மனித நேய அறக்கட்டளை நிறுவி மகத்துவப் பணிகள் புரியும் திரு.சைதை துரைசாமி
அடையாளம் தெரியாத ஒரு கிராமத்தில் தோன்றி ஏழ்மையான பொருளாதாரக் குடும்பச் சூழலில் பிறந்தேன். எந்தப் பின்புலமும் இல்லாமல் வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டேன். அந்த இலட்சியம் எனக்கு என் பள்ளி பருவத்திலேயே தோன்றிய ஒன்று. சென்னைக்கு 1971ஆம் ஆண்டு 495 ரூபாய் சம்பளத்திற்கு போனேன்.
அதற்குப் பிறகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் அரசியலில் ஈர்க்கப்பட்டு படிப் படியாக பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினேன்.
அரசியலில் ஈடுபட்டாலும் என்னுடைய அடிப்படை இலக்கு சேவை என்பது தான். அதற்குக் காரணம், நான் பள்ளியிலே படித்துக் கொண்டிருந்தபோது சுதந்திர தினம். குடியரசு தினத்தை ஒட்டி கட்டுரைப் போட்டிகள் நடக்கும். எனக்கு ஒரு தலைப்பை கொடுத்து கட்டுரை எழுதச் சொன்னார்கள். அந்தத் தலைப்பு நான் இதுவாக ஆனால்… ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பில் எழுதினார்கள். நான் ஒரு தலைப்பில் எழுதினேன். நான் ஏன் அந்த தலைப்பில் எழுதினேன், தேர்ந்தெடுத்தேன் என்றால் நாங்கள் படிக்கும் காலத்தில் மாணவர் படிப்பதற்காக உதவித்தொகை கொடுப்பார்கள்.
அதைப் பெறவேண்டுமென்றால் தாசில்தார் கையெழுத்து தேவை. அதுபோல, எனக்கு அந்த உதவித் தொகைக்காக ஒரு சட்டமன்ற உறுப்பினரிடம் கையெழுத்து வாங்க 15 நாள் அலைந்தேன். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. அவரை சந்தித்து கேட்டபோதும் அவர் கையெழுத்து போடவில்லை. அந்த கோபம் வேகம் என்னை அந்த தலைப்பை எடுப்ப வைத்தது. ”நான் சட்டமன்ற உறுப்பினரானால்” என்று ஒரு கட்டுரையை எழுதினேன். சட்டமன்ற உறுப்பினர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும், எப்படி இருந்தால் அது மக்களுக்கு பயன் தரும், மக்கள் எப்படி இருந்தால் அது உண்மையான ஜனநாயகமாக இருக்கும் என்பதை நான் அந்த வயதிலேயே எழுதினேன். என்னுடைய கட்டுரைக்குத்தான் முதல் பரிசு.
அப்போது என் ஆசிரியர் சொன்னார், நல்லா சிந்திக்கறே. நல்லா யோசிக்கிறே! நீ சட்டமன்ற உறுப்பினரானால் என்பதைவிட ஐ.ஏ.எஸ் ஆனால் என்று எழுதிப் பார்க்கலாம் என்றார். தும்பிவாடி வாழ்க்கையில் சட்டமன்ற உறுப்பினர் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. நான் பிறந்த ஊரில் அமையாமல் நான் பணிக்குச் சென்ற சென்னையிலே அந்த வாய்ப்பை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் எனக்கு உருவாக்கித் தந்தார். ஓர் எண்ணம் நமக்குள்ளே ஆழப்பதிந்தால் அதை நோக்கி பயணித்தால், அது நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அன்று உணர்ந்தேன்.
மனிதர்களை மட்டுமே மதிக்க வேண்டும் என்ற அழுத்தமான சிந்தனை கொண்டவன். நான் சென்னையிலே இருந்த அந்தக்காலத்தில் என்னுடைய பொருளாதாரச் சூழ்நிலை என்னவென்று தலைவர் அவர்கள் கேட்பார்கள். நான் என்றைக்குமே பணத்திற்கு முன்னுரிமை கொடுப்பவன் அல்ல. தேவை என்ன என்பதை உணர்ந்து கொண்டவன்.
என்னுடைய பொதுவாழ்க்கை என்பது எப்போதுமே சேவை சார்ந்தது. நான் மக்களைப் படித்துதான் இதைப் புரிந்துகொண்டேன். 1980ஆம் ஆண்டு நான் தேர்தலில் போட்டி இட்டபோது நான் செலவு செய்த தொகை வெறும் 28000. நம்ப முடிகிறதா? 10,000 ரூபாய் எம்.ஜி.ஆர் கொடுத்தார்.
அருமை அண்ணன் ஆர்.எம்.வீ. அவர்கள் 10,000 கொடுத்தார். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கொடுத்ததை சேர்த்து ஆக மொத்தம் 28,000 ரூபாய். ஓர் உறுதி எடுத்து தொண்டர்களிடம் சொன்னேன். தேர்தலில் பணம் செலவு செய்யாமல் நேரடியாக மக்களைச் சந்திப்போம் என்று சொல்லி காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணி வரை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தேன். நான் என் இளமை வயதில் இருந்தேன். அப்போது கடைசி நேரத்தில் ஒரு சோதனை. ஒரு ஆதி ஆந்திரா குடிசைப் பகுதி. அங்கே 6000 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் கேட்ட ஒன்று, மாட்டு பிரியாணியும் பிலாடர் (டியூப்பில் விற்கப்படும் சாராயம்) ஒரு 10 வேண்டுமென்று கேட்டார்கள். பிரியாணி தருகிறேன். ஆனால், பிலாடர் வாங்கித் தர மாட்டேன் என்றேன்.
கண்டிப்பாக வேண்டும் என்றனர். அப்படி என்றால் எனக்கு அந்த வெற்றி வேண்டாம் என்று நிராகரித்தேன். 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அந்தப் பகுதியில் மட்டும் எனக்கு 4000 வாக்குகள் குறைவு. நான் மது விஷயத்தில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வில்லை என்பதற்காக இந்த விஷயத்தை சொல்கிறேன். பொருளீட்டல் என்பதை எந்த வகையிலும் ஈட்டலாம் என்கிற சிந்தனையை நான் ஏற்றுக் கொள்ளாதவன்.
பணம் ஈட்டுதல் என்பது வாழ்க்கையின் இலட்சிய மாக இருக்கக்கூடாது என்பதில் நான் அழுத்தமாக இருந்தவன். நான் கல்வியை இலவசமான சேவையாக செய்ய விரும்பினேன். நான் இந்த மனிதநேய அறக்கட்டளையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி தொடங்க அது ஒரு காரணம். அறக் கட்டளை நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் யாரிடமும் எந்த நன் கொடையும் பெறக்கூடாது என்பதை முதல் விதியாகச் சேர்த்துள்ளேன். பல்வேறு நாடுகளில் இருந்து எனக்கு நன்கொடை கொடுக்க வேண்டும் என்று சண்டை போடுகிறார்கள். ஆனால், நான் என் கொள்கையில் உறுதியாக உள்ளேன்.
இந்த உலகம் புரியாத ஒரு தேடலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பழமையான சிந்தனையில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு திருமணத்திற்குச் சென்றால் மணமகன் என்ன படித்திருக்கிறான். என்ன வேலைக்குப் போகிறான், எப்படி என்றெல்லாம் கேட்பார்கள். நல்ல வேலைக்குப் போகிறான். அவன் போவது வருவதும் தெரியாது, அவ்வளவு அமைதியான பையன் என்கிறார்கள்.
மூன்றாவது மனிதர்களைப் பற்றி அண்டை அயலாரைப் பற்றி யோசிக்க கூடத் தெரியாதவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும். அவன் பணம் சம்பாதிக்கிறான். அந்த மனநிலை மாற வேண்டும். ஒரு மனிதனிடத்தில் என்ன தேவை பண்புகள். தனது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாத பண்புகள் குடிப்பழக்கம், புகைபிடிப்பது, சூதாடுவது. ஊதாரித்தனமாக இருப்பது போன்ற பண்புகளைக் கொண்டவனாக இருந்தாலும் அவனை நல்ல மனிதனாக மாற்றமுடியும். ஆனால், மிகப்பெரிய கோடீஸ்வரர் வீடு, நிலம், உள்ளது, ஆனால், எப்போதுமே கிளப்பிலேயே தான் இருப்பார் என்றால் அப்படிப்பட்ட குடும்ப வாழ்க்கை தேவையா என்பதை யாருமே சிந்திப்பதில்லை.
இந்த சமூகத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனை கோடி. ஆனால், இன்றளவும் இன்றைய வரலாற்றில் வாழ்ந்து இடம்பிடித்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. அப்படியென்றால் வரலாற்றில் வாழ்ந்தவர்கள் போல வாழ வேண்டும் என்கிற சிந்தனையை யாரும் கொள்ளவில்லை. தோட்டம், வீடு, வாகனம் போன்ற மரபு வழிச் சிந்தனை. இப்படி மனிதனுடைய தேடல் ஒரு முற்றுப் பெறாமல் தேடிக் கொண்டே இருக்கி றோம். கடைசியில் எதையும் அனுபவிக்காமலே சென்று விடுகிறோம் எதை அனுபவிப்பது. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை என்ன? அந்த அடிப்படை மகிழ்ச்சி ஆரோக்கியத்தில் இருக்கிறது. ஆரோக்கியமில்லா கல்வி, ஆரோக்கிய மில்லாத பணம், ஆரோக்கியமில்லாத பதவி எல்லாம் வீண்.
வெற்றி, தோல்வி என்பது என்ன? வெற்றி என்பது பொருள் ஈட்டுதலா அல்லது தன் கடமைகளில் வெற்றி பெறுவதா? வெற்றி என்பது தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றிக்கான சூழல் அமையவில்லை என்பது தான் தோல்வியே தவிர, தோல்வி என்பது தனியாக ஒன்றுமில்லை. முதல் முயற்சி, இரண்டாவது முயற்சி, மூன்றாவது முயற்சி வேண்டும். முயற்சி தவறலாம். ஆனால் முயற்சிக்க தவறக் கூடாது.
நான் என்னுடைய மனிதநேய மாணவர் களுக்கு ஒரு குறிப்பு சொல்லி இருக்கிறேன்.
”வாழ்ந்து காட்டி வழி காட்டு” இதுதான் எனது ஒரே சிந்தனை. ஒரே நோக்கம். சொல்வது எளிது, செயல்படுவது கடினம். மருத்துவர் கூறுவார். ஆனால், மாத்திரை போட்டால் சரியாகிவிடும் என்பதற்காக உணவுக்கு நாம் அடிமையாகி விடுகிறோம்.
குடிப்பது, புகைபிடிப்பதற்கு மட்டும் நாம் அடிமையாவதில்லை. உணவுக்கும் நாம் அடிமையாகத்தான் உள்ளோம். காலை இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் கோலூன்றி நடப்பவனும் கோலின்றி குமரனைப்போல் நடப்பான் என்று நம் சித்தர்கள் பாடி வைத்துள்ளனர். மருத்துவரை நாட அவசியமே இல்லை. உணவுப்பயிற்சியும், யோகப் பயிற்சியும் இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதும் மனநிறைவு என்பதும் நீடித்துக் கொண்டே போகும்.
மக்களின் மனதில் முதலீடு செய்யுங்கள். மக்களின் மனதில் முதலீடு செய்ய பெரிய பணம் தேவையில்லை. அன்பான வார்த்தைகள் போதும்.
rajarajacholan
very excellent article
Pr@dyum_Ram
nice article?/.,.,,,,…..
Padmaja_Prad
nice i follow with pradyum”#–>
Pradyumna_Ram
nice?/..
கண்ணன் தும்பிவாடி வேங்கை
எங்களுக்குள் ஆற்றலை வளர்ந்த
எங்கள் வழிகாட்டி .
இவர் வழியே எங்கள் பயணம்