நீங்களும் பொதுமேடைகளில் பேசலாம்

முனைவர் எக்ஸ்.எல்.எக்ஸ்.வில்சன்

உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது உங்களை பொதுமேடையில், மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த வேண்டும் என்று உங்களை அழைக்கும்போது, உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்? பொதுவாக பலருக்கு இது ஒரு கடினமான செயல்பாடாகவே இருக்கும். பொதுவாக நாம் ஐந்து அல்லது ஆறு நபர்களுடன் எளிதாக பேச முடிகிறது.

எளிதில் உரையாடலில் கலந்து கொள்ள முடிகிறது. ஆனால் பலர் முன்னிலையில் பேசுவது சிரமம் என நினைப்பவர்கள் எளிய பயிற்சி மூலம் அதனை மாற்றி சிறந்த பேச்சாளராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

எந்தவொரு சிறப்பான மேடை பேச்சிற்கும் அடிப்படை யானவை இரண்டு செயல் பாடுகள்

அ) தயாரித்தல் ஆ) செயற்படுத்தல், இவ்விரண்டுமே ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றதாகும். இங்கே தரப்படும் நான்கு கோட்பாடுகள் உங்களை சிறந்த பேச்சாளராக்கும்.

1. பொருத்தமான தலைப்பை தேர்ந்தெடுத்தல்

உங்களுக்கு பிடித்த, உங்களுக்கு பரிச்சயமான தலைப்பை தேர்ந்தெடுங்கள். பொதுவாக நமக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் நபர்களிடையே நாம் என்ன பேசுவதற்கு தயாராகி உள்ளோம் என்பதில் தெளிவாக இருந்தாலே நாம் நன்கு பேச முடியும், அதே சமயத்தில் எதை சொல்வதால் அவர்களைக் கவர முடியும் எனவும் சிந்திக்க வேண்டும். உங்களது தலைப்பு, மக்களுக்கு உங்கள் பேச்சில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். நிகழ்கால நிகழ்வுகளை தலைப்பாகக் கொள்வது நல்லது. உங்கள் யுக்திகளை கையாளும் போது கேட்போரின் பணி சிறக்கும் என்பதனை குறிப்பிட வேண்டும். அந்த யுத்திகள் எவ்வாறு லாபத்தை கொடுக்கும் என்று முதலீட்டாளர்களிடை யேயும், அவை எவ்வாறு அமைதியான வாழ்க்கைக்கு வழி கொடுக்கும் என்று பயனீட்டாள ரிடையேயும் பேசுதல் அவசியம். எல்லோருமே அப்புதுயுத்திகளால் தனக்கென்ன லாபம் என்பதனை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் களாகவே இருப்பார்கள்.

2. உங்களது குறிப்புகளை முறைப்படுத்துங்கள்

முதலில் என்ன பிரச்சனை குறித்து பேசுகிறீர்கள் என்பதனை சபையோர் முன்னிலையில் தெரியப்படுத்துங்கள். பின்னர் உங்களது ஆலோசனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லுங்கள். இறுதியில் நீங்கள் சொல்லியவற்றை சுருக்கமாக தொகுத்து சொல்லுங்கள். சிறப்புப் பேச்சாளர்கள் பலர் சொல்வது போல முதலில் நாம் என்ன பேச இருக்கிறோம் என்பதனை சொல்லி, பேச வேண்டும், இறுதியில் நீங்கள் என்ன இதுவரை கூறினீர்கள் என்பதன் சாரம்சத்தை சொல்ல வேண்டும்.

3. ஒத்திகை பார்த்துக் கொள்ளுதல்

நீங்கள் பேச்சை தயாரித்தவுடன் நீங்கள் ஒத்திகை பார்ப்பது அவசியம். இதை நீங்கள் தனியாக நின்று கொண்டு அல்லது கண்ணாடியின் முன்நின்று செய்ய வேண்டும். நண்பர்கள் முன்னிலையிலோ, குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையிலோ செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் நீங்கள் உங்களை தயார்படுத்தி கொள்வது பலர் முன்னிலையில் பேசிக் கொள்வதற்காகத் தானே, எனவே ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்காக அல்ல. பல்வேறு சமயங்களில் கூட்டத்தினைப் பார்த்து ”நான் சொல்வதை கவனிப்பதன் வாயிலாக” மேலும் ”என்னுடைய பேச்சை கேட்பதன் மூலமாக” என்று சேர்த்து கொள்வது கூட்டத்தினரை கூர்ந்து கவனிக்க வைக்கும் யுத்தியாகும்.

4. குறைவான குறிப்பு அட்டைகள்

பொதுவாக மேடைகளில் அப்படியே எழுதியதை வாசிப்பது என்பது பொதுமக்களால் ஏற்கக் கூடியதல்ல. எனவே படிக்க முயற்சிக்க வேண்டாம். மேலும் படிக்கும்போது உங்களுக்கு ஏற்றத் தாழ்வான தொனிகளில் பேச முடியாது. எனவே இதனை கூட்டத்தினர் ரசிக்க மாட்டார்கள். உங்களுக்கு குறிப்பு மிகவும் அவசியம் என்றால் நான்கு அல்லது ஐந்து குறிப்பு அட்டைகளை தயார் செய்து கொள்ளுங்கள். அவ்வட்டையில் சுருக்கமாக செய்திகளை ஓரிரு வார்த்தைகளில் எழுதிக் கொள்ளுங்கள். அதனை பார்க்கும்போதே என்ன பேச வேண்டும் என்பது உங்களுக்குள் உதயமாகும்.

நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு குறிப்புகளை குறைத்துக் கொள்கின்றீர் களோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் பேச்சு சீரும் சிறப்புமாக அமையும். சில பேச்சுக்கள் குறிப்பை பார்ப்பதன் மூலமாக சுவாரசியம் குறைத்துவிட வாய்ப்புள்ளது. எனவே குறிப்பு அட்டையை குறையுங்கள். நீங்கள் பேசுவதற்கு எவ்வாறு தயாரித்துக் கொண்டீர்களோ அதைப் போல நீங்கள் பேசுவதும் அவசியம். சிறப்பாக உரையாற்ற இதோ மூன்று அடிப்படை விதிகள்.

பேசும் போது உங்களை கவனிப்போரை நண்பராக்கிக் கொள்ளுங்கள்

1960களில் சிறப்பான பேச்சாற்றல் பெற்றவர்களே பேசுவார்கள். ஆனால் தற்போது அதில் மாற்றம் தெரிகிறது. கருத்துக்களை முன் வைத்தல் அவசியம். அதுவும் உதாரணங்களைச் சொல்வதன் மூலம் நாம் கூட்டத்தினரை கவர முடியும். அதே சமயம் உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்போரின் கண்களை நேரே பாருங்கள். ஒரு புரிதலை உண்டாக்கிக் கொள்ளுங்கள். நட்பாக இருக்கக்கூடிய முகங்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அப்படி யாரும் இல்லாவிட்டால் அதற்காக கவலைப்படாதீர்கள்)

நீங்கள் சிறந்த மேடைப்பேச்சாளராக இருக்க நகைச்சுவை அவசியம்தான். ஆனால் தொடக்க பேச்சாளர்கள் இதனை தவிர்த்தல் அவசியமாகும். நீங்கள் சிறப்பாக பேசுவீர்கள் அல்லது அந்த நகைச்சுவை இன்றியமையாதது என்றால் மட்டுமே சொல்ல வேண்டும். அதற்காக, பேச்சு தொடக்கத் திலேயே நீங்கள் சிரிக்க நான் ஒரு ஜோக் சொல்லப் போகிறேன் என்று ஆரம்பிக்க வேண்டாம். அவை உங்களிடையே கவனிக்க ஏதும் இல்லை என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தும். சொல்லப் போனால் அவை உங்களது பேச்சை சுவாரசியமாக ஆக்காது.

மன்னிப்பு கோர அவசியமில்லை

பேசும்போது தடங்கல் ஏற்படின் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உதாரணமாக உங்களுக்கு சளி என்றால் அதனைச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் அதனால் எந்த நன்மையும் கிடையாது. சில சமயம் நீங்கள் சொல்ல வந்தது மறந்துவிட்டால் அதைப் பற்றி சற்றும் நினைக்காமல் கடைசியாக சொன்னதை திரும்பவும் நிதானமாகச் சொல்லி மறந்தவற்றை நினைவில் கொண்டு தொடர்ந்து பேசலாம் அல்லது பிறசெய்திகளைச் சொல்லலாம். ஏனெனில் உங்கள் செய்திகளைக் கேட்க வந்திருப்போருக்கு நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய செய்திகள் தெரியாது. எனவே சமயோசிதமாக பேச முற்படுதல் அவசியமாகும்.

இறுதி கட்ட நிலை

பேச்சில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கருத்தினை நினைவு கூறுதல் அவசியமாகும். உங்கள் உரையை நிறைவு செய்யுமுன், உரை நிறைவு பெறப் போவதைச் சொல்லுங்கள். நீண்ட நேரம் பேசுவதை விட மக்கள் தங்கள் கவனங்களை சிதறச் செய்வதற்கு முன்னரே பேச்சை நிறைவு செய்தல் அவசியம். ”தொடர்ந்து செய்யும் முயற்சி, வெற்றிக்கு வித்திடும்” என்பது சிறப்பாக மேடை பேசுவதற்கும் பொருந்தும். சிறப்பாக பேசுவதால் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்பது உறுதி. தொடரட்டும் உங்கள் முயற்சி. கிடைக்கட்டும் உங்களுக்கு புகழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *