மார்க்கெட்டிங் மந்திரங்கள்

-சிநேக லதா

வாய்ப்புகளின் வாசல்

ரக்கு மாஸ்டரும் சப்ளையரும் சம்பந்தம் செய்த கதை உங்களுக்குத் தெரியுமா? சரக்கு மாஸ்டர் பெண்ணை யாருக்குக் கட்டி வைக்கலாம் என்று கேள்வி வந்தபோது, தான் பணிபுரியும் உணவகத்திலுள்ள சப்ளையருக்குத்தான் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என சரக்கு மாஸ்டர் ஒற்றைக்காலில் நின்றாராம்.

“வேறு மாப்பிள்ளை பார்க்கலாமே” என்றால், “வேண்டவே வேண்டாம்” என்று மறுத்துச் சொல்லிவிட்டாராம். காரணம் கேட்ட போது, “நான் செய்து தரும் உடைந்த இட்டிலி, வேகாத ஊத்தப்பம் இதையெல்லாமே காரணங்கள் சொல்லி வாடிக்கையாளரை சாப்பிடவைத்து விடும் சமர்த்து, சப்ளையருக்குத்தான் உண்டு. அவர் தான் என் மகளை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வார்” என்று சரக்கு மாஸ்டர் அடித்துச் சொல்லி விட்டாராம்.

ஒரு பொருளின் உற்பத்திக்கும் மார்க் கெட்டிங்கிற்கும் இருக்கிற உறவுகூட இப்படித் தான். இதனால்தான் பல நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளின் அம்சங்களை மார்க்கெட்டிங் துறையினரின் முழு அங்கீகாரத்துடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள்.

ஒரு தயாரிப்பின் ஆகச்சிறந்த பலம் எது வென்று யாரும் கேட்டால், அதன் தொழில் நுட்பச் சிறப்பு – தொழில் நுட்பத்தனித்தன்மை, என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். ஆனால், அந்த பலம் எப்போது பரிமளிக்கிறதென்றால் அந்தத் தொழில்நுட்பச் சிறப்பை மக்கள் எளிதில் புரிந்து கொள்கிற போது தான்.

ஒரு வாஷிங்மெஷினில், ஒரு பற்பசையில், எத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் அவை மக்களுக்குப் புரியும்படி இருப்பதும், அவர்கள் தேவைக்குப் பொருந்தும்படி இருப்பதும் மிகமிக முக்கியம். இங்கேதான் தொழில்நுட்ப வல்லுனர் களும் மார்க்கெட்டிங் துறையினரும் கை கோர்க்க வேண்டியிருக்கிறது.

விளம்பரங்களால் உந்தப்பட்டு, வாடிக்கை யாளரே தேடி வருகிறபோது, அதன் அம்சங்களை விவரிக்கிற அளவு மார்க்கெட்டிங் பிரிவு ஆயத்தமாக இருக்க வேண்டும். அதற்கு பதில், செயல்முறை விளக்கக் கையேட்டை எடுத்துக் கொடுத்து, நீங்களே பாருங்கள் என்றால் வாடிக்கையாளர் நகர்ந்துவிடுவார். நிறுவனத்தில் இருப்பவர்களுக்கே அதுபற்றி சொல்லத் தெரியவில்லை என்பதுதான் வாடிக்கையாளர் புரிந்து கொள்கிற விஷயம். ஒரு தயாரிப்பின் அம்சத்தை, அதைச் சார்ந்த மனிதர்கள் சொல்கிற போதுதான் கேட்பவர்களுக்கு நம்பிக்கையும், ஈர்ப்பும் ஏற்படுகிறது.

ஏனென்றால், ஓர் உணவகத்திற்குப் போனால்கூட அழகான மெனுகார்டை பத்து நிமிடங்கள் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு, “சூடா என்ன இருக்கு?” என்று ஆரம்பிப்பதுதான் இந்திய வாடிக்கையாளர்களின் யதார்த்தமான மன நிலை.

இதனை ஐரோப்பிய நாடுகள் இருபது வருடங்களுக்கு முன்பே உணர்ந்திருந்தன. நிறுவனங்களில், பொருள் உற்பத்திக்குப் பொறுப் பான ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை மற்றும் மார்க்கெட்டிங் துறை ஆகியவற்றுக்கு நடுவே இருக்கும் உறவுகள் குறித்த ஆய்வினை .என்ற நிறுவனம் நிகழ்த்தியது. அந்த ஆய்வில் துறையினருக்கு மார்க்கெட்டிங் பிரிவிலும், மார்க்கெட்டிங் துறையினருக்கு பிரிவிலும் பயிற்சிகள் தர வேண்டிய அவசியத்தை அந்நிறுவனம் கண்டறிந்தது.

இன்றுகூட தனிமனிதர்கள் வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் குறித்த எளிய விளக்கங்களும் விற்பனை உத்திகளும் தொழில் நுட்பம் சார்ந்த கம்ப்யூட்டர்களில் கிடைப்ப தில்லை. இதன் காரணம் தொழில்நுட்பம் சார்ந்த துல்லியமான தகவல்களைத் தருகிற பயிற்சி மார்க்கெட்டிங்கில் இருக்கும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்பதுதான்.

ஒரு நிறுவனத்திற்கும் வாடிக்கையா ளருக்கும் இணைப்புப்பாலமாக இருப்பவர் மார்க்கெட்டிங் அலுவலர்தான். தயாரிப்பு பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதே நேரம், ஒரு தயாரிப்பில் இருக்கும் நடைமுறை சிரமங்களையோ, பயன் படுத்துவதில் இருக்கும் இடர்ப்பாடுகளையோ வாடிக்கையாளர்கள் சொல்லும்போது, அதை நிறுவனத்தின் உற்பத்தித்துறைக்கு உணர்த்து வதையும் மார்க்கெட்டிங் துறைதான் கையாள வேண்டும். மாறாக, குறைபாடுகள் பற்றிய புகார்களுக்கு சப்பைக்கட்டு கட்டி, தங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டுவதிலேயே மார்க்கெட்டிங் அலுவலர் குறியாய் இருந்தால், தன் நிறுவனத்தின் ஒட்டு மொத்த பெயருக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விடுவார்.

சங்சூ என்ற சீன ஞானி, வேறோர் அர்த்தத்தில் சொன்ன வாசகம் ஒன்று, மார்க்கெட்டிங் துறையின் வெற்றிக்கும் மிகமிகப் பொருத்தம். “அடுத்தவர்களைத் தெரிந்து கொண்டு உங்களையும் தெரிந்து கொண்டால், உங்கள் வெற்றிக்கு ஆபத்தில்லை. விளையாடும் களத்தையும், இயல்பான சூழலையும் தெரிந்து கொண்டால் உங்கள் வெற்றி முழுமையானதாக இருக்கும்.”

இங்கே அடுத்தவர்கள் என்பது உங்கள் தயாரிப்பையும் அடுத்தவர்கள் தயாரிப்பையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம். விளையாடும் களம் என்பது தயாரிப்பின் அம்சங்களையும் இயல்பான சூழல் என்பது தயாரிப்பை பயன் படுத்தும்போது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சாதக பாதகங்கள் என்றும் கொள்ளலாம்.

மார்க்கெட்டிங் துறை என்பது ஒற்றைச் சாளரம் வழியே செயல்படுவதல்ல. வாய்ப்புகளின் அத்தனை வாசல்களிலும் புகுந்து புறப்படுவது.

zp8497586rq