புதிய இலக்குகள்! புதிய விளக்குகள்!
பற்பல துறைகளிலும் மாற்றங்களுக்கான வாய்ப்புகளுடன் புத்தாண்டு புலர்கிறது. வெளியில் உள்ள சூழல் மாறிக்கொண்டே இருப்பது போலவே, வளர்ச்சிக்குத் தக்கவாறு, மனிதர்களின் இலக்குகளும் மாறிக்கொண்டே வருகின்றன. தொடங்குகிற நேரத்தில் வகுத்த இலக்குகளுக்கும், தொடர்கிற நேரத்தில் வகுக்கிற இலக்குகளுக்கும் நடுவே நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்.
தரத்தை மேம்படுத்துவது ஓர் உற்பத்தியின் தலையாய நோக்கமாக ஒரு கட்டத்தில் இருக்கும். தர எல்லையை எட்டிய பிறகு பொருளை சந்தைப்படுத்துதல் முன்னணி இலக்காக இருக்கும். அதற்கும் அடுத்த கட்டத்தில், வாடிக்கையாளர் மனநிறைவுக்கு முக்கியம் தரப்படக்கூடும். காலப்போக்கில், இந்த மூன்று அம்சங்களுமே ஒன்றிணைந்து அந்த நிறுவனத்தின் கோட்பாடாக விளங்கக் கூடும்.
இது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. தனி மனிதர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு தனிமனிதரும் தன் அடுத்த கட்ட இலக்குகளையும், அந்த இலக்குகளை எட்டும் பயணப் பாதைக்கான விளக்குகளையும் கண்டறிவது அவசியம்.
அத்தகைய இலக்குகளை மறுவரையறை செய்வதற்கான வாய்ப்புகளே புத்தாண்டு தொடக்கம், நிதியாண்டுத் தொடக்கம், பிறந்தநாள் போன்ற நாட்கள். புதிய இலக்குகளை வரையறுக்க மட்டுமின்றி, அவற்றைக் கண்டடைவதற்கான வழிமுறைகளைத் திட்டமிட்டு நிறைவேற்றவும் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு வழிவகுக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன், இனிதே வாழ்த்துகிறோம்.
வாசகர்கள், தொடர்ந்து நல்லாதரவு நல்கும் விளம்பரதாரர்கள், எங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முகவர்கள், இதழ் விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Leave a Reply