திசைகளை திரும்பிப் பார்க்கிறேன்

தேர்தலில் அமோக வெற்றி

– சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

முடியாது என்று முடங்கிவிட்டால்

மூச்சுக் காற்றும் நின்றுவிடும்

முடியும் என்று துணிந்து விட்டால்

மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும்

தமிழ்மன்றத் தேர்தலில் நான் அமோக வெற்றி பெற்று தமிழ்மன்றச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்துப் போட்டியிட்ட அறிவியல் துறையைச் சார்ந்த ரவிச்சந்திரனைவிட 800 ஓட்டுக்கள் அதிகம் பெற்றிருந்தேன்.

இந்த அமோக வெற்றி எப்படி சாத்தியம் என்று சிந்தித்துப் பார்த்தபோது ஓர் உண்மை தெளிவானது. அதாவது வழக்கமாக, அறிவியல் சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், அறிவியல் துறை சார்பாக போட்டியிடும் மாணவர் களுக்கும், கலைத்துறையில் படிக்கும் மாணவர்கள் கலைத்துறை சம்பந்தமான படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்குத்தான் ஓட்டளிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்த தேர்தலில் மட்டும் அத்தகைய வழக்கம் எவ்வாறு மாறியது? அதுதான் ”மனித உறவுகள்”.

ஒருவர் முன்னேறுவதற்கு அவருடைய உழைப்பு மட்டும் போதாது. அவரைச் சார்ந்திருப்பவர்களின் ஒத்துழைப்பும் வேண்டும். மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எத்தகைய திறமைசாலியாலும் முன்னேறமுடியாது என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்!

ஆம்! எல்லோரிடமும் சுமுகமாகவும், அன்புடனும், அக்கறையுடனும் பழக வேண்டும். பழகத் தெரிந்தவனுக்கு உலகமே வீடு! பழகத் தெரியாதவனுக்கு வீடே உலகம்! அன்பாகவும், பிரியத்துடனும் எல்லோரிடமும் பழகும்போது, ஒவ்வொரு மனிதனும் நமக்கு உதவ முன் வருகின்றார்கள்.

அப்படியென்றால் கண்டிப்பே கூடாதா? என்ற கேட்கக்கூடாது. எங்கெங்கெல்லாம் கண்டிப்போடு பழகவேண்டும். எங்கெங்கெல்லாம் கனிவோடு பழகவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப பழகும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நான் கோவை அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் போதுதான் எல்லோரிடமும் சகஜமாகவும், உண்மையாகவும் பழகும் மனித உறவுக் கலையை கற்றுக் கொண்டேன். அப்போது கற்ற அக்கலைதான், இன்று எனக்கு கை கொடுத்து உதவுகின்றது. ”கற்றது காலத்திற்கு உதவும்” என்று தனது தந்தையார் அடிக்கடி கூறுவார். அதன் பொருள் இன்றுதான் எனக்கு முழுமையாக விளங்குகின்றது.

தமிழ்மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை யடுத்து எனது நண்பர்கள் வெற்றி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். மாணவப் பேரணி கல்லூரியில் தொடங்கி, டவுன்ஹால் சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். பிறகு நான் உரை நிகழ்த்தி மாணவ நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளில், முக்கியமானவற்றை விளக்கிப் பேகினேன். மேலும், அவர் சொன்ன ஏழு பாவங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் நான் பேசியதாக நினைவு இருக்கின்றது.

மகாத்மா காந்தியின் தன்னம்பிக்கையும் தைரியமும் என்னை எப்பொழுதும் வியக்க வைக்கும். அவருடைய கொள்கையின் மீது அவர் கொண்டிருந்த விடாப்பிடியான பற்று, தேசநலன், அகிம்சை, புலால் மறுத்தல், எளிமை, நேரத்தை மதித்தல் என ஒவ்வொன்றையும் நான் எண்ணி எண்ணி வியப்பேன்.

மகாத்மா குறிப்பிட்ட ஏழு பாவங்கள் என்னென்ன தெரியுமா? அவையாவன:

1. உழைப்பில்லாத செல்வம்

2. மனசாட்சியில்லாத மகிழ்ச்சி

3. மனித நேயமில்லாத அறிவியல்

4. ஒழுக்கமில்லாத கல்வி

5. கொள்கையில்லாத அரசியல்

6. நேர்மையில்லாத வணிகம்

7. தியாகமில்லாத வழிபாடு

பின்னர், ஊர்வலம் டவுன்ஹாலில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்காரவீதி வழியாகச் சென்று, அவினாசி ரோடு மேம்பாலம் கடந்து அண்ணா சிலையை அடைந்தது. நான் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, மாணவ நண்பர் களிடையே, அண்ணாவின் மும்மணிகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை மாணவர்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்று பேசினேன்.

ஆனால், நண்பர்கள் எனது அறிவுரை கலந்து பேச்சை விரும்பவில்லை. அதனால், ”போதும் நிறுத்து”, ”போதும் நிறுத்தடா” என்று கத்தியது இன்றும் எனது காதில் ஒலிக்கின்றது. மாணவர்களும் இளைஞர்களும் எப்பொழுதும் அறிவுரைகளை விரும்பமாட்டார்கள். ஆனால் அனுபவத்தை சொன்னால் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்பது எப்பொழுதும் பொருந்தக் கூடியதாகும்.

என்னைத் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் படிக்கும் மாணவர்களில் இருந்து ஓரிருவர் பேசினார்கள். அவர்களில் முக்கியமாக திரு. முரளிதரன், அவை நாயகன், இளங்கோ, ப.த.செல்வன், செ.ராஜன், மு.சாமிநாதன், தங்கப்பழம், வேலுச்சாமி, ராதாகிருஷ்ணன், சைகாலஜி கணேசன், கமால்தீன், எஸ்.எஸ். ஸ்டேன்லி, வேனில் கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், ட.ட. ஆனந்த் ஆகியோர் கல்லூரியின் தமிழ்மன்றம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்துப் பேசியதோடு, ”மாணவர் ஒற்றுமை ஓங்குக! தமிழ் வாழ்க!” என்று கோஷம் எழுப்பினார்கள்.

பின்னர், ஊர்வலம் கே.ஜி.தியேட்டர் வழியாக, கல்லூரி மைதானத்தை அடைந்தது. ஊர்வலத்தில் நிறைவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பின்னர், தமிழார்வம் கொண்ட நண்பர்கள் அமர்ந்து, தமிழ்மன்றத்தின் சார்பில் என்னென்ன செய்யலாம் என்று விவாதித்தோம். மேலும், தமிழ்மன்றத்திற்கு கல்லூரியில் இருந்து ”இலக்கிய மன்ற விழா” நடத்துவதற்கு மட்டும் ரூபாய் 300 தருவார்கள் என்றும், அதற்குமேல் விழா நடத்த நிதி உதவி கிடைக்காது என்றும் ஒரு நண்பர் தெரிவித்தார்.

எங்களுடைய திட்டங்களுக்கு அவர் சொன்னது பெரிய முட்டுக்கட்டையாகவே தென் பட்டது. எனினும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு சிறந்த பேச்சாளரை அழைத்து உரை நிகழ்த்தச் செய்வது, கையெழுத்துப் பத்திரிகை ஒன்றைத் தொடங்குவது என்றும், அதற்கு ஆகும் செலவை நல்ல மனம் படைத்தவர்களிடம் உதவியாகக் கேட்டுப் பெறுவது என்றும் தீர்மானித்தோம்.

அத்துடன் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருவதற்கு தகுந்த வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம்.

அப்போதெல்லாம் வார, மாத இதழ்களுக்கு புதியவர்கள் எழுதும் படைப்புகளை அவற்றின் ஆசிரியர்கள் பிரசுரிக்க ஏற்றுக் கொள்ளப்படா மலேயே திருப்பி அனுப்பி விடுவார்கள். அத்துடன், பிரசுரிக்க இயலாத நமது படைப்புக்களைத் திரும்பப் பெறுவதற்கு சுய முகவரி எழுதிய தபால் தலை ஒட்டிய உறையையும் கோர்த்து அனுப்ப வேண்டும்.

ஆம்! பத்திரிகைகளில் எழுதுவதற்கும், ஒரு வேலையில் சேர்வதற்கும் முன்னனுபவம் கேட்பார்கள். ஆனால் அந்த முன்னனுபவத்தைப் பெறுவதற்கு யாரும் வாய்ப்புக் கொடுக்க மாட்டார்கள். இந்நிலையைப் போக்க, ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்றும், அந்த இதழுக்குப் பெயரே ”அறிமுகம்” என்றும் வைக்க வேண்டும் என்று நண்பர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அதற்கு ஒப்புதல் கொடுத்தார்கள்.

இவ்வாறு ”அறிமுகம்” பிறந்தது. எனது வகுப்புத் தோழர், நாராயணசாமியின் கையெழுத்து முத்துமுத்தாக இருக்கும். அவர்தான் எப்பொழுதும் எனது நிழல்போல கூடவே இருப்பார். அவர் கொஞ்சம் முன்கோபி, என்மீது எல்லையற்ற அன்பு கொண்டவர்.

வகுப்புகள் நடைபெறாத சமயங்களில் நான் அவரை அழைத்துக் கொண்டு, விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் இருக்கும் மரங்களின் நிழலில் அமர்ந்து கொண்டு, ”அறிமுகம்” இதழை எவ்வாறு கொண்டுவருவது என்று விவாதிப் போம். அதில் எஸ்.எஸ்.ஸ்டேன்லி, அவை நாயகன், சி.டி.ராஜேந்திரன் போன்றவர்களும் உடனிருப்பார்கள்.

எஸ்.எஸ்.ஸ்டேன்லி, தனது முயற்சியாலும், கடுமையான உழைப்பாலும் உயர்ந்து சிறந்த திரைப்பட இயக்குனராகி, ”ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்க்குரிப் பூக்கள்” போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். அவருக்கு திரைத்துறையில் நுழைந்து ஜொலிக்க வேண்டும் என்ற ஆர்வமும், திறமையும், இலட்சியமும் அப்பொழுதே அக்னிக் குஞ்சுகளாக நெஞ்சில் சிறகு விரித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

அவைநாயகன், நல்ல கவிஞர், இப்பொழுது தமிழ்நாடு அரசு கருவூலத்தில் சார்நிலை கருவூல அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். குறுங் கவிதைகள் செதுக்குவதில் தலைசிறந்த ஒரு படைப்பாளி. அவர் எழுதி, என் நெஞ்சில் நிலைத்தவை: ”மண்ணைக் கிளறும் விவசாயி, கிட்டியதை வாழ்க்கை, வாழ்க்கையை இழுத்து வராததால் வண்டியை இழுக்கும் தொழிலாளி”.

சி.டி. இராஜேந்திரன் இப்பொழுது வழக்குரைஞராக கோவையில் பணியாற்றி வருகின்றார். அத்துடன் கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றார். நல்ல படைப்பாளி. நாடகங்கள், கவிதை, பேச்சு என்று தனது பன்முகச் சிந்தனையில் சிகரம் தொடுகிறார்.

மாணவர்களிடமிருந்து படைப்புகள் பெற்று சரி பார்த்து செறிவுபடுத்திக் கொடுப்பார். நாராயணசாமி அழகாக வடிவமைத்து எழுதிக் கொடுப்பார். சி.டி.ராஜேந்திரன் அட்டைப்படம் போட்டுக் கொடுப்பார்.

இவ்வாறு நாங்கள் மாதந்தோறும் செய்து, சைகிலோஸ்டைல் செய்து, 50 பிரதிகள் எடுத்து கல்லூரி முழுக்க இலவசமாக வினியோகம் செய்தோம். அத்துடன் அதில், ”படித்துவிட்டு, இதழை உங்களுடைய நண்பர்களுக்குக் கொடுங்கள்.

உங்களுடைய மேலான கருத்துக்களையும், படைப்புகளையும் எங்களுக்குத் தாருங்கள்” என்ற வேண்டுகோளும் இடம் பெற்று இருக்கும்.

இவ்வாறு நாங்கள் ”அறிமுகம்” நடத்துவதைப் பற்றி யாரோ கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் திரு.தேவராஜன் அவர்களுக்குத் தெரிவித்து விட்டார்கள் போலும். உடனே முதல்வர், என்னை அழைத்து வரும்படி, அவருடைய உதவியாளரை எங்களுடைய துறையின் தலைவர் திரு.கே.எஸ். பெருமாள் அவர்களிடம் அனுப்பியிருக்கிறார்.

ஆனால் அந்த உதவியாளர், எந்த விபரமும் சொல்லாமல், என் பெயரை மட்டும் மட்டும் சொல்லி ”பிரின்ஸ்பால் உடனே அழைத்துவரச் சொன்னார்” என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்.

துறைத்தலைவர் என்னைத் தேட, அப்பொழுது நானும் வகுப்பில் இல்லை என்பதை அறிந்து கடும்கோபம் அடைந்திருக்கிறார்.

அடுத்தநாள் நான் வகுப்புக்கு வரும்போதே ”நீ முதலில் ஏஞஈயை பார்த்து விட்டுத்தான் வகுப்பு வர வேண்டும்” என்று ஒரு சீட்டை நீட்டினார் பேராசிரியர் திரு.ராஜு.

அந்த சீட்டை வாங்கிப் பார்த்தேன். ”இர்ம்ங் ஹய்க் ஙங்ங்ற் ம்ங்” என எழுதி சுருக்கொப்ப மிட்டிருந்தார் துறைத்தலைவர், டாக்டர். கே.எஸ்.பெருமாள்.

எதற்காக அவர் அழைக்கிறார் என்பது தெரியாததால் அச்சத்தோடு, துறைத்தலைவரின் அறைக் கதவைத் தட்டினேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *