உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் ஆசிரியரை பிடிக்குமா ?
– கிருஷ்ண. வரதராஜன்
அந்த மாணவன் ஆசிரியரை அடித்து விட்டான்.பள்ளியிலிருந்து நீக்கிவிட்டார்கள். இல்லையென்றால் வேலையை விட்டுவிடுவதாக ஆசிரியர் உறுதியாக இருந்ததால் வேறுவழியின்றி நீக்கி விட்டார்கள்.
அவன் முகத்தில் ஆசிரிய இனத்தையே வெறுப்பது போல தெரிந்தது. அறிவுரை சொல்ல அழைத்து வந்திருப்பதால் அவன் என்னையும் ஒரு ஆசிரியராகவே கருதி வெறுப்போடு அமர்ந்திருந்தான். பார்ப்பவர்களுக்கு என்னை அடிக்க அவன் உட்கார்ந்திருப்பது போல இருந்தது.
உன்னிடம் எனக்கு பேச எதுவுமில்லை. நீ சொல்லி நான் எதையும் கேட்கப்போவதுமில்லை என்று உறுதியாக இருந்தான். கவுன்சிலிங்கிற்கு வரும் பலபேர் என் முன்னால் இப்படி வேண்டா வெறுப்பாக உட்கார்ந்திருக்கிறார்கள். அப்பொழு தெல்லாம் அவர்களை நார்மலாக்க, உனக்கு பிடித்த ஆசிரியர் யார் ? என்று கேட்பேன். ஆனால் இப்போது அதற்கும் வாய்ப்பில்லை.
பொதுவாக குழந்தைகளுக்கு ஆசிரியரை பிடிக்கவில்லையென்றால் கூட அவர்கள் நடத்தும் பாடங்கள் பிடிக்காது, படிக்கப் பிடிக்காது என்பதை ஆசிரியர்கள் உணர்வதில்லை. அதனால் மாணவர்களுக்குப் பிடித்தது போல நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை.
ஆசிரியர் பாடம் நடத்தும்விதம் பிடிக்க வில்லையென்றாலோ அல்லது தன்னை நடத்தும் விதம் பிடிக்கவில்லை என்றாலோ கூட ஆசிரியரை பிடிக்காது. பாடமே பிடிக்கவில்லை என்றாலும் அல்லது படிக்கவே பிடிக்கவில்லை என்றாலும் கூட ஆசிரியரை பிடிக்காது.
வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் ஜன்னலில் குரங்கு ஒன்று உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு நக்கலாக சிரித்துக்கொண்டே ‘என்னடா நியூ அட்மிஷனா’ என்றார்.
ஒரு மாணவன் சிரித்துக்கொண்டே, ‘இல்ல சார். நியூ அப்பாயின்மெண்ட்’ என்றான். மாணவர்களுக்கு நாம் எதைக் கற்றுக் கொடுக்கிறோமோ அதையேதான் நம்மிடமும் கடைப்பிடிப்பார்கள்.
போதாத குறைக்கு சினிமாவில் ஆசிரியரை நக்கலடிப்பது எப்படி என்று ஸ்பெஷல் கிளாஸ் வேறு நடத்துகிறார்கள்.
ஒருவரை அடிப்பது என்பது யார் செய்தாலுமே தவறுதான். மிருகங்களுக்குத்தான் அடித்து பயிற்சி கொடுப்பார்கள். ஆனால் இன்று மிருகங்களை அடிப்பதையே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியிருந்தும் அடிக்கும் பழக்கம் மட்டும் இன்னும் முழுதாக நம்மிடமிருந்து நீங்கவில்லை. பெற்றோர் , ஆசிரியர் அல்லது சகமாணவன் என யாரோ ஒருவர் யாராவது ஒருவரை அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் இன்னும். என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் நம் அடிமனதின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் காட்டுமிராண்டித்தனம் நீங்காமல் இருக்கிறதோ ? என்று தோன்றுகிறது.
நூற்றுக்கு நூறு இயக்கம் அனைத்து நிலைகளில் உள்ள மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக அரசுப்பள்ளிகளில் நான்கு நாட்கள் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்தினோம்.
சில பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் காட்சி எங்கள் பயிற்சியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. அடித்தார்கள் என்பதுகூட சரியான பதம் அல்ல. விளாசினார்கள் என்பதே சரி.
200 மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி அரங்கம் நாங்கள் வந்து அமர்ந்த பின்னும் சலசலத்துக்கொண்டிருந்தது. ஓர் ஆசிரியர் வந்தார். பிரம்பால் அனைவரையும் சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கினார். அரங்கத்தில் ஒரே அமைதி.
எனக்கு அமைதி பிடிக்கும். ஆனால் அது தியான அமைதியாக இருக்க வேண்டுமே தவிர இப்படி மயான அமைதியாக அல்ல. நாங்கள் விருந்தினர்கள் என்பதால் அந்த ஆசிரியரை எங்களால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
எங்கள் குழுவில் உள்ள இளம் பயிற்சியாளர் என்னிடம் கேட்டார். ‘இந்த ஆசிரியரை இங்கிருக்கும் யாராவது ஒரு மாணவன் அடிக்கக்கூட வேண்டாம், அடிக்க வருகிற கம்பை பிடித்து நிறுத்தினால் அதை தாங்கிக் கொள்வார்களா ?’
நிகழ்ச்சி நடந்து முடிந்த ஒரு மாதத்திற்குள் அவர் சொன்னது நடந்தே விட்டது. யாரோ செய்த தப்புக்கு எல்லோரையும் போட்டு அடித்திருக்கிறார் ஆசிரியர். வலி தாங்காமல் கம்பை பிடுங்கி எறியப்போக அதைத் தடுக்க முனைந்த ஆசிரியர் மேல் அடிபட்டிருக்கிறது. ஆசிரியரை அடித்துவிட்டான் என்று விஷயத்தை முடித்துவிட்டார்கள். பள்ளியிலிருந்தும் நீக்கிவிட்டார்கள்.
நடந்ததை எல்லாம் விளக்கி கொண்டிருந்த மாணவனின் அப்பா என் முன்னாலேயே அவனை ஓங்கி அறைந்தார் அடங்காத எரிச்சலோடு.
என்னிடம் வருகிற பல பெற்றோர்கள் நான் எப்போதும் மாணவர்கள் பக்கமே பேசுவதாக குறைபட்டுக்கொள்வார்கள். நான் சொல்வேன் ஒரே நேரத்தில் உங்கள் கால்களிலும் உங்கள் குழந்தைகள் கால்களிலும் வெந்நீர் கொட்டி இருவரும் வலியால் துடித்தால் நான் யாருக்கு முதலில் உதவி செய்யட்டும் ? நீங்கள் வளர்ந்தவர்கள். சிறிதேனும் வலியை தாங்கிக் கொள்வீர்கள். ஆனால் குழந்தைகள் ? இன்றுவரை நான் குழந்தைகளுக்குத்தான் முதலுதவி செய்து வருகிறேன்.
நீ செய்தது தப்பு என்றேன். இதைத்தான் நீங்க சொல்லப்போறீங்கன்னு எனக்கு தெரியும் என்பதை போல பார்த்தவனிடம் . அதே சமயத்தில் உன் டீச்சர் செய்ததும் தப்பு என்றேன்.அவனை ஆசுவாசப்படுத்துவதற்காக.
குதிரையை அடிப்பது மேலும் வேகமாக ஓட வேண்டும் என்பதற்குத்தானே தவிர அதற்கு வலியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல… என்றேன்.
யார் செய்தது சரி அல்லது தவறு என்று பார்ப்பதை விட ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்றும் இதில் பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் பார்ப்போம்.
சிந்திக்கும் விதத்தை மாற்றுங்கள்
‘என் பிள்ளை மேல கையை வைச்சது யாரு ? இப்பவே அந்த டீச்சர் இங்க வரணும்’ என்று ஸ்கூல் வாசலில் நின்று கத்துகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். ‘எங்களாலதான அவன அடக்க முடியல . நீங்களாவது நாலு அடி வைச்சாவது அவன நல்லபடியா கொண்டு வந்தா சரிதான்’ என்று சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.
இதில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, அடிப்பதால் யாரும் திருந்தியது கிடையாது. கத்துவதாலும் யாரும் திருந்துவது கிடையாது. இப்படி எல்லாம் செய்வதால் ஆசிரியர்கள் மேலுள்ள மரியாதை மேலும் குறைந்து குழந்தைகள் இன்னும் அலட்சியமாக மாற ஆரம்பிக்கிறார்கள்.
எனவே, ஆசிரியர்கள் பற்றிய குழந்தைகளின் கருத்துகள் என்ன என்பதை அவ்வப்போது மனம் விட்டு பேசுங்கள். ஆசிரியர்களைப்பற்றி குறை சொன்னால் கண்டிக்காமல் அதை நேர்மறையாக புரிந்து கொள்ள உதவி செய்யுங்கள்.
உதாரணத்திற்கு ஆசிரியர் என்னை பாரட்டவில்லை. எப்போதும் குறைதான் சொல்கிறார் என்றால், பாராட்டுகிறவர்கள் நம்மை அதே நிலையில் வைத்திருப்பவர்கள் விமர்சிப்பவர்களே நம்மை மேம்படுத்துபவர்கள் என்பதை விளக்கமாக சொல்லிக்கொடுங்கள்.
‘நீ நல்லா படிக்கிறேன்னு சொன்னா, சரி நாம தான் நல்லா படிக்கிறோமேன்னு நீ அலட்சியமா இருந்துடக்கூடாதுன்னுதான் நீ இன்னும் படிக்கணும்னு உன் டீச்சர் சொல்றாங்க’ என்று பேசுங்கள்.
உறவினராக்குங்கள்
ஆசிரியர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கு மான நெருக்கத்தை அதிகப்படுத்த மாதம் ஒரு முறை ஆசிரியர் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். குடும்ப விழாக்களுக்கு அழையுங்கள்.
ஏதாவது தவறு செய்தால் ஆசிரியர்களிடம் சொல்கிறேன் என்று சொல்லி ஆசிரியர்களை பூச்சாண்டிகளாக்காதீர்கள்.
எல்லோருக்கும் வணக்கம்
ஆசிரியர்களை மதிக்கும் பழக்கம், மாணவர் களிடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று பெரும்பாலான ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையும் கூட.
எனவே, உங்கள் குழந்தைகளிடம், ‘அப்துல் கலாம் உட்பட இந்த உலகத்தில் வெற்றி பெற்ற யாவரும் ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதலால் வென்றவர்கள்தான்’ என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.
ஆசிரியர் நமக்கே தெரியாமல் நம்மை மேம்படுத்துபவர் என்பதை எடுத்துச்சொல்லி வகுப்புக்கு வராத ஆசிரியராக இருந்தால்கூட அவர்களிடமும் மதிப்போடும் கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்துங்கள்.
குறைந்த மதிப்பெண் எடுக்கிற மாணவர்களை விட கற்றுக்கொள்ளும் ஆர்வமே இல்லாத மாணவனைத்தான் ஆசிரியர்களுக்கு பிடிப்ப தில்லை. எனவே உங்கள் குழந்தைகள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் ஆசிரியர்களை பயந்து விலகாமல் சந்தேகம் கேட்கவும் அதிக மதிப்பெண் பெற வழிகாட்டும்படியும் கேட்கச் சொல்லுங்கள்.
கேலிக்கு தடா
ஆசிரியர்களை கேலி யாக பேசுவது மாணவர் களிடம் இன்று இயல்பாகி விட்டது. காரணப்பெயர் வைத்து ஆசிரியர்களை பேசாத மாணவர்களே இல்லை என்றே சொல்லலாம்.
சமீபத்தில் எனக்கு வந்த எஸ்.எம்.எஸ் இது .
மகன் : எங்களுக்கு புதுசா வந்திருக்கிற டீச்சர் சூப்பர் பிகருப்பா.
அப்பா : டீச்சரை பிகர்ன்னு எல்லாம் சொல்லக் கூடாதுப்பா.. அவங்க உனக்கு அம்மா மாதிரி..
உடனே மகன் : சைடு கேப்புல நீ ரூட்டை போடாத.
இதை அனுப்பிய மாணவனை உடனே நான் தொடர்பு கொண்டு பேசிய போது மாணவர்கள் என்றாலே இப்படித்தான் ஜாலியாக எதையும் கிண்டல் செய்தபடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப்பதிந்துவிட்டது புரிந்தது. இதையெல்லாம் கண்டிப்பதற்கு மாறாக தவறு என்று அவர்களாகப் புரிந்து கொள்ள உதவுங்கள்.
பேசுவதற்கு புல்ஸ்டாப்
எவ்வளவுதான் நன்றாக படிக்கிற பையனாக இருந்தாலும் வகுப்பில் அருகில் உள்ள மாணவனிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் ஆசிரியர்களுக்கு பிடிப்பதில்லை. உங்கள் குழந்தைக்கு அந்தப்பழக்கம் இருந்தால் உங்கள் குழந்தையை மட்டுமல்லாமல் அவர்களின் நண்பர்களையும் அழைத்து இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள ஊக்குவியுங்கள்.
மாணவர்களை அடித்து, பேசாமல் அமைதியாக்கிய அந்த அரசுப்பள்ளியில் எங்கள் பயிற்சி நடந்து கொண்டிக்கும்போது வகுப்பை கவனிக்காமல் ஒன்றிரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பயிற்சியை வழங்கிக்கொண்டிருந்த எங்கள் பயிற்சியாளர் கேட்டார், இங்கே 5 மாணவர்கள் நினைத்தால் 95 பேரின் கவனத்தை கலைக்க வைக்க முடிகிறது. அந்த 95 மாணவர்கள் நினைத்தால் அந்த 5 பேரை கவனிக்க வைக்க முடியாதா?
அடுத்த 5 நிமிடத்தில் அந்த இடத்தில் முழு கவனம் வந்தது. யாரும் யாரையும் பேச விடவில்லை.
மாணவர்கள் உணர்ச்சிவசத்தில் தவறு செய்கிறபோது நாமும் உணர்ச்சிவசப்பட்டு அவர்களை கண்டிப்பதை விட நாம் நிதானமாக இருந்து அவர்களை சிந்திக்க வைத்தால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கிற மாற்றம் கிடைக்கும் என்ற பாடத்தை அன்று மீண்டும் ஒரு முறை நான் கற்றுக்கொண்டேன்.
அதைத்தான் என் முன்னால் கவுன்சிலிங் கிற்கு அமர்ந்திருந்த மாணவனுக்கும் கற்றுக் கொடுத்தேன். செய்யாத தவறுக்கு உன் ஆசிரியர் அடித்திருந்தாலும் அப்போது பொறுமையாக இருந்துவிட்டு ஸ்கூல் முடிந்ததும் உன் ஆசிரியரிடம் சென்று நடந்ததை விளக்கியிருந்தால் உன் நிதானமான அணுகுமுறையை பார்த்து ஒரு வேளை அதன் பிறகு அடிக்கிற பழக்கத்தையே கூட நிறுத்தியிருக்கக்கூடும். இப்போதும் நேரம் கடந்துவிடவில்லை உன் ஆசிரியரை அவர் வீட்டில் போய் பார். நடந்ததிற்கு மன்னிப்பு கேள். என் மேல் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்திருப் பீங்க. அதற்கு மாறாக நடந்து கொண்டதற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேள். எல்லா ஆசிரியர்களும் மாணவர்கள் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தண்டனைகள் தருகிறார்கள். நீ திருந்தியதை உணர்ந்தால் அவராகவே உன்னை பள்ளியில் சேர்க்க முயற்சி எடுப்பார் என்று சொல்லி அனுப்பினேன்.
வகுப்பறையில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகளை பெற்றோர்களே கற்றுக் கொடுத்துவிட்டால் இது போன்ற சம்பவங்களுக்கு வாய்ப்பேயில்லை.
ஆசிரியரை நேசிக்க வைப்பது குழந்தை களின் வெற்றிக்கு ஆசைப்படும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
ஏனெனில் ஆசிரியரை பிடித்தால்தான் குழந்தைகளுக்கு பாடங்கள் பிடிக்கும். படிக்கவும் பிடிக்கும். இது வீட்டிற்குள் நீங்கள் பெறவேண்டிய வெற்றி.
Leave a Reply