மீட்பராகுங்கள்

கவுன்சிலிங் கலையை கற்றுக்கொடுக்கும் தொடர்

– கிருஷ்ண வரதராஜன்

மனைவிக்கு கவுன்சிலிங் கொடுப்பது எப்படி?

என் நண்பர் ஒருவர் தன் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று, மனைவியுடன் வந்திருந்தார். அவர்களிடம் புகழ் பெற்ற ஜோக் ஒன்றை சொன்னேன்.

தன் மனைவிக்கு காது கேட்கவில்லை என்ற குறையோடு டாக்டரை சென்று சந்தித்தார் ஒருவர். “காது கேட்கவில்லை, டாக்டரிடம் வா என்றால், எங்களுக்குள் சண்டை வரும். எனவே, என் மனைவிக்கு தெரியாமல் அவள் உணவில் கலந்து கொடுக்கிற மாதிரி ஏதாவது ஒரு மருந்து கொடுங்கள். நான் எப்படியாவது அவளுக்கு தெரியாமல் கொடுத்துவிடுகிறேன்” என்றார்.

எந்த அளவிற்கு காதுகேட்கவில்லை என்பது தெரிந்தால்தான் மருந்து தர முடியும் என்று டாக்டர் சொன்னதால் மனைவியின் செவிட்டு தன்மையை சோதிக்க வீட்டிற்கு வந்தார் கணவர். வீட்டு வாசலில் நின்று கொண்டு, “ஏய் இன்னிக்கு என்ன டிபன்?” என்றார். பதில் இல்லை.

ஹாலுக்கு சென்றார். அங்கிருந்து, “என்ன டிபன்?” என்று கத்தினார். ம்ஹும். பதில் இல்லை. கிச்சன் அருகில் சென்று, “இன்னிக்கு என்ன டிபன்?” என்று கேட்டார். எந்தப் பதிலும் வரவில்லை. ‘அடக்கடவுளே! இந்த அளவுக்கா செவிடாகிவிட்டாள்’ என்று நொந்து கொண்டு கிச்சனுக்குள் நுழைந்து, சமையல் செய்து கொண்டிருந்த மனைவியின் பின்பக்கம் நின்று கொண்டு, “இன்றைக்கு என்ன டிபன்?” என்றார். மனைவி சட்டென்று திரும்பி வெடுக்கென்று சொன்னார், “எத்தனை தடவ சொல்றது. நீங்க வாசல்லேந்து கேட்கும்போதுதிலிருந்து சொல்லிட்டிருக்கேன்! தோசைன்னு” என்றார்.

புரிகிறதா? காது யாருக்கு கேட்கவில்லை என்று.

கணவன் மனைவி இரண்டு பேரும் மனம் விட்டு சிரித்தார்கள். அவர்கள் மனம் திறந்து பேச உதவியாக இருக்கட்டும் என்று ஆண்கள் சிந்திக்கும் விதத்திற்கும் பெண்கள் சிந்திக்கும் விதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்கள் சிந்திக்கும் விதத்தில் மலையளவு வித்தியாசம் இருக்கிறது.
பெண்களுக்கு வீடுதான் உலகம். ஆண்களுக்கு உலகம்தான் வீடு. அடுத்து தேர்தலில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது ஒரு ஆணுக்கு தலையாய பிரச்சனையாக இருக்கும். தன் கணவருக்கு தலைவலி என்பதுதான் ஒரு பெண்ணுக்கு தலையாய பிரச்சனையாக இருக்கும்.

ஆண்களுக்கு அறிவுரைகள் பிடிக்காது. காரணம், எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற மனோபாவம். ஆனால் பெண்களால் அறிவுரைகள் சொல்லாமல் இருக்க முடியாது. காரணம், பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம். அதனால் ஒருவரை பார்த்தவுடனே இவரோடு சேராதீர்கள் என்பார்கள்.

ஆண்கள் கொஞ்சம் மூடி. தங்கள் பிரச்சனைகளை தங்களுக்குள் போட்டு புதைத்துக் கொள்வார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். பெண்கள் ரொம்பவே ஓப்பன். தங்கள் மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

பெண்களால் எதையும் மனதில் போட்டு வைத்துக்கொள்ள முடியாது. அதனால் உடன் வேலை பார்ப்பவருடன் கருத்து வேறுபாடு வந்தால் அப்போதே சண்டை போட்டு விடுகிறார்கள். ஆனால் ஆண் அப்படி அல்ல. கொலையே செய்கிற அளவிற்கு வெறுப்பு இருந்தால்கூட அதை வெளியில் காண்பிக்காமல் சம்மந்தப்பட்டவரோடு டீ சாப்பிடச் செல்வார்கள்.

பெண்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வுகளையோ ஆலோசனைகளையோ எதிர் பார்ப்பது இல்லை. ஆறுதலைத்தான் எதிர் பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு ஆபிஸ் விட்டு கணவனும் மனைவியும் ஒன்றாக வீட்டிற்கு வருகிறீர்கள். மனைவி அசதியாக இருக்கிறது என்கிறார்.

“ஏன் இப்படி இழுத்துவிட்டுக்கிற.. வேலையை விட்டுத்தொலைன்னா கேட்கிறீயா..” என்றோ, “உன் ஆபிஸ் பக்கம் தானே! பேசாம ஒரு வண்டி வாங்கிக்க” என்று சொன்னால் அவர்கள் திருப்பதியாவ தில்லை.. ச்சே! நீயும்தான் எவ்வளவு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. வீட்டிலும் வேலை செய்து விட்டு, ஆபிஸிலும் வேலை செய்ய வேண்டும். போதாத குறைக்கு கூட்ட நெரிசல் மிகுந்த பஸ் வேறு என்று பேச வேண்டும். காரணம், அவர்கள் எதிர் பார்ப்பது தீர்வுகளை அல்ல: ஆறுதலைத் தான்.

மனைவிக்கு உதவி செய்ய வேண்டாம். உதவி செய்யட்டுமா? என்று கேட்டாலே போதும். திருப்தியடைந்து விடுவார்கள்.

ஆண்கள் எதையும் மூளையிலிருந்து அணுகுகிறார்கள். பெண்கள் எதையும் இதயத்திலிருந்துதான் அணுகுகிறார்கள்.

எளிமையாக சொல்ல வேண்டு மென்றால் ஆண்களும் பெண்களும் எதிரும் புதிரும்தான்.
எதிர் எதிராக இருப்பதால்கூட புதிர் புதிராக தெரிகிறதோ, என்னவோ..

இதையெல்லாம் நான் விளக்க விளக்க அவர்கள் முகத்தில் உற்சாகமும் தெளிவும் பிறந்தது. அவர்கள் பிரச்சனையை அவர்கள் சொல்ல வில்லை. அதற்கு இனி தேவையும் இல்லை. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது மட்டும் தானே பிரச்சனையே.

அவர்களை வழியனுப்பும் விதமாக ஒரு நகைச்சுவை துணுக்கைப் பகிர்ந்துகொண்டேன். அதோடு, இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

என் கணவருக்கு கண் மண் தெரியாமல் கோபம் வருகிறது டாக்டர்.

கோபத்தில் அவர் எப்படி நடந்துக்கிறார் ?

சுவத்துல நங்கு நங்குன்னு முட்டிக்கிறாரு டாக்டர்.

அதான் உங்க பிரச்சனையா?

இல்லை டாக்டர். அப்படி தலையில முட்டிக்கும்போது நடுவில ஒரு தலையணைய வைச்சிக்கிறாரு. அதான் பிரச்சனை.

ஒருமுறை, என் மனைவி, ‘வர வர என்னிடம் நீங்க பேசறதே இல்லை’ என்றார்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நானும் என் மனைவியும் இணைந்துதான், எங்கள் சுதந்திரா ஹாலிடே ஸ்கூல் பணிகள் அனைத்தையும் செய்கிறோம். அதனால் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி. நாங்கள் எப்போதும் இணைந்தே இருக்கிறோம்.

அதனால் நான் எப்போதும் அவர்களிடம். எதையாவது பேசிக்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது. இப்படியிருக்கையில் நான் சரியாக பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை சொன்ன உடனேயே நான் ஒரு மணி நேரம் அவர்களை உட்கார வைத்து பேசி விட்டேன். ஆனாலும் அவர் முகத்தில் சமாதானம் தெரியவில்லை. எனக்கோ காரணம் புரியவில்லை.

அடுத்து வந்த வாரத்தில் ஒருநாள், அருகில் இருந்த பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்து சென்றிருந்தோம். குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, என் மனைவியுடைய முகத்தில் கொஞ்சம் கூடுதல் உற்சாகம் தெரிந்தது.

அப்போதுதான் எனக்கு சந்தேகம் வந்தது. ஒருவேளை நான் பேசவில்லை என்று அவர் சொன்னது உண்மைதானோ? அதனால்தான் வாட்டமாக இருந்தாரோ என்று நினைத்துக் கொண்டேன். இருந்தாலும் காரணம் புரியவில்லை. நேரடியாக கேட்டுவிட்டேன்.
“ஏன் அனு நான் பேசவே இல்லைன்னு சொன்ன? தினமும் உன்கிட்டதானே அதிகம் பேசிக் கொண்டிருக்கிறேன்”.

அதற்கு என் மனைவி, “பேசறீங்க. யார் இல்லைன்னு சொன்னா? ஆனா என்ன பேசறீங்க.. இன்னைக்கு மெயில் பாத்தியா? இன்னிக்கு எதுவும் செக் வந்ததா? லெட்டர் அனுப்ப வேண்டிவங்களுக்கெல்லாம் அனுப்பிச்சாச்சான்னுதானே பேசறீங்க. கொஞ்ச நேரமாவது என்னைப் பற்றியோ, நம் குழந்தைகளைப் பற்றியோ பேசறீங்களா? என்றார்.

உண்மைதான். நாள் முழுக்க என் மனைவியிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அலுவல் நிமித்தமாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேனே தவிர குடும்பத்தை பற்றி அல்ல.
அன்று முதல் தினமும் ஓர் அரை மணிநேரமாவது ஓய்வான தன்மையில் குடும்பத்தை பற்றி பேசுவதை வழக்கமாக்கிக்கொண்டேன்.

இது, கவுன்சிலிங் செய்வது எப்படி? என்று தொடர் எழுதும் எனக்கு, என் மனைவி கொடுத்த கவுன்சிலிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *