பண்பாடு என்னும் அடையாளம்

-இயகோகா சுப்பிரமணியம்

தேடி வருபவர் யாராய் இருப்பினும், நின்று வணங்கி இருக்கை கொடு;

செல்லும்பொழுது வாயில்வரையிலும், சென்று சிரிப்புடன் விடைகொடு;
புது டெல்லி. ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். எங்களது மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். அலுவலகத்தில் அவரைச் சந்திப்பதற்காக நேரம் கொடுத்திருந்தார். ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால், நேராக எங்களை அவரது வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டார். வீட்டிற்குச் சென்றபோது என்னுடன் வந்திருந்த, எங்கள் நிறுவனத்தின் வட இந்திய முகவரும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தோம்.

ஐந்து நிமிடம் கழித்து வந்தவர். வாருங்கள் உள்ளே அமரலாம் என்று உள்ளே அழைத்துச் சென்று, அமர வைத்து தேநீர் கொண்டுவர ஆணையிட்டார். தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது அவரது பையனும், பெண்ணும் மாடிப் படியில் இறங்கிக் கீழே வந்தனர்.

பையனை அழைத்து எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்திவிட்டு, தனது மகன் ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். அந்த இளைஞன் உடனே எனது பாதங்களையும், எனது முகவரது பாதங்களையும் குனிந்து தொட்டு வணங்கி, ”ஆசிர்வாதம் செய்யுங்கள்” என வேண்டியபோது, நாங்களும், ”ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும். வாழ்க நலமுடன்” என்று வாழ்த்தினோம்.

தன்னுடைய மகளை அறிமுகப்படுத்திக் கல்லூரியில் படித்துக் கொண்டிப்பதாகச் சொன்னார். அந்த யுவதியும் எங்கள் பாதங்களைத் தொட்டு எங்கள் மனமார்ந்த ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். ஏதோ ஒரு காரணமாக அங்கே வந்த அவரது மனைவியை அழைத்து மரியாதை நிமித்தமாக அறிமுகம் செய்துவைத்தார்.

அவரும் வணக்கம் தெரிவித்தபடியே, ”தனக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் கோவையில் வசித்து வருவதாகவும், ஒரே ஒருமுறை கோவை வந்ததாகவும், தெரிவித்தவர், ”கௌரிசங்கர் தோசையையும், காஃபியையும் இன்னும் ஞாபகம் வைத்துள்ளதாகக் கூறினார். பின்னர், சுமார் அரை மணிநேரம் எங்களது உரையாடல் முடிந்த பின்னர், நாங்கள் புறப்பட்டோம். எங்கள் உடன் வந்து காரில் அமர்ந்து நாங்கள் செல்லும்வரை இருந்து வழியனுப்பி வைத்துச் சென்றார்.

***

தமிழகத்திலுள்ள ஒரு மிகப்பெரிய பஞ்சாலை அதிபர். அவரது அறைக்கு நான் சென்ற போது எழுந்து நின்று இருகை கூப்பி, ‘வாங்க சுப்பிரமணியம், உட்காருங்கள்” என்று கூறி நான் அமர்ந்த பின்னர் தனது இருக்கையில் அமர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு பணிபுரியும் தொழிலாளியும், அவரது தந்தையும் தட்டில் பழங்களுடன் தொழிலாளியின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக உள்ளே வந்தனர்.

அந்தப் பஞ்சாலை அதிபர், வயதில், என்னைவிட, வந்தருந்த தொழிலாளியின் தந்தையைவிட மூத்தவர். மீண்டும் எழுந்து நின்று இருகை கூப்பி வணக்கம் சொல்லி, அவர்களை இருக்கைகளில் அமரச் சொன்னார். தொழிலாளி அமர மறுத்து விட்டான். அவரது தந்தை மிகவும் தயக்கத்தோடு இருக்கையின் நுனியில் அமர்ந்தார்.

”நல்லா உக்காருங்க. சீட் அதுக்குத்தானே போட்டிருக்கு. பையனுக்குக் கல்யாணம் நல்ல படியா நடக்கட்டும். நான் கண்டிப்பாக வருகின்றேன்” என்று கூறிப் பின்னர் அவரது இருக்கையை விட்டு எழுந்து வந்து, கதவைத் திறந்து வணக்கம் சொல்லி வழியனுப்பி வைத்தார்.

***

மும்பை நகரம். ஒரு மிகப்பிரபலமான வழக்கறிஞர். எனது நண்பரோடு அவரைக்காண ‘நரிமன் பாயின்ட்’ பல அடுக்குமாடிக் கட்டிடத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்றோம். வரவேற்பறையில் அமரவைத்த, வரவேற்பாளர் பெண்மணி, அவருக்கு ‘இன்டர்காமில்’ தகவல் தந்துவிட்டு எங்களை அமரச் சொன்னார். அங்கிருந்த பணியாளர் இரண்டு தம்ளர்களில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். ஐந்து நிமிடம் கழித்து அந்தப் பிரபல வழக்கறிஞர் ”ஹலோ” என்று எனது நண்பரின் பெயரைச் சொல்லி அழைத்தபடியே வந்து கைகுலுக்கிய படியே இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் சென்றார். காரியம் முடிந்து கொஞ்ச நேரம் கழித்து, ‘லிப்ட்’ இருக்கும் இடம்வரை வந்து எங்களை வழியனுப்பிவைத்துவிட்டு உள்ளே சென்றார்.
***

மிலான் – இத்தாலியின் பிரசித்தி பெற்ற நகரம். எங்களது வாடிக்கையாளரோடு, ஒரு அகில உலகப் புகழ் வாய்ந்த நல்ல நிறுவனத்தில், ‘சீப் எக்ஸிகியூட்டிவ் ஆபிஸர்’ ஒருவரைப் பார்ப்பதற்காகச் செல்கின்றோம். வரவேற்பறையில் எங்கள் இருவரின் பெயரையும் எங்களது நிறுவனத்தின் பெயரையும் எழுதிய, ‘போர்டு’ அனைவரின் பார்வையில் படும்படியாக ‘வரவேற்புக் கூறிக்’ கொண்டிருந்தது. நாங்கள் வந்த செய்தியினை அறிந்ததும், அந்த ஆபிஸர் வரவேற்பறைக்கு வந்து எங்களை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். உரையாடலின் போது ‘காபி’ வேண்டுமா என்று கேட்டு, அவரே எழுந்து சென்று மூன்று கோப்பைகளில் ‘காபி’ எடுத்துக் கொண்டு வந்தார். ‘சர்க்கரையின்’ தேவை கேட்டு எவ்வளவு தேவையோ, அதைக் ‘காபி’யில் போட்டு கரண்டியால் கலக்கிக் ‘கோப்பை’யை எங்கள் முன்வைத்துவிட்டு அமர்ந்தார். இரண்டு மணி நேரம் கழித்து எங்களுடனேயே வெளியே வந்து,’டாக்ஸி’யில் எங்களை அமரவைத்து வழி அனுப்பிவிட்டுச் சென்றார்.

***

நான்கு வேறுபட்ட மனிதர்கள். வேறுபட்ட தொழில் கலாச்சாரங்கள். அனைவருமே அவரவர் துறையில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். செல்வந்தர்கள். செல்வாக்கு மிக்கவர்கள். காணச் சென்ற நானோ, என்னுடன் வந்த நண்பர்களோ அவர்களை எட்டமுடியாத நிலையில், பல படி கீழே உள்ளவர்கள். ஆயினும் அவர்கள் நடந்து கொண்ட விதம், கம்பீரம், கனிவு, தோரணை ஒரு உயர்ந்த பண்பாட்டின், நாகரிகத்தின் அடையாளம்.

அவர்களுடைய தகுதிக்கு அவர்கள் காட்டிய அந்த உபசாரத்தை அவர்கள் செய்யாமலேயே இருந்திருந்தால்கூட, அவர்கள் மீதுள்ள மரியாதையோ, அவர்களோடு கொண்ட வியாபாரமோ, காரியமோ எந்த விதத்திலும் பாதித்திருக்காது. ஆனால், அவர்களுடைய இந்தத் தன்மையால் அவர்கள்மீது கொண்ட மதிப்பும், மரியாதையும் பலமடங்கு உயர்ந்ததோடு, நம்மை நாமே மாற்றிக்கொண்டு மற்றவர்களோடு பழகவும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது, அது மட்டுமல்ல, உலகெங்குமே இந்த பண்பு உயர்ந்த மனிதர்களால், வெற்றி பெற்றவர்களால் ஒரு நெறிமுறையாக, வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு மாறுபட்ட மனிதர்களையும், அவர்களால் ஏற்பட்ட அனுபவங்களையும் கற்றுக் கொண்ட பாடங்களையும் பார்ப்போம்.

மூன்று மணிக்கு அலுவலகத்தில் வந்தால் நிர்வாக இயக்குனரைப் பார்க்கலாம் என்று தொலைபேசியில் ஒரு நூற்பாலையின் மேலதிகாரி எங்களை காலை பத்தரை மணிக்குத் தொடர்பு கொண்டு கூறினார். எங்களது முகவர் என்னை அழைத்து உடனே செல்வது நல்லது. ஒரு நல்ல வாடிக்கையாளராக உருவாவதற்கு எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ள நிறுவனம்.

இந்த வாடிக்கையாளருக்கு நமது நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்றால் நமது வியாபாரம் உயர்வடைவதோடு, சந்தையில் நமது நிறுவனத்தின் பெருமையும் உயரும் என்று கூறினார். கோவையில் இருந்து உடனடியாக ஒரு ‘டாக்ஸியை’ ஏற்பாடு செய்து, சரியாக இரண்டரை மணிக்கு அந்த நூற்பாலை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டோம். மேலாளர், முகவரின் நண்பர். மேலோட்டமாகச் சுமார் அரைமணி நேரம் பேசிவிட்டு நிர்வாக இயக்குநருக்கும் தகவல் கொடுத்துவிட்டு, வரவேற்பறையில் அமர வைத்துவிட்டுச் சென்று விட்டார். எங்களது ‘விசிட்டிங் கார்டுகளை’ அலுவலர் மூலமாக நிர்வாக இயக்குனரின் பார்வைக்கு அனுப்பி விட்டுக் காத்திருந்தோம்.
மணி நான்காயிற்று, ஐந்தும், ஆறும் கடந்து ஏழு மணியாகிவிட்டது.

அழைத்தபாடில்லை. முகவரின் நண்பருக்கு அடிக்கடி செய்தி அனுப்பினோம். வந்த பதில், ”அவசர வேலையில் இருக்கிறார். காத்திருங்கள்” என்பதுதான். நாங்களும் ‘சரி’யென்று காத்திருந்தோம். நிறைய பேர் அவரது அறைக்குள் செல்வதும் வருவதுமாக இருந்தார்கள். அனைவரும் அந்த அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்தானே தவிர, வெளியாட்கள் யாரும் இல்லை.

சரியாக எட்டரை மணிக்கு, நண்பர் வந்து ‘சாரி சார்! எம்.டி.யை இன்று பார்க்க முடியாது. இன்னொரு நாள் வரச்சொல்லிவிட்டார்” என்றார். நாங்கள் எதுவுமே பேசவில்லை. ”அதற்கென்ன சார். மீண்டும் வருகிறோம்’ என்றபடியே வந்து விட்டோம். வெளியே வந்து நண்பரிடம் பேசியபடியே, ‘டாக்ஸி’யில் ஏறி அமர்ந்தபோது, நிர்வாக இயக்குனரின் கார் எங்களைக் கடந்தது, நின்றது. நண்பர் மேலாளர் எம்.டி.யிடம் உரையாடினார். எம்.டி.யும் எங்களைப் பார்த்தார். ஆனால், எதுவும் பேசவில்லை. சென்றுவிட்டார்

***

ஹைதராபாத். இன்னொரு பிரபல நிறுவனம். நிர்வாக இயக்குனரின் அனுமதி இருந்தால்தான், எங்கள் பொருட்களின் ‘மாதிரிகளை’ அவர்களது ஆலையில் உபயோகித்து தரம் நன்றாக இருந்தால் பின்னர் வியாபாரம் செய்ய முடியும். ‘விசிட்டிங் கார்டையும்’ எங்கள் ‘கேட்லாக்’கையும் உள்ளே அனுப்பி வைத்தோம் இரண்டே நிமிடங்களில் அழைப்பு வந்து, உள்ளே சென்றோம். நாங்கள் வணக்கம் தெரிவித்தோம், அவர் அதற்கு எந்த விதமான சலனமும் காட்டவில்லை.
‘விசிட்டிங் கார்டை’ மேஜையில் எங்கள் முன் வீசினார். ‘கேட்லாக்’கைப் புரட்டிப் பார்த்துவிட்டு ‘டிரே’யில் எறிந்தார்.

”தேவைப்பட்டால், நாங்கள் அழைக்கின்றோம். ஓ.கே.” என்றபடியே வேறொரு ஆவணத்தைப் பார்க்கத் தலைப்பட்டார்.

”தேங்க் யூ சார்” என்று ஒரே குரலில் நாங்கள் கூறிவிட்டு வெளியே வந்தோம். ”இவர் இப்படித் தான். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று எங்கள் முகவர் எனக்கு ஆறுதல் கூற, ”இதெல்லாம் சகஜம்தான்’ என்று நான் அவருக்குத் தேறுதல் கூற- ஒரு முதல் சந்திப்பு இப்படியும் நிகழ்ந்தது.

இந்தக்கட்டுரையில் குறிப்பிட்ட எல்லா சம்பவங்களும் சுமார் பத்து ஆண்டுகட்கு முன்னால் நிகழ்ந்தவை, கடைசி இரண்டு சம்பவங்களிலும் வரும் இரண்டு இயக்குநர்களும் அன்று இளைஞர்கள். முப்பதுகளில் இருந்தனர். அத்தியாயத்தின் முதலில் வருணித்த அனைவருமே சுமார் ஐம்பது வருடங்களில் இருக்கலாம். அவர்களது நிறுவனங்கள் இன்றும் நன்றாக இயங்குகின்றன. இந்த இளைஞர்களில் ஒருவர் தொழிலையே விற்று விட்டார். இன்னொருவரது தொழில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. என்ன காரணம்?

வீட்டிற்கு வரும் விருந்தினரை வாங்க என்று முகம் மலர அழைக்கும் பண்பையும், பெரியவர்களையும், விருந்தினர்களையும் மரியாதையோடும், பணிவோடும் உபசரிக்கும் பழக்க வழக்கங்களையும் எல்லாக் குடும்பங்களிலும் வாழையடி வாழையாகச் சொல்லிக் கொடுத்து – எல்லாத் தலைமுறையினரும் அதையே பழக்கமாக வைத்துள்ளனர். ‘மோப்பக் குழையும் அனிச்சம்; முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ – என்று அய்யன் வள்ளுவரும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னரே கணித்துக் கூறியுள்ளார்.

உலகமயம், தொழில்போட்டி, பணம் சம்பாதிக்கும் வேகம், மேல் நாட்டைப் பார்த்து தேவையற்றதை சுவீகாரம் செய்து தனக்கிருக்கும் அன்றைய தகுதியால் உருவான ஆணவம் – ”கிடக்கிறான், நமக்கென்ன” – என்ற அலட்சியம் – சக மனிதர்களை, எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் செய்துவிடுகின்றது. ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கால் போட்டு அமர்ந்துள்ள இளைஞனிடம் ‘ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய்’ என்று கேட்டபோது வந்த பதில், ”அதனாலென்ன? மரியாதை என் மனதில் இருக்கின்றது. இதில் தவறு ஒன்றும் இல்லையே.” இதை மற்ற இளைஞர்களும் ஆமோதித்தனர்.

அதுமட்டுமல்ல. புதிதாக உருவாகியிருக்கும் ‘கார்ப்பொரேட் கலாச்சாரத்தில்’ மேலதிகாரியைக் கூட ‘மிஸ்டர்’ என்ற அடைமொழியில்லாமல் பெயர் சொல்லி அழைக்கலாம். அப்படி அழைத்தால் அந்நியோன்யம் உருவாகும். வேலை செய்யும் இடத்தில் இறுக்கம் குறையும் என்று போதிக்கப்படுகின்றது. என்ன அபத்தம். இதையெல்லாம் யார் முடிவு செய்தது? எவன் அங்கீகரித்தான்? இதனால் என்ன மாறுதல் ஏற்பட்டு, புரட்சி ஏற்பட்டு, நிர்வாகம் முன்னேறி இருக்கின்றது. ஒவ்வொரு பணிக்கும் வரையறை உண்டு.

பதவிக்கும் பொறுப்புகள் உண்டு. ஒவ்வொரு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு ஏற்ப – வாடிக்கையாளர் உறவுகள் உண்டு. அதில் பணிவு, மரியாதை, பேசும் பாங்கு என்பவை தொழில் வெற்றிக்கு இன்றியமையாதவை.

எல்லா நாடுகளிலும், கலாச்சாரத்திலும், இந்தப்பண்பு ஊடாடியிருக்கின்றது. இதைக் கடைப்பிடிப்பவர்களின் வெற்றி தொடரும். இதை அலட்சியப்படுத்தினால் சிரமம் தாமதித்து வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *