உங்கள் பக்கத்தில் யார்?

– அத்வைத் சதானந்த்

ள்ளிரவில் 120 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது. டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார், “சார் பின்னாடி போய் உட்காருங்க. நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கிக்கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து, விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது. சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது. இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர் விரும்பவில்லை.

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் யோசியுங்கள், உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? உற்சாகமானவரா? சுறுசுறுப்பானவரா? நம்பிக்கையானவரா? விரக்தி எண்ணம் உள்ளவரா? இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர். மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள். எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள். லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள். எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்? யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

4 Responses

  1. Akarsh V Nair

    Where else can one find more motivated co-passenger than here on Namadhu Nambikkai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *