அனுபவ படிப்பால் கிடைக்கும் வெற்றி

-இயகோகா சுப்ரமணி

விடுமுறைக்குப் பின் கல்லூரிகள் திறந்து, கல்லூரியில் இடம் பெறுவதற்காக மாணவர்களும், பெற்றோர்களும் அலை மோதிக் கொண்டிருக்கும் தருணம் இது. எல்லாத் தாய் தந்தையருமே தனது பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய சம்பளம் வாங்க வேண்டும், வளமாக வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள்.

எனவே, தாங்கள் தேர்வு செய்யும் படிப்பு, எந்த அளவு வருமானத்தைக் கொடுக்கும், அடுத்தவர்கள் பார்த்துப் பெருமைப் பட்டும் பாராட்டும்படி அது அமைய வேண்டும். வெளிநாடுகள் சென்று வேலை செய்தால் நிறையப் பொருள் சேர்க்க வாய்ப்புகள் அமையும் என்று தான் தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக கணினி, எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட துறைகளில் நிறைய சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்தத் துறை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு எல்லாக் கல்லூரிகளிலும் கூட்டம் அதிகம் சேரச் சேர கட்டணங்களும் உயர உயரப் பறக்கின்றன.

தகுதியான மதிப்பெண்கள் பெற்றவர் களுக்கு செலவு குறைவுதான். ஆனால் அனைவருமே அமெரிக்கக் கனவுகளில் தோய்ந்து வருவதால் சந்தை மதிப்பும் கூடி விடுகின்றது. இதற்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல், சிவில், மருத்துவம் என மற்ற துறைகளும் உள்ளன. நிறையப் பணம் கட்டிக் கல்லூரிகளில் இந்தத் துறைகளில் சேர்வதற்கும் போட்டி உண்டு. இவற்றைத் தாண்டி பாலிடெக்னிக்குகள், கலை அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றிலும் பல வகையான பட்டப்படிப்புகள். எல்லாப் படிப்புகளுமே பட்டம் பெற்றுத் தருவதோடு, நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய பதவிகளையும் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடுதான் அனைவருமே மேற்படிப்பும் படிக்கச் செல்கின்றனர்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இன்றைய சூழ்நிலையில் மாணவர்களாகட்டும், பெற்றோர்கள் ஆகட்டும், அனைவரது எண்ணமும் பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும், பள்ளிகளையும் ஒரு வேலைவாய்ப்பு அலுவலகமாகத்தான் கருதத் தோன்றுகிறதே ஒழிய, சமுதாய சிந்தனையும், தேசப்பற்றும், அதீதக் கட்டுப்பாடுகள் கொண்ட குலப்பண்பையும் கடைப்பிடித்துத் தேசத்தைச் செதுக்கிச் சிறப்புற நடைமுறைப்படுத்தும் பண்பாளர்களையும், தலைவர்களையும் உருவாக்கக்கூடிய கல்விச் சாலைகளாக எண்ணிவிடாமல் தடுத்து விடுகின்றன.

ஒப்பிட்டு நோக்கிப் பக்கத்து வீட்டுக்காரர் களிடமும், உறவினர்களிடமும் பெருமை பேசுவதற் கான கருவிகளாகத் தங்கள் குழந்தைகளை நினைக்கிறார்களே ஒழிய, தங்கள் குடும்பம், தங்கள் தலைமுறை தழைக்க வந்துள்ள தலைவர்கள் அவர்கள் என்பதை மறந்து விடுகின்றார்கள். இந்த நினைவுகளோடு, பிள்ளைகளின் மனதில் கட்டாய மாக்கிக் திணித்து அவர்களை பந்தயத்துக்குத் தயார் செய்யும் பயிற்சியாளர்களாக இருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் தொழில்களத்தில், தொழிற்சாலைகளில் ஏட்டுப்படிப்பும் அதன் பட்டங்களும் எந்த அளவு சிறப்புக்களைச் சேர்க்கின்றன. பள்ளிகளில் சொல்லித் தராமல் தவிர்க்கின்ற சில விஷயங்கள் எப்படி வெற்றிக்கு அடித்தளமாக அமைகின்றன என்பதைப் பார்ப்போம்.

கணினித்துறை, மென்பொருள் உருவாக்கம் போன்ற பணிக்குச் செல்பவர்களது உலகமே தனி. சேவைத் துறையின் கீழ்வருவதால், அதன் வளர்ச்சி மாற்றங்களுக்கு உட்பட்டது. நிறுவனத்தை நிறுவியவர்களைத் தவிர மற்ற யாரும் நிரந்தரமாக அங்கு பணியாற்றவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆண், பெண் பேதமில்லாத, மேலை நாட்டு நாகரீகத்தின் தாக்கத்தால் ஒரு மிகப்பெரிய கலாச்சாரப் புரட்சிக்கும், மாற்றத்துக்கும் வித்திட்ட இந்தத் துறையால் உண்மையிலேயே வெற்றி பயனுள்ளதாக இருக்கிறதா, இது எப்படிப்பட்ட முடிவுகளைக் கொண்டு வரும் என்று இன்று உறுதியாகக் கூற முடியாது.

பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், அது ஒரு சூதாட்டச் சந்தைதான். பட்டம் பெற்ற உடனேயே பல லட்சங்களில் சம்பளம், கோடிகளில் போனஸ் என்று இந்தியாவிலிருந்து நிறையப் பேரைக் கொத்திக் கொண்டு போகின்றனர். அங்கே அவர்கள் பங்களிப்பினால் உருவான தொழில்கள் எத்தனை, பயன் பெற்றவர்கள் எத்தனை என்று யாருக்குத் தெரியும். நிறைய வங்கிகள் திவாலானதும், நிறைய நாடுகள் பொருளாதார வளர்ச்சி இன்றி நிலை குலைந்து தடுமாறியதும் நமக்குத் தெரியும்.

ஸ்பெயின், கிரீஸ், துபாய் போன்ற நாடுகளில் அரைகுறையாகக் கட்டி முடிக்கப் பட்டு, ‘அம்போ’வென்று நிற்கும் அடுக்கு மாடிக் கட்டிடங்களில் எத்தனை ஏமாளி களின் முதலீடு வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றது என்று யாருக்குத் தெரியும்? பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற மேதைகளும், பொருளாதாரப் புலிகளும் விடை தெரியாது விழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

கோரமான சுனாமியின் பிடியில் சிக்கி, அணுஉலைக் கதிர்வீச்சினால் அலைமோதி நொந்துபோன ஜப்பானில், இப்போது முதலீடு செய்தால் அதிகப் பணம் பின்னால் ஈட்டலாம் என்று சொல்லும் வாரன் பஃபெட் போன்றவர்களால் உண்மையிலேயே பயன் அடைந்தவர்களைவிடவும், பொருள் இழந்தவர்கள் தான் அதிகம் இருக்கமுடியும். இப்படிப்பட்ட பொருளாதார மேதைகளின் வெற்றி தனியொரு வனைப் பணக்காரனாக்கி மற்றவர்களை வாய் பிளக்க வைக்குமே ஒழிய ஆக்கபூர்வமான பொருளாதார வளர்ச்சிக்கு இது என்றும் உதவி செய்யாது. எனவே, இந்தத் துறை வெற்றி என்பது படிப்பு, திறமையால் அல்ல. மற்றவர் பணத்தை சுற்றி வளைத்துக் கைப்பற்றும் திறமையைப் பண்பானது என்றும் சொல்ல முடியாது.

ஏதாவது ஒரு பட்டம் வாங்கிக்கொண்டு விமானத்தில் உணவு அளிக்கும் பணிப்பெண், ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் போன்றோர் சாதாரண சரவணபவனிலும், அஞ்சப்பரிலும் பணியாற்றுபவர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் வெற்றி பெற்றவர்கள் என்று கூறமுடியாது. ஆங்கிலம் பேசும் திறன், அழகான உடை, பாவனைகள், அதிக சம்பளம், வாடிக்கையாளர்களது வாங்கும் திறன் அடிப்படையில் இவர்களது வெற்றி அடங்கி உள்ளது. இன்னும் இப்படிச் சில துறைகள் இருக்கலாம். இங்கெல்லாம் படிப்பு, பட்டம் என்பது மற்றவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடுவது, பேச்சினால் உடனே கவர்ந்து சேவை புரிவது என்பதோடு முடிந்து விடுகின்றது.

‘பொறுப்பு’ என்பது அப்போது, அந்த நிமிடத்தோடு முடிந்து விடுகின்றது. பின் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்பது எழுதப்படாத ஓர் உடன்படிக்கை.

இவற்றை விடுத்து, ஒரு மருத்துவர், பொறியியல் வல்லுநர், பேராசிரியர் என்று தொழில் சார்ந்த கல்வி கற்றவர்கள், படிப்பும் அது தரும் அடிப்படை அறிவும் கொண்டு, கல்லூரி முடிந்து வாழ்க்கை ஓட்டத்தில் நுழையும்போது அந்தத் துறை சார்ந்த படிப்பு மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதன் வரிசையில் நிறுத்துகின்றது. இவர்களது ஓட்டம்தான் உண்மையான கல்வியின் பயனால் நாடும், குடும்பமும் பெருமையுறும் ‘தொழில்’ வெற்றிக்கு அடையாளமாகத் திகழ்கின்றது.

இவர்களது வருமானமோ, வசதியான வாழ்க்கையோ, பதவியின் தகுதியோ முதல் நாளிலேயே உயரத்தில் ஏற்றிவிடாது. படிப் படியாக முன்னேறி உயரத்துக்கு அழைத்துச் செல்வதோடு வெற்றியின் வெளிச்சம் இவர்கள் மீதுதான் என்றும் பாய்ந்து கொண்டே இருக்கும்.

ஷாங்காய் நகரில் உள்ள ‘மால்கவ்’ ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து ‘புடாங்’ விமானநிலையத்துக்குச் செல்லும் அதிவேக ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது அருகிலேயே நின்றிருந்த இந்திய இளைஞரிடம் உரையாடினேன். இருபத்தி யேழு வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவில் இருந்து சில பொருட்களை இறக்குமதி செய்வதோடு, இந்தியாவிலிருந்து சீனாவுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

சீனாவிலுள்ள பல நகரங்களுக்கு அவர் வியாபார விஷயமாக அடிக்கடி சென்று வருவதாகவும் கூறினார். அவரது ‘விசிட்டிங் கார்டை’ வாங்கிப் பார்த்தபோது நான்கைந்து பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளின் பெயர்கள் இருந்தன. இவர் தனது பெயரின் கீழ் ‘டைரக்டர்’ என்று தனது பதவியைக் குறித்திருந்தார். விசாரித்தபோது அனைத்துமே குடும்ப உறுப்பினர்கள் முதலீடு செய்து நடத்தி வரும் தொழில் என்றும் கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் இணைந்து சுமார் அறுநூறு கோடிவரை வர்த்தகம் செய்வதாகக் குறிப்பிட்டார்.

பி.காம் பட்டதாரி. படிப்பு முடிந்த உடனேயே தந்தையுடனும், சகோதரர்களுடனும் இணைந்து பயிற்சி பெற ஆரம்பித்து விட்டார்.

மூன்றாண்டுகள் அவரது நிறுவனத்திலேயே பயிற்சி முடிந்து திருமணமும் முடிந்து, இயக்குனராக ஆகி, தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றார்.

அவரிடம் கேட்டேன், “ஏன் இவ்வளவு வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த நீங்கள், வெளிநாடு சென்று எம்.பி.ஏ. படித்துப் பின்னர் தொழிலில் இணைந்து இருக்கலாமே” என்று.

அவர் சொன்ன பதில், எனது ஆழ்மனதின் அடியில் இருந்த ஒரு நம்பிக்கையை உறுதி செய்தது. “சார்! எம்.பி.ஏ. என்பது என்ன? ஒரு நல்ல நிர்வாகியாக இருந்து ஒரு நிறுவனத்தை எப்படி நடத்துவது என்பதைப் பற்றி மேலோட்டமாகவும், பொதுவாகவும் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி சொல்லிக் கொடுக்கும் படிப்பு. அதற்கு அடிப்படைத் தேவை ஒரு இளங்கலைப் பட்டம்.

ஆனால், எனக்கு இருந்த வாய்ப்பு எங்கள் நிறுவனத்திலேயே எங்கள் தந்தை மற்றும் சகோதரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளக் கிடைத்த பாக்கியம். அவர்களுடைய முன் அனுபவனத்தின் சாரம், யாருடன் எப்படிப் பேசிப் பழக வேண்டும், தொழிலாளர்களை எப்படி நடத்த வேண்டும், பொருளாதார ரீதியான விஷயங்களை எப்படி அணுக வேண்டும். வாடிக்கையாளர்களின் குறைகளை எப்படித் தீர்க்க வேண்டும். வரிகள், கணக்கு வழக்குத் தணிக்கை முறைகளை நமது நாட்டு சட்ட திட்டங்களுக்குத் தகுந்தபடி எப்படி சரியாகச் செய்ய வேண்டும்.

அரசியல்வாதிகளிடம் எப்படி அணுகுமுறை இருக்க வேண்டும். தான தருமங்கள் எப்படிச் செய்ய வேண்டும் என எத்தனையோ விஷயங்களில் நேரடிப் பயிற்சி கிடைக்கிறது. அனுபவம் கிடைக்கிறது. தவறாகச் செய்தால் உடனே திருத்திக் கொள்ள முடிகின்றது.

நான் மநஅ சென்று எம்.பி.ஏ. படித்திருந்தாலும், அது வெளியே சொல்லிக் கொள்ள ஒரு கௌரவமாக இருக்குமே தவிர, நான் மீண்டும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மறுபடியும் இந்த அனுபவத்தைப் பெற செலவு செய்ய வேண்டியிருக்கும். எனக்கும், என் குடும்பத்துக்கும் இந்த அனுபவப் படிப்பால் கிடைக்கும் வெற்றியே போதுமானது” என்று தெரிவித்தார். இளம் வயதுதான்; ஆனாலும் என்ன தெளிவு!

கல்வி என்பது வாழ்க்கை, சூழ்நிலை மாற்றங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றின் அடிப்படையில், சமுதாய வாழ்க்கைக்கும், முன்னேற்றத்துக்கும் அன்றைய சூழ்நிலையில் என்னென்ன கற்க வேண்டும் என்ற அடிப்படையில் சில மேதைகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. எந்த வயதில் எதைக் கற்க வேண்டும், எந்தத் தொழிலுக்கு என்ன மாதிரியான வழி முறைகள் பயிற்சிகள் தேவை என்பது வருடத்துக்கு வருடம் மாறும்.

உதாரணமாக 1950களில் படித்துப் பட்டம் பெற்று வந்த பொறியியல் வல்லுனர்கள் கால்குலேட்டர், கம்ப்யூட்டர்களைப் பார்த்தது கூடக் கிடையாது. இன்றைய பட்டதாரி, இந்த சாதனங்களின் உதவியில்லாமல் பொறியியல் வல்லுநராக ஆக முடியாது.

அதற்காக 50களில் பட்டம் பெற்ற இன்ஜினியர் இன்று இன்ஜினியராக இருக்க முடியாது என்று கூற முடியாது. இன்று அவர் கால்குலேட்டரையும், கம்ப்யூட்டரையும் உபயோகப்படுத்திக் கற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இந்த ஒரே ஒரு காரணத்துக்காகவும் இன்றைய இளம் இன்ஜினியர்கள் 1950ல் பட்டம் வாங்கிய இன்ஜினியரின் அனுபவத்தின் சாரங்களைக் கற்காமல் இருக்கவும் முடியாது. எல்லாத்துறைகளிலும் இது போலத்தான்.

பட்டமும், படிப்பும், துடிப்பும், திறமையும் மற்றவர்களைவிட சில இடங்களில் சில காலங்களுக்கு நமக்கு முன்னுரிமை அளிக்கும். சில வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்.

ஆனால் பண்பும், நாடு சார்ந்த நெறி முறைகளும், அனுபவசாலிகளின் ஆக்கபூர்வமான அறிவுரைகளையும், நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்ற மனப்போக்குமே நிரந்தரமான வெற்றிக்கும், நீண்டகால நிம்மதிக்கும் வழி வகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *