– கிருஷ்ணன் நம்பி
டிவியில் நீங்கள் ரசித்து பார்ப்பது நிகழ்ச்சிகளா? விளம்பரங்களா?
நிச்சயம் விளம்பரங்கள்தான்.
விளம்பரங்கள், அதில் அறிமுகப்படுத்தப்படும் பொருளுக்காக ரசிக்கப்படுவதில்லை. விளம்பரப்படுத்தும் விதத்தில் உள்ள புதுமைக்காக ரசிக்கப்படுகிறது. அதுபோல உங்களைப்பற்றி நீங்கள் சொல்கிற விஷயம் மட்டுமல்ல, சொல்கிற விதமும் ரசிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.
உங்களை வித்தியாசமாக விளம்பரப்படுத்த வேண்டுமென்றால் போஸ்டர்தான் அடித்து ஒட்ட வேண்டும் என்றில்லை. உங்கள் விசிட்டிங் கார்டு கூட உங்களுக்கான விளம்பரம்தான்.
பயிற்சியாளராக இருக்கும் என் நண்பர் ஒருவர் விசிட்டிங்கார்டில், தன் பெயருக்கு கீழே கேட்டலிஸ்ட் என்று போட்டிருந்தார். அவரிடம் விசிட்டிங் கார்டு வாங்குபவர்கள் எல்லாம் அதிலிருக்கும் கேட்டலிஸ்ட் என்ற புதுமையான வார்த்தையை பார்த்துவிட்டு ‘இது என்ன?’ என்று கேட்பார்கள். நண்பர் சொல்வார், ”வேதி வினைகளில் கேட்டலிஸ்ட். அதாவது வினையூக்கி ஒன்றை பயன்படுத்துவார்கள்.
இந்த வினையூக்கி வினையை வேகப்படுத்துமே, தவிர அது வினையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதுபோல நான் நிறுவனத்தில் பணிபுரிவதில்லை. நான் பயிற்சி தருவதால் அந்த நிறுவனத்தில் எல்லோருடைய செயல்திறனும் உயர்ந்து அவர்களின் திறமை உயர்கிறது. அதனால் நானும் ஒரு கேட்டலிஸ்ட்” என்பார். அவர் இதை கூறும்போது ரசிக்காத வர்களே இல்லை.
எஸ்.எம்.எஸ் விளம்பரம்
நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் முகவர் அல்லது விற்பனைத்துறையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களை நீங்கள் எப்படி எல்லாம் விளம்பரம் செய்துகொள்ள முடியும் என்று யோசியுங்கள்.
உதாரணத்திற்கு ஒன்று, ஒருவரை சந்தித்து விட்டு வந்தால் அவர் நமக்கு எந்தவகையிலும் பிஸினஸ் தராவிட்டாலும்கூட அவரது செல்லுக்கு தினமும் ஒரு பாஸிடிவ் எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்.
தயக்கம் உள்ளவர்களிடம் வெற்றியும் வரத் தயங்கும்.
சிறந்ததையே யோசியுங்கள். சிறந்ததையே செய்யுங்கள். சிறந்ததையே பெறுவீர்கள்.
இலக்கு இல்லாத வாழ்க்கை எண்ணெய் இல்லாத விளக்கு போன்றது.
தொடங்காத ஒன்றை முடிக்க முடியாது. எனவே உங்கள் வாழ்க்கை வெற்றியில் முடிய, முயற்சிகளை தொடங்குங்கள்.
இப்படி தினம் ஒரு செய்தி வரப் பெற்றவர்கள் நீங்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ் தரத்திலேயே உங்களையும் மதிப்பார்கள். உங்கள் நம்பிக்கை செய்திகள் உங்களைப்பற்றிய நம்பிக்கை யையும் உயர வைக்கும்.
எஸ்.எம்.எஸ்தான் என்றில்லை. நீங்கள் வைத்திருக்கும் ரிங்டோன்கூட உங்களைப்பற்றி சொல்லும் விளம்பரம்தான்.
இன்சூரன்ஸ் முகவர் ஒருவர் தன் ரிங்டோனாக, ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற பாரதியார் பாடலை வைத்திருந்தார். பலரும் அதை பாராட்டியிருக்கிறார்கள். அவருக்கு போன் செய்கிறவர்கள் எல்லாம் இந்தப்பாடலை கேட்கிற போது அவரைப்பற்றி எவ்வளவு உயர்வாக நினைப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பேச்சும் விளம்பரம்தான்
நினைவூட்டுதல்தான் விளம்பரத்தின் பிரதான பணி. நிறுவனங்கள், தினசரி காலண்டர்கள் உங்களுக்கு கொடுப்பதன் நோக்கமும் ஒவ்வொரு நாள் தேதி கிழிக்கும்போது அந்த நிறுவனப்பெயர் உங்கள் மனதில் பதியும் என்பதால்தான்.
திரும்பத்திரும்ப ஒன்றை ஒருவருக்கு நினைவூட்டினால் எரிச்சலடைவார்கள். ஆனால் அதுவே அழகான விளம்பரமாக வரும்போது ரசிப்பார்கள். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது என்பார்கள்.
நீங்கள் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறீர்கள். ஒருவரிடம் ஆர்டர் கேட்கச் செல்கிறீர்கள். தேவைப்படும்போது கூப்பிடுகிறேன் என்கிறார். ஆனால் கூப்பிடவில்லை.
காரணம், மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். மறதி அதிகம் உள்ளவர்கள். பிரிண்டிங் தேவை வரும்போது புதிதாக ஆர்டர் கேட்ட உங்கள் நினைவு அவருக்கு சட்டென்று வராது. எனவே பழைய பிரிண்டரை கூப்பிட்டு கொடுத்துவிடுவார்கள். நீங்கள் அடுத்தமுறை கேட்கும்போது, ”அடடா மறந்துட்டேன்” என்பார்கள். ஆனால் அடுத்தமுறையும் இதுவே தொடரும். இதற்காக மாதாமாதம் அவரிடம் போய், ”ஏதாவது ஆர்டர் இருக்கா?” என்று கேட்டுக் கொண்டிருந்தால் அவருக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் சலிப்பாகத்தான் இருக்கும்.
உங்களுக்கென்று வித்தியாச வித்தியாசமாக பத்துவிதமாக விசிட்டிங்கார்டை அடித்து வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒவ்வொரு கார்டை கொடுத்து அசத்துங்கள்.
நீங்கள் எதாவது புதுமையாக செய்து கொண்டே இருப்பீர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். அடுத்தமுறை அவசியம் உங்களை அழைப்பார்கள்.
பாலுமகேந்திரா டச், பார்த்திபன் டச் என்று இருப்பது போல, உங்கள் டச் நீங்கள் செய்யும் செயலில் இருந்தால் போதும். அது உங்களை விளம்பரம் செய்துவிடும்.
kasthuri kumar
Dear sir ,
This Book is really excellent. i am leaving in Oman. Its Helping lot to improve myself. thanks.
balasubramanian
Thank you for the Nice idea. I will follow it.