செங்கோல்: திட்டம்

– இரா. கோபிநாத்

சற்று நேரம் இணைந்திருந்த நிர்வாகவியல் Tracl-லிருந்து விலகித் தனி வாழ்க்கை Track-க்கு மாறிக்கொண்டு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் நிர்வாகவியல் Track-க்கு வந்து இணைந்து கொள்வோம் வாங்க!

ஒருவர் பஸ் நடத்துனரிடம் கேட்டார், இந்த வண்டி எங்கே போகிறது? அவர் திருப்பிக் கேட்டார், நீங்கள் எங்கே போகவிருக்கிறீர்கள்? என்று. வண்டி போகுமிடத்துக்கெல்லாம் நாம் போக முடியுமா என்ன? அதாவது முதலில் சென்று அடைய விரும்பும் இடம் மனதில் தெளிவான பிறகுதானே, மார்க்கமும் மாத்தியமும் தெரிவு செய்யமுடியும்?

நேர நிர்வாகத்தின் முதல் அத்தியாமும் அதுதான். இலக்குகளை முடிவு செய்து கொள்வது. இலக்குகள் தீர்மானமான பிறகுதான் நடவடிக்கைகளை நிர்ணயிக்க முடியும். இல்லையென்றால் பொழுது விடிந்ததிலிருந்து ஏதாவது செய்துகொண்டே போவோம், அது என்ன பயனளிக்கிறதோ எடுத்துக்கொள்வோம் என்று செயல்படுவதா? அப்படித்தான் பலர் இன்று செயல்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்ல, வந்த விளைவுகளை நொந்து கொள்கிறார்கள் வேறு. பாரப்பா என் வாழ்க்கையை, எனக்கு என்னவெல்லாம் நடக்கின்றது பார்? எனக்கு மட்டும் ஏன்தான் இப்படி எல்லாம் நடக்கின்றதோ? பெரும்பாலும் நமது வாழ்க்கையில் நமக்கு ஏற்படுவது எல்லாம் நாமே ஏற்படுத்திக்கொள்வதுதான். இதுபோல இலக்குகள் இல்லாமல் செய்யும் பெரும்பாலான நடவடிக்கைகள் நேர விரயம்தான். குறி பார்க்காமல் எறிந்த அம்பு போல வீணாகப் போகும்.

சரி அப்படியென்றால் எத்தனை இலக்குகளை நான் எனது வாழ்க்கையில் எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்? சில நேரங்களில் இலக்குகள் ஒன்றுக்கொன்று விரோதமாக இருக்கிறதே, அப்போது என்ன செய்வது? உதாரணத்திற்கு வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும், சீக்கிரம் பதவியுயர்வு எல்லாம் பெற்று முன்னேறவேண்டும் என்ற இலக்குக்கும், வீட்டில் குடும்பத்தோடு இணைந்திருந்து அவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற இலக்கிற்கும் இடையே முரண்பாடிருக்கிறதே, இதற்கு என்ன செய்வது?

நாம் பொதுவாக மூன்று வளையங்களில் வாழ்க்கையில் செயல்படுகிறோம். 1) குடும்பம் 2) தொழில் மற்றும் 3) சமுதாயம். இவை மூன்றுமே நமக்கு இன்றியமையாதது. மூன்றிலும் சில அடிப்படைக் கடமைகள் கூட உள்ளன. ஒன்றின் காரணமாக ஒன்றைப் புறக்கணிக்க முடியாது. ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது கூட. உதாரணத்திற்கு வேலையிடத்தில் முன்னேற்றம் கிடைத்து, வருமானம் கூடினால் குடும்பத்திற்கு நல்லது நடக்கும். சமுதாயத்தில் சிறந்த இடம் கிடைத்தால், நல்ல தொடர்புகள் கிடைத்தால் தொழிலில் உதவுமே.
நமது இலக்குகளை நிர்ணயிக்கும்போது, மூன்று வளையங்களையுமே கருத்தில் கொள்ளவேண்டும். ஒவ்வொன்றிலும் பிரதான இலக்குகளைப் பட்டியலிடுவோம். இதில் முன்வரிசைகளிலிருக்கும் மூன்று மூன்று இலக்குகளைத் தெரிவு செய்து எடுத்துக் கொள்வோம். பிறகு இதை முன்வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுக் கொண்டு, இவற்றை நிறைவேற்றிக் கொள்ளவேண்டிய முயற்சியில் ஈடுபட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களையும் இணைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். இலக்குகளை வரிசைப்படுத்தும்போது, குடும்பத்தினரும் ஈடுபட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். முரண்பாடுகளைத் தவிர்க்க முடியும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு.

இலக்குகளைத் தீர்மானித்த பிறகு அவற்றை அடைய எடுத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும். அப்போது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் எவ்வளவு நேரம் வேண்டியிருக்கும் என்பது விளங்கும். இலக்குகளை அடையத் தேவையான நிதி, பொருட்கள், ஆட்கள் இன்னும் உபகரணங்களையும் (Resources) சேகரிக்க வேண்டும். இப்படித் திட்டமிட்டு வேலை செய்யும் போது இலக்குகளை அடைவது உறுதிப்படுகிறது, இலகுவாகிறது. எந்த அளவிற்கு இலக்குகள் கடினமாக இருக்கிறதோ, அந்த அளவிற்குத் திட்டமிடுதல் இன்றியமையாததாகிறது.

வீட்டில் சமையல் செய்யும் பெண்மணிகள், நாளை என்ன சமைப்பது என்பதைப் பெரும்பாலும் முந்தைய நாளே தீர்மானித்து விடுகிறார்கள். அதை வைத்துச் சமையலுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று கணக்கிட்டுச் சற்றுச் சீக்கிரம் விழித்துக்கொள்ள வேண்டுமா என்றும் முடிவெடுக்கிறார்கள். அந்த சமையலுக்கு வேண்டிய பதார்த்தங்களையும் முன்பே ஒழுங்குபடுத்திக் கொள்கிறார்கள். என் மனைவி இப்படித்தான் செயல்படுகிறாள், அதனால் எல்லோரும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்து இப்படி எழுதுகிறேன்.

சிறிய செயலாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் திட்டமிட்டுச் செயல்பட்டால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். இந்த ஆசிய கண்டத்திலேயே மிகவும் பெரிய கோயில், தஞ்சைப் பெரிய கோயில். தென்னாட்டில் இருக்கும் பல பெரிய கோயில்கள் ஒவ்வொன்றையும் கட்டி முடிப்பதற்குச் சில நூற்றாண்டுகள் பிடித்தன. ஆனால் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவதற்கு இராஜ இராஜ சோழன் எடுத்துக்கொண்டது மாத்திரம் இருபத்தைந்து வருடங்களே. அரியணையில் அமர்ந்த இருபத்தைந்தாம் வருடம் 257 ஆவது நாள் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தினார். எப்படிச் சாத்தியமாயிற்று? வேறு ஒன்றும் இரகசியம் இதில் இல்லை, மாத்திரம் என்னவென்றால், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அவர் இந்தக் கோயில் கட்டமைப்புகள் குறித்து வல்லுனர்களுடன் உட்கார்ந்து திட்டம் தயார் செய்தார். திட்டமிடுவதில் இரண்டு வருடங்கள் முதலீடு செய்து கட்டுவதில் பல நூற்றாண்டுகள் சேமித்துக் கொண்டார். செய்யவேண்டிய செயல்களைச் சரிவரத் திட்டமிட்டுச் செயல்பட்டால், செயல்பாட்டில் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்க முடியும். திட்டமிடத் தவறினால், அல்லது திட்டமிடும் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டுமென்று கணக்கிட்டால் செயல்பாட்டில் அதிக நேரம் விரயமாகும்.

இது தனிமனித வாழ்க்கையில் மட்டுமல்ல, வேலை நிர்வாகம் செய்து வரும் நிறுவனத்தின் தலைவர்களுக்கும் பொருந்தும். ஒரு நிறுவனத்தில் பல பிரிவுகள் , துறைகள் இருக்கும். ஒரு பிரிவின் இலக்கை அடைவதற்கு இன்னொரு துறையின் உதவி தேவைப்படும். பல துறைகள் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். அந்த மொத்த நிறுவனத்தின் முக்கிய உத்தேசங்களுக்கு, புறம்பில்லாமல் அந்தந்தத் துறைகள் இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட எல்லாருடைய சம்மதத்தையும் மனமுவந்த ஆதரவையும் பெறவேண்டும். இலக்கை அடைய வேண்டிய செயல்முறைகளையும் வேண்டிய உபகரணங்களையும், திட்டமிட்டு, கிரமப்படுத்தி, எழுத்து வடிவம் கொடுத்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியப்படுத்தி முன்னேற வேண்டும்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.

இவ்வளவு அருமையானது நேரம். அதாவது நேரம், காலம் என்பது ஒரு அருமையான வாய்ப்பு, தவறவிட்டால் பிறகு மீண்டும் கிடைக்காது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அனைவருக்கும் முதலீடு செய்யக்கிடைப்பது 24/365, ஆனால் அவரவருக்கு இதே முதலீட்டிற்குக் கிடைக்கும் இலாபம் மாத்திரம் வித்தியாசப்படும். இந்த நேரத்தை எந்தச் செயலில் முதலீடு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது மாறுகிறது. வேறு ஒரு முக்கியமான விடையம் என்னவென்றால் முதலீடு செய்யாமல் மிச்சம் பிடித்து வைக்க முடியாது. அது தனக்குத்தானே முதலீடாகிவிடும். அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு முதலீடான பிறகு எதுவும் மிஞ்சாது. அதனால்தான் திட்டமிடுவது என்பது அவ்வளவு இன்றியமையாததாகிறது.

சரி, மிச்சப்படுத்த முடியாது என்பது அறிவோம், இந்தச் செல்வத்தை வளர்த்துக்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? அடுத்த இதழில் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *