நேற்று இன்று நாளை

– இசைக்கவி ரமணன்

இதுவொரு காலம் அதுவொரு காலம்
அடியில் மணலாய்க் கரைகிறதே
அதுதான் உண்மைக் காலம்

இரவும் பகலும் புகையென நீளும்
நெஞ்சில் எங்கோ கனல்கிறதே
அதுதான் உண்மையில் வாழும்!

காலம் என்றால் என்ன?
சென்றுவிட்ட நேற்றா? சென்று கொண்டிருக்கின்ற இன்றா? வந்து செல்லப் போகிற நாளையா? இன்று என்றால் இன்றில் எந்தப் பொழுது? எந்தக் கணம்?
நேற்று
போனது போனதுதான், அது
புலம்பி வருவதில்லை
ஆனது அனுபவம்தான், அது
அளந்து முடிவதில்லை!

சென்றகாலம். அதில் நடந்த நினைவுகளாகத்தான் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது. சென்றவற்றை நினைவுகூரும்போது அந்த அனுபவம் மீண்டும் அனுபவத்தில் வரலாம். எந்த நிகழ்வுக்கு நாம் என்ன முக்கியத்துவம் கொடுத்தோமோ அதைப் பொறுத்து அந்த நிகழ்வின் நினைவும் வலுவாகத் தனித்து நிற்கிறது. விண்மீன்கள் நடுவே நிலவைப் போல மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து அந்த நினைவு வலுவடைகிறது. நினைவு கூர்தலும் தீவிரமாகி சென்றது, செல்லாதது போல் மனதில் உயிருள்ள சித்திரமாய் உலவுகிறது. நேற்று என்பதில் நாம் சிக்கித் திணறலாம். இல்லை திளைத்து நீந்தலாம். நாம் புதைசேற்றில் சிக்கிக் கொண்ட புள்ளிமானா? இல்லை பொய்கையில் நீந்தி மகிழும் பொன்மீனா என்பது நம் நினைவுகளின் தரத்தால் மட்டுமே உறுதியாகும். அது, நம்முடைய பேச்சு, நடத்தை எதிர்வினை இவற்றின் மூலமும் உறுதியாகும்.

உதாரணமாக நாம் இழந்த ஒன்றை அல்லது இழந்துவிட்டதாக நினைத்துக்கொண்ட ஒன்றைப் பற்றி ஓயாமல் நினைத்துக் கொண்டிருந்தால் நம்மால் வாழ்க்கைப்பாதையில் ஓரடி கூட முன்னே செல்லமுடியாது. ஏதோ ஒன்றை இழந்ததாக எப்போதும் குமைந்து கொண்டிருப்பவர்கள், தாங்கள் பெற்ற எதையுமே கண்கொண்டு பார்ப்பதில்லை. இழந்ததை எண்ணிக் கொண்டிருப்பவர்கள், தாங்கள் அடைந்த எதையும் அறிவதே இல்லை. துக்கத்தில் ருசியை வளர்த்துக் கொள்வது என்பது மனித உணர்ச்சிகளில் மிகவும் அபாயமான ஒன்று. மிகவும் கொடிய நோய்களில் ஒன்று. ஆளை விழுங்காமல் தீராது.

துக்கத்தில் ருசி கொள்பவன். ஆசிகளைச் சாபங்களாக்கிக் கொள்கிறான். தாழ்வு மனப் பான்மையில் துவங்கி கழிவிரக்கமாக வளர்ந்து, தற்கொலைச் சிந்தனை வரை செல்லும் இந்த இழிவிலிருந்து நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நமது பாதையில் தடைகள் வெளியே இல்லை. பெரும்பாலும் அவை உள்ளிருந்துதான்! நமது வலிமையை நீர்க்கச் செய்யும் மனப்பான்மை கள்தான் நமக்குப் பெரும் தடைகள். அவற்றுள் தலையாய தடைதான், இந்த துக்கத்தில் ருசிகொள்ளும் இழிவான குணம். அப்படிப்பட்டவர்களை, “கருதிக் கருதிக் கவலைப் படுவார்” என்று சித்திரம் காட்டுகிறான் பாரதி.

அழுகை, அடக்கமன்று; துக்கம், பக்தியன்று. கழிவிரக்கம் பணிவன்று, இவையாவும் ஆணவத்தின் வித்தியாசமான விபரீத முகங்கள் என்பதை நமக்கு சாதனையாளர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள். அத்தோடு நில்லாமல் விளக்கமாக வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். தனது சோதனைச் சாலை தீ விபத்தில் எரிந்து சாம்பலானபோது, ‘இனிமேல் புத்தம் புதிதாய்த் துவங்கலாம்’ என்றார் எடிசன்.

தனது நான்கு சகோதரர்களும் மூச்சின்றிக் கிடக்கும்போது மறைவிலிருந்த ஓர் யக்ஷன், ‘புல்லினும் அற்பமானது என்ன?’ என்று கேட்க சற்றும் யோசிக்காமல், ‘கவலை’ என்று விடை பகர்ந்தான் தருமன்.

தனது தங்குமிடம் பற்றிய குறிப்பு உட்பட எல்லாவற்றையும் இழந்ததும் கம்பீரம் குறையாமல் இருந்த விவேகானந்தரைப் பார்த்து, “உங்களுடைய இந்தத் துணிவுக்குக் காரணம் என்ன?” என்று ஒருவர் கேட்க, ‘லட்சக்கணக்கான எனது ஊமைச் சனங்களின் ஆசிகள்தான்” என்றார் அவர் உறுதியாக!

செக்கர்வான் தள்ளிச் சிரித்தாலும், சோராதே

அக்கண் மேதுவங்கு வார்

என்னும் வாக்கியத்திற்கு விஸ்வாமித்திரரி லிருந்து, நமக்குக் கார்கிலில் வெற்றி பெற்றுத்தந்த வீரர்கள் வரை எத்தனையோ உதாரணங்களைச் காட்ட முடியும்.

எந்த மனிதனும் சாதனையாளனாய் மாறியதற்கு முக்கியமான காரணம், அவன் இழந்தவற்றைக் குறித்து வருந்தியதே இல்லை. எந்தச் சிற்றோடையும் நதியாய் வளர்ந்ததற்குக் காரணம், அது எந்த இடத்திலும் நின்றுவிடவே இல்லை.

சென்றதினி மீளாது மூடரே! நீர்

சென்றதையே எப்போதும் சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு

தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்!

தீமையெலாம் தொலைந்தேபோம்!திரும்பி வாரா!

என்று சாடி, எச்சரித்து சென்றதைக் குறித்த நமது மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும் என்று மிக நேர்த்தியாகச் சொல்கிறான் பாரதி. சென்றதை இறந்த காலம் என்றும், கடந்த காலம் என்றும் சொல்கிறோம் அல்லவா?. எத்தனை பெரிய இழப்பானாலும், இழந்தபின் அதற்குத் தொடர்ச்சி ஏது? அது இறந்ததே? எத்தனை பெரிய சாதனையானாலும் அது நிறைவேறியபின் அதில் உணர்ச்சி ஏது? அது கடந்ததே! எதுவுமே நில்லாதது என்னும் சத்தியமே வாழ்க்கையை ஆளுகின்றது என்பதை மறவாதவர்கள் ஒருú பாதும் துக்கத்தில் ஆழ்வதில்லை. ஒரு சிறிதும் தங்கள் கடமையிலிருந்து பிறழ்வதில்லை.

ஒவ்வொரு நாளும் கதிரவன் புதிதுதான்! ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு நாளும் புதிதுதான்! ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு சிரிப்பும் ஓயாத புதிதுதான்! இதுதான், ‘இன்று புதிதாய்ப் பிறத்தல்.’

இங்கே எதுவும் நில்லாததுதான் எனினும், கடந்துபோன பல நல்ல தருணங்களை நினைத்துப் பார்ப்பது நமக்கு நன்மையே தரும்.

உதாரணமாக நமக்குப் பிறர் செய்த உதவிகள். நாம் வீதியில் கேட்ட வேதத்திற்குச் சமானமான வாக்கியங்கள். நம் வாழ்வில் நாம் சந்தித்த சிலருடைய ஆழமான அனுபவங்கள், அவர்களுடைய வாசகங்கள், இவை மறுபடி மறுபடி நினைத்துப் பார்க்கத்தக்கவை. ஏனெனில் அவை நம்மை மேன்மைப் படுத்துபவை. நம் சிந்தனைக்கு ஊக்கமும், செயலுக்குத் தெம்பும் தருபவை. நமது மனிதப் பண்புகளை வளர்ப்பவை. எனவே இவைபோன்றவை என்றும் நினைவில் கொள்ளத்தக்கவை.

மேலும் நம்முடைய தவறுகளால் நாம் கற்ற பாடங்களும் நினைத்துப் பார்க்கத் தக்கவை. ஏனெனில் நாம் மறுபடிச் சறுக்கிவிடாமல் அந்தப் பாடங்கள் நம்மைக் காக்குமே!

சென்ற காலம் குறித்து நாம் கடைப்பிடிக்க வேண்டிய மனப்பான்மை இப்படித்தான் இருக்க வேண்டும்.

1. இழந்த பொருட்கள், சந்தர்ப்பங்கள், பதவிகள். இவற்றைக் குறித்து வருந்துவதே கூடாது. ‘பட்ங்ழ்ங் ண்ள் ய்ர் ழ்ங்ஞ்ழ்ங்ற்ற்ஹக்ஷப்ங் ஜ்ஹள்ற்ஹஞ்ங் ண்ய் ஸ்ரீர்ள்ம்ர்ள். டங்ழ்ட்ஹல்ள், தங்ஞ்ழ்ங்ற் ண்ள் ஜ்ஹள்ற்ங்ச்ன்ப்’ என்றார் ஒரு மாமனிதர். ஆம், இந்தப் பிரபஞ்சத்தில் வருந்தத்தக்க அளவில் எதுவும் வீணாவதில்லை. வருந்துவதுதான் வீணாக இருக்கக்கூடும்.

2. நாம் தவறுகளே செய்திருந்தாலும், சரி இனிமேல் செய்யாதிருப்போம் என்ற உறுதியோடு மறுபடி எழுவதே மனித மாண்பு.

3. சென்றுவிட்ட காலத்தில் நாம் பெற்ற அனுபவங்கள், உதவிகள், கற்ற பாடங்கள் இவையே நினைவில் கொள்ளத்தக்கவை.

வாழ்வில் வெற்றிபெறும் சாதனையாளர்கள் அத்தனை பேர்களிடமும் நாம் கண்டு பேணத்தக்க அம்சம் இதுதான்:-

எதிரில் தோன்றும் செயலை எதிர் கொள் வார்கள். அதை முழுமூச்சோடு செய்து முடிப்பார்கள். அது வெற்றியா தோல்வியா என்றெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்ததை எதிர்கொள்ளத் தயாராய் இருப்பார்கள்.

”ஞந் ரட்ஹற் ய்ங்ஷ்ற்?” என்று கேட்பது சாதாரண மான வார்த்தையே அல்ல! அது மகத்தான மனப்பான்மையின் வெளிப்பாடு.

இன்று

உண்மை ஒன்று! அதுதான் இன்று!

ஒவ்வொரு கணமும் அதிலே நின்று

கண்போல் தமது கடமையைக் காப்பார்

காலம் முழுதும் போற்றப்படுவார்!

ஆம். யார் இன்றில் வாழ்கிறாரோ அவரே என்றும் வாழ்கிறார்! இன்றில் வாழ்வது என்றால் என்ன? நேற்றைப் பற்றிய நினைப்பே வரக்கூடாதா? நாளையைப் பற்றி எந்த யோசனையும் மேற் கொள்ளக் கூடாதா? அப்படி அல்ல!

நேற்றைப் பற்றிய ஏக்கமும், நாளையைக் குறித்த கவலையும் இல்லாமல் இருப்பதே இன்றில் வாழ்வது!

உலகில் பலரும் சராசரிக்கும் கீழே சாதாரண மனிதர்களாகவே காலங்கழித்துவிடுவது ஏன் தெரியுமா? எதிரில் இருக்கும் காரியத்தின் மேல் மதிப்பு வைக்காமல், அதைத் தாண்டி எதையோ எதிர்பார்த்துக் கற்பனை செய்து கொள்வதே! அப்போது என்ன ஆகிறது? கதவைத்தட்டிய சந்தர்ப்பங்கள் கரைந்து போகின்றன. சந்தர்ப்பங்கள் கரைந்து போனாலும் கடமைகள் முடிக்காமல் கடப்பதில்லை. செய்யாத கடமைகள் செய்யாதவைதான். அவற்றுக்கு மாற்று, பரிகாரம், விதிவிலக்கு, கழிவு எதுவும் கிடையாது.

படிகள் நகர்வதில்லை! ஆனால் எந்தப் படியை நாம் மதிப்பதில்லையோ அதை நாம் தாண்டத் தாவும்போது, அது நம்மைத் தடுக்கிவிழச் செய்கிறது. நமக்கு உதவுவதற்காக எதிர்ப்பட்ட ஒன்றை, நம் வீழ்ச்சிக்கே காரணமான ஒன்றாக மாற்றிவிடுவது நமது அலட்சியமே!

நேற்றை மாற்ற முடியாது. நாளையைக் கணிக்க முடியாது. ஆனால் இன்னும் முழு மனதோடு வாழ்வதன் மூலம், விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதன் மூலம் ஏக்கம்- எதிர் பார்ப்பு இன்னும் தேள்கொடுக்குகளின் மத்தியில் சிக்காமல் செயல்படுவதன் மூலம் நாம் நாளைக்குத் தயாராகிறோம்.

நேற்று என்பது விடைபெற்ற கரை. நாளை என்பது நாம் அடையவேண்டிய கரை. இன்று என்பதே நம் ஓடம். அதில் மட்டுமே அக்கறை வைப்பதன் மூலமே நாம் அக்கரை சேர முடியும். எனவே நேற்றுக்கும் நாளைக்கும் இடையே இன்று என்பது ஒரு படகு.

நேற்று என்பதே நாளையாகிறது என்பது வல்லவர் வாக்கு. அந்த நாளை நாம் விரும்பும் நாளையாக வேண்டும் என்றால், நமக்கு எதிரே சிரிக்கும் இன்றை நாம் எப்படிக் கையாள வேண்டும் என்ற தெளிவு நமக்கு வேண்டும். இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்ய வேண்டியதே உயர்வதற்கான உபாயம். அதுவே நேற்று நாம் செய்த தவறுகளை நாம் மறுபடி செய்யாமல் நம்மைக் காக்கிறது. நாளை என்பதில் நாம் நம்பிக்கையோடு விழையத்தக்க வலுவை நமக்குச் சேர்க்கிறது. எனவே நேற்றுக்கும் நாளைக்கும் இன்று என்பது ஒரு பாலம்.

நேற்று என்பது போனது. நேற்றுதான் நாளையாகிறது என்பதால் நாளை என்பதும் போனது எனவே இருப்பது ஒன்றே ஒன்று. அது தான் இன்று. எனில் இன்று என்பது எத்தனை முக்கியமானது! எத்தனை வலிமையானது! சாதனை யாளர்கள் இன்று என்பதை எப்படிக் கையாண்டார்கள்?

1. இன்று என்ன செய்யவேண்டும் என்பதை நேற்றிரவே குறித்துவைத்துக் கொண்டார்கள். இன்று என்ன செய்வது என்று விழிக்காமல். ஒவ்வொரு நாளும் முறையான திட்டத்தோடுதான் கண் விழித்தார்கள்.

2. அந்தப் பட்டியலை எது மிக மிக முக்கியம். எது அதற்கு அடுத்தபடி என்று வகை பிரித்துக் கொண்டார்கள்.

3. எதற்கு அடுத்து எதைச் செய்யலாம் என்று வரிசைப்படுத்திக் கொண்டார்கள். ஒரே சமயத்தில் பல செயல்களை ஒருவன் செய்வதுபோல் தோன்று வது ஒரு தோற்றமே என்றும் ஒருவன் ஒரு சமயத்தில் ஒரு செயலில்தான் ஈடுபட முடியும் என்றும் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே அவர்கள் செயலில் படபடப்பு இருந்ததில்லை. நிதானமாக ஆனால் தொடர்ந்து தங்கள் கடமை களில் ஈடுபட்டவர்கள். ஆகவேதான் அவர்கள் நேரப் பற்றாக்குறை என்னும் துர்பாக்கியத்துக்கு ஆளாகாமல் வாழ்ந்தார்கள்.

4. செய்ய வேண்டியவற்றைப் பிசிறின்றிச் செய்தார்கள். ஒரு கடிதத்தை எழுதி, முகவரியிட்டுத் தபால்தலை ஒட்டி அதை மேசையின் மேல் வைத்து விடுவது அதைத் தபாலில் சேர்த்ததாக ஆகாது என்பதை நன்றாக அறிந்திருந்தார்கள்.

5. எந்தச் செயலுக்கு நேரம் அதிகம் தேவைப் படுகிறதோ அதுதான் முக்கியம் என்பதல்ல. தவிர்க்க முடியாததால் அப்படி இருக்கலாம். பயணச்சீட்டு வாங்குவதே முக்கியம். அதற்காக வரிசையில் கால் கடுக்க நிற்பது தவிர்க்க முடியாதது.

6. ‘அந்த நாள் வருவதில்லை; அம்புகள் திரும்புவதில்லை” இதைத்தான் கடலின் அலைகள் நமக்கு விடாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அடுக்கடுக்காய் வந்து செல்கின்றன. அலைகள் வந்த அலைகளில் ஒன்றுகூட மறுபடி வருவதில்லை என்பதே நிதர்சனம். எனவே இந்தக் கணமே மிக நிஜம் என்று இங்கும் அங்கும் பார்க்காமல் கடமை புரிந்தவர்களே மாமனிதர்கள் ஆனார்கள்.

7. அறிவியல் வல்லுனர்கள், வேறு துறை அறிஞர்கள், ஆன்மிகச் சாதகர்கள், ஆராய்ச்சி யாளர்கள் இவர்கள் யாவரும் ஒத்துப்போன ஒரு புள்ளி எது தெரியுமா? நம்முடைய இன்றைய கடமையே நம்முடைய அதிகாரம், உரிமை, அளவு, வரம்பு என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.

இவ்விதம் இன்றில் வாழ்ந்தவர்களே என்றும் வாழ்கிறார்கள். ஒன்றைத் தள்ளி ஒன்றைக் காண முயன்றவர்கள் எல்லோரும் ஒன்றுமில்லமால் காலச் செலவில் கரைந்தே போனார்கள்.

எந்தச் செயலின் துவக்கத்திற்கும் நல்ல நாள் எது?

இன்று

எந்தத் தடையை வெல்லவும் நல்ல தருணம் எது?

இன்று

கடமையைச் செய்ய வேண்டிய காலம் எது?

இன்று

எனவே,

ஒருநாள் இரவில் அழலாம்; வாழ்வில்

ஓயா தழுவது குற்றம்

திருநாள் இதுதான் என்றே நடந்தால்

திசையெ ல்லாம் நம் கொற்றம்!

வருந்தித் திருந்தி வாழ்ந்து வளர்வதே
வல்லவர் காட்டிய பாதை! நமக்குப்

புரிந்த நீதியில் பொருந்திக் கொண்டால்

அதுதான் நமக்கு கீதை!

நாளை

வேலையைத் தொழுவோர்க்கு வேளை கிடையாது

வேளையை வென்றவர்க்கு நாளை கிடையாது

‘நான்முகன்கூட நாளையை அறியான்’ என்று சான்றோர்கள் சோதிடர்களை எச்சரிப்பார்கள். நாளை முடிசூடப் போகிறான் ராமன் இரவு வரை அயோத்தி அப்படித்தான் நினைத்துக் கொண்டி ருந்தது. எல்லா ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருந்தன. ஆனால் இரவு விடிவதற்குள் முடிவு முறிந்து விட்டது.

எதையும் நிச்சயமாக சொல்ல முடிவதில்லை என்பதற்கு ராமனின் நடக்காத பட்படாபிஷேகம் மிகச் சிறந்த உதாரணம் என்பதால் கிராமங்களில், ‘நாளையப் பாடு ராம ராஜ்ஜியம்’ என்றோர் அறிவார்ந்த வசனம் வழக்கில் உண்டு. ஆனால் நடக்கப்போவதை அறிய முடியாமல் இயற்கை தன் வசத்தில் வைத்திருப்பது நம் மீதுள்ள கருணையால் தான். நடந்து முடிந்தது மீண்டு வந்தாலும், நடக்கப் போவது முன்பே தெரிந்தாலும் நம் நிம்மதி கெடும். மனிதத்தன்மை மேலும் மலினமடையும். வாழ்வின் இயல்பான ரீதி திரிந்துவிடும்.

இன்று செய்யவேண்டியவற்றைச் செவ்வனே செய்பவர்கள்தான், நாளை நமதே என்று உற்சாகமாய் இருப்பவர்கள்! தான் ருசித்த மாம்பழத்தின் கொட்டையைச் சரியான இடத்தில் நட்டு நீரூற்றியவன் அங்கே நிற்காமல் சென்றவன் தான். அது மரமாகிக் கனி தருவதைத் தான் காண முடியாது என்று நன்கு அறிந்தவன்தான். அவனுடைய செயல், தனது நாளைக்காக அல்ல, உலகத்தின் நாளைக்காக.

நாளையைப் பற்றிய நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதை விடவும் சிறந்த உதாரணம் கிடையாது. விஞ்ஞானி களுக்கு நாளை என்பதே தெரியாது. ஆனால் அவர்கள் இன்றில் நின்று செய்தùல்லாம் நாளைக்காகவே! மெய்ஞானிகள் இன்றில் ஒரு கணத்தை நிறுத்தி அதில் தம்மை நிறுவிக் கொண்டார்கள். அவர்களுடைய சாதனைகள் என்றென்றும் நீடித்து நிலைப்பவை.

ஆக, நாளை என்பதை சாதனையாளர்கள் அணுகிய விதம் நம் அனைவருக்கும் பாடமானது.

1. நாளை பார்த்துக் கொள்வோம் என்னும் நினைப்பை அவர்கள் சம்மதித்ததே இல்லை. நாளை என்று ஒன்று கிடையாது என்பது போலவே இயங்கினார்கள.

2. நாளை என்பது புதிரானால் என்ன, மர்மமானால் என்ன இன்றுதான் தெளிவாகத் தெரிகிறதே! நேரில் தெரிவதை விட்டுவிட்டு நிழலுக்கு மிரள்வானேன் என்பதே அவர்களுடைய கேள்வி.

3. எல்லாவற்றையும் இன்றே செய்துவிட முடியுமா என்று கேட்டால் அவர்கள் சொல்வார்கள், நாளைய பயணத்திற்கு இன்று பயணச்சீட்டு எடுத்துவைத்துக் கொள்வது சரியானது. அதுதான் இன்று செய்ய வேண்டியது. நாளைய பயணத்தை இன்று செய்ய முனையா திருப்பதும், அது குறித்துக் கவலைப் படா திருத்தலுமே இன்றில் வாழ்வது.

4. நாளை என்பது நம் கையில் இல்லை. என்பது எவ்வளவு உண்மையோ அதைவிடவும் மிக மிக உண்மை, இன்று என்பது முழுக்க முழுக்க நம் பொறுப்பில்தான் இருக்கிறது என்பதும்.

5. இன்றே நம் வசம். செயலுக்கு மட்டுமே நாம் பொறுப்பு. விளைவைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் பெரும் சாதனைகள் புரிந்து இந்த உலக வாழ்க்கைக்குப் பலவிதமான நலங்கள் சேர்த்தவர்கள் ஒவ்வொருவரும் நாளை என்ற ஒன்றைச் சற்றும் கண்டுகொள்ளாமல், இன்று செய்ய வேண்டியவற்றை இம்மி பிசகாமல், இதய பூர்வமாகச் செய்தவர்கள்.

பயனைக் காலம் தரும். விமர்சனத்தைக் காலம்தான் வைக்கும். அவர்களுக்கே இந்தக் குறள் பொருந்தும்:

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *