– வழக்கறிஞர் த. இராமலிங்கம்
விலங்கினத்தில் இருந்து மனிதன் மாறுபட்டு இருப்பது, அவனது அறிவினால்தான். அந்த அறிவினால் பயன் ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? பிறருக்கு வரும் துன்பத்தினைத் தன் துன்பமாக எண்ணுவதுதான் அறிவின் உண்மை யான பயன் என்கிறான் வள்ளுவன். அப்படியொரு எண்ணம் தோன்றவில்லை என்றால், அறிவினால் விளையும் நன்மை வேறொன்றில்லை என்றும் கூறுகிறான்.
‘பக்கத்திருப்பவர் துன்பம் தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி’
என்று எழுதுகிறான் பாரதி. நம் நண்பருக்கு உதவுவது; நம் குடும்பத்தினருக்குத் தேவையானவற்றைச் செய்வது என்பதெல்லாம் நல்ல செயல்களே. ஆனால், அவை கடமை களில் அடங்கிவிடும். அறிமுகம் இல்லாதவருக்கு, அல்லது அறிமுகம் இருந்தும் அவரால் இதுவரை நமக்கு ஒரு பயனும் விளைந்திராத நிலையில் செய்யும் உதவியே சிறந்தது.
‘இவருக்கு இதைச் செய்தால், அவரிடம் இருந்து வரும் காலத்தில் இது கிடைக்கும்’ என்ற எண்ணம் துளியும் இன்றிச் செய்யும் உதவி மிக மிக உயர்ந்தது. ‘செய்யாமல் செய்த உதவி’ என்றும், ‘பயன் தூக்கார் செய்த உதவி’ என்றும் இவற்றைப் பெரிதாகப் பேசுகிறான் வள்ளுவன்.
மனத்துக்குள் ஓர் எதிர்பார்ப்பை வைத்துக் கொண்டு செய்யும் உதவியை, நமது பழந்தமிழ் இலக்கியமான புறநானூறு கிண்டல் செய்கிறது. இப்படி செய்பவர் களுக்கு, ஒரு பட்டமும் சூட்டுகிறது.
தமிழ்நாட்டின் வள்ளல்களில் ஒருவன் வேள் ஆய். யார் எவர் என்று பார்க்காமல் உதவியவன். அவன் அரசன். பிறரிடம் இருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்று எண்ண வேண்டிய அவசியம் இல்லாதவன்.
ஒரு வேளை, ‘இந்தப் பிறவியில் நாம் தர்மம் செய்தால், மறுபிறவியில் நமக்கு நன்மை கிடைக்கும் என்னும் எண்ணத்தில் உதவிகளை வாரி வழங்குகிறானோ…?’ என்று நினைத்தால், அப்படியும் இல்லையாம்!
‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகம் ஆய் அலன்: பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன் கை வண்மையே’
பெரியோர் சொன்ன நெறிகளுக்குக் கட்டுப் பட்டு வேள் ஆய் உதவினானே அல்லாமல், ‘இந்தப் பிறவியில் பிறருக்கு உதவினால், அடுத்த பிறவியில் நமக்குப் பிறரின் உதவி கிடைக்கும்’ என்று அறத்துக்கு விலை பேசி, அறவிலை வணிகம் செய்ய வில்லையாம் அவன்.
நாம் ஒருவருக்கு உதவினால், நமக்கு இன்னொருவர் உதவுவார் என்ற எண்ணம் வணிக எண்ணம் என்றும், அப்படிச் செய்பவர்களை ‘அற விலை வணிகர்’ என்றும் குறிக்கிறார். மோசியார் என்னும் புலவர்.
புறநானூற்றில் பேகன் என்னும் வள்ளலை, பரணர் இவ்வாறே பாராட்டிய பாடலும் உண்டு. மறுமையை எண்ணிப் பார்த்து பிறருக்கு உதவ வில்லையாம் அவன். அவரது வறுமையை எண்ணியே உதவினானாம்.
‘மறுமை நோக்கின்றோ? அன்றே…. பிறர்
வறுமை நோக்கின்று அவன் கை வண்மையே’
‘வெறும் இலக்கியமாகவே எழுதிக் கொண்டு போகிறானே…” என்று உங்களுக்குத் தோன்றி யிருக்கும். காரணத்தைச் சொல்லி விடுகிறேன். விலங்குகளை மையப்படுத்தி செய்திகள் தரும் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்த காட்சி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இது.
பொதுவாக விலங்குகள் நியாயம், தர்மம் பார்ப்பதில்லை. சிங்கம், புலி, ஓநாய் போன்ற விலங்குகள், தம்முடைய இரையை வேட்டை யாடுவதைப் பார்க்க வியப்பாக இருக்கும். கொடூரமாகவும் இருக்கும். தாக்கப்படும் விலங்கின் கண்களில் தெரியும் மரண பயம், நமக்குப் பெரும் இரக்கத்தை ஏற்படுத்தும்.
உணவுக்காக, இரை வீழ்த்தப்பட்டதும், தாக்கிய விலங்கைவிட பலமுள்ள வேறொரு விலங்கு தனியாகவோ அல்லது கூட்டமாகவோ வந்து, அதனை விரட்டிவிட்டு, வீழ்ந்து கிடக்கும் இரையைத் தமதாக்கிக் கொள்ளும்! அவற்றின் செயல்கள் அப்படித்தான் இருக்கும். ஏனெனில் அவை விலங்குகள்!
இந்த எண்ணத்தை அப்படியே மாற்றிப் போட்டு விட்டது. தொலைக்காட்சியில் ஒளி பரப்பான ஒரு காட்சி. காட்டு எருமை ஒன்று. தண்ணீர் நிறைந்திருந்த குளம் ஒன்றில், கால்கள் மறையும் ஆழத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் கண்களில் மிரட்சி. கரையோரத்தில், நான்கு சிங்கக் குட்டிகள் அந்தக் காட்டெருமை கரையேறியதும் அதன்மீது பாயத் தயாராகிக் கொண்டிருந்தன. என்ன காரணத்தலோ அவை நீருக்குள் இறங்க வில்லை.
காட்டெருமையும், சற்று வெளியே வந்து அவைகளை மிரட்டி விரட்ட முயற்சித்துவிட்டு, மீண்டும் நீருக்குள் போய் நின்று கொள்ள, கொஞ்ச நேரம் இப்படியே போனது. ”என்ன ஆகும்…?” என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டே யிருந்தபோது, பிளிறிக் கொண்டு ஒரு யானை மெதுவாக நடந்து வந்தது. குளத்தின் கரையோர மாக நின்று காட்டெருமையை மிரட்டிக் கொண்டிருந்த சிங்கக்குட்டிகளை நோக்கி நடந்தது.
சிங்கக்குட்டிகள், இப்போது சற்றே பின் வாங்கின. அவற்றை நெருங்கிய யானை, தனது வலது முன்னங்காலை சற்றே மடித்துத் தூக்கி, குட்டிகளை உதைக்க ஓடியது. பின் வாங்கிய குட்டிகள் ஓடிப்போய் தூரத்தில் நின்று கொண்டன. யானை குளக்கரையிலேயே நின்று கொண்டிருந்தது. காட்டெருமை, குளத்தின் மறு கரையில் ஏறி ஓடிப்போய்விட்டது. அது போய்விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட யானை, மெதுவாகத் திரும்பிச் சென்றது. இந்தக் காட்சியை நீங்கள் பார்க்க நேர்ந்திருந்தால் பாக்கியசாலி!
‘எந்த எதிர்பார்ப்பும் இன்றி அடுத்தவர்க்கு உதவுவதே உயர்ந்த மனநிலை’ என்று மேலே பார்த்தோமே, அந்தப் பாடல்கள் அனைத்தும் நினைவுக்கு வந்து போயின. மனிதத் தன்மை எது என்பதை சில மனிதர்களே மறந்து இரக்க மில்லாமல் நடப்பதைக் காணும் சூழலில், விலங்குகள் சமயங்களில் அதை நமக்கு உணர்த்துகின்றன என்றே எண்ணத் தோன்றியது. அவை திருக்குறளை அறியுமா, அல்லது புற நானூற்றின் பொருள்தான் அவற்றிற்குத் தெரியுமா?
விலங்குகளுக்கு, விதிகளும் சட்டங்களும் கிடையாது. தமது விருப்பம்போல அவை வாழ் கின்றன. எதிர்பார்ப்பில்லாமல் உதவ வேண்டும் என்றெல்லாம் அவற்றின் ‘முன்னோர்கள்’ அவைகளுக்குச் சொல்லி வைக்கவில்லை. ஆனால், அவற்றிலும் மனிதத்தன்மைகள் இருக்கின்றன. முன்னோரின் சொற்கள் நம்முன் குவிந்து கிடக்கின்றன. நம்மை நெறிப்படுத்தும் சட்டங் களும் விதிகளும் நிறையவே இருக்கின்றன. பிறருக்குத் துன்பம் தராமல் வாழ்ந்து, நெறி மாறாமல் பொருள் தேடி, மனநிறைவு கொண்டு வாழ்வை வெற்றி கொள்வது எப்படி என்றெல்லாம் நமக்கு நிறைய சொல்லப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் இருந்தும், நம்மில் மனிதத்தன்மை இல்லாமல் போனால், அந்தக் குற்றத்துக்கு பொறுப்பாளிகள் நாம்தானே…?
Leave a Reply