– சினேகலதா
தொடர்
மாற்றங்களே வெற்றியைத் தரும்
ஹார்லிக்ஸ் என்கிற ஆரோக்கிய பானம் கடந்து வந்திருக்கும் தூரம் பற்றி, கடந்த இதழில் பேசினோம். சில தயாரிப்புகள் தாமாகவே சந்தையில் கட்டமைத்துக் கொண்ட அபிப்பிராயங்களைத் தலைகீழாக மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படியோர் அக்கினிப் பரிட்சையை ஹார்லிக்ஸ் கடந்து வந்திருக்கிறது.
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஹார்லிக்ஸ் என்றாலே உடல்நலம் குன்றியவர்களைக் காணப்போகும்போது வாங்கிப் போகும் பானம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். வீட்டில் முதியவர்களுக்குத் தரும் ஆரோக்கிய பானம் என்ற நிலை மாறி குழந்தைகளுக்குத் தரும் ஊட்டச்சத்து பானம் என்ற நிலையை நோக்கி நகர்வதற்கே நீண்ட நேரம் பிடித்தது. குழந்தைகள் பானம் என்ற கோட்டையில் காம்ப்ளான் கொடி நாட்டி சவால் விட்டிருந்தது. ஹார்லிக்ஸ் அந்த சந்தையைப் பங்கு போடத் துவங்கிவிட்டது.
ஆரோக்கிய பானம் என்ற நிலை மாறி ஊட்டச்சத்து பானம் என்ற நிலையை மக்கள் மனதில் பதிக்கும் மார்க்கெட்டிங் சாமர்த்தியம், பல அத்தியாயங்களைக் கடந்த அழகான வரலாறு. ரொட்டியும் கூட நோயாளி களுக்கான பிரத்யேகத் தயாரிப்பு என்றே ரொம்ப நாட்கள் நினைத்திருந் தார்கள். வீட்டுக்கு ரொட்டி வாங்கினால் கூட, ''யாருக்காவது உடம்பு சரியில்லையா?'' என்று கடைக்காரரே பதறும் விதமாகத்தான் வாழ்க்கை முறை இருந்தது. ''மம்மி மம்மி மாடர்ன் பிரட்'' என்ற மழலைக்குரல்தான் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக விளைந்த வளர்ச்சிப் பாதையில் மில்க் பிரட், ஃப்ரூட் பிரட், வீட் பிரட், சான்ட்விச் பிரட் என்று வகைவகையாய் வளர்ந்து இப்போது மல்டி கிரெய்ன் பிரட் வரையில் எத்தனையோ அவதாரங்கள்.
சின்ன நூலிழை கிடைத்தால் சேலையே நெய்யும் அளவு புதிய உருவாக்கங்களும் மார்க்கெட்டிங் உத்திகளும் சேர்ந்து மலைப்பூட்டும் மாற்றங்களை செய்திருக்கின்றன. சில அபிப்பிராயங்கள், குறிப்பிட்ட தயாரிப்பை பற்றியோ பொருளைப் பற்றியோ இருக்கும். சில அபிப்பிராயங்கள் அந்தப்பொருள் அல்லது சேவை சார்ந்த பொதுக்கருத்தாகவே உருவாகி இருக்கும். மருத்துவமனைகள் பற்றிய அபிப்பிராயங்களும் அப்படித்தான். மருத்துவ மனைகள் பற்றிய அபிப்பிராயங்களை மாற்றுவதில் தனியார் நிறுவனங்கள் தலையெடுத்த போதுதான் மக்களின் பார்வையும் மாறியது. மக்கள் மனங்களில் மருத்துவமனை என்பது நோய் வாய்ப்பட்டுள்ள மற்றவர்களைக் காணச்செல்லும் இடம். மற்ற படி தங்களுக்கு நோய்வரும் என்றோ தாங்கள் சில நேரங்களில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட வேண்டிவருமென்றோ பெரும்பாலானவர்கள் நினைப்பதில்லை. அப்பல்லோ மருத்துவ மனையின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவராகப் பொறுப் பேற்றபோது தனக்கிருந்த சவால்களைப் பற்றி ரேகா ரெட்டி எழுதும்போது இதைத்தான் குறிப்பிட்டார்.
தங்களுக்கு நோயே வராது என்ற மக்கள் கருத்தை மாற்றினால் அதன் விளைவுகள் எதிர்மறை யானதாய் இருக்கும். எனவே மருத்துவமனை என்பது ஆரோக்கியமான மனிதர்கள் தங்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்து கொள்ளவும், தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிற இடமென்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் தீர்வு என்று அவருக்குத் தோன்றியது. எனவே முழுமையான உடல் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த அழுத்தப் பரிசோதனை போன்றவற்றை மக்கள் மத்தியில் நேர்மறை உணர்வை உருவாக்கும் விதத்தில் எடுத்துச் செல்ல முடிவெடுத்தார்கள்.
நிரந்தரமான ஆரோக்கியம் நிரந்தரமான ஆனந்தம் என்பது போன்ற உற்சாகமான வாசகங்கள் மருத்துவமனைகள் பற்றிய அபிப்பிராயத்தையே மாற்றின. அபிப்பிராயங்கள் தலைகீழாக மாறும்போது ஆளுமைகள் எப்படி எல்லாம் மாறுகின்றன என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதை நோக்கி நாம் நம் கவனத்தைக் குவிக்க முற்பட்டால் போதும். விழித்திருக்கும் நிலையில் மனிதர்களுக்கு உடலோய்வு கொள்ளுதல் சாத்தியம்.
ஆனால் பெரும்பாலானவர் களுக்கு மனம் ஓய்வு கொள்வதில்லை. எப்போதும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கும் மனதுக்கு என்ன வேலை தருகிறோம் என்பது நம்மைப் பொறுத்தது. மனம் கனவுகளை அசை போடுகிறதா, கவலைகளை அசை போடுகிறதா என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் நாம்தான்.
கனவுகளை அசைபோடும் மனது காரிய வெற்றிகளில் கால் வைக்கும் என்னும் பொதுவிதி மார்க்கெட்டிங் துறைக்கு மிகவும் பொருத்தம். உற்பத்தியால் வடிவம் பெறும் தயாரிப்பு உண்மையில் உருவாக்கம் பெறுவது, மார்க்கெட்டிங் மந்திரங்களால்தான்.
ஒரு பட்டத்தின் செயல்திறன் பறக்க விடப் படும்போது தெரிவதுபோல் ஒரு தயாரிப்பின் சிறப்பு, சந்தைக்கு வந்தால்தான் தெரியும். சந்தையில் கொண்டு வரும் மாற்றங்கள் சந்தையையே மாற்றி விடவும் சாத்தியமுண்டு.
ஒரு தயாரிப்பின் இமாலய வெற்றியோடு மார்க்கெட்டிங் கடமைகள் முடிந்து விடுவதில்லை. அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதிலும் மார்க்கெட்டிங் துறைக்கு மகத்தான பங்குண்டு. பல மடங்கு துணிச்சல் பெருகியுள்ள நிலையில் அந்த சவால்களை எதிர்கொள்வதில் இருக்கும் சந்தோஷம்…. அடுத்த இதழில்!!