வாழ்க்கையைக் கற்பிப்போம்

– ஸ்வாமி தேவ ஜோதிர்மய

பணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி?

உங்கள் குழந்தைகள் வாழ்க்கையை எதிர்கொள்ள தயார் செய்யும் தொடர்

குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கு முன் நாம் எந்த அளவிற்கு பணத்தின் அருமையை உணர்ந்திருக்கிறோம் என்று பார்த்துவிடுவோமா? கீழ்கண்ட கேள்விகளுக்கான உங்கள் பதிலை டிக் அடியுங்கள்.

1. ஷாப்பிங் மால் அல்லது ஸ்டோர் ஒன்றிற்கு சென்றால் என்ன வாங்குவீர்கள்?

அ. அங்கு உள்ளவற்றில் தேவையான பொருட்களை மட்டும் வாங்குவேன்.
ஆ. என்ன வாங்க வேண்டும் என்ற முடிவில் சென்றேனோ, அதை மட்டும் வாங்குவேன்.
இ. கண்ணைக் கவர்வதை எல்லாம் வாங்குவேன்.

2. உங்கள் குழந்தை ஏதாவது ஒரு பொருளை காட்டி வாங்கித்தரச் சொல்லி அடம்பிடித்து அழுதால் என்ன செய்வீர்கள்?

அ. குழந்தை மனம் வாடக்கூடாது என்று உடனே வாங்கித்தருவேன்.
ஆ. அவசியமான பொருள் என்றால் மட்டும் வாங்குவேன்.
இ. எவ்வளவு அழுதாலும் வாங்கித்தரமாட்டேன்.

3. சேமிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

அ. எவ்வளவு வந்தாலும் சரியாத்தான் இருக்கு. இதில் சேமிப்பு எல்லாம் சான்ஸே இல்லை.
ஆ. கண்டிப்பாக மாதா மாதம் சேமிப்பேன்.
இ. தீபாவளி போனஸ் போன்று கூடுதலாக வரும் பணத்தை சேமிப்பேன்.

4. உங்கள் பர்ஸில் எப்பொழுதும் எவ்வளவு பணம் வைத்திருப்பீர்கள்?

அ. என்னிடம் எவ்வளவு உள்ளதோ அதை அப்படியே பர்ஸில் வைத்திருப்பேன்.
ஆ. அன்றைய செலவுகளை திட்டமிட்டு அதற்கேற்ற தொகையை மட்டுமே வைத்திருப்பேன்.
இ. இருநூறு மட்டும் வைத்துக்கொள்வேன்.

5. உங்கள் ஒவ்வொரு மாத வருமானத்தையும் செலவிட எப்படி திட்டமிடுவீர்கள்?

அ. சம்பளம் கையில் வந்ததும் எதற்கு செலவு செய்வது என திட்டமிடுவேன்.
ஆ. சம்பள தேதிக்கு முன்பே திட்டமிட்டு விடுவேன்.
இ. திட்டமெல்லாம் கிடையாது. தேவைக்கேற்றாற் போல செலவிடுவேன்.

இதில் எது சரியான விடை என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அளவிற்கு நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்பதால் நேரடியாக கட்டுரைக்குள் சென்றுவிடலாம்.

பணத்தின் அருமையை உணர்ந்திருப்பது என்பது செலவே செய்யாமல் சேமித்து மட்டும் வைப்பது என்று அர்த்தம் அல்ல. ஒரு பொருளை அதன் சரியான விலையில் வாங்குவது, ஆசைப் படுவதையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவற்றை மட்டும் வாங்குவது, திட்டமிட்டு செலவு செய்வது என்று இதற்கு இலக்கணம் வகுத்துக்கொண்டு போகலாம்.

குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை ஏன் உணர்த்த வேண்டி வருகிறது? விலை உயர்ந்த பல பொருட்களை சீக்கிரத்தில் உடைத்து விடுகிறார்கள். தொலைத்துவிடுகிறார்கள். அல்லது இப்பொழுதே வாங்கிக்கொடு என்று அடம் பிடிக்கிறார்கள். இல்லையா?

பணம் என்பது அப்பாவுக்கு மாதா மாதம் கிடைக்கிறது என்பது தெரிகிறதே, தவிர அதற்கு எப்படி எல்லாம் உழைக்க வேண்டியிருக்கும் என்பது குழந்தைகளுக்கு தெரியவில்லை. இதை எப்படி உணர்த்தலாம்?

நமது சுதந்திரா ஹாலிடே ஸ்கூல், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் நடத்திய வாழ்வியல் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பணத்தின் அருமையை உணர்த்துவதற்காக ஒரு பயிற்சி வழங்கப்பட்டது.

வழங்கப்பட்டுள்ள நேரத்தில் யார் உதவியும் இல்லாமல் இருபது ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வர வேண்டும். முதலில் தயங்கிய படியே இறங்கியவர்கள் இரண்டு மூன்று மணி நேரம் கழித்து பலரும் வெற்றியோடு வந்தார்கள். சிலரோ பாடங்களோடு மட்டும் வந்தார்கள்.

ஒரு மாணவன் தன்னுடைய செல்போனை மற்றவர்களுக்கு வாடகைக்கு கொடுத்து அவர்களிடம் பேசியதற்கு கட்டணம் வசூலித்து, அதன் மூலம் இருபத்தி ஐந்து ரூபாய் சம்பாதித்து வந்திருந்தான்.

மற்றொரு மாணவி ஒவ்வொரு கடையாக வேலை கேட்டு அலைந்து கடைசியில் சாக்லெட் கடை ஒன்றில் இரண்டு மணி நேரம் பேக்கிங் வேலை செய்து முப்பது ரூபாய் கொண்டு வந்திருந்தாள்.

இன்னொரு மாணவன் புத்தகக் கடை ஒன்றில் டூரிஸ்ட் ஸ்பாட் பற்றிய புத்தகங்கள் மற்றும் சிடிக்களை வாங்கி விற்பனை செய்து இருபது ரூபாய் சம்பாதித்திருந்தான்.

இப்பயிற்சியில் வென்றவர்கள், முயற்சியில் ஈடுபட்டவர்கள் என எல்லோரும் ஒரு பாடத்தை கற்றிருந்தார்கள், ‘பணம் சம்பாதிப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை.’

கோவையை சேர்ந்த ஒரு மாணவன் சொன்னான், ‘எங்க அப்பா ஏதோ ஆபிஸ் போறாரு, வராருன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். இப்பத்தான் தெரியுது, எங்க அப்பாவுக்கு வேலையில எப்படிப்பட்ட கஷ்டம் எல்லாம் இருக்கும்னு. பணம் சம்பாதிக்கிறது என்பது சாதாரண விஷயம் இல்லை.’

நீங்களும் இந்தப் பயிற்சியை கொடுத்துத்தான் பணத்தின் அருமையை உணர்த்த வேண்டும் என்றில்லை.

உங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளை வாங்கித்தரச் சொல்லிக் கேட்டால் அல்லது உங்களுக்கு ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அது உங்கள் எத்தனை மணி நேர உழைப்பு என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.

உதாரணத்திற்கு செல்போன் வாங்க விரும்புகிறீர்கள். விலை பத்தாயிரம் ரூபாய். உங்கள் மாத சம்பளமோ இருபதாயிரம்தான் என்றால் செல்போனின் மதிப்பு உங்கள் 15 நாள் உழைப்பு. இப்படி கணக்கு போட்டுப் பார்த்தால் அதை அவசியம் வாங்கித்தான் ஆக வேண்டுமா என்ற எண்ணம் வரும்.

இதை குழந்தைகளிடம் சொன்னால், வாங்கிக் கொடுத்த பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்.

குழந்தைகளை விடுங்கள். வளர்ந்தவர்களே கூட இப்படி கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தாலும்கூட ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணில் படுவதை எல்லாம் வாங்கி விடுவதுண்டு.

காரணம், சுயக்கட்டுப்பாடு இல்லாதது தான். இந்த சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வது எப்படி? அது அடுத்த இதழில்.

  1. madheena manzil

    nalla payan ullal thahhhawalhal.thanz a lot

Leave a Reply

Your email address will not be published.