்பவர்களின் உறுதிமொழிகள் உள்ளிட்ட ஆவணங்களை பிறந்தநாள் பரிசாக கலாமின் கரங்களில் கொடுக்கப்போகிறார்கள் விழாக் குழுவினர்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே, கிராமத்துப் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பழங்குடியினருடன் தன் பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார் அப்துல் கலாம். தனியே மரங்கள் நட்டு வளர்க்கும் சூழலோ இடமோ இல்லாதவர்கள் ஒரு மரத்துக்கு 250 ரூபாய்கள் தந்தால் அவர்களுக்காக மரம் வளர்த்து பராமரிக்கவும் பசும்புலரி தயாராயிருக்கிறது.
வல்லரசுக் கனவுகளை விதைத்து வளர்த்தவரின் பிறந்தநாளை ஒவ்வோர் ஆண்டும் பசுமைக்கோவை தினமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது பசும்புலரி. கோவையின் இந்தப் பசுமைக்கனவு தேசத்தின் அத்தனை பகுதிகளுக்கும் பரவட்டும். பாரத தேசத்தின் பெருமைமிக்க புதல்வரின் பிறந்தநாள் பசுமைத் திருநாளாகப் புலரட்டும்.
மேலதிக விவரங்களுக்கு:www.greencoimbatore.com
Leave a Reply