நடமாடும் விளம்பரங்கள்

– கிருஷ்ண வரதராஜன்

அரசியல் தலைவர்களின் வருகையின்போது, அவர்கள் செல்லும் பாதையெல்லாம் அடைத்துக் கொண்டு நிற்கும், ‘உங்கள் உண்மைத் தொண்டன்’ வகை விளம்பரங்களை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்? ‘இது தலைவருக்கான விளம்பரமா? இல்லை, வரவேற்பு தட்டிவைத்த, அந்த தொண்டனுக் கான விளம்பரமா?’

தலைவருக்கும் தெரியும். இது தனக்காக வைக்கப் பட்டதல்ல, தொண்டன் தலைவனாக வைக்கப்பட்டது என்று. ஆக இங்கே சிலர் மற்றவர்களுக்கு விளம்பரம் செய்து அதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார்கள்.

ஆனால் நாம் இந்த பக்கப்பாதையை பயன்படுத்தாமல் நேர்வழியில் செயல்படுவோம். நமக்கு நாமே விளம்பரம் செய்து கொள்வோம். அதற்கான ஒரு வழிதான் நடமாடும் விளம்பரங்கள்.

நகைக்கடையே நடந்து வருவது மாதிரி சில ஆண்கள் நகை அணிந்திருப்பார்கள். அதுதான் நடமாடும் விளம்பரம் என்பதற்கு சரியான உதாரணம். நான் எவ்வளவு வசதியானவன். என்னை மரியாதை யோடு வியந்து பார்” என்பதை நகைகளின் மூலமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டே நடப்பார்கள்.

ஆனால் நாம் இது போல மற்றவர்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு பந்தா செய்யப்போவதில்லை.

வெளிநாடுகளில் ஏற்கனவே பிரபலமாகி இப்போது மெல்ல இங்கேயும் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் ஒரு விளம்பர நடவடிக்கைதான், நடமாடும் விளம்பரங்கள்.
ஒரு நிறுவனத்தின் திடீர் சலுகை அறிவிப்பு பற்றிய ப்ளெக்ஸ் போர்டை தூக்கிக்கொண்டு, கூட்டம் நிறைந்த பகுதியில் நடப்பார்கள். அந்த பகுதியில் நடமாடிக்கொண்டிருக்கும் அனைவரின் கவனத்தையும் இந்த ப்ளெக்ஸ் போர்டு உடனடியாக ஈர்க்கும். இதுதான் நடமாடும் விளம்பரங்களின் கான்செப்ட்.

இதைத்தான் உங்களுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.

நான் யார், என்னிடம் இருக்கும் திறமைகள் என்ன என்பதை பல நேரங்களில் யாரும் வெளிப் படையாக சொல்வதில்லை. தம்பட்டமாகி விடக்கூடாது என்று நினைத்து பலர் இங்கே தன்னை முறையாக அறிமுகம் செய்துகொள்வது கூட கிடையாது.

ஒரு நிறுவனத்தில் பத்து ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருப்பார். படம் வரையத் தெரிந்திருக்கும். அழகாக பாட்டுப் பாடத் தெரிந்திருக்கும். ஆனால் இதெல்லாம் ரகசியமாக வைத்திருப்பார்.

நாங்கள் மனித வள மேம்பாட்டு ஆலோசகர் களாக பணியாற்றும் ஒரு நிறுவனத்தில் விற்பனைத் தொழிலில் உள்ளவர் அவர். அவருக்கு நான்கு மொழிகள் தெரியும் என்பதே யாருக்கும் தெரியாது. தெரிந்தவுடன் ராஜமரியாதை.

அவர் கூச்ச சுபாவம் உள்ளவர். அதனால் யாரிடமும் சொல்லவில்லை. கூப்பிட்டுக் கேட்டபோது அவர் தெலுங்கிலும் வெட்கப் பட்டார். மலையாளத்திலும் வெட்கப்பட்டார். ஆனால் அந்த மொழி தெரிந்தவர்களிடம் பேசும் போது விஸ்வரூபம் எடுத்தார்.

அந்த மாதமே அவருக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கி சிறப்பித்தது அந்நிறுவனம்.

அதே நிறுவனத்திற்காக, பணியாளர்கள் சிலரின் பதவிஉயர்வுக்காக நாங்கள் நடத்திய நேர் காணலில் ஒருவரிடம், “உங்களுடைய ப்ளஸ் பாயிண்ட் ஒன்று சொல்லுங்கள்” என்றேன். ‘அத நான் எப்படி சார் சொல்றது? மற்றவர்கள் அல்லவா சொல்ல வேண்டும் ?’ என்றார்.

யாரோ ஒருவரின் விளம்பரத்தை சிலர் தூக்கி சுமந்து கொண்டு தெருவில் நடக்கும்போது உங்களைப் பற்றிய விளம்பரங்களை, அதாவது உங்களின் திறன்களை நீங்களே எடுத்துச் சொல்வதில் தவறேதுமில்லை என்றேன்.

அதன் பிறகு பேச ஆரம்பித்தவர் சிக்கலான சூழல்களை தான் சிறப்பாக கையாண்டதை விளக்கினார். உடனடியாக பதவி உயர்வும் பெற்றார். அதனால்தான் சொல்கிறேன், நடமாடும் விளம்பரமாகுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *