புதியதோர் உலகம் செய்வோம்

– தே. சௌந்தர்ராஜன்

ஒரு மனிதனுக்கு நீண்ட நாட்களாக ஓர் ஆசை. சொர்க்கம் எப்படி இருக்கும், நரகம் எப்படி இருக்கும்? என்பதைத் தன் உயிர் உள்ளபோதே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அந்த ஆசை. இந்த பூத உடல் மண்ணில் மாயும் முன், இந்த கட்டை வேகுமுன், நான் இதைத் தெரிந்தே தீருவேன் என மிகுந்த ஆவலோடு இருந்தான் அவன்.

இறைவனும் அவன் ஆவல் கண்டு அவன் மேல் இரக்கம் கொண்டு அவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது வந்து அவனைக்கூட்டிச் செல்கிறார். இவர்கள் ஆகாயத்தில் மிதந்து சென்று ஒரு மலையில் இறங்குகிறார்கள். அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு பட்டணம் இருக்கிறது. அங்கே நிறைய மக்கள் இருக்கிறார்கள், மேலும் நிறைய அகண்ட பானைகள் அங்கே இருக்கின்றன. அப்பானைகளில் பால் பாயாசம், திராட்சை ரசம் மற்றும் பல்வேறு பழரசங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பார்த்தாலே நாவில் நீர் ஊறுகிறது. இந்த பானங்களை அள்ளிக் குடிக்க அருகில் கரண்டிகளும் உள்ளன. ஆனால் அந்தக் கரண்டிகள் ஒரு விதமான வளைவு உள்ளதாகக் காணப்படுகிறது. அந்த மனிதர்கள் அந்த கரண்டிகளில் அப்பானங்களை அள்ளி அள்ளித் தங்கள் வாயில் ஊற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் ஒரு சொட்டு பானம் கூட அவர்கள் வாயில் விழவில்லை. மாறாக அத்தனையும் சிந்தி, சிதறி வீணாகப் போகின்றன. ஏனென்றால் அந்தக் கரண்டியின் அமைப்பு அப்படி. இருப்பினும் தொடர்ந்து அவர்கள் முயன்று கொண்டே இருக்கிறார்கள். பானத்தை அருந்த முடியாமல் தீராத பசியாலும், தாகத்தாலும் தவிக்கிறார்கள்.

என்ன கொடுமை இது என்று அந்த மனிதன் இறைவனிடம் வினவுகிறான். இவர்கள் முயன்று கொண்டே இருப்பார்கள். ஆனாலும் இவர்கள் எண்ணம் ஈடேறப் போவதில்லை. இவர்கள் பசியாலும், தாகத்தாலும் தவித்துக் கொண்டே இருப்பார்கள். இதுதான் நீ பார்க்க விரும்பிய நரகம் என்றார் இறைவன்.

மீண்டும் ஆகாயத்தில் மிதக்கிறார்கள். சற்று நேரத்தில் வேறு ஒரு மலை உச்சியை அடைகிறார்கள். அதன் அடிவாரத்திலும் ஒரு பட்டணம் காணப்படுகிறது. இங்கும் அது போலவே பானைகளில் பழரசங்களும், வினோதமான வளைவு உள்ள கரண்டிகளும் காணப்படுகின்றன. ஆனால் இவர்கள் செயல்கள் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. எல்லோரும் அந்தக் கரண்டிகளில் பானங்களை அள்ளி தம் எதிரில் உள்ளவர்களுக்கு ஊட்டுகிறார்கள். ஒரு சொட்டு பானம் கூட கீழே விழவில்லை. ஏனென்றால் அந்தக் கரண்டிகளின் அமைப்பு அப்படி. இங்குள்ள மக்கள் எப்போதும் உண்டு களித்து உல்லாசமாக வாழ்கிறார்கள்.

இறைவன் மறைந்துவிடுகிறான். இவனும் புரிந்து கொள்கிறான். இதுதான் சொர்க்கம் என்று இந்த மனிதன் இப்போது சொர்க்கத்தையும் நரகத்தையும் வாழ்வின் அர்த்தத்தையும் புரிந்து கொள்கிறான். ஆனால் நாமோ இன்னும் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறோம்.

நிறைவில்லா வாழ்க்கை

இத்தனை நாளாய் எத்தனை மனிதர்கள் இப்பூவுலகில் சுயநலத்தோடு வாழ்ந்து மறைந்து விட்டார்கள்? அவர்கள் அனைவரும் நிறைவான வாழ்வு வாழ்ந்தார்களா? இல்லையே! ஏன்?

காலமெல்லாம் உழைக்கிறோம், கஷ்டப் படுகிறோம். ஆனாலும் கடைசிவரை நிறைவற்ற வாழ்வு வாழ்ந்து போய்விடுகிறோம். பேராசைக் காரர்களாக, பிச்சைக்காரர்களாக, ஏக்கம் நிறைந்தவர்களாக, தாகம் தீராதவர்களாக, தன்னிறைவு அற்றவர்களாக வாழ்ந்து தீர்க்கிறோமே , ஏன்?

உலகம் மாறவில்லை

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மனிதன் வாழ்ந்த பின்னும் உழைத்த பின்னும் இவ்வுலகில் வறுமை மறைந்துவிட்டதா, போர்கள் நின்று விட்டனவா இல்லையே, ஏன்?

எத்தனை அறிவியல் மேதைகள், பொருளாதார வித்தகர்கள், தத்துவஞானிகள் வாழ்ந்து மறைந்த பின்னும் மனிதனின் வறுமையும், அறியாமையும், போராட்டங்களும் இன்னும் மறையவில்லையே, ஏன் இந்த பரந்த பூமியில் வாழ வழியில்லாமல் வறுமையில் வாழும், கடனில் தத்தளிக்கும் சாகத்துடிக்கும் விவசாயிகள் கடைகோடி மனிதர்கள் எத்தனைபேர் ஏன் இந்தக் கொடுமை?

கேவலம், ஐந்தறிவு பெற்ற மிருகங்கள்கூட தன் இனத்தைத் தானே அழிப்பதில்லை. ஆனால் அறிவிற் சிறந்த மனிதர்களோ, தம் இனத்தை ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் தாமே கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றனரே ஏன்?

நம்பிக்கை:

மனிதன் தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளையும் தன்னிடமுள்ள இயந்திரங்களையும் நம்பும் அளவிற்குக்கூட சக மனிதனை நம்புவதில்லை.

பயம்:

மனிதன் தன் கையில் துப்பாக்கி இருந்தும் ஏன் எதிராளியைச் சுடாதிருக்கிறான் என்றால் தன் எதிரியின் கையிலும் துப்பாக்கி இருக்கிறது என்ற பயத்தினால்தான். இந்த ஆயுத சமபலத்தால் மட்டுமே உலகில் அமைதி இருப்பதுபோல் காணப்படுகிறது. ஆனால் உள்ளே குமுறிக் கொண்டுதான் இருக்கிறது. எந்த நாடும் தன் அண்டை நாட்டை, கண்டு ஒரு வித பயத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வுலகம் எப்போதும் ஒரு வித பதட்டத்துடன்தான் காணப்படுகிறது. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயம், எதிரியைக் கண்டு பயம், ஆதிக்க சக்திகளைக் கண்டு பயம், ஆதிக்க சக்திகளுக்கோ தங்களிடம் அடங்கி இருப்பவர்கள் எகிறிவிடுவார்களோ என்கிற பயம். இப்படி எங்கும் ஒரு வித பயம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

தன்னலம்:

மனிதன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயிரம் மனிதர்களை கொன்று குவிக்கவும் தயாராக இருக்கிறான். (திரைப்படங்களில் “ஆக்ஷன் ஹீரோக்கள்” அதைத் தானே செய்து கொண்டு இருக்கிறார்கள்) தன் உடைமைகளையும், செல்வங்களையும் பெருக்கிக் கொள்ள ஆயிரம் பேரை அதலபாதாளத்தில் தள்ளவும் நான் தயாராக இருக்கிறேன்.

தனக்காக, தன் குடும்பத்துக்காக ஒரு மலையைக் கூட புரட்டித் தள்ள தயாராக இருப்பவர்கள் பிறருக்காக ஒரு சுண்டுவிரலைக் கூட அசைக்க விரும்புவதில்லை.

இப்படி தான், தன் குடும்பம் மட்டும் எப்படியாவது காப்பாற்றப்பட வேண்டும், எப்படியாவது தான் மட்டும் உயர்ந்துவிட வேண்டும் என்கிற எண்ணமே நம் யாவர் மனதிலும் நிறைந்திருக்கிறது. இதுவே மனித குலத்தின் மேல் விழுந்துவிட்ட கொடிய விஷம்.

நம் யாவர் மனதிலும், சிந்தனையிலும் இந்த விஷம் நீக்கமற நிறைந்திருக்கிறது. மனிதகுலம் முழுமையும் பற்றிக் கொண்ட கொடிய தொற்று நோய் இது. நம் யாவர் செயல்களிலும் இந்த விஷத்தன்மை நிறைந்திருக்கிறது.

ஏன் இத்தனை சூழ்ச்சிகள், தந்திரங்கள், வஞ்சனைகள், போராட்டங்கள், எதைப் பெற்றுக்கொள்ள? எதைக் காப்பாற்றிக் கொள்ள?

வீணாகும் இரு செல்வங்கள்

இந்த உலகில் இரண்டு வளங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒன்று இயற்கை வளம், மற்றது மனிதவளம். மனிதன் ஒருவனுக்கு மற்றவன் எதிராக இருப்பதால், நம்பிக்கை இல்லாமல் இருப்பதால் நாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதால் போட்டி, பொறாமை, போர் என்ற பெயரில் இந்த இரண்டு வளங்களும் வீணாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாடும் பாதுகாப்புக்காக இராணுவத்திற்கு மிகப் பெரும் தொகையைச் செலவிடுகின்றன. மனிதனின் பணபலமும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் மனித குலத்தை அழிக்கவே அதிகமாகப் பயன்படுகின்றன.

பிறர்மனம் காட்டும் கண்ணாடி

ஒரு முகம் காட்டும் கண்ணாடி தன்னை வெளிக்காட்டுவதில்லை. தன் எதிரில் நிற்பவரையே தன்னுள் காட்டுகிறது. அதுபோல நல்ல மனிதன் தான் யாரைத் தன் எதிரில் காண்கிறானோ அவர்களின் உணர்வைத் தன் உணர்வாக உணர்கிறான். அவர்களின் நலனைத் தன் நலனாகவும், அவர்களின் துன்பத்தைத் தன் துன்பமாகவும் பாவிக்கிறான். அவர்களின் துயர் துடைக்க உழைக்கிறான். தான் பசியாறுவதை விட பிறர் பசியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறான். அவனே மனிதன். அவனே மனித தெய்வம், அவன் உள்ளத்தில் பயம் இல்லை, பொறாமை இல்லை, வெறுப்பு இல்லை. ஆகவே அவனுக்கு கவலை இல்லை. எப்போதும் ஆனந்தமே. இதுபோன்ற மிகச் சில மனிதர்களால்தான் இன்னும் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கை நம் கையில் அந்த வளைந்த கரண்டியைப் போல் காணப்படுகிறது. நாம் நம்மை மட்டுமே நினைக்கும் வரை, நமக்காக மட்டுமே நாம் உழைக்கும் வரை மனிதனின் சிக்கலும் தீராது. சமுதாயத்தின் பிரச்சினைகளும் தீராது. நம் எண்ணங்களில் தான் என்ற எண்ணம் மட்டுமே நிலைத்திருக்கும் வரை வாழ்க்கை என்ற சிக்கலான முடிச்சு மேலும் மேலும் சிக்கலாகிப் போகிறது. எப்போது மனிதன் தன்னை மறந்து பிறரைப் பற்றி அல்லது சமுதாயத்தை நினைத்து செயலாற்றுகிறானோ, அப்போது அந்த சிக்கலான, அவிழ்க்க முடியாத, முடிச்சு அவிழ்க்கப்படுகிறது.

புரிந்துகொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும் இல்லாமல் மாறி மாறி ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டதால் இலங்கையின் வளர்ச்சி கீழ்நோக்கிச் செல்கிறது.

எந்த வீட்டில் உனக்காக நான் எனக்காக நீ என வாழ்கிறார்களோ அந்த வீடு புனிதத்தோடு விளங்கும். எந்தத் தொழிற்சாலையில் இது போற்றப்படுகிறதோ அந்தத் தொழிற்சாலையின் வளர்ச்சி படுவேகமாக இருக்கும். எந்த இயக்கம், அல்லது கட்சியில் இந்தக் கொள்கை பின்பற்றப்படுகிறதோ அந்த இயக்கம் அல்லது கட்சியின் முன்னேற்றம் அபாரமானதாக இருக்கும். எந்த நாட்டில் மாநிலங்கள், பல இனங்கள் ஒன்றுக்கொன்று புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறதோ அந்த நாடு செழிக்கும்.

ஒரு நாள், என்றோ ஒரு நாள் இந்த உலகில் உள்ள மனிதர்கள் யாவரும் பிறருக்காக நான் வாழ்வேன். மனித குலத்துக்காக உழைப்பேன் என்று செயல்படுவார்கள். அந்நாள் பொன்னாள். அன்று இந்த பூமியில் போர்கள் இருக்காது. நீதிபதிகளும், வக்கீல்களும் இருக்க மாட்டார்கள். ஆடிட்டர்களும், கணக்குகளும் இருக்காது. பூட்டுகளும் தாழ்ப்பாள்களும் இருக்காது. உலகில் செழிப்பும், உள்ளத்தில் ஆனந்தமும் நிறைந்திருக்கும். அதுதான் புண்ணிய பூமி. அதுதான் காந்தி கூறும் ராமஜென்ம பூமி. அதுதான் நாம் யாவரும் விரும்பும் நல் உலகம்.

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்
இதயமெல்லாம் அன்பு நதியினில் நனைப்போம்
இதுஎனதென்றுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்”. – பாரதிதாசன்

4 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *